ஒரு சிறுமி பெண்ணாகிறாள்

அந்த நாட்கள்

அந்த மூன்று நாட்களில்

கோயிலுக்குள் செல்வது

தீட்டாகவே இருக்கட்டும்

எந்த மூன்று நாட்களில்

பெண் தெய்வங்கள்

கோயிலுக்குள் இருக்காதென

கொஞ்சம் சொல்லுங்களேன்..

க. பொன்ராஜ் அவர்கள் இந்த (25.04.2012) இந்த வார விகடனில் எழுதியிருந்த கவிதை இது..

 

ஏதோவொரு வித பயம், பதற்றம், என்ன நடந்ததென்று தெரியாமல், இருட்டு வழியில் நிற்பது போல மாயத்தோற்றம்.. எதிர்காலம் பற்றிய அச்சம், பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என அத்தனை பெண் உறவினர்களும் வந்து சூழ்ந்துகொண்டு ஆளுக்காள் அட்வைஸ் சொல்வதும் என அலமலந்து நிற்கும் வேளையில்

 

ஒரு கட்டுத் துணியை உடம்பில் வைத்து சுற்றிக்கடட்டிய அந்த கொடுமையும், வயிற்று வலியும், உடல் வலியும் பாடாய்படுத்திக்கொண்டிருக்க, புதிதாக தோன்றும் அத்தனை அசௌகர்யங்களையும் எப்படிச் சமாளிப்பது என்று எண்ணுவதே பெரும்பாரமாயிருக்கும் நேரத்தில் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே.. இங்கு போகாதே, அங்கு ஏறாதே, அந்த அறைக்குள் நுழையாதே, அப்பாவுடன் அண்ணாவுடன் கூட அருகில் நின்று பேசாதே என எத்தனை எத்தனை அறிவுரைகள்..

 

பச்சை முட்டை, பிஞ்சுக் கத்தரிக்காயும், நல்லெண்ணையும் சேர்த்து அரைத்த கஷாயம், வெறும் நல்லெண்ணெய், பிடிக்கவே பிடிக்காத உழுந்துக் கூழ், பிட்டும் நல்லெண்ணெயும், வெறுத்துப்போகுமளவு நல்லெண்ணெயில் குளித்த கத்தரிக்காய் பொரியல், ஏதேதோ மூலிகை மருந்துகள், எழுந்து நிற்கக்கூடாது, இனிப்பு சாப்பிடக்கூடாது என கண்டிஷன்கள்..

 

அத்தனை பேருக்கும் லவுட் ஸ்பீக்கர் வைத்துச் சொல்வது போல ஆர்பபாட்டங்கள்.. முகம், உடம்பு என மஞ்ச மஞ்சேரென மஞ்சள் பூசி, ஏனோதானோவென வாங்கப்பட்ட பொருத்தமில்லா பிராவும், அவசரமாய் தைக்கப்பட்ட பிளவுசும், உருவிவிட்ட குச்சிக்கு சுற்றி விடப்பட்டது போல ஒரு சேலையையும் சுற்றி உட்கார வைத்து..

 

சரி, இத்தனையும் முடிந்துவிட்டதென்று எண்ணும் போதுதான்.. இது டிரெய்லர் தான்.. Main Picture இனித்தான் என்று சொல்வது போல எத்தனை நிபந்தனைகள் சங்கடங்கள்..

 

நல்ல வேளை பழைய காலத்தில் போல தனி அறையில் அடைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாவிட்டாலும், ஸ்வாமி அறைக்குள் போகக்கூடாது, ஆண்களுடன் பேசக்கூடாது, தோழர்களுடன் விளையாடக்கூடாது, மரம் ஏறக்கூடாது, ஓடிப்பிடித்து விளையாடக்கூடாது, தனியாகப் போகக்கூடாது இன்னும் எத்தனை எத்தனை..

 

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்வரையில் இத்தனை சங்கடங்களை நான் அனுபவிக்கவில்லை.. பராயம் எய்துவது எப்படி, அதன் சாதக பாதகங்கள் என்ன என ஒரு தோழியாய் அம்மா சொல்லிக்கொடுத்திருந்தாலும், என் விருப்பத்திற்கேற்ப சாங்கியங்களை வளைத்துக்கொண்டாலும்.. அந்தக் கணம் நடைபெறும் போது, உடம்பெல்லாம் வியர்த்துக் குளித்து, ஏதோ தப்பு செய்தாற்போல நடுங்கி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் மெதுவாகச் சென்று அழுதபடி.. ‘அம்மா.. நான் மரம் ஏறினப்போ காயம் பட்டுட்டு போல.. ரத்தம் ரத்தமா வருது’ என்றதும்.. அம்மா பதற்றத்துடன் எங்கே எனக் கேட்டதும்.. காட்டியதும் அதைப் பார்த்து அம்மா.. “சித்ரா..” என சித்தியைக்கூப்பிட்டு ‘இவள் பெரியவளாயிற்றாள்’ என கண்களில் நீருடன் சொல்லி பதறியதும்.. இப்போது நினைத்தாலும் அந்தக் காலகட்டம் முதுகுத்தண்டில் சிலீரென ஒரு அச்ச மின்னலை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியுதில்லை..

