Archive | January 2012

காதல்..

ஒரு முறை அம்மாவும் நானும் ஒரு வேலையாக ஊருக்கு போகவேண்டியிருந்தப்போ அப்பாவின் நண்பருடைய ஹோட்டலில் தங்கினோம்.. எப்போது சென்றாலும் அங்கேயே தங்கும் பழக்கத்தினால் எங்களுக்கு தனி மரியாதை.. அதனால் பயமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் சுற்றித்திரிவது என் வேலை
நாங்கள் அங்கு வந்த அன்றைக்கு சாயங்காலம் ஒரு மியூசிக் troupம் அதே ஹோட்டலில் தங்க வந்தார்கள்.. ஏதோ கோயிலில் இசைக் கச்சேரியாம்.. பத்து பன்னிரண்டு பேர் இருப்பார்கள்.. எல்லாருக்கும் Double Bed rooms நான்கு புக் பண்ணி ஒவ்வொன்றிலும் மும்மூன்று பேராக தங்குவதாக ஏற்பாடு.. ரிஷப்ஷனிஸ்ட் அக்காவுடன் பேசிக்கொண்டு நின்ற எனக்கு அவர்களை வேடிக்கை பார்ப்பதற்கே நேரம் சரியாயிருந்தது…. மெதுவாக ஓரக்கண்ணால் அனைவரையும் அளவெடுத்துக்கொண்டிருந்தேன்..
ஸ்டேஜ்ஜிலும் டீவியிலும்  பெரிய பந்தா காட்டுற இவர்கள் பழைய Bags ம், பாத்ரூம் ஸ்லிப்பரும், சாதாரண ஆடைகளுமாக வந்து இறங்கியதைப் பார்த்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்
இது எல்லாவற்றையும் விட இரண்டு ஜோடிகள் அதிலும் குறிப்பா ஒரு ஜோடி தான் என் கண்ணில் வித்தியாசமாய் விழ அவர்களை மெதுவாக நோட்டமிட்டேன்.. அவரை நான் TV யில் பார்த்திருக்கிறேன்.. இரண்டு கண்ணிலும் மங்கலான பார்வை, ஒழுங்காய் நடக்கவும் முடியாது.. முகம் முழுக்க தழும்புகள்.. பாவம் ஏதோ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளாம்.. ஆனாலும் மிகப் பிரபலமான பாடகர்.. நிறைய சொத்துகள் இருக்கிறதாம்.. பக்கத்தில்.. அவருடைய மனைவி.. கொஞ்சமும் சங்கடமின்றி கணவனின் தோளில் சாய்ந்தபடி, அவரைக் கொஞ்சியபடி இருந்தார்.. மற்றவர்களும் அவங்களை அவ்வளவு பொருட்படுத்தவில்லை.. ஆனாலும் மத்திம வயதைத் தாண்டிய அவர்களின் சேஷ்டைகள் எனக்கு ஏதோ கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.. புத்தகம் படிப்பது போல மெதுவாக குனிந்து கொண்டேன்..
சற்று நேரத்தில் ஒரு பெண்மணியின் குரல் மட்டும் பெரிதாகக் கேட்க நிமிர்ந்து பார்த்தால் அவரின் மனைவி.. தங்களுக்கு தனியான ரூம் வேண்டும் என அடம்பிடித்துக் கொண்டிருக்க, பொறுப்பாளர் போலிருந்த ஒருவர், அந்த அடுத்த இளம் ஜோடியைக் காட்டி அவர்களும் வேறு வேறு ரூம்களில் தான் இருக்கிறார்கள். பட்ஜெட் பிரச்சனை. ஆண்கள் பெண்களாக தனித்தனியே தான் தங்க வேண்டும், தான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன் என்று பலதும் சொல்லி சமாதானப்படுத்த முயல, முடியாதென்று ஒற்றைக்காலில் நின்று கொண்டவர், கடைசியில் ஒருவாறு வெற்றி பெற்று ஒரு வெட்டுப் பார்வையுடன் தங்கள் ரூமிற்கு சென்றார்கள்..
பார்த்த அத்தனையையும் என் முதற் தோழியான அம்மாவிடம் சொல்லி அந்தப் பெண்மணிக்கு கணவன் மேல் எத்தனை காதல் என்று சந்தோஷப்பட, அம்மாவோ..
‘நானும் அப்பாவும் எத்தனை சங்கடங்களுக்குப் பிறகு இணைந்தோம் என்று தெரியும் தானே? நீயாயிருந்தால் ஓடிப்போயிருப்பாய்.. நாங்கள் இருந்து சாதித்தோம்.. பத்து வருடக் காதல்.. ஆனால் என்றாவது நானோ அப்பாவோ நெருக்கத்தை காட்டியிருப்போமா.. அன்பு மனசுக்குள் தான் இருக்க வேண்டும்.. இருவருக்கும் அது தெரிந்தால் போதும்.. எதற்கு மற்றவர்களுக்கு படம் போட்டுக் காட்ட வேண்டும்?’ என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்தார்..
இதெல்லாம் நடந்து ஒரு ஆறு மாதங்களிருக்கும்.. சஞ்சிகை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்த என்னை மதிலால் தலையை எட்டிப்பார்த்துக் கூப்பிட்ட பக்கத்து வீட்டு அக்கா..’தெரியுமா அம்மு விஷயம்.. கதிர் அதான் அந்த கண்ணில்லாத பாடகர்.. அவரோட மனைவி அவர் சொத்தெல்லாத்தையும் ஏமாத்திப் புடுங்கிற்று இன்னுமொருத்தன்கூட ஓடிப்போய்ட்டாளாம்.. பாவம் இந்த மனுஷன்.. இப்போ நாதியில்லாமல் நடுத்தெருவில நிக்கிறாராம்..’
சொல்லிவிட்டுச் செல்ல.. என் மனசுக்குள் அம்மா அன்று சொன்னது அத்தனையும் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கியது..

