Archive | May 2012

புலம்பல்ஸ்

நேற்று எங்கள் குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம்.. 13 வயது பையன்.. எனக்கு தம்பி முறை.. ஸ்கூலில் இருந்து சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டு இருக்கையில் இவன் பின்னால் ஒரு லொறி, அதன் பின் ஒரு கார்..Wrong side  இலிருந்து வேகமெடுத்து முன்னேற முயன்ற கார்.. அவனுக்கு காலனாக..

 

ஆங்கிலத்தில் Better be Mr. Late than Late Mr  என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நிஜம் தான்.. ஒரு நிமிடம் துரிதமாய் போகவேண்டும் என்ற எண்ணம், வாழ்நாள் முழுமைக்குமான சோகத்தை ஒரு குடும்பத்திற்கு கொடுத்து விடுகின்றதே.. மனச்சாட்சியுள்ள ஓட்டுநர் என்றால், சாகும் வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி அவருக்குள்ளும் இருக்குமே.. இதெல்லாம் எதற்காக?

 

எனக்கும் வேகமாக வாகனம் ஓட்டப் பிடிக்கும்.. ஆனால் நெரிசலான சாலைகளில் அல்ல.. மற்றவர்களின் உயிர்களும் உயிர்தானே.. உயிரை விடுங்கள்.. ஒரு மனிதனை அங்கஹீனமாக்குவது கூட எத்தனை பாவம்.. வாகனம் ஓட்டும் போது.. மிக அவதானிப்போடு இருங்கள்.. இரண்டு நிமிடங்கள் தாமதமாகிப் போனால் என்ன குறைந்துவிடும்.. அதற்காக தறிகெட்டு வாகனம் செலுத்தாதீர்கள்.. போதையில், வேறு கவனத்தில் ஓட்டாதீர்கள்.. உங்களைப் போலதான் நீங்கள் விபத்து ஏற்படுத்துபவனும்.. மற்றவர்களையும் மதியுங்கள்..

 

 

விஜய் டீவி சுப்பர் சிங்கர் ஜுனியர் தவறாமல் எங்கள் வீட்டில் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.. விருப்பத்திற்குரிய பாடகர்கள் யார் என்று கேட்டால்.. எந்தப் பூ அழகு என்பது போலதான்.. ஆனாலும் ஆஜித்.. எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் பிடித்த வாண்டு.. அவரின் action களும், பாவங்களும், உருகி உருகிப்பாடும் பாங்கும்..

 

இந்தப்பாடலை சித்ராம்மாவுடன் எத்தனை அழகாக பாடுகிறான் என்று பாருங்க.. எத்தனை தரம் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை..  என் மனதுக்கு நெருக்கமான இந்தப் பாடலை, என் மனதுக்குப் பிடித்த இந்தக் குட்டி நடிகன் பாடியது பார்த்து.. என் கண்ணே பட்டிருக்கும்..

ஆஜித் வீட்டில் அம்மாவிடம் சொல்லி சுத்திப்போடும்மா..

 

 

ஐஸ்வர்யா எப்போதுமே limelight ல் இருக்கும் ஒரு அழகி.. டயானாவிற்கு பிறகு எனக்கு பிடித்த பெண்களில் ஒருவர்.. எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தாலும்.. மனம் தளராமல், எதற்கும் பதில் சொல்லாமல், தனக்கு நியாயம் என்று தோன்றுபவற்றை செய்தவர்.. அவரின் அழகுக்காகவே அத்தனை பேராலும் அறியப்பட்டாலும், அவருக்குள்ளிருக்கும் தாய்மை உணர்வை இப்போது அறிந்துகொள்ள முடிந்தது..

