Archive | February 2012

இவர்களும்மாந்தர்களே..

ஒதுக்கப்படுதலும், சுய கௌரவத்தை இழத்தலும் எத்தனை அவமானகரமானது என்பது தெரியுமா..
என்றாவது ஒருநாள் அலுவலகத்தில் மேலதிகாரி நம்மிடம் சில வார்த்தைகள் காட்டமாக சொன்னால் தாங்க முடியாது.. நண்பர்களின் முன் அப்பா திடடினால், ஏதோ வானமே தலையில் இடிந்து விழுந்துவிட்டது போல பாரம்.. டீச்சர் கண்டித்தால் நாக்கை பிடுங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம்.. விளையாட்டில் சேர்க்கவில்லையா, வெற்று உடம்புடன் தெருவில் விரட்டிவிடப்படுவதைப் போன்ற உணர்வு.. நம் கருத்துக்கு காதுகொடுக்கவில்லையே.. நாண்டுகொண்டு சாகலாமா என்று யோசனை..
ஆனால் தினம் தினம், ஒதுக்கப்பட்டு, சுய கௌரவத்தை இழந்து, தன்னை ஒறுத்து தன் குடும்பத்திற்காக வாழும் எத்தனை பேரை நாம் இலகுவாக மறுதலிக்கின்றோம் என்பது தெரியுமா?
பெரிய ஷாப்பிங் mall களுக்கு போகும் போது, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் காவல்காரர்களை பார்த்திருக்கிறீர்களா? வாகனங்களை தெருவுக்குள் திருப்பி விட உதவிய பின் தலைகுனிந்து கூனிக்குறுகி எதிர்பார்ப்புகளுடன் நமது கண்களை நேருக்கு நேர் நோக்க முடியாதவர்களாய் அவஸ்தைப்படும் அவர்களைப் பார்க்கையில் அவர்களின் உடல்மொழியின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனைகளை நான் காண்பேன்..
அலுவலகங்களில் வாசலில் காக்கிச் சட்டையுடன், வந்திருப்பவர்களை நாட்டாமை செய்தவாறு உட்கார்ந்திருக்கும் அந்த மனிதனின் அதட்டல்களுக்கு பின்னால் அவன் நாளாந்தம் மேலதிகாரிகளால் அனுபவித்துக்கொண்டிருக்கும் கீழ் நிலையை வெல்லும் வேட்கையே தெரிகின்றது..
செருப்புத்தைத்துத் தருபவர், நம் கால்களை பற்றி அதனை அணிவிக்கும் போது, புழுங்கிக் கொண்டிருக்கும் அவரின் உணர்வுகளையும், கொதிக்க மறந்திருக்கும் அவர் வீட்டு உலையையும் நினைத்துப் பார்ப்பேன்..
விறகு வெட்டுபவர்கள் வியர்வை சொட்டச்சொட்ட கூலி வாங்க வரும் போது பேரம் பேசுபவர்களைப் பார்த்து அவர்கள் கொடுக்கும் முகவுணர்வுகளின் முகவரிகளில் தொக்கி நிற்கும் ஏக்கத்தையும் பதைபதைப்பையும் நாம் அநேகர் நினைத்துப்பார்ப்பதில்லை..
தெருவோரம் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் வந்து இரப்பானைப் பிடிக்கிப் பறப்பிராந்தாய் பணத்தைத் தட்டிப்பறிக்கும் தனப்பிரபுக்களைப் பார்த்து அவர்கள் விடும் ஏக்கப்பெருமூச்சின் பின்னால், அவர்களின் இயலாமை மட்டுமல்ல, இல்லாத்தன்மையும் வெளிப்படுவதை பார்த்திருக்கிறீர்களா?
கீரையும், பூவும், பழமும் விற்று வரும் பெண்களின் குரல்களுக்கு மத்தியில் ஒலிக்கும் கேவல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
தெருத்தெருவாய் குப்பை கூட்டியள்ளும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்த்திருப்போமா? நடுவெயிலில், அழுக்காடைகளுடன் அல்லல் படும் அவர்களை அருவருப்பாகப் பார்க்காமல் நேசத்தினை கண்களிலாவது காட்ட வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா?
பெருங் கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் போதோ, ஹோட்டல்களுக்கு சென்று உண்ணும் போதோ பேரம் பேசாமல் பணத்தை அள்ளிவிட்டெறியும் நாம் இவர்களைப் போலவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டி வரும் போது மட்டும் கருமித்தனம் பண்ணுவது ஏன் என்பதற்கு இன்று வரை என்னால் பதில் சொல்ல முடியுதில்லை..
எந்தவொரு தொழிலும் இழிவில்லை, கேவலமில்லை தான்.. ஆனாலும்.. கீரைக்காரியிடமும், பெட்ரோல் பங்கிலும், பார்க்கிங் லொட்களிலும் மாத்திரம் தானா காசு சேர்க்க வேணும் என்ற எண்ணம் வரவேண்டும்.. பெரியளவு தானதர்மங்கள் செய்யத் தேவையில்லை.. அவாகளை நோக்கி ஒரு சின்னப் புன்னகை, உடல்மொழியை வாசித்து ஒரு அன்பளிப்பு.. இது போதுமே அவர்களின் நாளுக்கு ஒளியூட்ட..
இவர்களும் மனிதர்கள் தானே.. குடிப்பது, புகைப்பது, சண்டைபிடிப்பது என்று இவர்கள் மீது நாம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நாம் பண்ணுவதில்லையா.. நாகரீகம் தெரியாது என்று சொல்லுபவர்கள் தனியாயிருக்கும் வேளையில் கூட நாகரீகத்தை கைக்கொள்பவர்கள் தானா..

