Archive | August 2012

மாதவலி..

டாம்பொன் ஒன்றை தேவைப்பட்டாலும்.. என்ற எண்ணத்துடன் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினேன்.. வீட்டை விட்டு இறங்கி தெருவோரம் காலடித்தடங்களை பின்விட்டு நடக்கும் போதுதான்.. காலத்தின் சுழற்சியில் எத்தனை விடயங்களை  விட்டு வந்தேன் என்று நினைத்துப் பார்த்தேன்..

 
பெரியவளாகிய போது.. துணி சலவை செய்பவரின் மனைவி கொண்டு வந்து கொடுத்த ஒரு கட்டு வெளுத்த பழந் துணியை எடுத்த அம்மா, அதை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி, இடுப்பில் பாவடை நாடாவொன்றைக் கட்டி, அதில் கோமணம் போல் அந்தத் துணிக்கட்டை சொருகி, விழுந்துவிடாமலிருக்க இரண்டு பின்கள் குத்திவிட்டார்.. ஏதோ தண்டனை போல, நடக்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல், வயிற்று வலியின் வேதனையுடன், உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல், பயத்துடன், ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி என்று அழுத நாள் இன்று போல இருக்கிறது..

 
ஏழாம் நாள் தண்ணீர் வார்த்ததும்.. ஹப்பா.. இதோட தொலைஞ்சுது தொல்லை என்று நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்றதுக்கு முன்னாலேயே.. அடுத்த மாசம்..  அப்பாவின் சாறன்.. அம்மம்மாவின் நூல் சேலை, அப்புச்சியின் வேட்டியென பழந்துணிகள் என் அலுமாரியின் அடித்தட்டில் இடம்பிடிக்க.. முதல் கொஞ்ச மாதங்கள் அம்மா சுற்றித் தருவதும்.. நான் கட்டிக் கொள்வதும்.. அது விலகிவிடாமல் பதுமை போல நடப்பதும்.. கறைகள் உடைகளில் பட்டுவிடாமலிருக்க சட்டையை உயர்த்தி, அன்டர்ஸ்கேட் படுமாறு கதிரையில் இருப்பதும்..

 
மாதவிடாய் நாள் வரப்போகிறது என்றதுமே என் ஸ்கூல் பாக்கினுள் ஒரு துணிக்கட்டு புத்தகங்களோடு இடம்பிடித்துவிடும்.. புதிதாய் பெரியவளானதால், அதிக உதிரப்போக்கு இருக்கும் என்று சொல்லியே நாப்கின்களைப் பாவிக்க அம்மா விடவில்லை..

 
அந்த துணி மூட்டையை கட்டியதால் நடக்கையில் இரு தொடைகளும் உரசுவதால் வரும் வலியும்.. அரை சிவந்து போய்.. ஏன் காயங்களும் வந்து.. அதற்கு தேங்காயெண்ணெய் பூசிக்கொண்டு.. காலை விரித்தபடி படுத்த நாட்களும்..


அப்போதெல்லாம்.. மாதா மாதம்.. எங்கள் சலவைக்காரரிடம் காசு கொடுத்து பழந்துணிகள் வாங்கி அம்மா சேமித்து வைப்பா.. அடடா.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதைக் கட்டணுமோ என்று நினைத்து கவலைப்பட்ட போதுதான்..

 
90 ம் ஆண்டு. இரண்டாம் கட்ட ஈழயுத்தம்.. ஒளித்து வைத்திருந்த நகைகள், சான்றிதழ்களைக்கூட விட்டுவிட்டு, உயிரைக் கையில் பிடிததபடி, ஹெலிக்கொப்டர்கள் மேலே சுட்டபடி பறக்க, முந்திரி மரப்பற்றைகளுக்குள்ளும், மாமரங்களுக்குள்ளும்  ஒளிந்து ஓடி அகதிமுகாமைத் தஞ்சமடைந்த நாட்கள்..
கையில் மாற்றுத்துணி கூட இல்லாமல் இருந்த வேளையில், மரணித்த மனித உடல்களையும், குண்டுச் சத்தங்களையும், ஷெல்களின் அதிர்வுகளையும், துப்பாக்கிச் சன்னங்களையும் பார்த்து.. எனது நான்காவது மாதவிடாய் குறித்த நாளுக்கு முன்பாகவே ஓர் இரவில் வந்துவிட்டது..

 
நாங்கள் ஓடிச் சென்று இருந்த இடமோ முருகன் கோயில்.. அதைச் சுற்றி ஆமிக்காரன்கள்.. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில்.. கடவுள் விட்ட வழியென்று அங்கே தங்கிவிட்டோம்.. அப்பாவின் சாரன் கிழிக்கப்பட்டு.. அதை மரங்களின் மறைவில் சொருகிக் கொண்டு அழுதழுது தூங்கிப் போய்விட்டேன்..

 
அடுத்தநாள்.. கொசகொசவென்று இருந்த இந்தத் துணியை அவிழ்த்து வீசிவிட்டு புதியதுணியை சுற்றிக் கொள்ளலாம் என்று நினைத்த போதுதான்.. இருக்கிற துணியைத்தான் பாவிக்க வேணும் அம்மு.. இதை அப்படியே இந்த டிசு பாக்கில் சுற்றி வை.. இரவு கழுவலாம் என்றார் அம்மா.. க..ழு..வ..லா..ம்..