 

மேற்கத்தேய தாய்மார்.. தங்கள் வளைவுகளை திரும்ப பெறுவதற்காக குழந்தை பிறந்து கொஞ்ச நாட்களிலேயே தாய்ப்பாலை நிறுத்தி, Jim மே கதியென்று கிடந்து,Dieting மூலம் உடல் இளைத்து அழகாகத் தோன்ற பாடுபடும்போது, தன் தாய்மையால் இன்னும் அழகாகி, தன்னம்பிக்கையுடன் சிவப்பு கர்ர்ப்பெற்றில் நடைபோட்ட போது, அவர் உலக அழகியாக இருந்தபோதை விட இன்னும் அழகாக என் கண்களுக்குத் தெரிந்தார்

 

Face book கில் இப்போது memes என்று ஒரு வகை கார்ட்டூன் பிரபல்யமாகி வருகின்றது..  இந்தியாவில் அதிகளவில் இல்லாவிட்டாலும், இலங்கையில் அனைவர் மத்தியிலும் இது மிகப் பிரபல்யம்.. சிரிப்பதோடு.. கொஞ்சம் சிந்திக்க வைக்கும் இன்னுமொரு கார்ட்டூன் வகை என்று இதைச் சொல்லலாமா? இங்கே சில.. பார்த்து ரசித்து சிரிக்க..

slmemes  என்ற Face Book பக்கத்தையும் பாருங்கள்..

 

 

 

 

சினிமா சினிமா..

நம்ப ஊரு சினிமாக்காரவுங்களோட Dressing sense பார்த்தா சிரிக்கிறதா ஆழுவுறதான்னு  எனக்கு தெரியுறதில்ல.. நான் எல்லா ஹீரோசையும் சொல்லலைங்க.. அப்புறம் எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி துடைப்பத்தோட வந்து நின்னு என்னோட உருவ பொம்மைக்கு தீ வைச்சாலும் வைச்சிடுவாங்கப்பா.. (அடங்கு..நெனப்பு தான் பொழப்ப கெடுக்கிறது)

 

படங்கள்ல இவங்கள பார்த்தா சில சமயம் ரொம்ப சிரிப்பா இருக்கும்.. கிராமத்து ரௌடின்னு சொல்லுவாங்க.. பட் கால்ல Adidas Shoe வோட அலைவாங்க.. அதாவது பரவால்லைங்க.. லெதர் ஜாக்கெட்டும், pants ம் போடுறாங்களே.. கிராமத்துல எவனுக்கு லெதர் பத்தி தெரியுமாம்..
வெள்ள வெளேர்ன்னு வேஷ்டி சட்டையோட பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போடுவாங்க.. .. சுத்தி நின்னு அடிவாங்குறவங்க எல்லாரும் பாவம் கிழிஞ்ச சட்டை, அழுக்கு வேட்டி, கலைஞ்ச தலைன்னு நிப்பாங்க.. நம்ப ஹீரோ சார் மட்டும் எவ்வளவு trim ஆ மடிப்புக் கலையாத டிரெஸோட இருப்பாரு பாருங்க.. அட அட அடா..

 
ரொம்ப ஏழைன்னு சொல்லுவாங்க.. ஆனா தலைமுடி ஜெல் போட்டு அழகா படிஞ்சு இருக்கும்.. பொண்டாட்டி பத்தி கேக்கவே வேணாம்.. குடிசைல தான் இருப்பாங்களாம்.. ஆனா காதுல கைல எல்லாம் matching கம்மல் வளையல்ன்னு போட்டுட்டு தான் அடுப்பையே ஊதுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.. நகத்துல கொஞ்சம் அழுக்கு.. ம்ஹ்ம்..  ஆ.. கன்னத்துல ஒரு கீத்து கரி பூசியிருப்பாங்க.. அப்போதானே ஹீரோ வந்து “அய்யோ என் கண்ணே.. உனக்கா இந்தக் கதி” ன்னு தொடச்சி விடலாம் பாருங்க..