உள்ளொன்று புறமொன்றாக வேடம் போடும் வேடதாரிகளுக்கு மத்தியில், எளிமையே இலக்கணமாக வாழும் இவர்களையும் கொஞ்சம் மதிக்கலாமே.. கேவலமானவர்கள் என்று அவர்களை ஒதுக்கி நாம் கேவலமாகாமல் கொஞ்சம் கருணை காட்டலாமே..
ஏமாற்றுபவர்களை புறந்தள்ளி, ஏழையாயிருந்தாலும் உழைத்துண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் இவர்களைப் போன்றவர்களையும் கொஞ்சம் மதிக்கலாமே.. அவர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்..சக மனுஷனாய், மனுஷியாய் மதியுங்கள்
கொஞ்சம் மனிதத்தன்மையும், மனிதநேயமும், மற்றையவர்களையும் மனிதர்களாக பார்க்கும் பண்பும் இருந்தால் அனைவரும் கடவுள்களே..

விடைபெறவிரும்பவில்லை

என்னமோ தெரியவில்லை, கொஞ்ச நாட்களாய் நெஞ்சுக்குள்ள ஒரே படபடப்பு.. அவசர அவசரமாய் ஓடும் என்னுடன் சவால் விடுவதைப்போல இருதயமும் லப்லப்லப் டப்டப்டப் என்று துடிப்பதாய் ஒரு உணர்வு.. அட.. இதையே யோசித்துக்கொண்டிருந்தால் இந்த வேலைகளை எப்போது தான் முடிப்பது இன்னும் எவ்வளவு வேலைகளிருக்கிறது செய்வதற்கு.. அதுக்குள் இவள் எங்கே போய்ட்டாள்..
‘ஷோபி..ஷோபி’
‘என்னம்மா’
என்றபடி வந்தவளிடம் ‘எத்தனை வாட்டி கூப்பிடுறது.. வெத்தல பாக்கு வச்சு கூப்டாத்தான் வருவீயா.. குக்கர்ல குழம்பு கொதிக்குது.. போய் அதைப்பாரு.. எந்த நேரமும் புத்தகத்த கட்டிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆவாது’ என்ற என்னை நோக்கி சிணுங்கியவளிடம் முறைப்பொன்றை பதிலாய் கொடுத்தவாறு கிச்சன் அலமாரியை ஒழுங்கு படுத்த ஆயத்தமானேன்..
இன்னும் ஆறு மாதத்திற்கு தேவையான பலசரக்கு சாமான்கள் இருக்கிறது.. அரிசி, கோதுமை, பருப்பு தான் இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டும் மனசுக்குள் நினைத்தபடி ஒத்தாசைக்கு மகனைக் கூப்பிட்டேன்.. வேறு பேச்சு பேசவிடாமல் அரைமணித்தியாலம் உட்கார்ந்ததில், பட்டியல் எடுத்ததோடு, சுத்தமும் செய்து முடித்தாகிவிட்டது..
அடுத்து படுக்கையறை.. பெட்ஷீட், தலையணை எல்லாம் புதிதாக வாங்கணும்.. நாளைக்கு ஷாப்பிங் போகும் போது ஷோபி, ஸ்வஸ்திக் ரெண்டு பேரையும் அழைச்சிட்டே போய் பழக்கிக் கொடுக்கணும்.. எனக்குள் பேசியவாறு கிழிந்த துணிகளை தைப்பதற்காக எடுத்து வைத்தபடி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தேன்..
