Archive | February 2012

என்காதலா

காதல் போதையில் நீ சொல்லும் பொய்களை காட்டிக்கொள்ளாமல் ரசித்துக்கொள்வேன்..
கரம் பிடித்து உன் கூட நடக்கையில் காற்றுக் கூட கண்ணேறு போட்டுப் போகும்..
நீ வாங்கித் தரும் பூவில் உன் நேசத்தின் வாசம்..
வாய்குவித்து தரும் முத்தத்தில் வடிந்தோடும் பாசம்..
உயிர்வரை உட்சென்று உணர்வுகளை உறையவைக்கும் பார்வையும்
உடைகளை ஊடுருவி உடல் தொடும் உன் கரங்களின் தேவைகளும்
உன் காதலை காதலோடு சொல்லிச் செல்லும்..
குறும்புகளால் கொல்லும் நீ குறுகுறுப்பாய் பார்க்கையில்
என் உயிர்க்கலங்களும் உடைந்துபோகச் சிலிர்க்கும்..
சாரலாய் தூறலாய் பாசம் சொரிந்து என்னை காதலாய் கைது செய்யும் கள்வா
நீ இல்லாத வாழ்வெனக்கு வாழ்வா..

என்னவன்..

மீசை மட்டும் இல்லையென்றால் நீ இன்னும் சின்னக் குழந்தைதான்.. மனசுக்குள் எண்ணியபடி, வளைகோடாய் முகம் புன்சிரிக்க பக்கத்தில் உறங்கும் உன்அழகை விழிகளால் பருக ஆரம்பித்தேன்..
அடர்ந்த புருவங்கள், ஏறு நெற்றி, கூர் மூக்கு, விழித்திருக்கையில் கொஞ்சம் அழுத்தமாகத் தோன்றும் உதடுகள் இப்போது அமைதியாய் மென்நகையுடன்.. நீ அழகன் தானடா..
காதலைக் காண்பிக்கத் தெரியாது உனக்கு.. கண்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் அதை உன் ஒவ்வொரு செயல்களும் மெலிதாக கோடி காட்டுவது உனக்கு புரியாது அது எனக்குத் தெரியும் என்பதும் உனக்குத் தெரியாது..
அப்பாவைப்போன்றே என் கைகளை உன் கைகளுக்குள் சிறைப்பிடித்து நடத்திச் செல்வதிலிருந்து, என் முகமறிந்து முயல்குட்டி போலே பின்னால் அலைவது வரை நீ வித்தியாசமானவன்..
உறக்கத்திலிருக்கும் என்னை ரசிப்பதாய் சொன்ன அன்று எனக்குள் புத்தருவியாய் சந்தோஷச் சாரல்.. இந்த முரடனுக்குள்ளும் இத்தனை மென்மையாவென்று..
தேவைகளை பெற்றுக்கொள்வதில் தீரன் நீ.. என்னை உன்னவளாக்கியதிலிருந்து அறிந்து கொண்டேன்..