 

அப்புறம் இந்த விஷயம் சொல்லலன்னா என் மனசு தாங்காதுங்க..  இப்போ வில்லன் ஹீரோவோட தங்கையையோ, நண்பனையோ சுட்றுவாங்கன்னு வைச்சுக்கோங்க.. கிளைமாக்ஸ்லதான் இதெல்லாம் நடக்கும் சரியா.. அப்போ பாருங்க.. ரத்தம் ஓடிக்கிட்டு இருக்கும்.. ஹீரோ கைல கூட ரத்தம்.. But குண்டடிபட்டிருக்கிறவங்க முகத்துல துளி ரத்தம் கூட பட்டிருக்காது..

 

இது மட்டுமா.. நிஜத்துல யாருக்காவது காயம் பட்டா ஒரு சின்ன பொண்ணு கூட உடனே அம்பியூலன்சுக்கு போன் பண்ணிடும்.. இல்லைன்னா First aid கொடுக்க பார்ப்பாங்க.. நம்ப ஹீரோ இவங்கள மடில தூக்கி வைச்சுகிட்டு ஒரு expression காட்டுவார் பாருங்க.. அய்யோ.. செத்துப்போன என் பாட்டி கனவுல வந்து நான் செத்தப்போ நீ இப்படிக் கவலப்பட்டியான்னு கேக்குற அளவுக்கு இருக்கும்..

 

அதுலயும் இன்னொரு விஷயம்.. அவங்க குரல் மட்டும் தான் ஸ்க்றீன்ல காட்டுவாங்க.. இல்லன்னா.. எக்ஸ்பிரஷனே இல்லாத அந்த மூஞ்சி அழுறத காட்டுனா.. அப்புறம் சாகுற வரைக்கும் அவரோட படங்கள நாம்ப பார்ப்போம்?

சிலவங்களுக்கு முதுகு குலுங்குற குலுங்கல்ல அச்சச்சோ.. இவுரு முதுகெலும்பு உடைஞ்சிடுமோன்னு பயமா இருக்கும்..  இல்லன்னா டைட் ஷொட்ல கண்ல இருந்து கிளிசரின் உபயத்துல கண்ணீர் வர்றது போல காட்டுவாங்களே.. என்னா அழுகை.. இதுவரைக்கும் அந்த co artist  பாவம் இதெல்லாம் பார்த்து சிரிக்கக்கூட முடியாம மூச்சடக்கி படுத்துக் கெடக்கனும்..

 

அவங்க கதை இன்னொன்னு.. இந்த directors யமன் கூட பார்ட்னர் ஷிப் வைச்சிருக்காங்க தெரியுமா.. குண்டு அடிபடும்.. வீச்சரிவாள் வெட்டும்..  but நான் cut  சொல்ற வரைக்கும் யாராவது செத்தீங்க.. நானே கொன்னுடுவேன்னு சொல்லிடுவாங்க போல.. பாவம்.. ஒரு பக்கம் சொத சொதன்னு ரத்த மேக்கப், அடுத்த பக்கம் ஹீரோவோட reactions.. அதோட மூச்சு விடாமல் மரண வாக்குமூலம் வேற சொல்லணும்.. அது சொல்லி அழுது புரண்டு முடிஞ்சப்புறம் தான் அந்த கரெக்டர் சாகலாம்.. இல்லைன்னா வகுந்துட மாட்டாங்க..வகுந்து..

 

அதுலயும் வில்லனால பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாகுற தங்கச்சி கரக்டரோட இல்லைன்னா வில்லன் கையால சாகுற அம்மா characters சோட scene  தான் ரொம்ப இன்டரஸ்டிங்.. “அண்ணா நீ அவன பழிவாங்கணும் ணா.. இல்லைன்னா என் ஆவி வேகாது” (ஆவில தானே வேக வைப்பாங்க.. ஆவியே வேகுமா?) “மகனே நீதான்டா நம்ம கொலப் பெருமைய காப்பாத்தணும்.. அவன்கள வேரோட அழிக்கணும்.. என் நெஞ்சுல பால் வாக்கணும்”… ஐயோ ஐயோ.. குழந்தைங்களுக்கே குடிக்க பால் இல்லையாம்.. இவங்களுக்கு பாலு வாங்க நாம்ப எங்க போறது..

