Archive | March 2012

வல்லமைதாராயோ..


சில பாடல்களை இசைக்காகப் பிடிக்கும், சிலவற்றை அதில் நடிக்கும் நடிகர்களுக்காகப் பிடிக்கும், சிலதோ அவற்றின் உள்ளாந்த கருத்துக்காகப் பிடிக்கும்.. ஆனால் மிகச் சொற்பமான பாடல்கiளையே இம்மூன்று காரணங்களுக்காகவும் பிடிக்கும்..

 

இந்தப்பாடலின் முதன்வரிகளை பாரதியாரிடம் இருந்து கடன்வாங்கினாலும்.. அதனைத் தொடரும் அத்தனை வரிகளும் வலிக்கும் நிஜம்..

 
பெண்களின் வேதனைகள் அநேகம் ஆண்களுக்கு தெரிவதில்லை.. காதல் தோல்வியென்றால் ஆண் நான்கு வாரங்கள் குடித்து சீரழிந்தோ, தாடி வளர்த்தோ, நண்பர்களுக்கு விலாவாரியாக விஷயங்களை திரித்துச் சொல்லியோ தன் மனதை ஆற்றிக்கொள்வான்.. அடுத்த வெற்றி கிடைக்கும் வரைதான் அவனது துயரம் எல்லாம்.. அலையாடும் கடல் போல ஆண்கள்.. ஆர்ப்பரித்து ஓய்ந்து விடுவார்கள் (சில விதிவிலக்குகளைத் தவிர்த்து)

 
ஆழ்கடலைப்போலே தன்னுள் கவலைகளையெல்லாம் அடக்கிக் கொண்டு ஆண்டாண்டு காலமாய் அதனை புதையல் காக்கும் பூதம் போலே மனசுக்குள் பூட்டி வைத்து பொங்கியழுபவர்கள் தான் பெண்கள்.. பெண்களின் கண்ணீர் ஓய்ந்ததும் கவலைகள் தீர்ந்தது என்று நினைத்தால் அது பொய்.. கண்ணீர் அவர்களுக்கு சில மணிநேர ஆறுதலேயொழிய தீர்வல்ல.. கனமாய் மனசுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கவலைகள் அவள் கண்மூடும் வரை பிரிவதில்லை..

 
இந்தப் பாடல் சாதாரணமான பெண்ணொருத்தியின் ஆசைகள் நிராசையாகிப் போனதன் வலிகளை அறுத்துச் சொல்கின்றது.. எந்தவொரு பெண்ணும் தன் கணவனின் அன்பும் கவனிப்பும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டுமென்று எண்ணுவாள்.. அது பொய்யாகிப்போகும் போது உருவாகும் வலியை உணர்ந்து கொள்ள இன்னும் ஏழேழு பிறப்பெடுத்தாலும் முடியாது..

 
ஒவ்வொரு பெண்ணும் அவள் அப்பாவிற்கு இளவரசியே.. ஒருவனுடைய தாலிக்காய் தலைகுனியும் பெண், அவன் தன்னை ராணியாக வைத்திருப்பான் என்ற எண்ணத்தோடு தான் கழுத்தை நீட்டுகிறாள்..

 
திருமணம் ஆண் மனதில் என்ன உணர்ச்சியைத் தருமோ தெரியாது.. ஆனால் ஒரு பெண்.. தனது அடுத்த அறுபதாண்டு வாழ்க்கையை மனசுக்குள் நடத்தி முடித்துவிடுவாள்.. சின்னச் சின்ன நினைவுகளால் அத்திவாரமிடப்பட்டு திருமணத்தன்று பெரும் கோபுரமாய் எழுந்து நிற்கும் அந்தக் கற்பனைக் கோட்டை கலைந்துவிடுகையில்.. எதிர்காலம் என்னவென்று தெரியாமல் மலைத்துப் போய் நின்று.. இன்னதென்று தெரியாத உணர்வுகள் உடைப்பெடுக்க, கண்களுக்குள் கண்ணீரைத் தேக்கிக்கொண்டு கொதிக்கும் மனமென்னும் உலைக்களத்தை வெளியே காட்டாமல் முகத்தை இரும்பாக்கி மனமேயற்று வாழும் ஒரு பெண்ணிண் வலி, அதனை அனுபவித்த இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும்..

 
நீதான் என்னவன் என்று சரணாகதியடைந்து வாழும் பெண்மை, தனக்கு காட்டப்பட்டது கானல் நீரையொத்த அன்பு தான் என்று தெரியவரும்போது.. கடைசி இழையும் அறும் நிலையில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் மனதை ஒத்து அலைக்கழிந்து கொண்டிருக்கும்..

 
இதற்கு மேல் திருமணத்தில் தோற்றுப்போன ஒரு பெண்ணின் உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க முடியுமா?