அம்முவின் புலம்பல்ஸ்..

நம்ப ஊர்ல சினிமா எடுக்கிறவுங்க..ஏதோ நாம்பெல்லாம் முட்டாள்ங்கன்னும்.. அவுங்க சொல்றது தான் எப்பவுமே சரிங்கிற மாதிரியும் தான் நினைக்கிறாங்க போல.. நான் சொல்றதக் கேட்டா நீங்களும் இத ஒத்துக்குவீங்க..
அது ஏன்னே தெரியலைங்க எப்பவும் படத்துல நம்ப Hero வரும் நேரமா பார்த்து தான் Heroin மயங்கி வுழுறாங்க.. அவர் வர்றதுக்கு முன்னாலயோ பின்னாலயோ மயங்கி விழுந்தா அப்புறம் யாரு அவங்கள தூக்கி விடுவாங்க என்ன?

இதுல Hero தனுஷ் போல ஒல்லிப்பிச்சானாயும்.. Heroin நமீதா போலவும் இருக்கிறத பார்க்கிறப்போ தான் எனக்கு ரொம்ப பாவமா இருக்கும்.. பெண்டு நிமிந்திடும்ல..
Sir ம் Madam ம் நிறைய நாள் பிரிஞ்சிருந்தாங்கன்னு வைச்சுக்கோங்களேன்.. ரெண்டு பேரும் தூரத்துல பார்த்துடுவாங்க.. உதடு விம்மும்.. கண்ணு துடிக்கும்.. மூஞ்சியெல்லாம் பரவசம் படரும்.. ஆனா பாருங்க அவங்க ரெண்டு போரும் Fast – டா ஓடிப் போக மாட்டாங்க.. அப்போன்னு Slow motionல தான் காத்துல மெதந்து மெதந்து வருவாங்க..
இப்போ Sir க்கும் வில்லனுக்கும் பயங்ங்ங்கர சண்டைன்னு வைச்சுக்கோங்களேன்.. நாம்ப ஹீரோயினா இருந்தா என்ன பண்ணுவோம்.. ஓடிப்போய் எங்காவது Safe ஆன இடத்துல மறைஞ்சுக்குவோம், இல்லைன்னா சாருக்கு ஹெல்ப் பண்ணுவோம் இல்லைங்களா? அதவிட்டுட்டு இந்த அழகு ராணிங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா.. முகம் முழுக்க 1 inch க்கு மேக்கப் பூசிக்கிட்டு வில்லன மான் போல ஒரு பார்வை பார்ப்பாங்க.. அய்யய்ய்யோ.. அப்படியே பார்த்துட்டு நிப்பாங்க.. சும்மா இருக்கிற சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி போல இந்த வில்லன் ஓடிப்போய் அவங்கள பிடிச்சிட்டு.. துப்பாக்கிய கீழ போட்று.. இல்லைன்னா.. ஹா ஹா ஹா.. (பெரிய வில்லனாம்) உன்னோட காதலி டுமீல் அப்படி இப்படீன்னு வசனம் பேசி இன்னும் கொஞ்சம் சண்டை போட்டு.. அப்பப்பப்பா.. என்ன ஹீரோயிசமோ..
இதுல இன்னொரு கோஷ்டி ஹீரோயின ஏதோ Rubber Band போல நினைச்சிட்டு அவங்கள இடுப்பில தூக்கி வைச்சுகிட்டு Heels போட்ட பாதத்தால வில்லன உதைப்பாங்களே அச்சச்சச்சோ.. நாம்ப ஒரு சின்னக் குழந்தையை 10 நிமிஷம் தூக்கி மேலே போட்டு பிடிச்சு விளையாட்டு காட்டினாலே தாவு தீர்ந்திடும்.. இவங்க.. அந்த 65 கிலோ அழகு தேவதைய சுமந்துட்டு சண்டை போடுவாங்களாம்.. நம்ப காதுல பெரிய பூவா சொருகுறது உங்களுக்கு புரியுதா?
Gravity Gravity ன்னு  ஒரு விஷயம் இருக்குன்னு இந்த Director’s சுலபமா மறந்துடுவாங்க போல..Super Heroன்னா கூட பரவால்லைங்க.. இவுரு ரோட்ல அழுக்கு வேஷ்டி கட்டிற்று தூங்குறவரு.. திடீருன்னு சாருக்கு வீரம் வந்துடும்.. கொரில்லா கொரங்கு தோத்துடும் போங்க..என்னமா பாய்ஞ்சு பாய்ஞ்சு பறந்து பறந்து அடிப்பாங்க.. இந்த கேபிள் கண்டு பிடிச்சவன் புண்ணியவான்.. இல்லன்னா எவனும் ஹீரோவா நடிக்க வந்திருக்கவே முடியாது.. இங்கிலிப்பீசு வேற பிச்சு பிச்சு பேசுவாங்கயே அந்த அழகு யாருக்கு வரும்னு கேக்கிறேன்?