 

ஆனாலும் இதெல்லாத்துலயும் நம்ப ஹீரோவ அடிச்சுக்க ஆளே இல்லைங்க.. ஹீரோ செத்துட்டார்ன்னு நாம்ப எல்லாரும் நம்பிட்டே இருப்போமா.. அந்த Gapல யாரோ ஒரு புண்ணியவான் இல்லைன்னா நம்ப ஹீரோயின் அந்த 57 கிலோ bodyய வைச்சுக்கிட்டு 95 கிலோ ஹீரோவ தன்னோட தோள்ள தூக்கிகிட்டு டாக்டர் கிட்ட போவாங்க..

 

பாவம் அவுரு செத்துப்போய் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்.. ஆனா நம்ப wonder doctor எதையோ கொடுத்து அவர எழுப்பிடுவாங்க.. இல்லைன்னா இருக்கவே இருக்கே.. நெஞ்சுப் பகுதில கும்மாங்குத்து ஆடுவாங்க  பாருங்க.. அப்புறம் ஹீரோ எழும்பி.. “என்ன விடு.. நான் இப்பவே போய் அவன கொண்ணுட்டு வாறேன்னு” புயலா போவார்..

 

காய்ச்சல் வந்தாலே நாலு நாளைக்கு நம்பளால எழும்ப முடியுறதில்ல.. இதுல mummies போல கட்டுப் போட்டுட்டு படுத்திருக்கிற இவுரு கட்டெல்லாம் அவுத்தெறிஞ்சுட்டு வில்லன் கூட சண்டை போட்றுவாராம்..

 

இப்போ இந்த சீன் காட்டுல நடக்குதுன்னு வைச்சுக்கோங்களேன்.. ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் அங்கே.. கட்டாயம் ஒரு அருவிக்கு பக்கத்துல இல்லைன்னா ஆத்துக்கு பக்கத்துலதான் இது நடக்கும்.. நம்ப ஹீரோயின் என்ன பண்ணுவாங்க தெரியுமா.. ஒரு ரொமான்டிக் + pathetic பார்வையோட நம்ப ஹீரோ மார்மேல விழுந்து pulse  பார்ப்பாங்க.. அப்புறம் தான் அவங்களுக்கு அஞ்சாம்புல first aid கிளாஸ்ல கத்துக்கொடுத்ததுல்லாம் ஞாபகத்துக்கு வரும்..

 

ஒதட்டோட ஒதடு வைச்சு அப்படியே அவங்க மூச்சுக் காத்த அவுருக்கு கொடுத்து உசுரு கொடுத்துருவாங்க.. அப்புறம் அவுரு எழும்பினதும் அவங்க மூஞ்சில வர்ற  வெக்கத்த பாக்கணுமே.. ஐயோ ஐயோ.. இதுல நம்ப ஹீரோயின் தான் பாவம்.. செத்தா செத்ததுதான்.. ஹீரோயின் Body ய தூக்கிகிட்டு மழைல நனைஞ்சுட்டே நம்ப ஹீரோFlashback scenes சோட பாட்டு பாடுவார்..

 

இல்ல நல்ல வேளையா நம்ப கெட்ட நேரம் பொண்ணு சாகாம நம்ப வாய் to வாய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்கன்னா.. நான் இப்போ எங்க இருக்கேன்னு கேட்டுகிட்டே எழுந்திரிப்பாங்க.. அப்புறம் மயங்கிக் கெடந்தப்போ நடந்ததெல்லாம் அவங்க மனசுல படமா ஓடும்.. அப்புறம் ஹீரோவ பார்த்து வெக்கப்பட்டுகிட்டே சிரிப்பாங்க பாருங்க .. அடடா.. அதுசரி மயங்கிக் கெடந்தப்ப இவுங்களுக்கு சொரண எங்கருந்துய்யா வந்துச்சு?

போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்

 

(தொடரும்)

பீனிக்ஸ் பறவைகள்

 

இறந்தது நீங்கள் மட்டுமல்ல

எங்கள் மனங்களும் தான்..

இழந்தது உங்களை மட்டுமல்ல

எம் நியாயத்தை உரத்துச்சொல்லும்

குரல்களையும் தான்..

மௌனம் சம்மதத்திற்கு மட்டும் அடையாளமல்ல..

அது பொங்கியெழவிருக்கும் எரிமலையின் குழம்பாய்

அடங்கியிருக்கும்  உணர்வுகளின் கோபக்கனலை

உக்கிரமாய் வெளிப்படுத்தும்

புயலுக்கு முன்னதான மயான அமைதி..

நடந்தவை தெரிந்த உயிருள்ள சாட்சிகள்

வீசும் காற்றில் விடும் பெருமூச்சுகளும்..

சாட்சியாய் மடிந்த மண்ணின் மாந்தர்கள்,

கடைசியாய் விட்ட உயிர்மூச்சுகளும்

அனலாய் அமிழ்ந்திருக்க..

நியாயம் தேடி

சாம்பலிலிருந்து உயிர்த்தெழும்

பீனிக்ஸ் பறவைகளாய்

மீண்டும் வருவோம்..

மீண்டு வருவோம்..

கண்டுகொண்டேன் காதலை

தொட்டுவிடும் தூரத்தில்

மொட்டாய் நான் மலர்ந்திருக்க

கருவறைக் கதகதப்பில்

கண்துஞ்சும் சிறு குழந்தையாய்  நீ

இமை மூடி, விரல் நீட்டி

இன்பங்கள் தேடும் போது

அந்த நெருக்கத்தின் சுகத்தில் கண்டுகொண்டேன்

உன் காதலை

உன் மார்புச் சூட்டுக்குள் மடிந்து கிடக்கையில்

மூச்சுக்காற்றின் வெப்பம் என் உச்சந்தலை தொட

உரசிச் செல்லும் கரங்கள் உணர்வை அசைத்துச் சாய்க்க

உள்ளிருந்து பிறக்கும் உணர்ச்சிப் பிராவகத்தில்

கண்டுகொண்டேன் உன் காதலை

சிரித்தாய், சிதறினேன்..

நெருங்கினாய் நெருப்பாய் தகித்தேன்..

அணைத்தாய், அரவணைத்தாய்,

அன்பாலே பிணைத்து என்னைப் பித்தாக்கினாய்..

 உன் காதல் கடலிலே அருவமாய் உருவமின்றி அமிழ்ந்த போது

கண்டுகொண்டேன் உன் காதலை

பீற்ரூட்

பழக்கமில்லாத அந்தப் பனிக்குளிருக்குத் தோதாக ஸ்வெற்றரின் ஸிப்பரை இழுத்து மூடியபடி, கொஞ்சம் தயக்கத்துடன் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.. பேசாமல் மும்பைலயே ஹாஸ்டல்ல இருந்து படிச்சிருக்கலாம்.. சொன்னாக் கேட்டாத்தானே.. பப்பா.. தான் போறது போதாதுன்னு என்னையும் இழுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்துட்டார்..

 
ஊரா இது.. கர்மம்.. பற்கள் நடுநடுங்கும் குளிர்.. பார்க்கும் இடமெல்லாம் பீற்ரூட் தோட்டங்கள்.. அட்டைகள்.. ஒரு சிகரட் வாங்கிறதுக்கும் கூட பயமா இருக்கிறது.. யாராவது பப்பாகிட்ட சொல்லிடுவாங்க.. இதுவே மும்பைன்னா.. லீனா உதட்டிலிருக்கும் சிகரட்டை எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கலாம்..

