Archive | April 2012

நீயும் என் காதலும்

மனக்கதவு தட்டிய ஓசை கேட்டு
திறந்து பார்த்தேன்..
கையில் பூச்செண்டுடன் வரவேற்றது காதல்..


என் மனக்கதவைத் தட்டாமல் திறந்து
இதய மத்தியில்
இருக்கையிட்டு உட்கார்ந்து
சிரிக்க வைக்கிறாய்
சிலிர்க்க வைக்கிறாய் – என்
சின்ன இதயத்தில்
சம்மணமிட்டமர்ந்து
மிதக்க வைக்கிறாய் மனசை..


கண்கள் கவிபாட
இதயம் இசைபாட
உதடுகள் உயிர்பெற்றெழுந்து
உணர்வுகளை வார்த்தையாக்கி
உனைப்பார்த்து உச்சரித்தது
என் காதலை..

ஒரு சிறுமி பெண்ணாகிறாள்

அந்த நாட்கள்

அந்த மூன்று நாட்களில்

கோயிலுக்குள் செல்வது

தீட்டாகவே இருக்கட்டும்

எந்த மூன்று நாட்களில்

பெண் தெய்வங்கள்

கோயிலுக்குள் இருக்காதென

கொஞ்சம் சொல்லுங்களேன்..

க. பொன்ராஜ் அவர்கள் இந்த (25.04.2012) இந்த வார விகடனில் எழுதியிருந்த கவிதை இது..

 

ஏதோவொரு வித பயம், பதற்றம், என்ன நடந்ததென்று தெரியாமல், இருட்டு வழியில் நிற்பது போல மாயத்தோற்றம்.. எதிர்காலம் பற்றிய அச்சம், பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அத்தனை பெண் உறவினர்களும் வந்து சூழ்ந்துகொண்டு ஆளுக்காள் அட்வைஸ் சொல்வதும் என அலமலந்து நிற்கும் வேளையில்

 

ஒரு கட்டுத் துணியை உடம்பில் வைத்து சுற்றிக்கடட்டிய அந்த கொடுமையும், வயிற்று வலியும், உடல் வலியும் பாடாய்படுத்திக்கொண்டிருக்க, புதிதாக தோன்றும் அத்தனை அசௌகர்யங்களையும் எப்படிச் சமாளிப்பது என்று எண்ணுவதே பெரும்பாரமாயிருக்கும் நேரத்தில் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே.. இங்கு போகாதே, அங்கு ஏறாதே, அந்த அறைக்குள் நுழையாதே, அப்பாவுடன் அண்ணாவுடன் கூட அருகில் நின்று பேசாதே என எத்தனை எத்தனை அறிவுரைகள்..

 

பச்சை முட்டை, பிஞ்சுக் கத்தரிக்காயும், நல்லெண்ணையும் சேர்த்து அரைத்த கஷாயம், வெறும் நல்லெண்ணெய், பிடிக்கவே பிடிக்காத உழுந்துக் கூழ், பிட்டும் நல்லெண்ணெயும், வெறுத்துப்போகுமளவு நல்லெண்ணெயில் குளித்த கத்தரிக்காய் பொரியல், ஏதேதோ மூலிகை மருந்துகள், எழுந்து நிற்கக்கூடாது, இனிப்பு சாப்பிடக்கூடாது என கண்டிஷன்கள்..

 

அத்தனை பேருக்கும் லவுட் ஸ்பீக்கர் வைத்துச் சொல்வது போல ஆர்பபாட்டங்கள்.. முகம், உடம்பு என மஞ்ச மஞ்சேரென மஞ்சள் பூசி, ஏனோதானோவென வாங்கப்பட்ட பொருத்தமில்லா பிராவும், அவசரமாய் தைக்கப்பட்ட பிளவுசும், உருவிவிட்ட குச்சிக்கு சுற்றி விடப்பட்டது போல ஒரு சேலையையும் சுற்றி உட்கார வைத்து..

 

சரி, இத்தனையும் முடிந்துவிட்டதென்று எண்ணும் போதுதான்.. இது டிரெய்லர் தான்.. Main Picture இனித்தான் என்று சொல்வது போல எத்தனை நிபந்தனைகள் சங்கடங்கள்..