உன்னுடையவை என்பதில் நீ காட்டும் ஆதிக்கத்தை, என்னை குறைசொன்ன உன் உறவினரை எள்ளிநகையாடி எடுத்தெறிந்து பேசியதில் உணர்ந்தேன்..
நீ உலகின் மிகச் சிறந்த காவலன், காதலன், கணவன், நண்பன்.. உறவுகளை பின்நிறுத்தி என் உணர்வுகளை நேசிக்கும் உன்னை வேறென்னவென்று சொல்ல நான்..
காதலை வேண்டுவதில் சிறுவன், கொடுக்கும் போது தலைவன், தொல்லை செய்வதில் கண்ணன், குறும்பு செய்யும் கள்வன், போட்டியிடும் போராளி..
பாசக்காரி.. என்று நீ நேசமாய் சொல்கையிலும், பரிவோடு என் தோள் சாய்கையிலும், கழுத்து வளைவில் முகம் புதைக்கையிலும், நெற்றியில் ஈர உதடு ஒற்றுகையிலும் உள்ளோடும் சிலிர்ப்பில் என் ஸ்வாசமெல்லாம் உன் காதல் வாசம்..
உன் வசீகரிக்கும் சிரிப்பில் வசமிழக்கும் ஒவ்வொரு தடவையும், அப்போதே செத்துவிடலாம் என்று என் செல்களெல்லாம் சத்தமிடும்..
நீ அணைக்கையில் அடங்கிவிடுகின்றது என் ஆணவமெல்லாம்.. நான் என்பதழிந்து நாமாய் மாறும் தருணத்திலெல்லாம்.. இதுதான் சொர்க்கம் என்று மனசுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்துச் சொல்லும்..
உன் காதலுக்கு முன் என் காதல் தோற்றுப் போகும் வேளையிலெல்லாம் வெல்வதைப் பற்றி எண்ணாமல் இன்னொரு முறை தோற்கலாமென்று என் ஆசைமனம் சொல்லும்.. உன் அன்பின் ஆழம் அத்தகையது..
அழகா.. உன் ஊடல்களும், கூடல்களும் கூட அழகாயிருக்கின்றதென்ன மாயம்? உன் கோபப் பார்வையின் மூலையிலும் காதல் பளபளக்க, படபடக்கும் வார்த்தைகளில் காயப்படுத்தாத நேசம் நிர்மலாய் தெரிவது உனக்கு தெரியுமா?
உன் மூச்சுக்காற்று முகம் தொடும் இடைவெளியையே என்னால் தாங்க முடியவில்லை.. காதலா.. உன் காதல் எனக்கு மட்டுமே தரவேண்டும்.. உன் நேசத்தில் நிதம் நான் நலுங்க வேண்டும்..

நீ என்னவன்.. எனக்கே மட்டுமானவன்..

நீ

எங்கிருந்து வந்தாய் என்று இன்று வரை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.. ப்ருத்விராஜன் புரவி மேல் வந்தது போலவே பறந்து வந்து என்னைப் பந்தாடிச் சென்ற கள்வன்

என் வீட்டு இளவரசி நான் எனும் போதெல்லாம்.. உன் உள்ளத்து அரண்மனையின் ராஜகுமாரி நானென்று சொல்கையில் அடிமையாகிவிடுகின்றது என் அத்தனை செல்களும்..

முதல் பார்வையில் காதல் தோன்றுமென்று சொன்னவர்களைப் பார்த்து சிரித்த என்னைப் பார்த்து காதல் மென்முறுவல் பூக்கின்றது..
நீ என்னைப் நோக்கிய முதற் பார்வை, நீ எனை பார்த்து முதன்முதலாய் இதழ் பிரித்து சிரித்த அக்கணம், உன்னை எனக்குணர்த்திய வார்த்தைகள், முதற்பயணம், முதற்பரிசு என அத்தனை முதல்களும் என் மனதில் பொக்கிஷமாய்..
காதலிப்பதை விடக் காதலிக்கப்படுவதே சிறந்தது என்பதை உன்னை காதலிக்க ஆரம்பித்த கணத்திலிருந்து உணர்ந்து கொண்டேன்..
கைவளைவுக்குள்ளும், கண்தொலைவுக்குள்ளும் என்னை கைது செய்யும் உன் பாசம் பார்த்து பனி நனைத்த பூவாய் சிலிர்க்கிறது நெஞ்சம்..
உன்னை நினைப்பதிலேயே என் நேரம் போகின்றதென்று நான் சொன்னால்.. உன்னை நினைப்பதற்கு நேரம் போதவில்லையென்று சொல்லும் உன்னை நான் என்ன பண்ணுவது
உன்னதா என்னதா என்று வரும் சண்டைகளில் அநேகமானவை பாசத்தை யார் அதிகம் பகிர்வது என்பதிலாகவே இருப்பது காதல் ஜெயிக்கிறது..
உன்னோடான என் பயணங்கள் நீண்டு செல்லாதா என்று கத்திக் கேட்கும் கள்ள மனம்..
தோள் சாய்ந்திருக்கும் நேரங்களில் கணங்கள் கடுதியாய் பாய்வது கண்டு கடிகாரத்துடன் சண்டை போட எத்தனித்தது எத்தனை தரம்?
சாலை ஓரத்தில் மட்டும் தான் நடக்க வேண்டும் என்ற கட்டளையுடன் உள்ளங்கைபிடித்துச் செல்லும் வேளைகளிலெல்லாம்.. உன் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, அக்கறை, பாதுகாப்பை உணர்ந்து உன்மத்தமாகிவிடுவேன் நான்
நீ தாயாகும் தருணங்களில் நான் குழந்தையாகவே இருந்துவிடக்கூடாதாவென்று எண்ணுவதும், கோபப் பார்வை பார்க்கும் பொழுதுகளில் தாயாகி தாங்கிக் கொள்வதும் கவிதையென்று நீ சொல்வதே கவிதையடா..
உன் பரிசுகளின் பின்னே ஒளிந்திருக்கும் பாசத்தை பணம் தருமா?
தனித்திருக்கும் நேரங்களில் நீ முணுமுணுக்கும் பாடலகளும் என்னைப் பற்றியதாகவே அமைவது ஏனென்று தெரியாமலா உன்னைக் காதலிக்கின்றேன்..
எனக்காய் வாழும் உனக்காய் என்னையன்றி என்ன தரலாமென்று எனக்குத் தெரியவில்லையடா..