 
பப்பா எஸ்பி.. இந்த ஊரில் தொடர்ந்து ஆட்கள் காணாமல் போறாங்களாம்.. அதைக் கண்டுபிடிக்க இவர்தான் சரியான ஆளாம்.. டிரான்ஸ்பர்.. நான்.. மம்மா, பப்பா.. மம்மாவுக்கும் ஊர் பிடிக்கவில்லை.. ஒரு சோஷியல் அக்டிவிற்றி இல்ல.. லேடீஸ் கிளப் இல்லன்னு இப்பவே முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு அதைவிட மேல்.. அடச்சே.. என் கேர்ல் பிரென்ட்ஸ் எல்லாரும் என்ன மிஸ் பண்ணுவாங்களேன்னு நினைச்சுகிட்டே கல்லூரி வாசலை அடைந்தால்..

 

 

ஹப்பா.. என்னா Structure.. என்ன Figure.. புதுக் கோதுமை போல Colour..  மூங்கில் போல நிகுநிகுவென வளர்ச்சி, scarf க்குள் அடைக்கப்பட்ட அடர்பழுப்புக்கூந்தல்.. இளநீலக் கண்கள்.. செந்நிற உதடுகள்.. வாவ்.. தாங்க்யூ பப்பா.. மனதுக்குள் சொல்லியபடி மெதுவாக அருகில் சென்று என் கிளாஸ் இருக்குமிடத்தை விசாரிப்பது போல பேச ஆரம்பித்தேன்..

 
“என்கூட வாங்க..” அசைந்த அந்த உதடுகளில் ஏதோ ஒரு வசியம்.. அடர் இரத்த நிறத்து இதழ்கள்.. அதற்குள் முத்துப்போல பற்கள்.. அதிலும் அந்த தெற்றுப்பற்கள், என் கண்களை அங்கிருந்து எடுக்க முடியாதபடி கட்டிப்போட.. இப்படியே இழுத்து ஒரு முத்தம் வைத்தால் என்று எண்ணியதைத் தவிர்க்க முடியவில்லை..
“ஹலோ.. போலாமா?” கைகளை என் முன் ஆட்டியபடி கேட்டது ஏதோ மசமசப்பாய் தெரிய மயக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் அவளை பின்தொடர்ந்தேன்.. அடுத்து வந்த நாட்களில் அவளுடன் எப்படியாவது பேசணும் என்ற முயற்சியில் கழிந்து இப்போது கொஞ்சம் நெருக்கமாகவும் ஆகிவிட்டேன்.. அவளுடன் இருக்கும் வேளைகளெல்லாம் ரம்யமாயிருப்பது ஏனென்று தெரியவில்லை.. இது தான் காதலோ?
அந்த காலேஜின் அழகு ராணி அவள் தான்.. ஸாரா.. அப்பா அம்மாவுடன் ஊரிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கும் மலையோரத்துக் காட்டுக்கு அருகில் தான் அவள் பண்ணைவீடு.. சுற்றிவர பீற்ரூட் தோட்டம்.. எப்போதும் ஒரு பாட்டிலில் செந்நிற ஜுஸ் வைத்துக் குடித்துக்கொண்டிருப்பாள்.. பீட்ரூட் ஜுஸாம்.. தன் அழகுக்கு அதுதான் காரணம் என்று ஸாரா சொன்ன நாளிலிருந்து என்வீட்டு சமையலில் ஒவ்வொரு நாளும் பீட்ரூட் இருக்க வேண்டும் என சமையல் காரனிடம் சொல்லிவிட்டேன்..

 
காதலே ஹம்பக் என்றிருந்த நான் எப்படியாவது அவளைக் காதலிக்க வைக்க வேண்டும என்பதையே குறிக்கோளாய் கொண்டேன்..