 

நல்ல வேளை பழைய காலத்தில் போல தனி அறையில் அடைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், ஸ்வாமி அறைக்குள் போகக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, தோழர்களுடன் விளையாடக்கூடாது, மரம் ஏறக்கூடாது, ஓடிப்பிடித்து விளையாடக்கூடாது, தனியாகப் போகக்கூடாது இன்னும் எத்தனை எத்தனை..

 

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்வரையில் இத்தனை சங்கடங்களை நான் அனுபவிக்கவில்லை.. பராயம் எய்துவது எப்படி, அதன் சாதக பாதகங்கள் என்ன என ஒரு தோழியாய் அம்மா சொல்லிக்கொடுத்திருந்தாலும், என் விருப்பத்திற்கேற்ப சாங்கியங்களை வளைத்துக்கொண்டாலும்.. அந்தக் கணம் நடைபெறும் போது, உடம்பெல்லாம் வியர்த்துக் குளித்து, ஏதோ தப்பு செய்தாற்போல நடுங்கி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் மெதுவாகச் சென்று அழுதபடி.. ‘அம்மா.. நான் மரம் ஏறினப்போ காயம் பட்டுட்டு போல.. ரத்தம் ரத்தமா வருது’ என்றதும்.. அம்மா பதற்றத்துடன் எங்கே எனக் கேட்டதும்.. காட்டியதும் அதைப் பார்த்து அம்மா.. “சித்ரா..” என சித்தியைக்கூப்பிட்டு ‘இவள் பெரியவளாயிற்றாள்’ என கண்களில் நீருடன் சொல்லி பதறியதும்.. இப்போது நினைத்தாலும் அந்தக் காலகட்டம் முதுகுத்தண்டில் சிலீரென ஒரு அச்ச மின்னலை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியுதில்லை..

 

பருவம் அடைதல் ஒரு சாதாரண விடயம் தானே.. ஒவ்வொரு பெண் குழந்தைகளும் சிறுமிகளாயிருந்து பெண்களாகும் அந்தப்பருவத்தை தாண்டி வருவது அபூர்வமல்ல.. ஆனால் நம்ம ஊரில் அதனையே சாக்காக வைத்து செய்யும் காரியங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக இல்லாமல், ஏனடா பெண்ணாகப் பிறந்தோம் என்று குறைந்தது ஒரு தடவையாவது எண்ண வைக்காமலிருந்தால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்..

 

என் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.. நீங்க சுகமில்லாமலில்லை தானே.. நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்வியில் கூனிக்குறுகிய நான் ஏனென்று கேட்ட போது.. அப்படியான நாட்களில் சோபாவில் இருக்கக்கூடாதாம்.. இன்னொரு வீட்டில் கட்டிலில் தூங்க முடியாதாம்.. பொது பாத்ரூமை உபயோகிக்க முடியாதாம்.. தலைக்குக் குளிக்கக்கூடாது, ஏன் குளிக்கவே கூடாது, பச்சைத்தண்ணீர் உபயோகிக்கக்கூடாது, வெறும் பாயில் தான் தூங்க வேண்டும் என இன்னும் ஆயிரம் அர்த்தமில்லா பழக்கவழக்கங்கள்..

 

மாதா மாதம் சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு விடயத்தை, வீட்டிலிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியவைக்க வேண்டிய அவசியம் என்ன? இது இயற்கையான ஒரு நிகழ்வு.. ஒரு உடலியல் மாற்றம்.. வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் வேண்டுமா?

 

மேற்கு நாடுகளிலெல்லாம், அம்மாவுக்குத் தெரியாமலே பருவம் அடைந்ததும் தாமாகவே napkinகளை பொருத்திக்கொண்டு பாடசாலைக்குச் செல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.. அவர்களும் குழந்தை பெறுகிறார்கள் தானே.. அவர்களும் வாழ்கிறார்கள் தானே..

 

அண்மையில் பார்த்த ஒரு படத்தில் பெண் வயசுக்கு வந்துவிட்டாள் என்பதை ரவுடிப் பையன்கள் போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்துவது போல காட்சியொன்று.. எதற்கு அந்தப் பெண்ணுக்கு இத்தனை சங்கடம்? ஆண்களும் தான் குரலுடைந்து, மாற்றங்கள் ஏற்பட்டு பெரிய பையன்கள் ஆகிறார்கள்.. அவர்களுக்கும் இப்படி விழா எடுக்கலாமே..