இன்னொரு விஷயம் கேளுங்க.. இப்போ நம்ப ஹீரோயின் ரொம்ப modern பொண்ணு.. கதைல அப்படித்தாங்க சொல்றாங்க.. எல்லாத்தையும் எடுத்தெறிஞ்சு பேசுவாங்க.. குட்டை டிரெஸோட ஹீல்ஸ் செருப்போட (இல்லைன்னா ஒசரம் தெரிஞ்சிடுமே) கிராமத்து வய வாய்க்காலெல்லாம் சுத்துவாங்க.. அப்புறம் இந்த எழவு அதாங்க லவ்வு வந்து ஹீரோ சார் ஒரு தாலிய கட்டிடணுமே.. அப்புறம் பாருங்க.. அம்மா தெய்வமேன்னு புடவை கட்டுன அம்மன் கணக்கா இருப்பாங்க சார்.. அப்போ அவங்க புரட்சி எல்லாம்? அது நேத்தோட போயாச்சு
இந்த தாலி சென்டிமென்ட் இருக்கே.. கடவுளே.. கட்டுன தாலிய கழுத்துல இருந்து கழட்டவே மாட்டாங்க.. யாராவது தாலி மேல கைய வச்சுப் பார்க்கட்டுமே.. பத்ரகாளியா மாறிட மாட்டாங்க.. அந்த கொத்துத் தாலியோட ஊரெல்லாம் அலைவாங்க.. திருட்டு பயம் இருக்காதோ.. நிஜத்துல தாலி போட்டுட்டு பக்கத்து தெருவுக்கு போறதுக்கே நாம்ப எப்படி பயப்படுவோம்.. இவங்க.. வேணாம்..
அய்யோ அம்மா.. ‘அம்மா’.. நீ இந்த சினிமால படுற பாடு யாரும் பட்டிருக்க மாட்டாங்களே.. மொரட்டு ஹீரோ.. பொண்ணுங்கள எல்லாம் பலாத்காரம் செய்வாரு.. திருடுவாரு.. குடிப்பாரு.. ஆனா அம்மா செத்துப் போனாங்கன்னா அழுவாரு பாருங்க ஒரு அழுகை.. ஏய் எங்கே அந்த Oscar கமிட்டி.. கூப்பிடு அவியள..
ம் ..நானும் தான் கஷ்டப்பட்டு ஒழைக்கிறேன் ஒழைக்கிறேன்..ஒழைக்கிறேன்.. 20ம் திகதியானா யாருக்கிட்ட கடன் கேட்டலாம்ங்கற மாதிரி தான் வாழ்க்க ஓடுது.. ஆனா இவங்கள பாருங்களேன்.. கிழிஞ்ச சட்டையோட பஞ்சப் பராரிங்க போல தெருல போய்ட்டிருப்பாங்க.. அப்புறம் ஒரு பாட்டு வரும் பாருங்க.. என்ன மந்திரமோ மாயமோ.. அந்தப் பாட்டுக்கப்புறம் ஐயா கோட் சூட் போட்டுக்கிட்டு பென்ஸ் காரு சார்..அதுல போவாரு.. பேசாம 20ம் திகதியானா நாம்பளும் ஒரு பாட்டுப் பாடிப் பார்க்கலாமான்னு நான் திங்க் பண்றேன்..
இது போதாததுக்கு எங்க வீட்ல இருக்கிற கிளிய ஒரு வார்த்தை பேச வைக்கவே தாவு தீர்ந்திடுது.. இவங்க என்னடான்னா..யானை குரங்கு, பருந்துன்னு எல்லா மிருகங்ககிட்டயும் பேசி வேல வாங்குறாங்களாம்.. இவங்க சொன்னா எல்லாம் கேட்டுக்குதாம்..
அப்புறம் கோபம் வந்தா இவங்க நரம்பு புடைச்சு எழும்பும் பாருங்க.. பாத்துக்கிட்டு இருக்கிற எனக்கு எப்போ Blood வரப்போகுதுன்னு பயந்துட்டே இருப்பேன்னா பாத்துக்கோங்களேன்.. நானும் பண்ணி பார்த்தேன்..ம்ஹ்ம்.. முடியுமா உங்களால..
நம்ப ஸ்கூல் Friends சோட நம்பர் தேடி எடுக்கிறதுக்குள்ள நாம்ப படுற பாடு எவ்வளவுன்னு எல்லாருக்கும் தெரியும்.. ஆனா இந்த ஹீரோவ பாருங்க.. CM cellphone க்கு கூட அசால்ட்டா call பண்ணி மெரட்டுவாங்க.. அங்கெல்லாம் Caller ID இருக்காதாங்கிறது என்னோட யோசனை..