சுயம்

எட்டப்பன் கொட்டகையில்
என் அன்னை வளர்க்கவில்லை
பிட்டப்பம் விற்றாலும்
பொய்கூறித் திரிவதில்லை
பசித்தாலும் புல் தின்னா
புலிக்கூட்டத் தலைமகள் நான்
முறமெடுத்து புலி விரட்டும்
முத்தமிழின் குலவிளக்கு
புறங்கூறும் புரட்டுக்குணம்
பொய்மை துரோகம் வஞ்சக்குணம்
இதுவெல்லாம் இல்லாது
ஒளிகொடுக்கும் மலைவிளக்கு
நீசகரே நீர் புனையும்
குற்றமில்லாக் குறைகளெல்லாம்
குற்றமுள்ள உம் மனதின்
குறுகுறுக்கும் பொய்களன்றோ

நடிகை

வாஷ் பேசினுள் சிவப்பு, சந்தனம், கருப்பு என நிறங்கள் நீரோடு சேர்ந்து ஓடியது.. பூசிய அரிதாரத்தை கலைக்கும் போது கண்ணோரம் அனுமதியின்றி பெருகிய கண்ணீரும்; தண்ணீரோடு கரைந்து போனது.. சிரிப்பு முலாம் பூசிய இதழ்களை சாதாரணமாக்கி கழுவித் துடைத்தபின் என் நிர்வாண முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது நிர்மலமாயிருந்தது.. மனசு மட்டும் மறைக்க முடியாத மனவேதனைகளை தாங்க முடியாமல் விம்மியழச் சொல்லி கதறிக்கொண்டிருந்தது..

 

மெதுவாக நொருங்கிப்போய் சிங்க்கில் முகம் சரித்து அழத்தொடங்கினேன்.. இந்த மேக்கப் முகத்திற்குப் பின்னால் முகவரிகள் இல்லைதான்.. ஆனால் மனவலிகளின் சாபத்தால் மரணித்துப்போன உணர்வுகள் மட்டும் விட்டேனா பார் என்று எட்டிப்பார்த்தால்.. முயன்று அடக்கி அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்து புன்னகையால் புனுகிட்டு மறைத்துக்கொள்வேன்..

 

பகல்கள் என்னை அதிகம் பயமுறுத்துவதில்லை.. மனிதர்களுடன் மனிதர்களாக கலந்துவிடுவேன்.. இரவுகள் மட்டுமே பூட்டி வைத்த சிறையிலிருந்து விடுதலைபெற்று மிரட்டும் அரக்கன் போல் என்னை மருட்சியடையச் செய்கின்றன..

 

நான் ஒரு நடிகை.. நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கும் நடிகை.. முதற்காதல் தோற்றுப்போனபின் கலையே வாழ்க்கை என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் தான் மற்றொரு காதல் கல் தடுக்கி கவிழ்ந்து விழுந்தேன்..

 

நான் எல்லோருக்கும் நல்லவள்.. என் கணவனைத் தவிர்த்து.. காசில்லாமல் அலைந்த போது கைகொடுத்த இந்த நடிகை இன்று அவன் கால் தூசிக்கு பெறுமானமற்றவளாம்.. உள்ளத்தை எதிரொலிக்கும் உதட்டின் வார்த்தைகள் விஷக்கங்குகளாக வீசி எறியப்படும் போது எதிரே நிற்கும் என் மனசெல்லாம் பொத்தல்கள் விழுவது அவனுக்கு எப்படித் தெரியும்?

 

அவனை விட எனக்கு நான்கு வயது அதிகம்.. என்னைப் பார்த்து காதலில் தலைகீழாய் குப்புற விழுந்ததாய் அவன் சொன்ன போது ஏனென்று தெரியாமல் நானும் மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவன் வசமானேன்..

 

அவன் வீட்டாரே ஒதுக்கித் தள்ளிய வேளையில் வேலையற்றிருந்த அவனுக்கு சௌகர்யங்கள் கொடுத்து வீட்டுத்தலைவனாய் மதித்திருந்த வேளையில் அவனுக்கு நான் மட்டுமே உலகமாய் இருந்தேன்.. இடையில் இரண்டு வருடங்கள ஓடிவிட வேலையொன்றை தேடி, காசு சம்பாதித்த அவனைத் தாங்கிப்பிடிக்க வந்த சொந்தங்களுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை

 

‘எதற்கு அவளுடன்.. அவள் நடத்தை சரியில்லை என்று ஊரில் சொல்றாங்க.. உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? உனக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து நாங்க கட்டித் தாறோம்..விட்டுட்டு வா..’ கரைப்பார் கரைத்தால் என்னவாகும்?