 

கடவுள் எப்போது நம்மைப் படைத்தாரோ, அப்போது நாம் அவரின் குழந்தைகள் தானே.. எதற்காக அந்த ஐந்து நாட்களும் தீட்டு என்று பெண்களை மாத்திரம் ஒதுக்கி வைக்க வேண்டும்?இந்தக் கவிதையில் சொல்லப்பட்டிருப்பது போல, பெண் தெய்வங்களையும் தீட்டு என்று ஒதுக்கி வைப்பார்களா?

 

கேள்விகளும், ஆதங்கங்களும் ஆயிரம்.. ஆனால் ஒரேயொரு ஆறுதல்.. பெண்களை மதித்து இந்தக் கவிதை எழுதியவரும் ஒரு ஆண்.. இவரைப் போலவே பலரும் இருக்கக்கூடும்.. காலங்கள் மாறும் போது, காலத்திற்கேற்ப பரிணாமமடைவது தவறில்லை..

 

இனிவரும் காலங்களிலாவது சிறுமிகளின் மனதை சிதைக்காதீர்கள்.. சாதாரணமாக, இயல்பாக இருக்க விடுங்கள்.. ஒரு பெண்ணாக வளரவிடுங்கள்..

அநித்யா..

சாகரவுக்கு என் மாமியாரிடமிருந்த திட்டு விழுந்து கொண்டிருக்கிறது.. என் இருண்ட கண்கோளங்களால்  அவன் எவ்வாறு பதறிப்போய் பயந்த முகத்துடன் இருப்பான் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.. இது என்னால் தானே என்ற சுயபச்சாத்தாபத்தை தவிர்க்க முடியாமல் சாகர என்று சத்தமாய் அழைத்தேன்..

 
இவன் உண்மைப் பெயர் சாகர தானா? தெரியவில்லை.. ஒளியற்ற என் விழிகளில் அவனை கண்டெடுத்த நாள் திரைப்படமாய் விரிந்தோடியது..

 
90ம் ஆண்டு.. இரண்டாம்கட்ட கலவரத்தின் உச்சம்.. வடக்கு, கிழக்கு, மேற்கு என ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளை அது..

 
நானும் ஒரு ஆர்மிக்காரன் தான்.. கவசாக்கி மோட்டார் சைக்கிளில் தலைமுதல் பாதம் வரை கரும்பச்சை நிற முரட்டு ஆடைகளால் மறைத்துக்கொண்டு, வலைப்பின்னலுடன் கவசம் அணிந்து, முகத்தில் கருப்பு நிறம் பூசி கொடூரத் தோற்றத்துடன் மனிதம் மறந்து மரக்கடிப்பட்ட உணர்வுகளுடன் ஏகே 47, கிறீஸ் கத்தி, டைனமைற்கள் என கொலைக்களமாகத்திரிந்த காலம்.. மோட்டார் சைக்கிள் பார்ட்டி

 
அன்றும் அப்படித்தான்.. ஒரு குழுவாய் அம்பாறைக் காட்டுப்பகுதிக்குள் விர் விர் என சத்தமெழுப்பியபடி போய்க்கொண்டிருந்தோம்.. தூரத்தில் நீல நிற மினிவான் ஒன்று விரைந்து வர.. சனத் நடுவீதியில் நின்று அதனை மறித்தான்..

 
சிங்கள சாரதி.. எங்களைப் பார்த்ததும் மாத்தையா  அபி கொளம்ப யணவா.. (ஐயா நாங்க கொழும்புக்கு போறம்) என்று சொல்ல.. வானுக்குள் இருந்த அனைவரையும் இறக்கினோம்.. அவன் உறவினர்கள் போல நான்கைந்து சிங்களவர்கள்.. அவர்களுடன் தமிழ் குடும்பம் ஒன்று.. கணவன், மனைவி, இளம் பெண்பிள்ளை ஒரு பையன்..

 
இரத்தப்பசையின்றி முகம் வெளுக்க பின் சீற்றில் ஒடுங்கிப்போயிருந்தவர்கள் நடுக்கத்துடன் இறங்கி வர.. சாரதியின் மூஞ்சியில் பொறிபறக்கும் வகையில் துவக்குக் கட்டையால் அடித்தபடி.. ‘பற பள்ளா.. கவுத மே.. உம்பே கேனித?’ (பறநாயே.. இது யாருடா.. உன்ட பொண்டாட்டியா) என்று சனத் உறும..