அதுல வேற சிம்பிளா பண்ண வேண்டிய விஷயத்த எப்படி சிக்கலாக்குவாங்க தெரியுமா.. இவரு வில்லன் வீட்டுக்கு போவாராம்.. அப்போ சுத்தி இருக்கிற அடி (வாங்குற) ஆட்கள் எல்லாம் ஏதோ பிசாச பார்க்கிறது போல பயந்துகிட்டு அவர விட்றுவாங்களாம். அது போல வில்லன் நம்ப சார் வீட்டுக்கு போய் சவடால் விடுவாராம்.. மன்னிச்சு ஒன்ன இன்னொரு நாளைக்கு பார்த்துக்கிறேன்னு நம்ப ஹீரோ ஜம்பம் விடுவாராம்..எதுக்கு..அப்பவே வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிச்சா என்னவாம்?
இந்த வில்லன் ஹீரோல்லாம் ஏன் Gunவச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியிறதில்ல.. Gun ண Pantல வைச்சுகிட்டு கையால சண்டை போட்டுக்குவாங்க.. பக்கத்துல நெறய திங்ஸ் எல்லாம் இருக்கும்.. அதை யூஸ் பண்ணிக்குவம்.. ம்ஹ்ம்.. அப்புறம் ஹரோயிசம் என்னாகிறது.. இதுல நாலு கிளாஸ், நாலு பொடலங்கா, நாலு சுவர், நாலு கார் ஒடைக்கலன்னா சண்டை எப்படி சண்டையாகும்.. அதுலயும் அப்போ அந்த ரோட்ல ஹீரோயின் Madame  வரணுமே.. இவர் சண்டை போட்டுகிட்டே லுக்கும் விடுவாராம.. அடடடா.. என்னா ஒரு Talent..