என்கோபக்காரா..

உன்னை கோபப்படுத்துவது எவ்வளவு எளிதென்று எனக்கு மட்டுமே தெரியும்..

கொஞ்சமாய் நான் முகம் சுழித்தாலே உன் மூக்கு குடமிளகாயாய் சிவந்துவிடும்..

கொஞ்சலாய் பேசவில்லையென்றால் உலைபோல கொதிக்கும் உள்மனசு

உன் அழைப்புகளை நிராகரிப்பதாய் நீ சொல்லும் காரணத்தின் பின் அன்பைத்தேடி அடம்பிடித்து அழும் குட்டிக் குழந்தையின் திமிர்..

உன்னை கவனிக்காதது போல நானிருக்கும் போதெல்லாம் முள்மீது அமர்ந்திருப்பதுபோல நீயிருப்பாய்

அந்த முட்களின் வலிகள் வார்த்தைகளாகி என்னை சாட்டையால் சொடுக்கும் போது

நான் சந்தோஷப்படுவேன்..

நானின்றி நீ இயல்பாயிருக்க மாட்டாய் என்பது என் காதலின் வலிமை தானே..

உன் சுடுசொற்கள் கூட சந்தன மழை பொழிந்தாற் போல தண்மையாய் கேட்கும்..

வெந்தணலாய் வேகும் உன் பேச்சின் பின் நிழலாய் மறைந்திருக்கும் நேசம் நானறிந்தது.. நான் மாத்திரமே அறிந்தது..

உறுமும் உன் குரலுக்குள் ஒளிந்திருக்கும் என் மீதான அக்கறையும்

சீறும் உன் கோபத்தின் பின்னால் புதைந்திருக்கும் அரவணைப்பும்

உள்ளாந்த உன் அன்பை உறுதியோடு உணர்த்தும்

உன் அமைதியைப் போலவே, ஆழமான அன்பைப் போலவே உன் கோபத்தையும் காதலுடன் காதலிக்கிறேனடா என் கோபக்காரா..