 
‘ராளகாமி.. மே அப்பே சிதம்பரம் முதலாளி.. யன்ன தென்ன மகாத்தயோ.. துவகே கசாதெட்ட கொளம்ப யன கமன்..! ரட இந்தன் மனமாலயத் அவித்..!’ (ராளகாமி – பொலிஸ் கான்ஸ்டபிள்களை / ஆர்மிக்காரர்களை அழைக்கும் முறை. இவர் எங்கட சிதம்பரம் முதலாளி பாவம் ஐயா.. விட்றுங்க.. மகள்ட கல்யாணத்துக்காக கொழும்புக்கு போறாங்க.. வெளிநாட்ல இருந்து மாப்பிள்ள வந்திருக்கார் ஐயா..) என்று சொல்லிக்கொண்டே போக.. அவர்கள் வைத்திருந்த டிராவலிங் பாக்கை செக்கிங் என்ற பெயரில் இழுத்துப்பிரித்த ஜகத்.. உடைகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருந்த நகைகளை எள்ளலுடன் தூக்கிக் காட்டியபடி பங்கு போட ஆரம்பித்தான்..

 
சிறுத்தைக்கூட்டத்தின் நடுவே சிக்கிய மான்களாய் துப்பாக்கி முனையில் நின்றிருந்த அந்தக் குடும்பம் ஏது செய்வதென்று அறியாமல்.. கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருக.. ஒண்டிக்கொண்டபடி, கூனிக்குறுகி.. குற்றம்புரிந்தவர்கள் போல நிற்க..

 
மற்றையவர்களை பலவந்தமாக வானுக்குள் தள்ளி அவர்களின் கெஞ்சலை மதிக்காமல் துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டிவிட்டு.. சில்வா அந்த மனைவியின் சேலைத் தலைப்பை பிடித்திழுக்க.. அடுத்தவன் அந்தப் பெண்ணை தன்னருகில் இழுத்து ‘அம்மாய் துவய் நியம படு தெகக் ஆஹ் !’ (அம்மாவும் பொண்ணும் நல்ல சாமான்கள் ஆ..) என அசிங்கமான சிரிப்பொன்றுடன் முத்தமிட முயல எங்கள் முகங்களின் கோரம் பார்த்து அவள் அழுதாளா அல்லது அடுத்து நடக்கப்போகும் அகோரத்தை எண்ணி அலறினாளா என்று தெரியாமல் ஒரு கூக்குரல்.. தடுக்கப்பாய்ந்த சிதம்பரத்தின் கழுத்தை ஒருவன் கிறீஸ் கத்தியால் வெட்ட ‘அநித்யா ஓடு’.. என்று அலறியபடி வேரற்ற மரமாய் விழுந்தார் கணவன்..

 

 

தனக்கு நேரப்போகும் கொடுமைகளை புறந்தள்ளி அந்தத் தாயும் ‘அநித்யா.. அநித்யா தப்பி ஓடுடீ’ என்று அலறியபடி இருக்க தறதறவென்று இழுக்கப்படும் அந்தத் தாயின் காலுடன் பிணைந்தபடி இருந்தவன் தான் சாகர..

 
நான் ஒன்றும் நல்லவனில்லை.. எத்தனையோ கொலைகள் பண்ணியிருக்கிறேன்.. கொள்ளையடித்திருக்கிறேன்.. வன்புணர்வுகள் செய்திருக்கிறேன்.. ஆனாலும் சேற்று மண்ணில் புரண்டபடி தள்ளிவிடப்பட்டிருந்த அந்தப் பையனைப் பார்த்ததும் பிள்ளைக்காக சித்தப்பிரம்மையுடன் ஏங்கும் மனைவியின் ஞாபகம் வர, மயங்கிப்போன அவனை இழுத்துச் சென்று ஒரு மரத்தின் பின்னால் போட்டுவிட்டு நகைகளை ஆராயத் தொடங்கினேன்..

 
அந்தப் பெண்களின் அலறலை பொருட்படுத்தாது அனைவரும் இரை தின்னும் மிருகங்களாய் பங்குபோட்டு முடிந்த பின்.. இரண்டோடு சேர்த்து மூன்று பிணங்களாக ஒரே குழியில் போட்டுப் புதைத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல அடுத்த வேலையை பார்க்க போனோம்..

 
ஆயிற்று இன்று பத்து பன்னிரண்டு வருடங்கள்.. அந்தப் பையன் சாகரவாக வளரத்தொடங்கி.. இப்போது அவனுக்கு 13 வயதிருக்கும்.. என் மனைவிக்கும் குணமாகவில்லை.. பின்னொருநாள் நடந்த கொரில்லாத் தாக்குதலில் ஒரு காலும், இரண்டு கண்களும் போக.. இன்று குருடனாய்.. முடவனாய்..

