Archive | December 2013

கா(ன)தல்

நீயில்லாத உலகத்தில் என் நிழலும் தேவையில்லை எனக்கு..
கைவழியே வழிந்தோடும் நீரைப்போல்
கண்ணீர் தாரைகளைத் மட்டுமே தந்து கைகழுவிச் சென்றுவிட்டாய்
நானின்றி நீயிருக்கலாம்..
நீயின்றி நானிருந்தால்,
நீரின்றிய நிலம் போல் வரண்டு விடும் என் வாழ்க்கை..

Bb7PDS2CMAAgiKA
கொட்டிச்சென்ற வார்த்தைகளோடு,
விட்டுச்சென்ற காதலையும் சேர்த்து அள்ளிக்கொள்ள நினைத்தாலும்
விரல்களுக்குள் புகுந்தோடும் நீரைப்போல் பிரிந்து செல்கிறதே..
நீ சென்றுவிட்டாய்..
உன் நினைவுகளை மட்டும் தந்துவிட்டு..
கானல் நீர் போலே நானும் என் காதலும்
உறைந்துபோன தண்ணீராய் உருக்குலைந்து கிடக்கின்றோம்..

பாவம் பவளமல்லிகை..

என்னுடைய அம்மம்மாவுக்கு பிடித்த பூ பவளமல்லி என்று அம்மா சொல்லுவார். எனக்கும் அந்தப் பூவைப் பிடிப்பதில் ஆச்சரியமில்லையே.. சூர்யகாந்தியும் பவளமல்லிகையும் தான் எனக்கு மிகப்பிடித்த மலர்கள்..

images (2)

கிராமத்து பெரிய வீட்டை விட்டு நகரத்து அப்பார்ட்மென்ட் எனும் புறாக்கூண்டில் அடைந்து வாழ்ந்த போதும், அம்மாவுக்கு பூந்தோட்டம் அமைப்பதிலும், பூமரங்கள் வளர்ப்பதிலும் உள்ள ஆசை போகவில்லை. அதனால்; நாற்காலி போட்டு அமரவென்று முன்னும் பின்னுமாய் கட்டப்பட்ட பல்கணிகள் இரண்டும், இப்போது அம்மாவின் பூந்தோட்டமாய் மாறிவிட்டது. பாபிலோனிய தொங்கு தோட்டம் போல், இது அம்மாவின் தொங்கு தோட்டம். பாகல், புடலை, மிளகாய் முதல், நாவல் நிற செம்பருத்தி, செந்நிற ரோஜா, கார்டினியா, அன்னாசிப்பூ, ஒன்றிரண்டு ஓக்கிட், பத்திரிகை பூக்கள், அலரி மரங்கள் என, குருவிகள் வந்து அமரும் நகரத்தோட்டம் அம்மாவுடையது.

அம்மாவின் தோட்டத்துச்செடியில், இன்று எனக்கு மிகப்பிடித்த பவளமல்லி முதன்முதலாக பூத்துச் சொரிந்தது. காலை எழுந்து வந்ததும் என்னைக்கூட்டிச் சென்று காட்டிய அம்மா பல்கணியிலிருந்து உதிர்ந்து கீழ்வீட்டில் பூக்கள் விழுந்திருப்பதைக் காட்டியதோடு, இன்றைக்கு பையொன்று கட்டி பூக்கள் விழாமல் எடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்.

images

பவள நிறக் காம்பும், வெண்முத்து இதழ்களும் கொண்டு, இதயம் மறக்க வைத்து மெஸ்மரைஸ் செய்யும் நறுமணம் கொண்ட பாரிஜாதம் பற்றிய கதை தெரியுமா என்று கேட்கும் வரை அதைக் கொஞ்ச நேரம் மறந்திருந்த நான்.. கதையென்றதும் வாயைப் பிளந்தபடி படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு கேட்கத் தயாரானேன்..

அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம். அந்த தேவதைக்கு சூரியன் மீது அப்படியொரு காதலாம்.. சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா, கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாளாம். சூரியனோ.. என்னால் உன்னைக் காதலிக்க முடியாது. உன்னை ஏற்க முடியாது என்று சொன்னானாம்..

இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா.. சூரியனுடன் கடும் கோபம் கொண்டு, இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன். என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய். இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, காதல் தோல்வி தாங்காமல், பாரிஜாத பூவாய் உருமாறினாளாம்.
அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, சூரியன் உதிக்குமுன்னமே, தனது கண்ணீரை பூக்களாய் சொரிந்து, உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறதாம்..

images (1)
பவளமல்லியை இந்தக் கோணத்தில் எண்ணிப்பார்க்கவில்லை. தவிர, பாரிஜாதத்தை தேவலோகத்திலிருந்து கிருஷ்ணர் பூமிக்கு கொண்டுவந்ததாய் கேள்விப்பட்டிருந்தேன்.. அப்படியென்றால் இந்த தேவதைக் கதை உண்மையாய் தானே இருந்திருக்க வேண்டும்.

பாவம் பவளமல்லிகை..

girl-in-a-tree-11113-1920x1200

Images: Google