Archive | July 2012

வனதேவதை

அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஒற்றையடிப் பாதை.. பொட்டுப் பொட்டாய் வெளிச்சக் கற்றைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.. அது இருட்டுக் காடாகத்தான் இருந்திருக்கும்.. அந்தக் காட்டுக்குள் ஒரு வெள்ளைக் குதிரை.. அதுக்கு மேலே ஒரு அழகான இளவரசி.. குதிரையின் கால் குளம்புச் சத்தம் மட்டும் தனித்துக் கேட்க சில்வண்டுகளின் கதறல் ஒருபுறம், கொப்புகளுக்குள் பாய்ந்தோடும் குரங்குகள் ஒரு புறம்.. வளைந்து நெளிந்து மரமேறும் மலைப்பாம்பு ஒருபுறம்..

 
பயமேயில்லாமல்.. நிதானமாய் அந்தக் குதிரையும் அதன்மேலிருக்கும் குமரியும்.. மெல்லிய இடை, தோள்வரை புரண்ட கூந்தல்.. மழைக்காடு என்றதனால் முகத்தில் தூசி தும்பு ஏதுமின்றி சுத்தமான முகம், குதிரையோட்டத்திற்கேற்ற கருநீல ஆடை, மெதுவாக காட்டுக்குள் நடைபோட்ட அவர்கள் மலை அடிவாரத்திற்கு வந்துவிட்டார்கள்

அண்ணாந்து பார்க்கும் போதே நெஞ்சிற்குள் சில்லென்று ஒரு பயம்.. உயரம் ஒரு புறம், உச்சியே தெரியாத வகையில் வெண்கிரீடம் அணிந்தது போலிருந்த அந்த மலை சாதாரணமானவர்களுக்கு பயத்தைத் தான் தந்திருக்கும்.. இவளோ எந்த வித சலனமுமின்றி பக்கத்திலிருந்த காட்டுப்பூவைப் பிய்த்து மணந்தபடி மெதுவாக குதிரையின் வயிற்றில் அதற்கு நோகாமல் எத்தினாள்..

 
அவள் இடையில் நீண்டு தொங்கும் வாள் அவள் அழகிய வீராங்கனை என்று பார்ப்பவர்களை மதிப்பிட வைத்தது.. பயமேயில்லையா இந்தப் பெண்ணிற்கு.. மனித ஜீவராசியே அற்ற இந்த அத்துவானக் காட்டில் இவளுக்கு என்ன வேலை.. எதற்காக கடுங்காடு தாண்டி இந்த மலையில் ஏறப்போகிறாள்.. பார்க்கும் போதே சில்லிட வைக்கும் குளிர் இவளை ஒன்றும் செய்யவில்லையா? சற்றும் சளைக்காமல் மௌனமாக இவள் தேடிப் போவதென்ன?

 
டொக் டொக் என்ற சத்தம் சருகுகள் மிதிபடும் ஓசை.. சடசடவென்று பாய்ந்தோடும் முயல்கள்.. இருட்டுப் புதருக்குள் தெரியும் ஜோடிக் கண்கள்..எதையும் சட்டை செய்யாமல் மெதுவாக மலையேறி ஒரு சிற்றருவி ஊற்றெடுக்கும் மலை உச்சிக்கு வந்துவிட்டாள்..

 
அடடா.. காட்டுக்குள் பார்த்தது கால்வாசி தானோ.. என்ன அழகு இவள்.. சந்தன நிறம்.. சட்டென ஈர்க்கும் கண்கள்.. செப்பு வாய், எள்ளுப்பூ நாசி, ச்சா எங்கே இந்த கவிஞர்கள் எல்லாம்..
கொ…கொஞ்சம் பொறுங்கள்.. என்ன செய்கிறாள் இவள்? உறையிலிருந்த வாளை எடுத்து உயரத்தூக்கி தனக்குள் ஏதோ முணுமுணுக்கிறாள்..

 
அப்படியே துள்ளித் தரையில் குதித்து.. சுற்றுப்புறத்தை சலனமின்றி பார்க்கிறாள் .. இவள் வந்தது அறிந்து ஒரு கூட்டம் மான்கள் மருண்ட பார்வையுடன் எட்டிப் பார்க்க.. கிளிகளும், காட்டுப் பறவைகளும் பாட்டுப்பாட.. சிற்றோடையின் வெள்ளிக் கம்பிகள் இவள் மீது பிரதிபலிக்க.. ஏதோ வெள்ளி ராஜகுமாரியாய்..

 
குதிரையிலிருந்து தன் பொருட்களை இறக்கி, அதற்கு தண்ணீர் காட்டி தானும் அருந்துகிறாள்.. பனி விலகாமலிருந்த அந்த மலையின் சமதரையில் ஓரத்திலிருந்த கன்னிக் குகை ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.. தன் உடமைகளை தரையில் வைத்துவிட்டு அப்படியே நிர்ச்சலனமாய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து..

 
பவள வாய் பிரிகின்றது..

 
அம்மா.. உன்னை நம்பி வந்திருக்கிறேன்.. இனி எனக்கு நீதான் துணை.. இன்று முதல் நான் உன் பிள்ளை.. அப்படியே மலைமாதாவை மடங்கி முத்தமிட்டவள் சுற்றிப்பார்த்து புன்னகை செய்தாள் தன் புதிய தோழர்களைப் பார்த்து..

 
மெல்ல அவர்கள் நகர்ந்து அவளுக்கருகில் வர.. கண நேரத்தில் தேவதையானாள்.. வன தேவதையானாள்..

வெட்கத்தை விட்டுச் சொல்லவா..

வெட்கத்தை விடச் சொல்கிறாய்.. வெட்கமின்றி
அதையும் வெட்கம் கெட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்..
நாமிருவம் துகிலுரிகையில் நாணுகின்றது
நான் முகம் பார்க்கும் கண்ணாடி
தூங்கும் என்னை தொல்லைபண்ணும் உன்னை
தூங்கச்செய்து தொல்லையின்றி உன்முகம் ரசிக்கவே பிடிக்கிறது எனக்கு
தோள்தொட்டு, முகம்திருப்பி முத்தமிடுகையில்
தொலைந்து போகின்றது என் நிமிடங்கள்
மூன்று நாள் மீசையின் உறுத்தலும்..
முரட்டு மார்பின் முடிகளும் முள்ளாய் குத்தும் போதும்
கூட்டுக்குள் ஒதுங்கும் முயற்குட்டியாய்
மார்ப்புக்கூட்டின் சூட்டுக்குள் நானும் மயங்கிப்போகிறேன்..