 
சாகர – கடல்.. ஆம் இன்று அவன் தான் எனக்கு கடல் போல ஆதரவு.. ஏனென்றே தெரியாமல் என் மாமியாரின் அத்தனை ஏச்சுப் பேச்சுகளைக் கேட்டவாறு அரவணைத்து ஒத்தாசை செய்கிறான்.. அவன் யாரென்று அவனுக்கு சொல்ல மனம் வருகுதில்லை.. அதுபோல ஒன்றுமேயற்றுப் போன இந்தத் தருணத்தில் தான் எத்தனை பாவங்கள் பண்ணியிருக்கிறேன் என்ற எண்ணம் என்னுள் எழும்புவதை தடுக்கவும் முடியுதில்லை

 
இன்று ஆட்காட்டிக்குருவியின் சத்தம் கேட்கும் அத்தனை வேளைகளிலும் ‘அநித்யா ஓடு’ என்ற அந்தப் பெற்றோரின் கதறலும்.. ‘என்ன விடுங்கடா.. அப்பா.. அம்மா.. ஐயோ..’ என்ற அந்தப் பெண்ணின் குரலும்.. ‘சனியன்களே நாசமாப் போவீங்கடா..எங்கள கொண்டு போட்றுங்கடா.. ‘ என்ற சாகரவின் தாயின் குரலும் அந்த அநித்யா போல கசங்கிப் போன அத்தனை பெண்களின் குரலும் தொடர்ந்து காதுக்குள் கேட்கிறது.. தொடர்கதையாய்..

ரசிகனின் ரசிகை

முத்தமிடுவதற்காய் நெருங்கும் போது என் மூச்சுக்காற்றாய் உள்நுழைந்து
செல்களையெல்லாம் சில்லிடச் செய்தாய்..

நீயும் நானும் மூக்கோடு மூக்குரச வரும் வெட்கத்தில் என் முகம் சிவக்கையில்
கொஞ்சும் ஆண்கிளி போல  உன் குரலில் ஒரு குழைவு..

ஒவ்வொரு முறையும் நீ அண்மிக்கும் வேளையிலெல்லாம்
அலையடிக்கிறது மனசுக்குள்..

அத்தனை தடவையும் செத்துவிடலாம்போல் தோணும்
நீ என்னைத் தொட்டணைத்துத் தீண்டும் போதெல்லாம்..

தொலைந்த என் இதயத்தை உனக்குள் தேடித்தேடி
உன்னுள் தொலைந்து உறைந்துவிட்டேன்..

என்னை எனக்காகவே ரசித்து நேசிக்கும் ஜீவன் நீ..
எனக்கே எனக்காய் வாழும் உனக்காய் என் காதலையன்றி எதனைத் தர

நீயா..நீதானா..நியாயம்தானா?

மூளைக்குள் வண்டு குடையும் ஒலி, நிமிர்த்திப் படுக்க வைத்து இதயத்துக்குள் நேராய் ஊசி சொருகியது போல வலி, மளுக்கென்று வெளியே வரும் கண்ணீர், மனசு முழுக்க வேதனை.. மறக்க முடியவில்லை..

 
உன்னைக் காதலித்ததை நான் மறுக்கவும் இல்லை மறுதலிக்கவும் இல்லை.. காதலை கொடுத்தபோதெல்லாம் எடுத்துக்கொண்ட நீ, அதனை கொச்சைப்படுத்தாமல் பிரிந்திருந்தாலாவது கொஞ்சம் ஆறுதலடைந்திருக்கும் மனது..

 
என்னை அவமானப்படுத்துவதாய் நினைத்து உன்னையே குறைத்து மாசுபடுத்திய உன்னை எப்படியெல்லாம் நேசித்தேன் என்பது எனக்கு மட்டும் தான தெரியும்..

 
உனக்கு வேண்டுமானால் அவமானப்படுத்துவதும் அவமானப்படுவதும் சாமான்யமாக இருக்கலாம்.. மானம் மட்டுமே பெரிதென்று வாழும் எனக்கல்ல..

 
உன் விளையாட்டுகளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த நான் தான் இன்று நீ செய்த வினையின் விளைவைப் பார்த்து வேதனையால் துடிக்கிறேன்..