அழகு

இந்த அக்கா, ஆன்டீஸ் ‘ல்லாரும் என்ன நெனச்சிட்டு இருக்காங்களோ தெரில.. கறுப்பா இருந்தா யாருக்குமே பிடிக்குறதில்ல போல.. எல்லாரும் செவப்பாகணும் செவப்பாகணும்னு எதையெல்லாமோ பூசுறாங்க..
இப்படித்தான் அன்னைக்கு பக்கத்து வீட்டு அக்காவ பாக்கலாம்னு போனேனா.. அய்யோ பேய் ன்னு அலறியடிச்சிட்டு ஓடிவந்துட்டேன்.. அப்புறம் ஆன்டி வந்து இல்ல அம்மு அது அக்காதான்னு என்னை சமாதானப்படுத்தி ரூமுக்கு கூட்டிற்று போனாங்களா.. ஆமா.. தனு அக்கா தான்.. மூஞ்சியெல்லாம் களிமண்பூசிட்டு நின்னாங்க..நான்கூட மூளைக்குள்ள இருந்தது தான் வழிஞ்சி வந்துட்டோன்னு ஒரு செக்கன் பயந்துட்டேன்.. கேட்டா ஏதோ முல்தானி மெட்டியோ மிட்டியோ.. அதைப் பூசினா செவப்பாகிடுவாங்களாம்ன்னு தனுக்கா சொன்னாள்.. ஆமா.. இவ இனி கலராகி கிழிச்சது போலதான்னு நெனச்சிண்டே வெளிய வந்துட்டேன்..
அப்புறம் இன்னொரு நாள் எங்க வீட்ல பெரியம்மா மகள் வந்து நின்னாங்க.. ஏதோ வெடிங் போகணுமாம்.. வந்த நேரத்துல இருந்து நீங்க அங்க நடந்த டிறாமாவப் பாத்திருந்தீங்க.. கல்யாணப் பொண்ணு இவங்க தானான்னு டவுட் வந்திருக்கும்.. அம்மாகிட்ட சொல்லி வெந்நீர் வைச்சு ஆவி பிடிச்சாங்களா.. அத பாத்திட்டு என்னோட அண்ணா பேசாம சுடுகாட்டுக்கு போக்கான்னு சத்தமா  சொல்லிட்டு வெளியே ஓடிப் போய்ட்டான்.. அவங்க அசரலையே.. அப்புறம் கிளென்சராம், டோனராம், வீட்ல சாப்பிட வைச்சிருந்த தயிரையெல்லாம் கொட்டி முகத்துல பூசி, அப்புறம் பச்சைப் பயறு அரைச்சு மாவாக்கி அதைப்பூசி.. பேச முடியாமல் அவஸ்தைப்பட்டு ஒரு மாதிரி எல்லாத்தையும் முடிச்சிட்டாங்கன்னு பார்த்தா ஏதோ டியூப் ஒண்ணுல இருந்து ஜெல் போல ஏதோ.. இதை முகமெல்லாம் பூசிட்டு இருந்தாங்க.. பார்த்தா கிறிஸ்டல் போல இருந்துச்சா.. அப்புறம் அதை அப்படியே தோல் போல உரிச்சு எடுத்தாங்களா.. அச்சச்சோ.. ரத்தம் வருமே வலிக்குமேன்னு நான் பாத்துகிட்டு இருந்தா.. மெதுவா என் கன்னத்தை தட்டி சிரிச்சுட்டே பாத்ரூமுக்குள்ள போனாங்க..
வெடிங் டே அன்னைக்கு அவங்க டிரெஸ் பண்ணத நான் சொல்லணும்னா நீங்க எனக்கு ரெண்டு பெரிய சொக்லற் தரணும்.. மூணு ஹவர்.. அது பூசுறாங்க, இது தேய்க்கிறாங்க, கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்குன்னு எதையெதையோல்லாம் அப்பி மாப் பானைல விழுந்த பூனை மாதிரி கௌம்பினாங்க.. பேசாம நான் சின்னப் பொண்ணாவே இருந்திடலாம்னு நெனைக்கிறேன்..
எங்க வீட்டுக்கு முன்னாடி புதுசா கல்யாணம் பண்ண ஒரு ஆன்டியும் அங்கிளும் இப்போ குடிவந்திருக்காங்க.. ஆன்டி ஏற்கனவே அழகுதான்.. சோ அவங்களோட பிரெண்டாயிடலாம்னு நெனச்சி அவங்க வீட்டுக்கு போனேனா..ஹம்மா! எத்தனை கிறீம்.. எத்தனை பவுடர், எத்தனை Bottles.. அவங்க டிரெசிங் டேபிள் நிரம்ப கிறீம் கிறீமா இருந்துச்சு.. பாவம் அங்கிள்.. அவர் சம்பாதிக்கிறதுல பாதி ஆன்டியோட பியூட்டி கிறீம்களுக்குத்தான் செலவாகும் போல..