ஷோபி வியர்க்க விறுவிறுக்க குழம்புடன் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள்.. மனசுக்குள் இடியே இறங்கியது போல வலிக்க ஆரம்பிக்க என் கடுமையெல்லாம், அரவம் கேட்டதும் ஓடிப்பாயும் பறவையைப்போல ஒளிந்தோடியது ‘என்னம்மா.. ஏன் நெருப்புக்கு பக்கத்துல நிக்கிறே.. இப்படி கொஞ்சம் தள்ளி நில்லு.. அந்த பெரிய கரண்டியை எடு, இப்படி டேஸ்ட் பாரு.. இவளவு தான் உப்பு காரம் எல்லாம் இருக்கணும்’ என்று அவளை அருகிலிருத்தி ஒவ்வொன்றாகக் கற்றுக்கொடுத்தவாறே ‘வேலை முடிஞ்சதும் தோட்டத்துக்கு போய் ஜாலியா வேலை பண்ணலாம்மா.. அப்பதான் பாட்டி வரும்போது அவங்களுக்கு சர்ப்ரைசா இருக்கும்’ என்று சொல்லியபடி சமையலை முடித்தேன்..
சாப்பாட்டிற்குப் பிறகு கொஞ்ச நேரம் கண்ணயரலாம் என்று நினைத்தாலும் இமைகளிரண்டும் நீயா நானா என்று சண்டையிட, பேசாமல் எழுந்து ‘கிறிஸ்டல்’ போல பளிச்சிட்ட வீட்டை திரும்பவும் பெருக்கினேன்.. ம்.. நானிருக்கும் வீட்டில் தூசு கூட அனுமதி கேட்டுத்தான் வரும் என்று என் நண்பிகள் கேலிபண்ணுவார்கள்.. இனியும் எப்படியோ..
நான்கு மணிக்கு பிள்ளைகள் எழும்புவதற்குள் அவர்களுக்கென்று டிபன் செய்து வைத்துவிட்டு தோட்டத்திற்குள் சென்ற என்னை ‘அம்மா’ என்று பின்னால் வந்து கட்டிப்பிடித்த ஸ்வஸ்திக்கை அப்படியே அள்ளி மடியில் போட்டு கொஞ்சியபடி ஆராய்ந்தேன்.. பத்து வயதிற்கு வளர்த்தி கொஞ்சம் அதிகம் தான்.. சரியான துறுதுறு.. பள்ளிக்கூடம் விட்டுவந்த நேரம் முதல் எந்த நேரமும் என் பின்னாலேயே அலைவான்.. சாப்பாடு கூட இதுநாள்வரை நான் ஊட்டி விட வேண்டும்.. இப்போது ஓரிரு மாதங்களாக அவனே எடுத்து சாப்பிட வேண்டும் என்று கண்டிப்பதால் முகச்சுளிப்புடன் சாப்பிடுகிறான்..
ஷோபி நேர்மாறு.. நீண்ட கூந்தல், குச்சி குச்சியாய் கைகால்கள், அமர்ந்த நடை, அவள் அழகிய இளம்பெண்ணாக மாறப்போவதை இப்போதே சொல்லி விடலாம்.. என்ன கொஞ்சமே கொஞ்சமாய் செல்லச் சோம்பல்.. இனி இவள் பெரியவளாகி, திருமணம் செய்து கொடுக்கும் வரை.. இப்போதே அவள் பற்றிய கவலை ஆரம்பித்துவிட்டதால் தான் ஊரில் தனியாயிருந்த அம்மாவை வரச்சொல்லிவிட்டேன்.. அவர் வந்தால் என் பாரங்களுக்கு விடிவு வந்துவிடும். அவரே வீட்டையும், குழந்தைகளையும், அவரது அண்ணன் மகனான என் கணவரையும் பார்த்துக் கொள்வார்..

