தனியாய் ஒரு இடம்வேண்டும்
நானும் தனிமையும் சேர்ந்திருக்க
சத்தம் எழுப்பாமல்
வியர்வை மட்டும் விரட்டிச்செல்லும்
மென்காற்று மட்டும் துணையிருக்க
மலையுச்சியின் சரிவோரம்
மாபெரும் கடல் சூழ்ந்திருக்க
கரு வனம் சூழ்ந்த
அந்த பெரும் பாறை உச்சியில்
சிறுகுருவிகளின் கீச்சிடலுடன்
சிறுகுடிசை மட்டும் போதும் எனக்கு
படிப்பதற்கென பல புத்தகங்களும்
ரசிப்பதற்கென இசைத்தட்டுகளும்
படுப்பதற்கென சிறு மெத்தையும்
பார்ப்பதற்கென மடிக்கணிணியும்
இசைப்பதற்கென என் கிற்றாரும்
இளைப்பாற ஒரு சிறு குற்றியும்
குளிப்பதற்கென சிறு அருவியும்
குஷியாயிருக்க மான் குட்டிகளும்
மலைப்பதற்கென அண்டப்பெருவெளியும்
மறைவதற்கென அகண்ட பெருவனமும்
போதும் எனக்கு
முகமூடிகள் வேண்டாம்
முரண்பாடுகள் வேண்டாம்
ஜாதிகள் வேண்டாம்
ஜாடைப்பேச்சுகள் வேண்டாம்
அவலங்கள் வேண்டாம்
அகங்காரமும் வேண்டாம்
அலைபேசியும் வேண்டாம்
அநீதியின் சுவடு வேண்டாம்
சுயநலங்கள் வேண்டாம்
சொத்து சுகம் வேண்டாம்
சிறுபிள்ளையாய் குதிக்கும்
சுதந்திரம் மட்டும் போதும் எனக்கு