போங்கடா நீங்களும் ஒங்க சினிமாவும்!!

l’amour pour l’anglaisA beauty of a language is in its unique words and phrases which can be enjoyed in that particular language only. Even if you translate it, you wont get the real feel of it.. The nuance is to be absorbed in the own language itself to enjoy the soul

My Grandpa who is also my English teacher use to tell me, “you have to think in English if you want to talk well in English”. Guess its applicable to every language in the world..

In English, a few words and phrases are so close to my heart.. Day before yesterday after writing a blog in Tamil, I was wondering what to pen for the heading.. Instantly the heading came..’Poetic Justice’ I was able to easily sense the real meaning of that phrase.. But while trying to translate it, I found that I couldn’t give that bona fide.. After moments of garble, I thought better to leave it like that..

The other word I adore and use often is Mezmerizing.. Merci to god so far no judges in the TV reality shows has started using it.. It’s like voodoo. I‘m drawn towards the soul every time I use..

Fantasy is another, which fantasises me, my thoughts and takes me to a wonderland full with spirit of fantasies.

Myth is the other I adore.. It’s mythical.. Swear, enchant, vow, potray, phenomenon few more to highlight..

I love Thamil – my mother tounge. Likewise I am passionate with English.. I know that Knowing English is not considered one is knowledgeable..

But the love for this language and the desire to learn new words continues day by day..

(Thanks to Google translator for the French Phrase)                                                                                                              

பொயட்டிக் ஜஸ்டிஸ்

கும்பலாக நின்று தணிவாக முணுமுணுக்கும் பேச்சுச் சத்தம் ஹோ என்று ஒலித்து ஒருவித பயத்தை அளிக்க.. அந்த பங்களாவே நிசப்தமாய் உறைந்து கிடந்தது.. கட்டியிருந்த தோரணங்களும் மலர்களும் அப்படியே உறைந்திருக்க.. ஏதோ ஒரு மூலையிலிருக்கும் அறையிலிருந்து..

அய்யோ.. என்னை விட்டுட்டு போயிட்டியே அப்பா.. என்ற ஒப்பாரி மட்டுமே கத்தியாக கிழித்தபடி..

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இந்த இடம் இப்படியா இருந்தது..

வெளியே பாண்ட் வாத்தியக்காரர்கள் ரஜனி ஹிட்ஸாகவே வாசித்துத் தள்ள கூட்டம் உற்சாகத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தது.. வீட்டின் உள்ளே பிரதான வரவேற்பறையில் முக்கிய விருந்தாளிகளாக பணக்காரர்கள், ஆபிஸர்கள், காவல்துறையினர் கையில் கண்ணாடிக் குவளைகளுக்குள் வெளிநாட்டு மதுவுடன் நீந்தியபடி தடுமாற.. முன்புறம் உறவினர், நண்பர்கள் தேநீர் கோப்பைகளுடன் வளவளத்துக்கொண்டிருக்க முன்னே டென்ட் கொட்டாய் அடித்த இடத்தில் நிறுவன வேலையாட்கள் ஊரார் என கைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களில் கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை அருந்தியபடி குசுகுசுவென பேசியபடி என கலந்து கட்டிய கூட்டம் அந்த பங்களாவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது..

தனசேகர் அந்த டவுனில் மிகப் பெரும் பணக்காரர்.. தங்க நகைக் கடையில் சாதாரண வேலையாளாக சேர்ந்த அவர் இப்போது நான்கைந்து நகைக் கடைகள்,  தொழிற்சாலைகள், வீடுகள் நிலங்கள் என பலவற்றிற்கும் உரிமையாளர்.. தங்கம் அவரின் வெள்ளைப் பக்கம்.. அது தவிர பல ரகஸ்ய தொழில்களும் சேர்ந்து தான் இன்றைக்கு அனைவரையும் அடிமைகளாக்கியபடி உலாவர அவருக்கு சக்தி கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆஞ்சநேயா குரூப் என்று பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பல பெண்கள், சிறுமிகளின் வாழ்க்கையைப் பாழாக்க அவருக்கும் அச்சமின்மையை கொடுத்திருக்கிறது..