 

என் மாதவிடாய் பிரச்சனை மலடி என்று பெயர் தந்தது.. நண்பர்கள் எல்லாரும் என் திருட்டுக் கணவர்களாக நான் சம்பாதிக்கும் காசுகூட கட்டில் மீது புரண்டு எடுத்துவரப்பட்டதாய் கூசாமல் சொல்லப்பட்டது

 

என் ஒவ்வொரு அசைவும் கேலியாக்கப்பட்டு.. ஒவ்வொரு பேச்சும் எனக்கெதிராய் திருப்பிவிடப்பட்டு.. மணிக்கணக்கில் பேசிய நேரங்கள் குறைந்து முகம் பார்ப்பது கூட அவனுக்கு பிடிக்காமல் போனது..அணியும் ஆடை முதல், என் சமையல் வரை குறை சொல்லிக் குத்திக்காட்டப்பட்டது..

 

என் காதல் உண்மையானது.. இன்னும் அவனை காதலிக்கின்றேன்.. என் உணர்வுகளைக் கொன்று புதைத்து என்னை அவமானப்படுத்தியும் கூட என்னால் அவனை மறக்க முடியுதில்லை..

இரண்டு வாரங்களுக்கு முன் தேவையை சொல்லிவிட்டான்.. விவாகரத்து.. விக்கித்து போய் நின்ற என்னைத் தாண்டி சென்றவனைப் பார்த்தவாறு நின்ற என்னை நிஜவுலகம் இழுத்து வந்தது..

பூசிய அரிதாரத்துடன் புன்னகையையும் சேர்த்து அணிந்தவாறு காலை முதல் மாலை வரை என் நடிப்பை முடித்து விட்டு ஓசையற்ற வீட்டிற்குள் ஒலி துளைக்காத என் அறையின் மத்தியில் நின்று ஓ வென்று அழும் அழுகையும், ஓலமும் அவனுக்கு கேட்காது..

நான்.. நாளையும் எல்லோர் முன்னும் திரும்ப நடிக்கத் தொடங்கவேண்டும்.. சந்தோஷமாக இருப்பதாக – நிஜவாழ்க்கையிலும்..

பயம்

சின்ன வயசில் பேய், பாம்பு என்ற சொற்களைக் கேட்டாலே பயம்.. அதை இரவில் சொன்னால் கூட அவை நம் கண்ணில் பட்டுவிடும் என்று எங்கள் வீட்டில் வேலை செய்த பாட்டி சொல்லிய காரணத்தால் இரவுகளில் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை..


கரப்பான் பூச்சியும், மண்புழுவும் கூட எனக்கு வில்லன்களாகிய காரணத்தினால் அவை ஆறடி தூரத்தில் இருக்கும் போதே நான் அறுபதடிக்கு பாய்ந்து ஓடிவிடுவேன்..
அதன் பின் யாரையோ மாடு முட்டி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதை கதைகதையாக சொன்ன என் அம்மாவின் சிநேகிதியின் பேச்சைக் கேட்டபின் அதற்காக பயந்து நடுங்கியது ஒரு கதை என்றால்.. ஒரு நாள் வீட்டின் வெளிப்பாதையோரம் சித்திக்காக காத்துக்கொண்டிருக்கையில் மாட்டு மந்தையொன்று வருவதைப் பார்த்து கேற் திறப்பதற்காக ஏறி, கால் பாதத்தினுள் மரப்பலகை ஏறி.. அதைத் தொடர்ந்து மாமாவுடன் ஹொஸ்பிடல் போய்.. அந்த வைத்தியசாலையே கிடுகிடுக்கும் படி அலறி அனைவரையும் அலறடிக்கச் செய்தது இன்னுமொரு கதை.. விளைவு.. இன்றும் மாடுகளை நெருங்க கொஞ்சம் பயம்..

 
மின்னலடித்தால் தலைப்பிள்ளைகளைத் தாக்கும் என்று பாட்டி சொன்ன நாளிலிருந்து மழை பெய்யப் போகும் அறிகுறி தெரிந்தாலே ஓடிப்போய் கட்டிலில் விழுந்து காலோடு தலை வரை போர்த்தி ‘அர்ஜுனா அபயம்’ என்று அரற்றியபடி இருந்த நாட்களை இன்னும் மறக்க முடியவில்லை..

 
கொஞ்சம் வளர்ந்து பெரியவளாகப் போகும் வயதில் இருக்கையில் அம்மா என்னை அருகிலிருத்தி ஆண்களுக்கு பக்கத்தில் போகக்கூடாது.. அவர்களைத் தொடவிடக்கூடாது, அப்புறம் வயிறு வீங்கி அதை வெட்டிக் குழந்தை எடுப்பார்கள் என்று சொன்ன தருணத்திலிருந்து ஆண்களுக்கு பக்கத்தில் போவதற்கே பயந்து இருந்தது ஒரு காலம்.. அதிலும் வயிற்றை வெட்டி விடுவார்களே என்ற பயம் தான் அதிகம்..

