Archive | January 2013

அப்புச்சி

அரசரட்ணம் வாத்தியார்..அதுதான் அப்புச்சிட பேர்.. என்னதான் ரிட்டயராகிட்டாலும்.. அவரே இல்லையெண்டாலும் கூட.. இண்டைக்கும் அவர் எல்லாருக்கும் அரசரட்ணம் மாஸ்டர்தான்.. என்ன கம்பீரம், என்ன நடை, வெள்ளை காற்சட்டையும், வெள்ளை சேர்ட்டும், கறுப்பு ஷூவும் போட்டுட்டு ஊர்ல அவர் நடந்தா முன்னால வாற நாயும் வழிவிட்டு ஒதுங்கும்..

பின்ன ஒரு கெட்ட பழக்கம் இல்லை, குள்ள நரித்தனம் இல்லை, தன்னோட ஐந்து பிள்ளைகளுக்கும் வீடு வாசல் என்டு அவர்ட சம்பாத்தியத்துக்குள்ள சம்பாதிச்சி, கரையேத்திக் குடுத்தவரல்லோ.. நேர்மையெண்டா அப்பிடி ஒரு நேர்மைவாதி..

தன்ட பிள்ளையளுக்கு ஒரு வேலைக்காகக்கூட சிபாரிசுக்கு போகாதவர்.. ஒரு சிகரட், சாராயம்..சரி வேணாம் வெத்திலை..எதுவும் இல்ல..

இப்போ சரி ஓய்வெடுங்கோ அப்புச்சி எண்டு பிள்ளையள் சொன்னா.. கேட்டாத்தானே.. இடும்பன் எண்டு அம்மம்மா சொல்லுவா.. காலைல ஆறு மணிக்கு இந்த முன் வளவக் கூட்டத் தொடங்கிற்றாரெண்டா அப்பிடியே ரோட்டுப் பக்கமும் கூட்டிற்று சரியா 8 மணிக்கு சாப்பாட்டு மேசைக்கு வந்து அம்மா குடுக்கிற இடியப்பமும் சொதியும் சாப்பிட்டு, தண்ணீர் குடிச்சு ஒரு செருமலோட அவர்ட சாய்மனைக் கதிரைல சாஞ்சிருந்து அத்தனை பேப்பரையும் வாசிக்க தொடங்குவார். அது முடிஞ்சதுக்குப் பிறகு ஷேக்ஸ்பியரும், சார்ள்ஸ் டிக்கன்சும்.. பத்தரை போல வெறுந்தேத்தண்ணி, பிறகு வீட்டைச் சுத்தி வந்து கொஞ்சம் இன்ஸ்பெக்ஷன்.. அப்படியே மரவள்ளித் தோட்டத்துக்கு போய் தோட்டக்காரன் எல்லாத்துக்கும் சரியா தண்ணி ஊத்துறானான்டு ஒரு பார்வை.. அப்பிடியே சுத்தி வந்து தென்னை மரங்களை தட்டிக்கொடுத்து.. தோட்டக்காரன்ட் எருப்போடுறதுக்காக கோபாலபிள்ள மாஸ்டர்ட்ட மாடு கொண்டு வந்து கட்டச் சொல்லு அது இது எண்டு தோட்டக்காரனுக்கு ஓடர் போட்டுட்டு வீட்டு வாசற்படி மிதிச்சாரெண்டா அது சரியா பன்னிரண்டரை மணியாத்தான் இருக்கும்..

ஒரு சில நாள்ள தோட்டத்த விட்டுட்டு காலைலயே வயலுக்கு போயிருவார்.. அப்பிடியெண்டா வாறதுக்கு எப்படியும் நேரமாகும்.. எந்த நேரம் திரும்ப வந்தாலும் வீட்ல தான் சாப்பாடு வெளில ஒரு பிளேன் டீ குடிக்க மாட்டார்.. அப்படி ஒரு ஒழுக்கம்

சாப்பிட்டு வீட்டுக்குள்ளயே சின்ன செருமலோட ஒரு உலாத்தல்.. கொஞ்சநேரம் கண்ணசந்து எழும்பினாரெண்டா பேரப்பிள்ளையள் பள்ளிக்கூடம் விட்டு வர நேரஞ்சரியாயிருக்கும்.. பிறகு இங்கிலீஷ் படிப்பிக்க தொடங்குற அழக பாத்திட்டே இருக்கலாம்.. சரியா செய்தா வெரி குட் போடுறதும், பிழையா சொல்லிட்டா காதைத் திருகுறதும் என்று அவர்ர ராச்சியம் தான்.. பின்னேரம் பொழுது சாஞ்ச பிறகு தன்ட போகன்வில்லா, மே பிளவர், ஜப்பானீஸ் பிரைட் எண்டு பூமரங்களோட பொழுது போயிரும்..

ஏழு மணிக்கு சாப்பிட்டாரெண்டா..ஒரு உலாத்தல், மேலே நட்சத்திரங்கள பாத்து ஒரு பெருமூச்சு அப்பிடியே கட்டில்ல படுக்கைய விரிச்சி சரிஞ்சாரெண்டா..ஒரு சின்னச் சத்தம் கேக்கப்படாது.. கேட்டா ஒரு செருமல்.. இன்னும் அடங்கல்லண்டா “என்ன மண்ணாங்கட்டி சத்தம்.. மனிசன் நித்திர கொள்றது தெரியாதா”ண்டு ஒரு முணுமுணுப்பு.. அது போதும் எல்லாரும் அடங்கிடுவாங்க.. வீட்ல டீவி கூட 5ம் நம்பர் சவுண்ட தான் வேல செய்யும்..

அப்புச்சி.. இண்டைக்கு அவர் இல்ல..தான் வாழந்த வாழ்க்கை போலவே சாவிலும் நேர்த்தியாக, தன் சாய்மனைக் கதிரைக்குள்ளேயே நிம்மதியாக அடங்கிவிட்டவர்.. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடிவதில்லை.. அவரைப் போல இன்னொருவரை இன்று வரை நான் காணவில்லை..

இன்றும் நான் பேசும் ஆங்கிலத்தின் கர்த்தா அவர்தான்.. நியாயமற்று நடக்காமலிருக்க அருவமாய் காப்பதும் அவர்தான்.. இதெல்லாம் என்ன இன்றும் மூன்று தலைமுறையினரை அடையாளப்படுத்துவதற்கும் அவர் பெயர் தான் தேவைப்படுகிறது.. முன்னோர்கள் இறந்தால் தெய்வமாவார்களாம்.. அப்படியானால் இன்று வரை நேர்மையாக வாழ்வதற்கு வழிகாட்டும் அவரும் தெய்வம் தானே..

இன்று அப்புச்சியின் – என் அம்மாவின் தந்தை அவர்களின் நினைவுதினம்..
மனம் முழுக்க அவரின் நினைவுகளுடன்..

அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்..