 
இரவு வந்தது.. கோயிலின் கோடியில் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கென ஓலையால் ஒரு தட்டி செய்து வைத்திருந்த இடத்தில், ஒரு வாளித் தண்ணீருடன் சென்றோம்.. அம்மா தண்ணீர் ஊற்ற.. அந்த இரத்தத்தின் வெடுக்கு நாற்றத்தை பொறுக்க முடியாமல் அழுதுகொண்டே.. கைகளால் கசக்கி கசக்கி.. கழுவி, அதை அந்தக் கோடிக்குள் ஒளித்துக் காயவைத்தோம்..

 
இருந்த ஒரு கழிவறைக்குள் செல்வதற்கு ஒரு வரிசை.. இல்லையென்றால்.. மறைவிடங்களில் பதுங்கிக் கொள்ள வேண்டியது தான்.. மாதவிடாயுடன் எங்கு வெளியே செல்வது.. சிறுநீர் கழிப்பதே பெரிய கொடுமையாய் கழிந்த அந்த நாட்கள்..

 
கேட்டவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த எங்கள் அம்மா அப்பாவுடன். நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காய் வரிசையில் நின்று வெளிநாட்டு, உள்நாட்டு ஸ்தாபனங்கள் கொடுத்த உடைகள், உணவுகளை கூனிக்குறுகி வாங்கும் போது.. இதோடு கொஞ்சம் புதிய உள்ளாடைகளும், நாப்கின்களும் தரமாட்டாங்களா என்று நினைத்துக்கொண்டது இன்னும் ஞாபகமிருக்கிறது..

 
மூன்று மாதங்கள் நரக வாழ்க்கையின் பின்னர்.. உறவினர் ஒருவரின் வீட்டுக்கு தஞ்சமாய் சென்ற போது.. நினைத்த வேளையில் கழிவறைக்குள் சென்று.. கறைகளைக் கழுவி, உள்ளாடை மாற்றுகையில் ஏற்பட்ட அந்த உணர்ச்சியை என்னவென்று சொல்ல..

 
ஆயிற்று.. இரண்டு வருடங்களின் பின் எங்கள் சொந்த வீட்டின் உடைந்த கூரையின் கீழ் குடியிருக்க வந்தபோது.. கழிவறையைச் சுற்றி, கோடிகட்டக்கூடாது என்று சொன்னதனால்.. திரும்பவும்.. இராக்குளியல், இராக்கழுவல் என்று நாட்கள் கழிந்த வேளையில் தான்.. நான் படும் கஷ்டம் பொறுக்க முடியாமல், ஊரெங்கும் தேடி, ரெடிமேட் நாப்கின்களை அம்மா வாங்கிக் கொடுத்தார்..

 
அதை அணிந்த அந்த முதல் நாள்.. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது போல அத்தனை ஒரு ஆறுதல்.. அம்மா இதைக் கழுவத் தேவையில்லை என்று சொன்னதும்.. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சேமித்து வைத்த நாப்கின்களை எல்லோரும் தூங்கிய பின் மறைவாக வெட்டிய குழிக்குள் ஆழப்புதைத்துவிடுவதும் என ஓரிரண்டு ஆண்டுகள் ஓடிச் சென்றன..

 
படித்து முடிந்ததும் தலைநகரில் தனிமை வாசம்.. இத்தனை நாட்களும் அம்மா வாங்கிக் கொடுக்க அணிந்தது போய்.. நானே கடைக்குச் சென்று நாப்கின் தாருங்கள் என்று கேட்பதற்கு சங்கோஜப்பட்டு, அம்மா என்னைப் பார்க்க வரும் நேரத்தில் எல்லாம் இரண்டு மூன்று பாக்கெட்கள் வாங்கி ஸ்டாக் செய்து வைத்த நாட்கள்.. சுப்பர் மார்க்கட்கள் வந்த பின் மறைந்து போனது..

 
கைப்பையில் மாதவிடாய் வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்னே இடம்பிடிக்கும் நாப்கின்கள்.. இப்போது டாம்பொன்களாகிவிட்டது..

 
எந்தவொரு சங்கோஜமுமின்றி.. இன்று கடைக்குச் சென்று டாம்பொன்கள், நாப்கின்கள், பான்ரி லைனர்களை கூடையில் வைத்து பில் கவுன்டருக்கு சென்று கொடுக்க முடிகிறது..

 
ஆனாலும்.. இன்றும்.. எனது நாட்டில் எத்தனை பெண்கள் இன்னும் திறந்த வெளி முகாம்களுக்குள்ளும், அகதி முகாம்களுக்குள்ளும், சிறைகளுக்குள்ளும் இருக்கிறார்கள்.. அவர்களும் என்னைப் போலதானே இந்தக் கஷ்டங்களை எதிர்கொள்;வார்கள் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியுதில்லை..
நிவாரணங்களாக பருப்பும், அரிசியும், வெளியாடைகளும் கொடுக்கும் ஸ்தாபனங்கள், தனிநபர்கள்.. உள்ளாடைகள் பற்றியோ.. நாப்கின்களின் தேவைகள் பற்றியோ அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்பது சுடும் உண்மை..

 
அனுபவித்ததால், வலி தெரிந்ததால் சொல்கிறேன்.. இன்றும்.. வெளிச்சத்தை எதிர்பார்த்து விட்டத்தை நோக்கி வெறுமனே உட்கார்ந்து இருக்கும் எங்கள் பெண்களுக்கு மாதவிடாய்த் துணி கழுவுவதிலிருந்தாவது விடுதலை கொடுங்களேன்..