என் கணவர்.. இன்று வரை எங்களுக்குள் பெரிய சண்டை வந்ததேயில்லை.. எத்தனை மென்மையானவர்.. ‘ஊர்க்கண்ணு சரியில்லை.. கையைப் பிடிக்காமல் போங்க’ என்று என் அம்மாவும், அத்தையும் சொல்லுமளவிற்கு அன்றில் பறவை போல அத்தனை நெருக்கம்.. இந்த வேலை உயர்வு மட்டும் இல்லாமலிருந்தால் இந்த நேரம் என்னோடு சேர்ந்து மண்ணைக் கொத்துகிறேன் பேர்வழி என்று எனக்கு மண் அபிஷேகம் பண்ணியிருப்பார்.. சிங்கப்பூரில் இருந்து வருவதற்கு இன்னும் இரண்டு வாரமாகுமாம்.. இமெயில் பண்ணியிருக்கிறார்..
அவர் வருவதற்குள் வீட்டை ஒழுங்குபடுத்தி, கண்ணாடி போல பளபளபளவென சுத்தமாக்க வேண்டும் எந்தக் குறையோ, கடமையோ, தொல்லையோ அவருக்கு ஏற்படுத்தக்கூடாது.. பிள்ளைகளும் தங்கள் வேலைகளை தாங்களே பார்ப்பது போல பழக்கி விட வேண்டும். அந்த அவசரத்துடன் தான் அவர்களின் எரிச்சலையும் பொருட்படுத்தாமல் வேலைகளைப் பழக்குகின்றேன்..
இப்போதெல்லாம் முன்னைப் போல துடிப்போடு வேலை செய்ய முடிவதில்லை, எரிச்சலும்; கோபமும் ஆயாசமும் குத்தகை எடுத்ததுபோல முணுக்கென்று மூக்கின் மேல் வந்து உட்கார்ந்து கொள்கின்றன.. பலவீனத்துடன் போட்டியிட்டவாறே வேலைகள் செய்யவேண்டியிருப்பதால் பிள்ளைகளை ஓய்வெடுக்க விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறேன்..
ஏன்  எனக்கு இது ஏற்பட வேணும்.. மனசுக்குள் கேள்விகள் மழைபோல விழ, தொடர்ச்சியாய் கண்களிலும் அருவி.. டாக்டர். பிரபு நாள் குறித்து விட்டார்.. மூன்று மாதங்கள்.. நான் வாழப் போகும் நாள்.. இரத்தப் புற்று நோயாம்.. இறுதிக் கட்டமாம்.. முப்பத்தொன்பது வயதெல்லாம் சாகும் வயதா.. நான் புற்றுநோய் வரவில்லையென்று அழுதேனா..
இதையெல்லாம் என் குடும்பம் தாங்குமா? நானில்லாமல் ஆன பிறகு வீடு, வீடாக இருக்குமா.. ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்துக் காதலும் பாசமும் கலந்து நான் செய்தது போலவே என் குழந்தைகள், கணவர்.. இவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள்.. அதனால் தான் இத்தனை முன்னேற்பாடும்.. கெட்டிக்காரக் குழந்தைகள், சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள், அவர் தான் பாவம்..
பழைய மாளிகையை தாங்குவதாய் எண்ணியிருக்கும் பல்லியைப் போலதான் நானும் இதுநாள்வரை குடும்பத்தை என் இருகரங்களாலும், இதயத்தாலும் தாங்கி வந்தேன்.. அதனால் தான் இன்றும் நான் போனபிறகும் எண்ணெயிட்ட சக்கரமாய் வாழ்க்கை செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் என் இறுதிநாளுக்கு முன்னே ..

(ஸ்டெப் மம் திரைப்படம் பார்ததும் ஏற்பட்ட மனவுணர்வுகள்)

முகமூடி


பட்டியில் அடிமாடுகளை அடைத்து வைத்திருப்பது தான் என் நினைவுக்கு வந்தது..இல்லை..அதைவிடவும் கீழாக.. கையில் பிசுக்கு பிசுபிசுக்க, போட்டிருந்த உடை பல இடங்களில் கிழிந்திருக்க அடிவாங்கிய முகம் கன்னிப்போய் காங்களுடன் உடம்பெங்கும் வியர்வை ஆறாகப் பெருக..என் முறைக்காகக் காத்திருந்தேன்..
சுற்றியிருந்த அத்தனை பேரும் என்னையொத்த மனநிலையுடன்.. சிறுவர்கள் முதல் வயது போன தாத்தாக்கள் வரை..அதிலும் ஒரு அங்கஹீனன்.. அவனையும் ஏன்.. நடக்கவே முடியாமல் அரைக்காலில் அரைந்து செல்லும் அவன் இவர்களை என்ன பண்ணப் போகிறானாம்.. நாங்கள் என்ன பாவம் செய்தோமென்று இப்படி..