திருமதி. லக்ஷ்மி தனசேகர்.. நெத்தி நிறைந்த பொட்டு, தஞ்சாவூர் பட்டு, கைநிறைய தங்க வளையல்கள்.. கணவரின் பணபலத்தையும் ஆணவத்தையும் வெளிக்காட்டும் கண்ணாடியாக.. உள்ளே குழுமியிருந்த பெரிய்ய மனிதர்களை பார்த்து அப்படியொரு சிரிப்பு.. இவர்களுக்கு முன்னால் தான் இந்தக் குழைவு சிரிப்பு எல்லாம்.. எத்தனை வேலைக்காரிகள் தங்கள் கால்களில் சூட்டு தழும்பினை வைத்திருக்கிறார்கள், சுவர்களில் சாத்தி அறையப்பட்டிருக்கிறார்கள், சோறு போடாமல் பட்டினி கிடந்திருப்பார்கள் என்று அந்த அம்மாவுக்கே தெரியாது.. ஒரு சிறுமியை அடித்தே கொன்று புதைத்ததாகவும் ஒரு வதந்தி ஊருக்குள் உலவுகின்றது..

இத்தனை சொத்திருந்தும் வாரிசு இல்லையே என்ற ஊராரின் வாயை அடைக்கும் படி.. இனிமேல் பிறக்க வாய்ப்பில்லை என்ற வேளையில் வந்து பிறந்த வாரிசு பிரகாஷ்.. அவனின் முதலாவது பிறந்தநாளுக்கு தான் இத்தனை தடபுடல்..

பிரகாஷ்..பிரகாஷ்.. என்று சத்தமிட்டபடி ஒவ்வொரு அறையாக தேடிச் சென்ற அவள் கண்முன் கண்ணாடி அலமாரிக்குள் இருந்த டீவியின் வயரைப் பிடித்து இழுத்தபடி தத்தி வந்த மகனும்.. அதனோடு சேர்ந்து இழுபட்டு அவன்மீதே விழுந்து சிதறிய கண்ணாடித்துண்டுகளும் வாழ்க்கையை சூன்யமாக்க..

அய்யோ.. அப்பா.. என் மகனே..

தேவதையின் மனசு

நாளை நான் இருக்கும் தெருவில் நான் இருக்க மாட்டேன்.. நான் நடந்து சென்ற பாதையில் என் காலடித்தடத்தைத் தேடினால் வெறும் தூசி மட்டுமே மிச்சமாயிருக்கும்.. என் அறையின் யன்னல்களால் உள்நுழைந்து என்னைத் தட்டியெழுப்பும் காற்றும் வெளிச்சமும், நாளை வெறும் கட்டிலை முத்தமிட்டுக்கொண்டிருக்கும்.. பூனைகளும், அணில்களும், காகங்களும், கருங்குருவிகளும்.. எங்கே நம் மொழியில் பேசுவதாய் நினைத்து பிதற்றும் கிறுக்கி என்று ஒரு நிமிடம் என்னைத் தேடி எட்டிப்பார்க்கலாம்.. ஆதரவாய் தடவிக்கொடுத்து பேசி மகிழும் என் அம்மாவின் தொங்கு தோட்ட மலர்ச்செடிகள் அந்தரத்தில் இருந்தவாறே என்னை அழைத்துப் பார்க்கலாம்.. பல்கணியிலிருந்து எட்டிப்பார்த்து பேசும் நட்சத்திரங்கள் இனி என்னை வேறொரு இடத்தில் பார்க்கும் போது கொஞ்சம் தடுமாறலாம்..

இன்னும் சில நாட்கள் போனதும் என்னைக் காணாமல்.. தெருப்பையன்கள் எங்கே போனாள் என ஓரிருநாள் அரட்டை அடிப்பார்களாக்கும்.. ரோமியோக்கள் இன்னுமொரு பெண்ணை பின்தொடர்ந்து செல்ல தொடங்குவார்கள்.. நான் நடந்து செல்கையில் பார்த்துச் சிரிக்கும் அயலவர்கள்..என்னடா சத்தமின்றி மறைந்து போனாளா என்று நினைத்துப் பார்க்கலாம்.. என் பின்தொடர்ந்து வாலாட்டி வரும் தெருநாய்.. இன்னொருவருடன் நட்புப் பாராட்ட எண்ணலாம்..

அலுவலகத்தில் வேலைகள் மூச்சடைக்கையில்.. இவள் ஏன் அரைகுறையில் போய்த் தொலைந்தாள் என என் முகாமையாளர் மனசுக்குள் திட்டலாம்.. நண்பர்கள் கொஞ்ச நாட்களுக்கு என்னைப் பற்றி பேசி, தினமும் தவறாமல் மின்னஞ்சல் அனுப்பி..அதுவும் காலங்கள் செல்லச் செல்ல குறைந்து போய் ஒரு நாள் முற்றாக வராமலே போகலாம்..