 

ஆன்டிக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ தான் சொன்னாங்க, அப்பிளாம், டொமற்றோவாம், முட்டையாம் எல்லாம் ஒண்ணொண்ணா ஒவ்வொரு நாளும் பூசுவாங்களாம்.. ஏன் ஆன்டி இதெல்லாம் சாப்பிட்டா நல்லதுன்னு டீச்சர் சொன்னாங்களேன்னு சொன்னப்ப மெலிசா என்னை மொறைச்சுப் பார்த்தாங்களா.. சரி வேணாம்.. அன்னைக்கு அது போதும்ன்னு நான் வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்..
சரி..சமர்த்தா இருக்கலாம்ன்னு டீவி பார்த்தேனா, அதுலயும் ஒரு அக்கா வந்து தேன் பூசுங்க, சர்க்கரை பூசுங்க, வெள்ளரிக்கா பூசுங்க ரென்ரு நால்ல செவப்பாகளாம்ன்னு டமில்ல தப்புத் தப்பா சொல்லிட்டிருந்தாங்க.. செவப்பாகணும்னா பேசாம மிளகாய்தூள் பூசலாமே.. அதுவும் செவப்பா தானே இருக்கு..
நேத்திக்கு பார்த்தா எங்க மம்மி கிச்சன்ல ஏதோ பண்றாங்களேன்னு ஒளிஞ்சு பார்த்தேன்.. எனக்கும் ரொம்ப பசி, bananaல பால் சேர்த்துக்கொண்டு இருந்தாங்க..ஆஹா.. இன்னைக்கு புது ஸ்வீற் கெடைக்கப்போகுதுன்னு ஆசையா பாத்துட்டு இருந்தேனா.. அம்மா அதை அப்படியே தன்னோட மொகத்துல பூச வேணாமா..
மம்மி. நீங்களுமா..