 
இது கூட பரவாயில்லை, என் சித்திக்கு திருமணமாகி, அவருக்கு குழந்தை பிறந்த போது அவர் அணிந்திருந்த தாலி தான் குழந்தை வருவதற்கு காரணம் என்று என் மனதில் இனம்புரியாத பயம் ஒன்று தோன்றியதிலிருந்து தாலி என்ற சொல்லை சொல்வதற்கும் பயந்து, அதனைத் தொட்டுப் பார்ப்பதைத் தவிர்த்த நாட்கள் நெஞ்சுக்குள் இன்னும் நிழலாடுகின்றது..

 
கொஞ்ச நாட்கள் சென்றதும், இராணுவம் புரிந்த அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து, அவர்களைக் கண்டாலே ஏதோ எருமையேறி வரும் எமனைக் கண்டது போல நடுநடுங்கி, அம்மா அப்பாவிற்கு பின்னால் ஒதுங்கிய நாட்கள் இன்றும் நினைவில்..

 
அப்புறம் கல்லூரிக்கு போய், வேலைக்கு சென்று வாழ்க்கை இதுதானென்று அறியத்தொடங்கிய தருணத்தில் அசட்டுத்தனமான பயங்கள் எல்லாம் நீங்கி, தனியாக வசிக்கும் தைரியம் ஏற்பட்ட போது தான் முதற் காதல் அற்றுப்போனது..

 
கண்ணீர் திரை ஊடே உலகத்தை நோக்கத் தொடங்கிய நாட்களில் தான் ஏராளமான பெண்களுக்கு இருக்கும் பயத்தையும் அதன் காரணத்தையும் அறிந்து கொண்டேன்.. ஆசை வார்த்தைகள் சொல்லி, அவர்களை வசப்படுத்தியபின் அனாதராவாக விட்டுச் செல்கையில் எதிர்காலத்தை எண்ணிப்பார்த்து மனசில் ஒரு பயம் வருமே அந்தப் பயத்திற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது என்பதை அறிந்து கொண்ட அந்த நாளில் தான் என் பழைய பயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வாழ்க்கைய பயத்துடன் எதிர்நோக்க ஆரம்பித்து வாழத்தொடங்கினேன்..
பயங்களிலே பெரிய பயம் மரண பயமில்லை.. எதிர்காலம் சூனியமாகிவிடுமோ என்ற பயம் தான்..

என் கூட்டுக்குள் யாரும்வரவேண்டாம்..

என் கூட்டுக்குள் யாரும் வரவேண்டாம்..

அழியும் பொருட்களோடு
நொருங்கிய நொந்த மனம் ஒன்று மட்டுமே

உள்ளுக்குள் உடைந்து கிடக்கிறது
உறைந்து போன சந்தோஷங்களும்..

சொல்லொண்ணா வேதனைகளும்

அலமாரித் தட்டுகளுக்குள் அடைந்து போய்..
சில பாதச்சுவடுகள் தூசிபடிந்து

நிராகரிப்பின் வேதனையைச் சுமந்தவாறு நிழற்படமாய்..

 
சிரிப்பின் பின்னே நிரந்தரமாய் உறைந்து கிடக்கும் சோகத்திரையை

திறந்து காட்ட எனக்கு பிடிக்கவில்லை..
தோல்வியின் கேலிச்சிரிப்புகள் எனக்கு மட்டுமே கேட்கட்டும்..
வேதனைகள் அதிகரித்திடுமா என்ற சந்தேகத்தை தரும் தோழமைகூட வேண்டாம்..
தனியே விடுங்கள்..
தரையில் நெளியும் மண்புழு போலே துன்பங்களுக்குள் உழன்று
ஒரு நாள் விடிவு கிடைக்காதா என்ற வெற்றுப் பார்வையுடன் இருக்கும்..

 

ஒருதேவதை சிறகுகளைஇழக்கிறாள்..

எதுக்கும் ஒரு அளவு வேணும் தெரிஞ்சிக்கோ.. நீ சொல்றதெல்லாம் நடக்காது.. நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட நான் என்ன கேனையனா..எனக்கு உம்மேல நம்பிக்கையே போச்சு

என்ன சொல்றீங்க ஜீவா
பின்ன என்ன எந்த நேரம் பாத்தாலும் ஏதோ கதை சொல்லிக்கொண்டு இருக்கிறே.. இல்லை ஏதாவது என்னை குறை சொல்ல தொடங்குறாய்.. வேல எடுக்கிறது எவளவு கஷ்டம்ன்னு உனக்கு தெரியுமா?
முயற்சிய கைவிடாதீங்க ஜீவா.. கொஞ்சம் மும்முரமா தேடிப் பாருங்களேன்.. நிச்சயம் கிடைக்கும்.. நம்பள யோசிச்சு தான் சொல்றேன்.. இந்த சின்ன விஷயத்துக்காக நம்ம வாழ்க்கைய சீரழிக்கலாமா?
உன்ன நான் எப்ப பார்த்தனோ.. அப்பல இருந்து என் வாழ்க்கையே போய்ட்டு.. இனி என்னத்த சீரழிக்கிறது.. பெரிசா சொல்ல வந்துட்டா..