 
நெருப்பிலிட்ட மண்புழு வலியால் துடிப்பது போல் துடிதுடித்து, இறுதியில் அதைப்போலவே மண்ணோடு மண்ணாக மக்கிப் போவேனென்பது மட்டும் எனக்குத் தெரியும்..

 
உன் பொய்களையெல்லாம் பரிசீலிக்காது நம்பிய எனக்கு பொய்மையே வாழ்க்கையாகத் தந்தாய்.. கடைசியில் பொய்யாகவே போனாய்..

 
உன்னுடையவளாக நினைக்காதிருத்தலைக் கூட பொறுத்துக்கொண்டிருப்பேன்.. என் பெண்மையைக் கூவிக்கூவி ஏலம் போட்டதை எங்கு போய் சொல்வேன்..

 
வசையாடுதல் உனக்கு வழக்கமாகியிருக்கலாம்.. உன் வீட்டுப் பெண்களிடமும் அதனை பிரயோகிப்பாயா என்ற என் கேள்விக்கு வசைமாரி பொழிந்த உன்னை முடிந்திருந்தால் என் முறைப்பினாலேயே கொன்றிருப்பேன்..

 
உன் அழைப்புகளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த காலங்கள் போய் இன்று யாரழைத்தாலும் ஒலிக்கும் மணிச்சத்தமே மரித்துப்போகுமளவு பயத்தை கொடுக்கிறது..

 
மணிக்கணக்காய் உன் பெயரை ஜபம் செய்யும் உதடுகள் இன்று நீ சொன்ன வார்த்தைகளை மனசுக்குள் மீண்டும் மீண்டும் உச்சரித்து அதன் வீரியத்தால் உடைந்து போகின்றன..

 
பரத்தை என்று சொல்வதற்கு உனக்கு ஒரு நொடி போதுமாயிருந்திருந்தது.. அதனை மறப்பதற்கு ஒரு ஜென்மம் போதுமா?

 
பிரிவுகள் கொடுமையானாலும் சகஜமானவை தான்.. ஆனால் ஆயிரம் கோடி வேதனைகளுடன், உன் அழகற்ற செயல்களால் ஆத்மா இறந்து உள்ளம் வெதும்பிச் செத்துக்கொண்டிருக்கும் எனக்கு சாவுகூட ஆறுதல் தருமா தெரியவில்லை			

புலம்பல்ஸ்

விஜய் டீவி
கடந்த திங்கட் கிழமை முதல் விஜய் TV யின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (NVOK) தவறாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாவின் சிரிப்புச் சத்தம் வீட்டில் கேட்டது ஒரு சந்தோஷம் என்றால், விஜய் TV அறிவிப்பாளர்களின் லூட்டி ப்ளஸ் சென்டிமென்ட்ஸ் என நிகழ்ச்சி கலக்கலோ கலக்கல்.. நாமும் அந்தக் குடும்பத்துடன் சேர்ந்து விடலாமா என்று எண்ணத் தோன்றியது.

 

என்னதான் குறைகள் சொன்னாலும், விஜய் TVயின் Marketing tactics  மற்றும் நிகழ்ச்சி வடிவமைக்கும் விதத்துடன் யாராலும் போட்டி போட முடியாது என்பது உண்மை..

 

சிவகார்த்திகேயனின் அழுகை, DD யின் லூட்டி, கோபிநாத்தின் புலமை, சரவணனின் அமைதி, ராஜஷேகர் அவர்களின் அனுபவம், நண்டின் சிண்டுகள், ரம்யாவின் அமைதி, பாவனாவின் அழகு, கல்யாணியின் ஓவர் வழிசல், மாகாபாவின் குறும்பு, எல்லாமே சுவாரஸ்யமாக இருந்ததென்றாலும், என்னை கவர்ந்த விஷயங்கள் என்றால்..

 

DD யும், தீபக்கிற்கும் இடையிலான நட்பை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபக்கின் மனைவி.. தன் சகோதரன் படிப்பதற்காக தன் படிப்பைத் தியாகம் செய்து சம்பாதித்து கொடுத்ததுடன் மட்டும் நிற்காமல், அது பற்றி சூர்யா குறிப்பிட்ட போது, அலட்டாமல், அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல் நடந்து கொண்ட டDD யின் இன்னுமொரு பக்கம்.. Hats off to you DD..

