Archive | November 2013

முகமூடிகள்..

chorus_mask_for_oedipus_play_by_jemmanicolejoyce-d3ay08y
முகமூடிகள் மாட்டிக்கொண்டலையும் மனிதர்களுக்கு மத்தியில்
முகமூடியின்றித் திரிந்ததன் பலாபலன்கள் எத்தனை எத்தனை
முகம்பொத்தி அழவைத்தவர்கள் எத்தனை பேர்
முதுகுக்குப் பின்னால் புறம் சொல்லிச் சாய்த்தவர்கள் எத்தனை பேர்
முகமெங்கும் அரிதாரம் பூசி அன்பொழுகக் கதைக்கும் ஆயிரம் மாந்தர்களின் அரிதாரத்தின் பின்னால்
 நெளியும் புழுக்களை பார்த்த பிறகு தான்..
வாழ்க்கையில் புன்னகைகளுக்குப் பின்னால் புண்நகைகள் உள்ளதைக் கண்டுகொண்டேன்..
கருவண்டாய் அலையும் கண்களுக்குப் பின்னால் காமக்கொடூரம் ஒளிந்திருப்பதையும்
கற்கண்டாய் இனிக்கும் பேச்சுக்குப் பின்னால் கனவுகளை அறுக்கும் வாளிருக்கும் என்பதையும் அறியாதிருந்தேன்
அவமானப்படுத்துவது அவர்களுக்கு நகைச்சுவை
அழுகைகூட உறைந்து அணுக்கள் அத்தனையும்  அடிவாங்கிச் சுருண்டு போகையில்
எள்ளி நகையாடும் எத்தர்களின் முகங்கள் மட்டும் எஃகில் பதிக்கப்பட்ட உருவமாய் மனதில் உறைந்துவிடும்
உடலுக்குச் செய்த தீங்கும் உள்ளத்துக்குச் செய்த தீங்கும் ஒன்று சேர்ந்து உலைக்களமாய் மனசைக் கொதிக்க வைக்க
என்ன செய்வதென்றறியாமல் ஏக்கம் கண்ணீராய் உருண்டோட..
என்னிலிருந்து வெளியே சென்று என்னையே பார்த்திருந்தேன்
பாம்பென்றால் சீறும் என்று தெரிந்தும் அதன் தோற்றம் கண்டு தொலைந்து போனது தவறுதான்
பழிவாங்கும் பாம்பைக்கூட மன்னித்து விடலாம், பிடுங்கித்தின்று பக்கத்தில் படுத்துறங்கிப் பின்
பத்தினியா என்று கேட்கும் பரத்தை மக்களை மன்னிக்க முடியாது
நானொன்றும் புனிதையல்ல.. அதற்கென்று
முகமூடி மாட்டிக்கொண்டு பொய்களின் பின்னால் ஒளித்தலையும் கோழையுமல்ல
முகமூடியின்றி இனியும் வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன்
மீண்டும் ஒரு நாளை எதிர்நோக்கி வாழ்க்கைப் பயணத்தில் நடைபோடுகிறேன்..
masj

தனிமரம்..

flat,550x550,075,f

தனிமரம் தோப்பாகாது தான்..

தோப்பாகாத தனிமரத்தின் தனிமையை யாரறிவார்?

பொட்டல் காட்டில் உச்சிவெயில் உடலை உலுக்கும் போது

இருக்கும் உயிரெல்லாம் ஆவியாகிவிடும் அதன் வேதனை தெரியுமா..

வந்து போகும் பறவைகளுக்கெல்லாம் அது சரணாலயம்..

வந்து குந்தியிருந்து அது தரும் பழங்களையும், விதைகளையும் ருசித்துத் தின்றுவிட்டு,

எச்சங்களை மட்டும் மிச்சமாய் கொடுத்துவிட்டு பறந்தோடிப்போகையில்

இந்தத் தனிமரத்தின் தவிப்பு அவற்றுக்குத் தெரிவதில்லை..

சுடுமணலில் குதிகால் நிலத்தில் படாமல் குதித்தோடி வரும் குடியானவர்களுக்கு

மென்நிழலோடு, மெல்லிய தென்றலும் தந்து ஆசுவாசப்படுத்திய இந்த மரத்தின் பட்டைகளில்

தங்கள் பெயர் செதுக்கிச் சென்ற சிங்கங்கள், அதன் நிலை பற்றி சற்றேனும் நினைத்துப் பார்ப்பதில்லை

பூக்காத காய்க்காத மலட்டு மரமே என்று வைதபடி வக்கணை பேசும் கிழவிகள்,

பூத்துக் காய்ப்பதற்கு இணைமரம் வேண்டும் என்று கிஞ்சித்தும் நினைப்பதில்லை

மழைக்காலத்துக்கென சுள்ளி உடைத்துச் செல்லும் போதெல்லாம்

மரத்துப்போயிருக்கும் அதன் உடற்பாகங்களுக்கு வலிக்காதென்ற சுயமுடிவுடன்

மௌனக்கண்ணீரை கண்டுகொள்ளாது, மனதுடைத்துப் போகும் மனிதர்களுக்கு

மழையோடு சேர்ந்து ஆறாய் ஓடி பின்பு பிசினாய் இறுகும் கண்ணீரின் தடம் தெரிவதில்லை

வருபவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் மரத்திற்கு நன்றி சொல்வோமென்ற நல்லறிவுகூட

நன்றிகெட்ட மனுஷர்களின் இதயத்தசைகளுக்கு உறைப்பதில்லை

நிலத்தின் மேல் தெரியும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பவர்கள்

உள்ளுக்குள் ஆணிவேராய் உறையோடிப்போயிருக்கும் உணர்வுகளையோ

செல்லரித்துப் போன சல்லி வேர்களின் சோகத்தையோ தெரியாமலிருப்பது புதிதல்ல..

உருவத்தை மட்டும் பார்த்து உணர்வுகளைக் கொல்லும் மனிதர்கள்.. மரத்துக்கு மட்டுமில்லை

மரத்துப்போயிருக்கும் மனதோடு, நடைபிணமாய் பெருமூச்சின் சூட்டில் கண்ணீரைக் காயவைக்கும் ஆதரவில்லா அபலைகளுக்கும் பரிசாய் தருவதென்னவோ பழிச்சொற்கள் மாத்திரம் தான்..

தனிமரம் தோப்பாகாது தான்.. ஆனால் தோப்பாகுவதற்கு தனிமரம் வேண்டும்..

lonely-tree-51276cfee80fe