ஏன் இப்படி

இப்ப என்ன அழுது மாய்மாலம் பண்ண பாக்கிறியா..
என்ன அழவைக்க மாட்டேன்.. தேவத மாதிரி வச்சுக்குவேன்னு சொல்லித்தான் என்ன கல்யாணம் பண்ணீங்க.. மறந்து போச்சா?

ஆமா பண்ணினன்.. ஆனா..இப்போ.. உன்னால என் மொத்த சந்தோஷமே போச்சு.. எப்படி ராஜா மாதிரி வாழ்ந்தேன்.. கடைசில வெளிய போறதுக்கு ஒரு பைக் கூட இல்ல..என் அம்மாவோட இருந்திருந்தா ..

என்ன விரும்பித்தானே கட்டுனீங்க.. என்னால முடிஞ்சளவு காசு தாறன் தானே.. இதுக்கு மேல கேட்டா நான் என்ன பண்றது ஜீவா.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்களேன்.. வேல தேடினா எல்லாம் சரி வந்துரும்.. நாங்க படிப்படியா முன்னேறலாம்.. கொஞ்ச நாள் கஷ்டப்பட்டா போதும்..

நான் எதுக்கு உன்கூட கஷ்டப்படணும்.. எந்த நேரம் என் வாழ்க்கைல வந்தியோ சனியன்.. பெரிய அழகு தேவதைன்னு என் வாழ்க்கைய அடகு வச்சிட்டேன்.. உன்ன விட எத்தனை அழகான பணக்காரப் பொண்ணுகள அம்மா கொண்டு வந்தாங்க.. எல்லாத்தையும் ஒதுக்கிட்டு உன்ன கட்டிகிட்டதுக்கு.. எல்லாம் பொய் வேஷம்..

ஜீவா.. நான் என்ன பொய் சொன்னேன்னு சொல்லுங்க.. நான் பெரிய பணக்காரின்னு சொன்னேனா.. அழகின்னு சொன்னேனா.. என் பின்னால வந்தது நீங்க.. ஒரு பெரிய இடத்துப் பையன்னு நான் ஒதுங்கி ஒதுங்கி போக விடாம தொரத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டது நீங்க..உங்க வீட்டு நெலமைய பார்த்தோ.. இல்ல உங்க காசு பணத்த பார்த்தோ நான் காதலிக்கல்ல..

என்னை சந்தோஷமா வைச்சிருப்பீங்கன்னு மட்டும் தான் பண்ணிக்கிட்டன்.. இப்போ.. பொறுப்பேயில்லாம வார்த்தைகளால வறுத்தெடுக்கிறீங்க.. தான்தோன்றித்தனமா குடிச்சிட்டு அலையுறீங்க.. அது போதாதுன்னு..

%!#$@^&*()*&^%$#@!#$%^&*()_)(*&^%$#@!#$%^&*()
போடி.. வெளிய முண்டை.. நீயெல்லாம் பொம்பளயா..

சிறுமிகள்

சின்ன வயதில் பாலியல் தொந்தரவுகள் என்று தெரியாமல் கூட அதனை அனுபவிக்காமல் பெண்ணாகிய சிறுமிகளே இல்லை.. என்னதான் ஆளுயரக் கோட்டையில் அடைத்து வளர்த்தாலும்..அங்கேயும் சில நஞ்சு மனதுடைய நாய்கள் வந்து தங்கள் கைவரிசையைக் காட்டிச் சென்றுவிடும்..

சின்ன வயதில் ஸ்கூல் பஸ்சை தவறவிட்ட நாளொன்றில் சாதா பஸ்ஸில் ஏறிச் சென்ற வேளையில் டிக்கற் கொடுப்பதாக பேர் செய்து என் கையைத் தடவியது போதாதென்று ஹான்டில் பார் மீது வைத்திருந்த கை மீது தன் கையை வைத்து நசுக்கிய அந்த தொங்கு மீசை கண்டக்டரின் முகம் இன்றும் சில வேளைகளில் என் மனதிற்குள் வந்து போகும்..

எனக்கு தாத்தா முறையான 45 வயது மனிதன் ஒருவன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது எனக்கு சொக்கிலற் வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று அவனின் சிகரட் நாற்றமெடுத்த உதடுகளால் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட தடத்தை அழிக்க நான் எத்தனை தடவை சோப் போட்டு முகத்தைக் கழுவினேனென்று நீங்கள் கேட்டால் என்னை ஒரு மாதிரிப் பார்ப்பீர்கள்..