இன்று தான் உலகின் இறுதி நாளா.. இல்லை நாளை என்ற ஒன்று இருக்கின்றதா..விடைதெரியாமல் தவித்த அந்த அந்தகாரப்பொழுதில் விடிவெள்ளியாய் அம்மாவின் பதைபதைத்த முகம்.. நான் இங்கு வந்த அந்த நாளில் அம்மா முகத்தில் தோன்றிய கலவரம்..உயிரோடு இறந்த பிணத்தைப்போல அவர் பார்த்த பார்வை, கதறியழுத ஓலம்.. இன்றுவரை என்னை இற்றுப்போகாமலிருக்க வைத்திருப்பது அவரின் பாசமுகம் மட்டும்தான்.. அம்மா இப்போ என்ன செய்வார்.. சாப்பிட்டிருக்க மாட்டார்..அழுதுகொண்டெ..எனக்காக ஊரிலிருக்கும் அத்தனை கடவுள்களிடமும் நேர்ச்சை வைத்தவாறு ஸ்வாமியறையே கதியாகக் கிடப்பாராக்கும்.. அப்பா உடைந்து ஒடுங்கிப்போய் மூலைக் கதிரையில் உறைந்திருப்பார்.. அக்கா..சூனியத்தைப் பார்த்து சுடுமூச்சு விட்டவாறு தம்பி தம்பி என்று அரற்றிக்கொண்டிருப்பாள்..

ஐயோ..ஏன்டா சண்டாளா..நான் உனக்கென்னடா செய்தனான்.. படுபாவி.. தூரத்தில் தேய்ந்துகொண்டிருந்த குரல் உடலின் குருதியை சில்லிடச்செய்ய..செய்வதறியாமல் மற்றவர்களைப்போலே கூனிக்குறுகி ஏதோ ஒரு அற்புதம் நடக்காதா என்ற அவாவுடன் அரையுயிராய்..

இவனும் என்னைப்போல பிடிபட்ட ஒருவனாய் தான் இருப்பானாக்கும்..நகக்கண்ணில் ஏற்றிய ஊசிகளும், ஆசனவாயிலில் செருகிய குழாய்களும், தலைகீழாய் கட்டி கீழே எரியவிட்ட மிளகாய் புகையும், ஐஸ்கட்டிகளால் மரத்துப்போன உடம்பும் அவனையும் சூழ்நிலைக் கைதியாக ஆக்கியிருக்கலாம்.. இல்லையென்றால் வெட்டித்தறிக்கும் கோடாரி போன்ற எட்டப்பன்களில் ஒருவனாகக்கூட அவனிருக்கலாம்.. இன்று இவன் நாளை இவன் நிற்கும் அதே இடத்தில் நானும் நிற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம்.. அப்போது என்னுயிரைக் காப்பாற்ற இவனைப்போலவே நானும் அப்பாவிகளை காட்டிக்கொடுக்கலாம்..

எண்ணங்களை முரட்டுத்தனமாக இடைநிறுத்தியது துப்பாக்கி முனை..தள்ளப்பட்ட நான்.. சணல்கயிற்றால் பிரிக்கப்பட்ட ஒடுங்கிய பாதைவழியே விதியை நொந்தவாறு மெதுவாக நடைபோடுகிறேன்.. நிமிர்ந்து நிற்கச்சொல்லி இன்னுமொரு அடி என் தாடையில்..வலியை பொறுத்துக்கொண்டு முகம் சுளிக்காமல் வெற்றுப்பார்வையுடன் என்முன் கறுப்புத் துணியால் முகம்மூடிநிற்கும் ‘தலையாட்டி’ யை எதிர்நோக்கினேன்..