அபி டைம்ஸ் II

காலைல இருந்து என்கூட பேசல.. லஞ்சும் எடுத்துப் போகல்ல.. இப்போ வரைக்கும் ஒரு போன் கோல் இல்ல.. ம்.. சார்’க்கு இன்னும் கோபம் கொறையல.. போடா உனக்கு மட்டும் தான் கோபம் வருமா.. மொபைல் ஸ்கிறீனை இன்னுமொருமுறை பார்த்துவிட்டு வீசியெறிந்தேன்..
என்ன பெரிய கோபம்.. எத்தனை நேரம் தாக்குப்பிடிக்குமென்று பார்க்கலாம் என்று புத்தி நினைத்தாலும்.. மனசு மட்டும்.. அய்யோ..போதும்.. முடியல என்று உள்ளுக்குள் சிணுங்கிக்கொண்டிருந்தது..
ரெண்டு பேரும் லவ் பேர்ட்ஸ் போல ஒட்டிக்கொண்டு இருக்கிறதும், பிடறி சிலுப்பி சிங்கங்கள் போல சண்டை போடுறதும் பழகிப்போச்சுன்னு என் அத்தை சொல்வாங்க.. அதுக்காக இப்படியா.. முழுசா பதினேழு மணித்தியாலம் இருபத்தைந்து நிமிஷம்..
இருப்புக்கொள்ளாமல் அங்குமிங்கும் உலாவத் தொடங்கினேன்.. என் மொபைல் கால் டியூன் மெதுவாக mandy mooreன் ஒன்லி யூ எனப் பாடத்தொடங்க ஓடிப்போய் எடுத்தால்.. என் நண்பி.. பேசப் பிடிக்காமல் சைலன்ட் மோடில் போட்டுவிட்டு சமையலறைக்குள் சென்று பாத்திரங்களை அலசத் தொடங்கிவிட்டு அதுவும் சலிப்பை தர  விட்டெறிந்தேன்..
என்மேலேயே ஆத்திரம் வரத் தொடங்கிவிட்டது.. இப்படியா இளகிப் போவேன்.. என் வீரமெல்லாம் எங்கே? சுயபச்சாத்தாபம் கோபமாய் உருவெடுக்க  என்ன இவன்.. பெரிய இவனா.. இவன் பேசலைன்னா எனக்கென்ன.. போடா நீயும் உன் மூஞ்சியும் என்று எண்ணியபடியே சோபாவுக்குள் புதைந்தேன்..
கண்ணீர் என்னையறியாமலே தாரைதாரையாகக் கொட்டத் தொடங்கியது.. காதலித்த காலங்களிலும் சண்டை பிடிச்சிருக்கோம்.. ஆனா இவளவு நேரம் வரைக்கும் இரண்டு பேரும் பேசிக்கொள்ளாமல் இருந்ததில்லையே.. எண்ணியபடி நேற்று நடந்ததை நினைத்துப்பார்த்தேன்..
அவன் பிரெண்டுக்கு என்கேஜ்மென்ட் ஆயிடுச்சாம்.. அதுக்காக பார்ட்டி.. என்னையும் வரச் சொன்னான்.. எனக்கு அந்த பிரெண்டைப் பார்த்தாலே பிடிக்காது.. குடிகாரன்.. அதோடு மற்றவர்கள் பற்றி பேசுவதென்றால் அலாதிப் பிரியம்.. அவன் வீட்டுக்கு போய் சும்மா ஏன் அவலை அவன் வாய்க்கு மெல்லக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் பெரிசா சாருக்கு கோபம் வந்துட்டுது.. என்னையும் விட்டுட்டு போய் ராத்திரி ஒரு மணிக்கு அப்புறம் தான் வீடு வந்து சேர்ந்தார்..

அதுவரைக்கும் தன்னந்தனியே மொட்டு மொட்டென்று கொங்கிறீட் மேற்தளத்தைப் பார்த்தவாறு நானிருந்தால்.. வந்தவர் வழக்கமான குட்நைற் இல்ல, உதட்டொட்டல் இல்லை.. போய் தூங்கிற்றார்.. போடான்னு நானும் என் முதுகைக் காட்டியபடியே கண்ணயர்ந்துவிட்டேன்.. அவரை தாஜா பண்ணலைங்கிறது அவரோட கோபம்.. என்கிட்ட சமாதானம் பேசாதது என் கோபம்..
ஆனால் எவ்வளவு நேரத்துக்கு தான் என்னால் தாக்குப்பிடிக்க முடியும்.. முடியாமல் உடைந்து விம்மியழ ஆரம்பித்து இனிமேல் தாங்காதென்றெண்ணி கண்ணீர் மறைத்த கண்களோடு மொபைலை கையிலெடுத்து பெயரைத் தேடி விரலால் ஒற்றத்தொடங்கிய அந்த நேரம் கதவு திறக்கும் ஓசை..
நிமிர்ந்து பார்த்தால் என்னவன்.. விம்மல் கேவலாய் வெளிப்பட என்னவென்று அறியாமல் பதறியபடி ஓடிவந்தவன் என்னை கைவளைவுக்குள் சிறைப்பிடித்தபடி முத்தமழை பொழியத்தொடங்கி, ஊடல் உடைந்தொடியும் வண்ணம் என்னை இறுக அணைத்துக்கொண்டான்.. கண்ணில் கண்ணீருடன் வெற்றிச்சிரிப்பை கடைவாயில் கொண்டுவந்த நான்.. தோற்றது யாரென்று ஆராயாமல் தோற்றுப்போகத் தொடங்கினேன்..