தோழி ஒருத்தியின் வீட்டில் பர்த்டே பார்ட்டி என்று சென்ற நாங்கள் அங்கேயே தங்கிவிட, அன்று ஹாலில் வரிசையாக அவர்களின் தாயுடன் படுத்திருந்த எங்களுக்கு நடுவில் இருட்டில் சத்தமின்றி பூனை போல வந்து படுத்து எங்கள் மற்றொரு நண்பியின் மார்பை அழுத்திய நண்பியின் அண்ணனை என்னவென்று சொல்ல.. எப்படி மறக்க.. மறுநாள் காலை அரக்கப்பறக்க வீடு சென்ற நாங்கள் அனைவரும் தலைமுழுகியது அந்த நண்பியின் வீட்டிற்கும் சேர்த்துத்தான்..

ஒன்றுவிட்ட பாட்டியின் வீட்டிற்கு விடுமுறைக்காக சென்ற வேளை சித்தி மகனை கட்டி அணைத்திருந்த வேளை விளையாட்டுப் போல என்னையும் சேர்த்து தன்னுடன் அணைத்துக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் செத்துப்போய்விட்டாலும் இன்றும் கனவில் வந்து பயங்காட்டத் தவறுவதில்லை..

தோழி வீட்டில் குரூப் ஸ்டடிக்காக சுழற்சி முறையில் சென்றிருந்த போது பட்டப்பகலில் தண்ணீர் அருந்த கிச்சனுக்குள் சென்ற என்னை கட்டியணைத்து முத்தமிட்ட அவளின் தந்தையால் எப்படி அவரது மகளையும் நேர் கண்களால் பார்க்க முடிகின்றது என்று இன்றும் நினைத்துக் கொள்வேன்..

டியூஷன் படிப்பதற்கென்று எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற என்னை, ஆன்டியும் அக்காவும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கையில் அண்ணா என்று நான் அழைக்கும் அவன் தன் கைகளை என் தொடையின் மீது வைத்த போது விதிர்விதிர்த்து என்ன செய்வதென்று அறியாமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் அருகிலிருக்கும் சித்தி வீட்டிற்கு ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து ஓவென்று அழுதபோது ஏற்பட்ட வேதனை என் மனதில் இன்னும் நெருஞ்சியாய்..

இவர்கள் அத்தனை பேருமே ஏதோவொரு வகையில் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்தவர்கள் தான்.. அத்தனை பேரையும் எங்கள் அம்மா அப்பாவிற்கு தெரியும்.. ஆனாலும் இது எதையும் வீட்டில் சொல்ல மாட்டோம் என்ற அசட்டுத் துணிச்சலா இல்லை காம வேட்கையா இவர்களை இப்படியெல்லாம் செய்வதற்கு தூண்டியது என்று இப்போது நினைத்துப் பார்ப்பேன்..

பயமும், வெட்கமும், அருவருப்பும் மனதிற்குள் அழுந்த இதனை எப்படி வெளியில் சொல்வது என்ற எண்ணத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித்திணறும் அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்..

எத்தனை தான் பாதுகாப்பாக இருந்தாலும், வீட்டார் சொன்னபடி கீழ்ப்படிந்து நடந்தாலும், எங்களை மீறி நடந்துவிடும் இந்த விடயங்களை வீட்டில் சொன்னால் அடி விழுமா, திட்டு விழுமா, ஸ்கூலுக்கு அனுப்புவார்களா? விளையாட விடுவார்களா என்ற பயத்திலேயே தயக்கத்தை போட்டுக் குழப்பி மௌனிக்கும் அந்தச் சிறுவயதுக் கலக்கங்களை ஆண்களால் உணர முடியாது.. ஸ்நேகத்துடன் கைநீட்டும் பள்ளித்தோழனுக்கு கைகொடுக்கும் போது கூட நெஞ்சின் ஓரத்தில் தடதடக்கும் ரயிலை நிறுத்த முடியாமல் அவதிப்பட்ட நாட்களையும், யாரை நம்புவது, யாரை விலக்குவது என்று தெரியாமல் ஏற்படும் சந்தேகங்களையும், எங்கும் செல்லப் பிடிக்காமல் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று மனதுக்குள் அழுத நாட்களையும் என்ன வென்று சொல்லி மறக்க?

விவரமறியா வயதில் நடைபெறும் இந்த விபரீதங்களை என் அம்மாவுடன் பங்கிட முடிந்ததால் இன்று நான் பயமின்றி உலகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருக்கிறேன்.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காமல் இன்னும் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்களும் ஒரு தாயின் மகன் தானே.. ஏன் அவர்களால் ஒரு தாயாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ எங்களைப் பார்க்க முடிவதில்லை.. பட்டாம்பூச்சியின் சிறகை ஒடித்து பாட்டிலில் போட்டு வைப்பதில் என்ன அழகு.. அதனை பறக்கவிட்டு பார்ப்பதில் தரும் ஆனந்தத்தை இது தருமா என்பது தான் என் கேள்வி..

சுயரூபம்


என் முதற் காதலே திருமணத்தில் முடியப்போகின்றது என்ற மிதப்பில் கொஞ்சம் அகங்காரமாகவே இருக்கத் தொடங்கினேன்..