மேல்கீழாக அசைந்தால் என் விதி முடிந்தது.. சாவு சிறந்ததென்று சொல்லும்படியான சித்திரவதைகளோ அல்லது ஒரே நேரத்தில் வரிசையாக நிற்க வைத்து உடல்களை சல்லடையாக்கும் துப்பாக்கி ரவைகளோ, உயிருடன் உருட்டிவிட உபயோகப்படும் புதைகுழிகளோ தான் எனக்காகக் காத்திருக்கும்..

தலை வலமிடமாக அசைகிறது..அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து நின்ற என்னை கெட்ட வார்த்தையால் திட்டியபடி மீண்டும் அந்த துப்பாக்கியின் முனை வெளியே தள்ள..நடப்பது நிஜமா கனவா என்றுகூட எண்ண முடியாமல், சந்தோஷப்படுவதா..இல்லை உள்ளிருப்பவர்களுக்காய் கவலைப்படுவதா என்று தெரியாமல் பிரமைபிடித்தவாறு நின்றவனின் காதில்..

ஐயோ என்ர கடவுளே.. அறுவானே.. நான் என்னடா செய்தனான் உனக்கு..இன்னுமொரு குரல் என் செவிப்பறைகளைக் கிழிக்க கையாலாகாத்தனத்துடன் என் அம்மாவைத் தேடி குனிந்த தலையுடன் வலியின் வேதனை தாக்க விந்தியபடி வீடுநோக்கி நடைபோட்டேன்..

மறக்கமுடியவில்லையடி..

ஒரு நாள் பயணமானாலும் கூட தனியே செல்வதற்கு சம்மதிக்க மாட்டாள்.. குழந்தைகள் மேல் அத்தனை பாசம்.. அவர்களை விட்டுச் சென்றால் யார் கவனிப்பது, உணவு கொடுப்பது, பாடம் சொல்லிக்கொடுப்பது என்று ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்டு என் வாயை மூட வைத்து காரியத்தை சாதித்துக்கொள்வதில் அவளைப்போல கெட்டிக்காரி இந்த உலகத்தில் இல்லை..

மணிமணியாய் ஐந்து குழந்தைகள்.. அத்தனை பேர் மேலும் பாரபட்சமில்லாத அன்பு.. “அன்பு”.. அந்த ஒன்றில் மட்டுமே அவள் பணக்காரி.. யார் வந்தாலும், என்ன செய்தாலும் அன்பைக் கொட்டிக் கொடுப்பதில் அவளுக்கு நிகர் அவளே.. இன்றும் அவள் பெயர் சொல்லி எத்தனை பிள்ளைகள் எங்கள் வீட்டில் இருந்து இலவசமாக படிக்கிறார்கள் தெரியுமா?

வீட்டில் பணமில்லை என்றால் என்ன செய்வது என்று நான் விழித்துக்கொண்டிருக்கும் நேரங்களில், சமயத்தில் தனது தாலியைக் கூட கழற்றிக் கொடுத்து பசியாற்றுபவள்.. தான் உண்ண மிச்சம் வைக்காமல் அத்தனையையும் குழந்தைகளுக்கென விட்டுக்கொடுத்தே ஓடாய் தேய்ந்து கூடாய் போனவள் அவள்..

தாய்மையே தேவதையாகி வந்தது போல அத்தனை அழகி அவள்.. எனக்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவள்.. என்று அவள் கரம் பிடித்தேனோ.. அன்றிலிருந்து என் வாழ்க்கையில் சந்தோஷத்தையே அதிகமாகப் பார்க்கத் தொடங்கினேன்..

எத்தனை கஷ்டங்கள், சங்கடங்கள், கவலைகள், சண்டைகள், இடர்கள் வந்தாலும் நீயில்லாமல் என்னால் அத்தனையையும் தாக்குப்பிடித்திருக்க முடியுமா என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன்.. என் பின்னாலிருந்து அனைத்தையும் தாங்கும் தூணாய் இருந்தவள் நீதானே..

கல்வியின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்தாய், கண்ணியமாய் இருப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்தாய்.. பாசத்தை பாpவோடு கொடுத்தாய்.. இன்று எங்களை பாராமுகமாக விட்டுச் சென்றுவிட்டாயே..

