சிறுமிகள்

சின்ன வயதில் பாலியல் தொந்தரவுகள் என்று தெரியாமல் கூட அதனை அனுபவிக்காமல் பெண்ணாகிய சிறுமிகளே இல்லை.. என்னதான் ஆளுயரக் கோட்டையில் அடைத்து வளர்த்தாலும்..அங்கேயும் சில நஞ்சு மனதுடைய நாய்கள் வந்து தங்கள் கைவரிசையைக் காட்டிச் சென்றுவிடும்..

சின்ன வயதில் ஸ்கூல் பஸ்சை தவறவிட்ட நாளொன்றில் சாதா பஸ்ஸில் ஏறிச் சென்ற வேளையில் டிக்கற் கொடுப்பதாக பேர் செய்து என் கையைத் தடவியது போதாதென்று ஹான்டில் பார் மீது வைத்திருந்த கை மீது தன் கையை வைத்து நசுக்கிய அந்த தொங்கு மீசை கண்டக்டரின் முகம் இன்றும் சில வேளைகளில் என் மனதிற்குள் வந்து போகும்..

எனக்கு தாத்தா முறையான 45 வயது மனிதன் ஒருவன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்த போது எனக்கு சொக்கிலற் வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று அவனின் சிகரட் நாற்றமெடுத்த உதடுகளால் கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட தடத்தை அழிக்க நான் எத்தனை தடவை சோப் போட்டு முகத்தைக் கழுவினேனென்று நீங்கள் கேட்டால் என்னை ஒரு மாதிரிப் பார்ப்பீர்கள்..

தோழி ஒருத்தியின் வீட்டில் பர்த்டே பார்ட்டி என்று சென்ற நாங்கள் அங்கேயே தங்கிவிட, அன்று ஹாலில் வரிசையாக அவர்களின் தாயுடன் படுத்திருந்த எங்களுக்கு நடுவில் இருட்டில் சத்தமின்றி பூனை போல வந்து படுத்து எங்கள் மற்றொரு நண்பியின் மார்பை அழுத்திய நண்பியின் அண்ணனை என்னவென்று சொல்ல.. எப்படி மறக்க.. மறுநாள் காலை அரக்கப்பறக்க வீடு சென்ற நாங்கள் அனைவரும் தலைமுழுகியது அந்த நண்பியின் வீட்டிற்கும் சேர்த்துத்தான்..

ஒன்றுவிட்ட பாட்டியின் வீட்டிற்கு விடுமுறைக்காக சென்ற வேளை சித்தி மகனை கட்டி அணைத்திருந்த வேளை விளையாட்டுப் போல என்னையும் சேர்த்து தன்னுடன் அணைத்துக்கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் செத்துப்போய்விட்டாலும் இன்றும் கனவில் வந்து பயங்காட்டத் தவறுவதில்லை..

தோழி வீட்டில் குரூப் ஸ்டடிக்காக சுழற்சி முறையில் சென்றிருந்த போது பட்டப்பகலில் தண்ணீர் அருந்த கிச்சனுக்குள் சென்ற என்னை கட்டியணைத்து முத்தமிட்ட அவளின் தந்தையால் எப்படி அவரது மகளையும் நேர் கண்களால் பார்க்க முடிகின்றது என்று இன்றும் நினைத்துக் கொள்வேன்..

டியூஷன் படிப்பதற்கென்று எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற என்னை, ஆன்டியும் அக்காவும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருக்கையில் அண்ணா என்று நான் அழைக்கும் அவன் தன் கைகளை என் தொடையின் மீது வைத்த போது விதிர்விதிர்த்து என்ன செய்வதென்று அறியாமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு திரும்பிக்கூடப் பார்க்காமல் அருகிலிருக்கும் சித்தி வீட்டிற்கு ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து ஓவென்று அழுதபோது ஏற்பட்ட வேதனை என் மனதில் இன்னும் நெருஞ்சியாய்..

இவர்கள் அத்தனை பேருமே ஏதோவொரு வகையில் அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்தவர்கள் தான்.. அத்தனை பேரையும் எங்கள் அம்மா அப்பாவிற்கு தெரியும்.. ஆனாலும் இது எதையும் வீட்டில் சொல்ல மாட்டோம் என்ற அசட்டுத் துணிச்சலா இல்லை காம வேட்கையா இவர்களை இப்படியெல்லாம் செய்வதற்கு தூண்டியது என்று இப்போது நினைத்துப் பார்ப்பேன்..

பயமும், வெட்கமும், அருவருப்பும் மனதிற்குள் அழுந்த இதனை எப்படி வெளியில் சொல்வது என்ற எண்ணத்துடன் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கித்திணறும் அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்..

எத்தனை தான் பாதுகாப்பாக இருந்தாலும், வீட்டார் சொன்னபடி கீழ்ப்படிந்து நடந்தாலும், எங்களை மீறி நடந்துவிடும் இந்த விடயங்களை வீட்டில் சொன்னால் அடி விழுமா, திட்டு விழுமா, ஸ்கூலுக்கு அனுப்புவார்களா? விளையாட விடுவார்களா என்ற பயத்திலேயே தயக்கத்தை போட்டுக் குழப்பி மௌனிக்கும் அந்தச் சிறுவயதுக் கலக்கங்களை ஆண்களால் உணர முடியாது.. ஸ்நேகத்துடன் கைநீட்டும் பள்ளித்தோழனுக்கு கைகொடுக்கும் போது கூட நெஞ்சின் ஓரத்தில் தடதடக்கும் ரயிலை நிறுத்த முடியாமல் அவதிப்பட்ட நாட்களையும், யாரை நம்புவது, யாரை விலக்குவது என்று தெரியாமல் ஏற்படும் சந்தேகங்களையும், எங்கும் செல்லப் பிடிக்காமல் ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று மனதுக்குள் அழுத நாட்களையும் என்ன வென்று சொல்லி மறக்க?

விவரமறியா வயதில் நடைபெறும் இந்த விபரீதங்களை என் அம்மாவுடன் பங்கிட முடிந்ததால் இன்று நான் பயமின்றி உலகத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றிருக்கிறேன்.. ஆனால் எத்தனை பேருக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காமல் இன்னும் மனசுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெரியுமா?

ஒவ்வொரு ஆண்களும் ஒரு தாயின் மகன் தானே.. ஏன் அவர்களால் ஒரு தாயாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ எங்களைப் பார்க்க முடிவதில்லை.. பட்டாம்பூச்சியின் சிறகை ஒடித்து பாட்டிலில் போட்டு வைப்பதில் என்ன அழகு.. அதனை பறக்கவிட்டு பார்ப்பதில் தரும் ஆனந்தத்தை இது தருமா என்பது தான் என் கேள்வி..

Leave a comment