முதன்முதலில் ஒரு மேடை அறிவிப்பாளனாகத்தான் அவனை சந்தித்தேன்..கறுப்பு நிற பான்ட் சர்ட்டில் மின்னும் ஒளிவெள்ளத்தின் கீழ் கம்பீரமாக நின்ற அவனைக் கண்டு மயங்கிப்போனதென்னவோ உண்மைதான்.. ஆனாலும் விடாமல் பின்தொடர்ந்து வந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் கவர்ந்து சம்மதிக்க வைத்தது அவனே..

சரி என்று சொன்ன பின்னர் தான் அவனுக்கு நிரந்தர உத்தியோகமில்லை என்பது தெரியவந்தது.. மேடை நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடும் வேளைகளில் சென்று அறிவிப்பு செய்துவரும் சொற்ப பணம் அவன் தேவைகளுக்கு போதுமானதாகவில்லை.. என் சம்பளத்தில் பாதிக்குமேல் அவனுக்காகவே சென்றது.. என்ன இருந்தாலும் என் கணவனாக வரப்போகின்றவனென்று கிரெடிற் கார்ட் முதல் டிசைனர் ஆடைகள் வரை அவனுக்காகவே செலவு செய்தேன்..

மூன்று மாதங்களிற்கு பின் முதன் முதலாக குடும்பத்தாரை அறிமுகப்படுத்தப்போவதாய் அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற வேளை அவன் வீடிருந்த இடத்தையும், வீட்டின் கோலத்தையும் பார்த்து மனதில் ஒரு சின்ன சலனம்.. இருந்தாலும் யாரையும் குறைவாக நடத்தக்கூடாது என்று சொல்லியே வளர்க்கப்பட்டதால் அதையும் மனதார ஏற்றுக்கொண்டேன்.. என்ன அன்றிலிருந்து முழுக்குடும்பத்திற்குமே செலவு செய்வது என் கடமையாகிவிட்டது..

உப்பு புளி முதல் டீவி வாஷிங் மெஷின் என என் சேமிப்பெல்லாம் மெல்ல மெல்லக் கரைய அத்தையின் ஆசைகளுக்கு முன் என்னால் ஈடுகொடுக்க முடியாமல் வேலை ஓவர்டைம் என்று என் காலங்கள் கழியத் தொடங்கிய அதேவேளை மருமகளின் தகுதிக்கு மகன் மேடைகளில் ஏறுவது நல்லதல்ல என்று சொல்லியதால் வேலையின்றி முடங்கிய அவனது பொறுப்புடன் முழுப்பாரமுமே என் தலையில்..
வேலை வேலை என்று சம்பாதித்துக் கொட்டுவதிலேயே கவனம் செலுத்திய நான் சில நடத்தை மாற்றங்களை கண்கொண்டு நோக்கவில்லை..

முன்னைப்போல என்னுடன் முகம் கொடுத்து அவன் பேசுவது குறைந்துவிட்டது.. குடும்பத்தினர் மட்டும் பிக்கிப் பிடுங்குவதிலே மேலும் குறியாகி வீடு நிரம்ப பொருட்களை சேர்த்துவிட்டனர்.. ஊரிலிருந்த அம்மா அப்பாவோ எப்போது திருமணம் என்று என்னை நெருக்க ஆரம்பித்த வேளையில்..

எப்போதுமே என்னுடன் இடைவெளிவிட்டு மரியாதையுடன் பழகும் அலுவலக நண்பர்களில் பலர் ஏதோ சொல்ல வருவது போல தோன்றும்.. கவனிக்காமல் கண்ணைக்கட்டிய குதிரையாய் என் கடமைகளை தொடர்ந்த என்னிடம் கடைசியாக என் நண்பி வந்து காதோரம் ரகஸ்யமாய் சொன்னாள்..

நம்ப முடியவில்லை.. நரம்பெல்லாம் கூட நடுங்கத் தொடங்கிய அதிர்ச்சி.. எதையும் தீர்மானமாய் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனசில் நிற்க அவளையும் அழைத்துக்கொண்டு உறுதிசெய்ய நேரிலேயே போய்விட்டேன்..

ஆம்.. நான் வாழப்போவதாய் நினைத்திருந்த அதே வீட்டில் இன்னுமொரு பெண்.. அவளுக்கும் சேர்த்துத்தான் உழைத்துக் கொட்டியிருக்கின்றேன் போல.. எதிர்நோக்க முடியாமல் மாமனார் தலைகுனிய அத்தையோ அதிகாரமாய் என்னைப் பார்க்க எத்தனித்து என் கண்கணை எதிர்கொள்ள முடியாமல் மௌனிக்க, கோழைபோல கூனிக்குறுகி நின்றவன் மெதுவாக அறைக்குள் நகர்ந்து ஒளிந்துகொண்டான்..