ஒரு சில மணித்துளிகள் உன்னால் பிள்ளைகளை பிரிந்திருக்க முடியாதென்று என்று எண்ணி, இன்று நீண்ட நெடுந்தொலைவுப் பயணத்தில் தனியாகச் சென்றுவிட்டாயே.. உன் அலட்சியத்தால் உன்னை மட்டுமன்றி எங்களையும் அழித்து விட்டாயே.. நியாயமா?

நோய் கொன்ற தாயை எண்ணி எண்ணி ஒவ்வொரு நொடியும் உடைந்து உருக்குலையும் உன் குழந்தைகளுக்கு என்ன சொல்வேன்.. வேதனையால் நொந்தழும் என் சோகங்களை புதைத்துக் கொண்டு சொந்தங்களுக்காக எப்படி நான் வாழ்வேன்..

எத்தனை முறை கேட்டும் இந்தக் கேள்விக்கான விடையை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.. உன்னைக் கவனிக்காமல் உருகும் மெழுகுவர்த்தியாய் உருக்குலைந்து போனதை என்னிடம் ஏன் சொல்லாமல் மறைத்தாய்.. எதற்காக சிகிச்சைகளை மறுத்தாய்.. எங்களை ஏன் மறுதலித்தாய்..

ஒரு மரத்தில் காய்களும் கனிகளும், பூக்களும் இலைகளும் இல்லாமல் பட்டுப்போனாலும் கூட, அதனை நாம் மரம் என்று தான் சொல்கிறோம்.. இன்று நானும் என் குழந்தைகளும் அந்த மரம் போல தான்..  என்ன.. ஜீவனில்லாமல் ஜீவிக்கின்றோம்..

கன்றுக்குட்டிக்காதல்

பின்னால் திரும்பிப் பார்க்க தேவையில்லை.. எதற்கும் பயப்படவும் தேவையில்லை..  கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடரும் நிழலாய் அவன் என் பின்னால்..
இன்றாவது அவன் திருட்டுத்தனத்தை கண்டறிந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இன்னும் மெதுவாக சைக்கிளை மிதிக்கிறேன்.. ம்ஹ்ம்.. எங்கே.. அவனுக்கு என்னை விட மெதுவாக பைக் ஓட்டத் தெரியும் போல.. இன்று நிச்சயமாக சந்தன நிற டீஷேர்ட் தான் அணிந்திருப்பான்.. ஏனென்றால் நான் அணிந்திருப்பதும் அதே நிற ஆடைதான்..
நானிருந்த வீட்டுக்கு இடப்புறமாக முன்னாலுள்ள வீடுதான் அவரது.. சரத்குமார் நடிக்க வந்த புதிதில் எப்படியிருப்பாரென்று ஞாபகமிருக்கிறதா.. Ditto.. எந்தவித மாறுதலும் இல்லை, அதே உயரம், உடற்கட்டு, வலிமை, கம்பீரம், அழகு.. அமைதி.. அத்தனை மேன்லினெஸ்.. என்னுடன் கூடப்படிக்கும் அநேக பெண்களின் கனவுக்கண்ணன் என் பின்னால் அலைவது ‘ஹா ஹா ஹா’.. மனசுக்குள் இப்படித்தான் கொஞ்சம் வில்லத்தனமான சந்தோஷம் வந்து போகும்.. டீனேஜ் வயதிலிருக்கும் ஒரு பெண்ணுக்கு இதைவிடப் பெருமை ஏது? ஆனாலும் நிமிர்ந்து பார்க்கவோ, நேரில் பேசவோ பயம்.. அவருக்கும் தான் என்று நினைக்கின்றேன்..
ஆனாலும் ஒவ்வொரு நாளும் என்னை தொடர்ந்து தேர்போல மெதுவாய ஊர்வலம் வருவதும், என் கல்லூரி வளைவிலிருக்கும் அவர் நண்பர் வீட்டிற்கு முன் தவம் செய்யும் முனிவன் போல பார்த்துக் கொண்டே நிற்பதும்.. என் பாட்மின்டன் பயிற்சிகளுக்கு வந்து எனக்கு எதிரில் நின்று விளையாடி பயிற்சி கொடுப்பதும்.. என்னை வேறு யாராவது பின்தொடர்ந்தாலோ, கிண்டல் பண்ணினாலோ அடி பின்னி எடுப்பதும் என்று எதுவுமே தவறுவதில்லை..
என் இரண்டு தோழிகளுக்கு மாத்திரமே இந்த இரகசியம் பரகசியமாக தெரியும்.. எங்களுக்குள் ஒரு அழகான பொக்கிஷமாக..