 

பருவம் அடைதல் ஒரு சாதாரண விடயம் தானே.. ஒவ்வொரு பெண் குழந்தைகளும் சிறுமிகளாயிருந்து பெண்களாகும் அந்தப்பருவத்தை தாண்டி வருவது அபூர்வமல்ல.. ஆனால் நம்ம ஊரில் அதனையே சாக்காக வைத்து செய்யும் காரியங்கள் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக இல்லாமல், ஏனடா பெண்ணாகப் பிறந்தோம் என்று குறைந்தது ஒரு தடவையாவது எண்ண வைக்காமலிருந்தால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்..

 

என் நண்பி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்.. நீங்க சுகமில்லாமலில்லை தானே.. நேரடியாகக் கேட்கப்பட்ட கேள்வியில் கூனிக்குறுகிய நான் ஏனென்று கேட்ட போது.. அப்படியான நாட்களில் சோபாவில் இருக்கக்கூடாதாம்.. இன்னொரு வீட்டில் கட்டிலில் தூங்க முடியாதாம்.. பொது பாத்ரூமை உபயோகிக்க முடியாதாம்.. தலைக்குக் குளிக்கக்கூடாது, ஏன் குளிக்கவே கூடாது, பச்சைத்தண்ணீர் உபயோகிக்கக்கூடாது, வெறும் பாயில் தான் தூங்க வேண்டும் என இன்னும் ஆயிரம் அர்த்தமில்லா பழக்கவழக்கங்கள்..

 

மாதா மாதம் சாதாரணமாக நடக்க வேண்டிய ஒரு விடயத்தை, வீட்டிலிருக்கும் அத்தனை பேருக்கும் தெரியவைக்க வேண்டிய அவசியம் என்ன? இது இயற்கையான ஒரு நிகழ்வு.. ஒரு உடலியல் மாற்றம்.. வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் வேண்டுமா?

 

மேற்கு நாடுகளிலெல்லாம், அம்மாவுக்குத் தெரியாமலே பருவம் அடைந்ததும் தாமாகவே napkinகளை பொருத்திக்கொண்டு பாடசாலைக்குச் செல்லும் பெண்களும் இருக்கிறார்கள்.. அவர்களும் குழந்தை பெறுகிறார்கள் தானே.. அவர்களும் வாழ்கிறார்கள் தானே..

 

அண்மையில் பார்த்த ஒரு படத்தில் பெண் வயசுக்கு வந்துவிட்டாள் என்பதை ரவுடிப் பையன்கள் போஸ்டர் ஒட்டி தெரியப்படுத்துவது போல காட்சியொன்று.. எதற்கு அந்தப் பெண்ணுக்கு இத்தனை சங்கடம்? ஆண்களும் தான் குரலுடைந்து, மாற்றங்கள் ஏற்பட்டு பெரிய பையன்கள் ஆகிறார்கள்.. அவர்களுக்கும் இப்படி விழா எடுக்கலாமே..

 

கடவுள் எப்போது நம்மைப் படைத்தாரோ, அப்போது நாம் அவரின் குழந்தைகள் தானே.. எதற்காக அந்த ஐந்து நாட்களும் தீட்டு என்று பெண்களை மாத்திரம் ஒதுக்கி வைக்க வேண்டும்?இந்தக் கவிதையில் சொல்லப்பட்டிருப்பது போல, பெண் தெய்வங்களையும் தீட்டு என்று ஒதுக்கி வைப்பார்களா?

 

கேள்விகளும், ஆதங்கங்களும் ஆயிரம்.. ஆனால் ஒரேயொரு ஆறுதல்.. பெண்களை மதித்து இந்தக் கவிதை எழுதியவரும் ஒரு ஆண்.. இவரைப் போலவே பலரும் இருக்கக்கூடும்.. காலங்கள் மாறும் போது, காலத்திற்கேற்ப பரிணாமமடைவது தவறில்லை..

 

இனிவரும் காலங்களிலாவது சிறுமிகளின் மனதை சிதைக்காதீர்கள்.. சாதாரணமாக, இயல்பாக இருக்க விடுங்கள்.. ஒரு பெண்ணாக வளரவிடுங்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s