இனியென்ன செய்ய.. எதுவுமே செய்யத் தோன்றாமல் உறைந்து போய் நின்ற என்னைத் தரதரவென்று இழுத்துவந்தாள் நண்பி.. கண்ணீர் கூட கடினமாகித் தேங்கிவிட மனசுக்குள் வீசிய புயல் மாத்திரம் வெளியே அடித்திருந்தால் கண்ணகி எரித்த மதுரை போல சுற்றியிருந்த அத்தனையும் சாம்பலாகியிருக்கும்..

என் அம்மா அடிக்கடி சொல்வார்கள் ஊருக்கே குறி சொல்லும் பல்லி கஞ்சிப் பானைக்குள் விழுந்துவிடுமாம்..
எனக்கும் நடந்தது அதுதானே.. மெத்தனமாய் இருந்தது மட்டுமல்ல என்னைப்போலவே நேர்மையாய் மற்றவர்களையும் எண்ணியது.. ஆனாலும் இன்றுவரை எங்கு பிழை நடந்தது என்று எண்ணி மறுகுவதை தவிர்க்க முடிவதில்லை..

ஆனாலும் உடைந்து போகவில்லை நான்.. பிச்சையெடுத்தவனே பிழைத்திருக்கும் போது எனக்கென்ன குறை.. நாளைகள் மீது நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..

உண(ர்)வானவன்..

சமையல் பண்ணும் போது கூட உன் ஞாபகமே மனசுக்குள் சைப்ரஸ் மரத்தின் மேல் மெல்லிய தூறலாய் விழும் பனித்துளி போல வருடிச் செல்கிறது.. என் சமையலை ருசித்து உண்ணும் போது உன் கண்களில் தோன்றும் பாவங்களை என்னை ரசித்துப் பார்க்கையிலும் உணர்ந்திருக்கின்றேன்..

உனக்கு என்னென்ன உணவு பிடிக்குமென்பதை அறிந்து கொண்ட ஆரம்ப நாட்களும், உனக்காக சமையல் கற்றுக்கொண்ட நாட்களும்.. நான் உண்ணாவிட்டாலும்.. உனக்குப்பிடிக்குமென்பதற்காய் உதறலுடன் சிக்கன் சமைக்கப்போய் அது வேறேதோவாகிய நாளில் எந்த முகச்சுளிப்புமின்றி நீ சாப்பிட்ட போது காதலில் விம்மிய உதடுகளுடன் சேர்ந்து வெம்பியது மனது..

 

சமைக்கப்போகிறேனென்று சொல்லி சமையலறையை போர்க்களமாக்கும் நாட்களிலெல்லாம் சமர்த்தாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.. வியர்க்க விறுவிறுக்க நீ சமையல் பண்ணும் அழகைப் பார்த்தால் நளனே நேரில் வந்தது போல ப்ரம்மை..
நீ சமைத்த சாப்பாட்டில் உப்பிருக்கின்றதோ.. உறைப்பிருக்கின்றதோ.. உன் காதலும், நேசமும், பாசமும் கலந்து தேவாமிர்தமாய் நாவில் தித்திக்கையில் உன் அன்பின் பாச வெள்ளத்தில் அடியுண்டு போகும் அரசிலையாவேன் நான்..
உருளைக்கிழங்கு சிப்ஸ், பாணி பூரி என எனக்குப் பிடித்த உணவுகளை தேடித் தேடி வாங்கி வரும் போதும்.. அதிகம் சாப்பிடாதே.. இடுப்பு தடித்து விடும் என்று கேலி செய்யும் போதும் ராட்ஸசா என்று திட்டத் தோன்றும்.. ஆனால் Reading between the lines  போல உள்ளுறைந்திருக்கும் அக்கறை பார்த்து அசந்து போவேன் நான்..
ஹோட்டல்களுக்கு போகும் போதும் என் விருப்ப உணவுகளை ஓடர் செய்து உன்னதையும் உண்ணச்சொல்கையில் உருகி வழிந்துவிடுவேன் ஐஸ்க்றீமாய் உன்மீது..
சமையலறையை சில நேரங்களில் படுக்கையறையாய் எண்ணி என்னைப் பாடாய்படுத்தும் வேளையிலெல்லாம்.. வெளியே திட்டிக்கொண்டு உள்ளுக்குள் ரசித்துக்கொள்வேன் உன் குறும்புகளை எண்ணி
திரும்ப திரும்ப சாப்பிட்டாலும் திகட்டாத பட்சணம் போல நீ..
திரும்பவும் உண்ண வேண்டும் என்று எண்ணத்தூண்டும் இனிப்பு நீ
அருந்திய பின்னும் நாவில் இனிக்கும் சுவைப்பண்டம் நீ
உன்னோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு நாளும் தலைவாழையிலைபோட்டு விருந்துண்ணும் பண்டிகை நாளே..