அம்மாவும் அப்பாவும் சந்தோஷத்தை முகத்தில் காட்டினாலும் மனதின் ஓரத்தில் கொஞ்சமாய் கவலைப்படுவார்கள்.. அப்பா தனது தொப்பை தடவும் போது என்னை நினைப்பாரோ.. எனக்குப் பிடித்த முருங்கைக்காய் கறியும், உருளைக்கிழங்குப் பொரியலும் அம்மாவுக்கு கண்ணீரை வரவழைக்கக்கூடும்.. சித்திகள் மாமிகள்..சகோதரர்கள் என் வெடிச்சிரிப்புச் சத்தத்தை இன்னுமொரு முறை ஆசை தீரக் கேட்பதற்கு ஆசைப்படலாம்.. முழங்கால் தெரியணும் என்று தைத்த பாவாடைகள் இனி அடுப்படியில் அடைத்துணியாக அம்மாவால் உபயோகிக்கப்படலாம்.. குளியலறைச் சண்டை ஓய்ந்தது என்று எண்ணும் என் தம்பிகள்.. சண்டை பிடிக்க அக்கா இல்லையே என்று இன்னும் சில நாளில் ஏங்குவார்களா?

என் அறையில் நான் வைத்த பொருட்களைக் கலைக்காமல் பார்த்துக்கொள்வான் என் அறைக்காக சண்டையிட்ட என் தம்பி.. ஓட்டிவைத்த நடிகர்களின் உருவப்படங்கள் எனக்காகக் காத்திருக்கும்.. முகம்பார்க்கும் கண்ணாடியில் கடந்த வருட பிறந்தநாளுக்கு வந்த வாழ்த்து அட்டைகள் தூசு படிந்து கிடக்கும்.. உடைந்த கம்மல்களும், நெளிந்த வளையல்களும் என்னை ஞாபகப்படுத்தியவாறு அலங்கார மேசைமேல் உறைந்திருக்கும். எனக்கு பிடித்த நிகழ்ச்சிகள் டீவியில் போகும் போது என்னைப் பற்றிய பேச்சு கட்டாயமாக எழும்பும்.. பிடித்த பாடல்கள் ஒலிக்கும் போது ரேடியோவின் ஒலி அதிகரித்து வைக்கப்படும்..

ஆனால், நான் இனி நானாக இருப்பேனா.. எனக்கென்று நான் சிருஷ்டித்த உலகம் இனி எனக்காய் காத்திருக்குமா? எனைப்பார்த்து என்னோடு இணைந்து சிரித்து மகிழ்ந்த தருணங்கள் போய் இனி இன்னொரு புதிய உலகத்துக்காய் சிரிக்க ஆரம்பிப்பேன்.. மனதைக் கீறி உடைப்பெடுத்தோடும் புண்ணின் உதிரத்தை மறைத்தபடி புன்சிரிக்கப் பழக வேண்டும்..

திருமணம் சந்தோஷம் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள்.. காதலனைக் கைப்பிடிப்பது சுகம் தான்.. ஆனால் சுயத்தை இழந்து.. என் சந்தோஷங்களின் வடிவங்களை மாற்றியமைத்து.. என்னை மையப்படுத்திய எனக்கான உலகத்தை விட்டுவிட்டு இன்னுமொரு வீட்டிற்குச் செல்வது மனதளவில் ஒரு சிறிய இறப்பு தான்.. என்னதான் கணவன் அன்பைக் கொட்டிப் பொழிந்தாலும்..மனதின் ஓரத்தில் மடியில் தலைவைத்துப் படுக்க அம்மாவைத் தேடும் மனசு.. அப்பாவின் தோளைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடவும், சின்னச் சின்ன சண்டைகள் பிடிக்கவும் மனசு ஏங்காதென்று சொன்னால் நான் மனுஷியே இல்லை..

காலங்கள் மாறலாம்.. என் கணவன் என் கண்ணீரைத் துடைக்கலாம்.. புதிய இடத்துடன் நான் இயைந்து நடக்க ஆரம்பிக்கலாம்.. ஆனால் ஆழ்மனதில் நான் அனுபவித்த விடயங்களும்.. சந்தோஷங்களும்.. பிரிவுத்துயரும்.. நான் சாகும் வரை வாழும் என்பதே உண்மை