 

கோபியின் ஆளுமையும் தர்க்க ரீதியாக விடயங்களை அணுகும் தன்மையும் ஒரு புறம் ஆச்சரியப்பட வைத்தது என்றால், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஒருவர் ஜெகன்.. யாரையும் சாமானியமாக நினைக்கக்கூடாது என்பதற்கு மற்றுமொரு உதாரணம்.. எந்தவொரு பதற்றமுமின்றி, நேர்த்தியாக, பீற்றிக்கொள்ளாமல் தனக்குத் தெரிந்த விடயங்களை சொன்ன பாங்கு..wow..

 
சூர்யா இடத்தில் இன்னுமொருவரை வைத்துப் பார்க்க முடியாதபடியான சூர்யாவின் இருப்பு தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் பலம் என்று நான் நினைக்கிறேன்.. வழிபவர்களையும், புகழ்பவர்களையும், இவனுக்கென்ன தெரியும் என்று வருபவர்களையும் நேர்த்தியாக கையாண்டு நிகழ்ச்சியை திறம்பட கொண்டு நடத்துவதில்.. ஒரு தொகுப்பாளராகவும் ஜெயிக்கிறார் சூர்யா..

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

நாளைக்கு சித்திரை வருடப் பிறப்பு.. என் இணைய நண்பி ஒருவரிடம் கொண்டாட்டங்கள் எப்படி என்று கேட்டதற்கு.. “என்ன செய்றதுன்னே புரில.. கொண்டாடினா..அதிமுக ம்பாங்க.. கொண்டாடல்லன்னா திமுக ம்பாங்க.. என்ன பண்றதுன்னு தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.. ம்.. பாவம் தான்..
சரி ஏதாவது புது டிரெஸ் வாங்கலான்னா தமன்னா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, த்ரிஷா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, அனுஷ்கா இன்னொன்றுக்கு..எந்தக் கடைக்குத் தான் போவது.. போனாலும் கடைக்காரங்க சொல்ற விலைக்கு ரொக்கட்டே வாங்கிடலாம்.. வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்குமே பத்தலை, அதுக்குள்ளே இவங்களின் அட்டகாசங்கள் தாங்க முடியுதில்லை சார்..
சரி, இதுதான் கொடுமைன்னு TV போட்டா

 

சன் மற்றும் கலைஞர் TVகளுக்கு பண்டிகைக்காலத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் தேவை, அத காட்டுவதற்கு விஷேட நிகழ்ச்சிகளும் தேவை.. ஆனா அவுங்க சித்திரைத் புதுவருஷம்ன்னு சொல்ல மாட்டாங்களாம்.. சன் TVக்கு இது அவங்களோட Anniversary யாம்.. கலைஞர் TVக்கு சித்திரைத் திருநாளாம்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையால்ல இருக்கு

 
சித்திரை திருவிழாவோ, புதுவருடமோ, இல்லை 19வது ஆண்டு நிறைவோ.. எதுவாகன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்.. சினிமா என்ற மாயை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான தைரியமோ, கண்ணோட்டமோ எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்பதைப் பார்க்கும் போது எதிர்காலம் பற்றிக் கவலையாக இருக்கிறது..

 
நாளைக்கு, எது நடக்கின்றதோ இல்லையோ.. ஓவர் மேக்கப்புடன் அரை குறை ஆடை அணிந்தபடி நான்கு கதாநாயகிகளும், வேஷ்டி கட்டினாலும், தலையில் Shadesம், காலில் Shoeவுமாக “ya ya” “well” “Basically” என்று  தங்க்ளிஷில் பேசியபடி கதாநாயகன்களும்.. “அணைவறுக்ம் சித்ர ப்துவர்ஷ வால்துகள்” என்று சொல்ல உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வருவார்கள்..

 

 

வருமானம் முக்கியம் தான்.. அதற்காக.. தமிழ் தமிழ் என்று கூவி விற்கும் இவர்கள், தமிழ் சார்ந்த அல்லது தமிழ் கலாசாரம் கலந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டையாவது பிரைம் டைமில் ஒளிபரப்பலாமே.. திராவிடம் பேசும் தொலைக்காட்சிகளுக்குக்கூட தில் இல்லை எனும் போது.. யார் தான் தமிழனையும், தமிழ் கலாசாரத்தையும் காப்பாற்றுவது..