மூவருக்குமே அவர் பெயர் தெரியாது.. யாரிடமாவது கேட்பதற்கும் வெட்கம் கலந்த பயம். அதற்கு ஏற்றாற் போல அமைதியின் சிகரமாக அவரும்.. நாங்களே அவருக்கு ரிச்சர்ட் என்று பெயர் சூட்டி அவரது நகர்வுகளை எங்களுக்குள் அறிவித்துக்கொள்வோம்.. நாங்கள் அவரை கேலி பண்ணுவது அவருக்குத் தெரியுமோ என்னவோ எங்களுக்கு அதில் ஒரு த்ரில்..
மூன்று நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சத்தமின்றிச் சென்ற நான் திரும்ப வந்த அன்று அவர் முகத்தில் முளைத்திருந்த மூன்று நாள் தாடியும், முகவாட்டமும் நிச்சயமாக எனக்குள் சலனத்தை ஏற்படுத்தவில்லை என்று சொன்னால் பொய்யே..
அந்த வயதில் காதல் என்றால் என்ன.. அதற்கு அடுத்த கட்டம் என்ன.. கல்யாணம் என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தங்கள் தெரியாவிட்டாலும், எங்கள் அழகை ஆராதிக்கும் ஒருவன், எங்களுக்கென்று ஒருவன் இருப்பது ஒருவித குழந்தைத்தனமான சந்தோஷம் தான்.. அவருடைய கவசாக்கி மோட்டார் சைக்கிளில் பறந்து செல்ல வேண்டும், எனக்கொரு பாய்பிரன்ட் இருக்கிறார் என்று எல்லோருக்கும் சத்தம் போட்டு சொல்ல வேண்டும், என்னை முறைத்துப் பார்க்கும் நண்பர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.. இது மட்டும் தான் மனசுக்குள் இருந்த கல்மிஷமில்லாத ஆசைகள்..
நேருக்கு நேர் நின்று விளையாடினாலும் கூட படித்துக் கொண்டிருந்த என்னை தொல்லை பண்ணக்கூடாது என்று என்னிடம் தனிமையில் பேசக்கூட முயலாத அந்தப் பண்பு தான் அவரிடம் எனக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியதோ என்று இன்று வரை நினைத்துப் பார்க்கிறேன்.. என் வயதுப் பையன்களெல்லாம் கடிதங்கள் கொடுத்தோ, கேலி பண்ணியோ, தூது அனுப்பியோ தங்கள் காதலைச் சொன்ன வேளையில், அமைதியாய், ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி காத்திருந்த அவரின் பொறுமையை சில வேளைகளில் நினைத்துப் பார்ப்பேன்..
படிப்பு முடியும் நேரம், அப்பாவின் வேலையும் மாற்றம் பெற, பரீட்சைகள் முடிந்த அடுத்த நாளே ஊரைவிட்டு கிளம்ப வேண்டிய அவசரம், அவசியம்.. பரீட்சை முடிந்த அன்று என் கல்லூரிக்கு முன்னால் நிமிர்ந்து என்னை நேருக்கு நேர் கண்ணோக்கியதும், கடைசியாக, வீட்டை விட்டு வெளியேறும் நேரம் தன்வீட்டு கேற் முன்னால் நின்று வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல என்னை ஏக்கமாக பார்த்த பார்வையும் திடீரென்று சில வேளைகளில் மின்னல் கீற்றாய் மனசுக்குள் வந்து போகும்..
புதிய நண்பர்கள், காதல்கள், சம்பவங்கள் என்று எத்தனையோ அந்த ஞாபகத்தை மறைத்தாலும், எப்போதோ தோன்றும் வால் நட்சத்திரமாய் அவன் எண்ணங்கள் சில வேளைகளில் மனசுக்குள் வந்துதித்து மறைந்து விடும்..
எரிநட்சத்திரங்கள் விழும்போது நினைப்பது நடக்கும் என்பார்கள்.. ஒரு தடவையாவது அவன் எப்படி இருப்பான் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், எங்கிருந்தாலும் அந்த பெயர் தெரியாத எனக்குக் கன்றுக்குட்டிக் காதலைக் கற்றுத் தந்தவன் நலமாக இருக்க வேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக்கொள்வேன்..