 
இன்றோ.. பழம் நழுவி பால்ல விழுந்தது போல.. “ஜெரேஷ்.. இன்னைக்கு என் மம்மி டாடி ரெண்டு பேரும் வீட்ல இல்ல.. வர்றியா.. கம்பைன் ஸ்டடி பண்ணலாம்” ன்னு என் மோகினி அழைக்க.. தரையில் கால் பரவாமல் வீட்டுக்கு சென்று ப்ரெஷ்ஷாகி.. அவளிருக்குமிடம் நோக்கி சென்றேன்.. போகும் போதே மூடுபனி.. முன்னிரவு ஏழு மணியே நள்ளிரவு போல் தோன்ற.. அவள் வீடு சென்றடைந்தேன்..
பீட்ரூட் தோட்டத்திற்கு பொருத்தமாக அவளும் செக்கச்செவேரென்ற நிறத்தில் முன்கழுத்து மூழுவதும் தெரியும் கவுண் ஒன்றை அணிந்தபடி.. பீட்ரூட் ஜுஸ் ‘சிப்’பிக் கொண்டிருந்தாள்.. “ஸாரா.. இருக்கிற சிவப்பு போதும்.. இன்னும் எதுக்கு” ஹாஸ்யமாய் கேட்டபடி அவளிருந்த ஸோபாவிற்குள் நானும் புதைந்தேன்..
“ச்சே போடா.. இது இல்லைன்னா நான் செத்துப்போயிடுவேன் தெரியுமா” என்றவளின் வாயைப் பொத்திய நான் அந்தக் கைகளை விலக்கத் தோன்றாமல் விரல்களால் உதடுகளை அளக்கத் தொடங்கினேன்.. மறுப்பேதும் சொல்லாமல் ஒரு மோன நிலையில் விழிகள் செருக.. இன்னும் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தவளை இன்னொரு கரத்தின் வளைவுக்குள் கொண்டு வந்து என்னையறியாமலே முத்தமிட ஆரம்பித்தேன்..

 
ஜெ.. ஜெ.. என்று அவள் முனக முன்னேறிய நான் மெதுவாக அவள் இதழ்களை இரத்தம் வரும்படி அழுந்தக் கடித்தேன்.. அவள் விரல் நகங்கள் கிழித்து என் உடலிலும் இரத்தம்.. “ஜே.. வேணாண்டா..” என்றவளை மதியாமல் இன்னும் நெருக்கமாய் இறுக்கி அணைக்க.. தாபத்தின் உச்சிக்குச் சென்ற அவள் எனனை சோபாவில் பரப்பி, படரத்தொடங்கினாள்.. என் முகமெங்கும் முத்தமிட்டாள்.. காது மடல்களை கௌவிப் பிடித்த போது அவளை இறுக அணைத்துக்கொண்ட என்னை இன்னும் அழுத்தியபடி கழுத்துக்குள் முகரத்தொடங்கினாள்..

 
அவள் பட்ட அவஸ்தை என்னிடம் மாற.. ஸாரா என்று அரற்றிய என்னைப் பிடித்திருந்தது அவள்தானா இல்லை ஒரு ஆணிண் அணைப்பா என்பது போலிருக்க, எலும்பு நொருங்கும் படி அணைத்த அவள்.. மெதுவாக என் செவிகளுக்கு அருகில் வந்து.. “Sorry J.. இனிமேல் முடியலைடா.. உன்ன முதல் முதலா பார்த்த நாள்ள இருந்து உன்ன டேஸ்ட் பண்ணணும்ன்னு ப்ளான் பண்ணிற்றே இருந்தேன்” என்னும் போதே.. கண்கள் இரத்த நிறத்தில் மாறத் தொடங்க.. எடுப்பாய் தெற்றுப் பல்போலிருந்த அவளின் வேட்டைப் பற்கள் நீள ஆரம்பித்து என் கழுத்துக்குள் புதைந்து என் இரத்தத்தையெல்லாம் ஸ்ட்ராவால் உறிஞ்சுவது போல இரத்ததத்தை உறிய ஓலமிடக்கூட முடியாதவனாய்.. அந்த இரத்தக்காட்டேறிப் பெண்ணை பார்த்தபடியே மெதுவாய் இறக்கச் சரிந்தேன்..