 
இது போதாதென்று திரைப்படங்கள்.. கொலை, கொள்ளை, குத்து, வெட்டு, விபத்து, கவர்ச்சி.. நல்லதொரு நாள்ல இவங்க போடும் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வச்சா.. விளங்கிடும்.. கொஞ்சமாவது நல்ல படங்களை போடலாமே.. எத்தனை நல்ல படங்கள் இருக்கின்றன..

 

 

இதெல்லாம் நாம்ப சொல்லி கேட்கவா போகிறாங்க.. அதை விடுங்க.. நாளைக்கு வீட்டுக்கு யாராவது visit பண்ண வந்தாங்கன்னா முகம் கொடுத்து பேசுங்க.. எப்படியும் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இன்னொரு வாட்டி போடுவாங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. இல்லைன்னா Officeல Download பண்ணி பாத்துக்கலாம்..

 

வர்றவங்களோட பேசி சிரிச்சி சந்தோஷமா புதுவருஷத்தை கொண்டாடினா நமக்கும் சந்தோஷமா இருக்கும்..

சித்திரைப்புதுவருட வாழ்த்துகள்!

அன்புள்ளஇயற்கைஅன்னைக்கு..

அன்புள்ள இயற்கை அன்னைக்கு..
பொறுமைக்கு பூமியையும், நேசத்திற்கு காற்றையும், கண்டிப்பிற்கு நெருப்பையும், அரவணைப்பிற்கு ஆகாயத்தையும், தன்னலமில்லா அன்பிற்கு தண்ணீரையும் சொல்வார்கள்..
நேற்றைய நாளை நினைத்துப் பார்க்கிறேன்.. சாதாரணமான ஒரு நாளாக விடிந்த ஒரு காலை, மாலையாவதற்குள் எத்தனை விடயங்களை மனிதனுக்கு உணர்த்திச் சென்றது என்பதை நினைத்துப் பார்த்தால் உன்னை மிஞ்சி எதுவுமே இல்லை என்பது மனிதனுக்கு புரிந்திருக்கும்..
அமைதியாக சாந்தமாக இருக்கும் நீ உன்; இருப்பை தெரியப்படுத்தும் வகையில் சில நேரங்களில் பொங்கி எழும்பும் போதுதான்.. மனிதனுக்கு மனிதம் பற்றிய நினைப்பும், மயான ஞானமும் தோன்றுகிறது..
கடவுள் பற்றி பெரிதாக கருத்துகள் இல்லாவிட்டாலும், உன் பற்றிய நேர்மறையான கருத்துகளைக் கொண்ட எனக்கு, அந்த மயான ஞானமும் சில மணித்துளிகளின் பின்னர் மறைந்து போவது எவ்வாறென்று எண்ணும் போது ஆச்சரியம் மட்டுமே நிலைத்திருக்கின்றது..
நல்ல வேளையாக நேற்று எந்தவொரு பாரிய இழப்பையும் நீ தரவில்லை.. பாவமென்று விட்டுவிட்டதற்கு சிரம் தாழ்ந்த நன்றி அம்மா..
இத்தனை நெடுங்காலமாய் மனிதன் செய்யும் அத்தனை தப்புகளையும் பொறுத்திருந்த நீ.. இப்போது மட்டும் அளவுக்கதிகமாக தண்டிப்பது மனிதன் மேல் நம்பிக்கை இல்லாமலா..
அதிலும் ஏன் அப்பாவிகளாக தேடித் தேடித் தண்டிக்கிறாய்? ஒரு பக்கம் மனிதனே மனிதனைக் கொன்று மாக்களாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நீயும் உன் பங்குக்கு மனிதபட்சணியாக மாறுவது ஏன்?
நேற்று எதனால் நீ அதிர்ந்தாய் என்பதற்கு ஆயிரம் விஞ்ஞான விளக்கங்கள்.. ஆனாலும், உன் ஆழ்மனதில் என்ன இருக்கின்றதென்பது உனக்குத் தான் தெரியும்.. யாருக்கு எச்சரிக்கை இது.. யாருக்கான தண்டனை இது? யாருக்கான பயப்படுத்தல் இது..

உன்னையே அண்டி வாழும் எம்மீது இரக்கம் வை இயற்கைத்தாயே..

சரி, அப்படித்தான் உன் கோபத்தை காட்ட நீ சீற்றமடைந்து சீறியெழும் போது.. இனியாவது நல்லவர்களை விட்டுச்செல்..
இப்படிக்கு
உன்னை நம்பி வாழும் ஒருத்தி..