Archives

எங்கிருந்து வந்தாயடா..

நகங்களைக் கடித்து மென்று துப்பியபடி காத்திருந்தேன்.. இன்னும் வரவில்லை.. எத்தனை நேரம் தான் காத்திருப்பது.. கணங்கள் எல்லாம் கல்லுப்போல செல்ல மாட்டேன் என்று அசையாமலிருக்க.. கண்கள் மட்டும் அலைபாய்ந்தபடி வாசல் பார்த்தது..

கழுதை, காண்டாமிருகம் என மனசுக்குள் திட்டியதெல்லாம் ஏதோ ஒரு யுகம் போல தோன்ற கொஞ்சம் கொஞ்சமாய் பயம் மனசுக்குள் படங்காட்டத்தொடங்கியது..

 
காலையில் கூட கன்னத்தில் முத்தமிடுகிறேனென்று சொல்லி கடித்து வைத்துவிட்டுப் போன காதல் காயம் இப்போது வலிக்கவில்லை.. வருடிக்கொடுத்தபடி இருட்டில் வசமிழந்து நிற்கும் என் மனசு தான்.. ச்சே.. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. இன்றைக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ஆச்சு.. இல்லன்னா நிதத்துக்கும் இதே வேலை..

 
இன்றைக்கு என்ன நடந்தாலும் சிலைபோலதான் இருப்பது.. நினைத்தபடியே லேட்டாய் வந்ததுக்கு என்ன சாட்டு சொல்லுவான்.. என்னவெல்லாம் பண்ணுவான் என நினைத்துப்பார்க்கிறேன்..

wait

 
மூச்சு முட்டும் வரை வேர்வை வாசத்துடன் இறுக்கமாய் தொட்டு அணைத்து என்னை வேர்க்க வைப்பானா
பூங்கொத்தை முன்னால் நீட்டி முட்டிக்காலில் நின்றபடி, ஏதோ பழைய காலத்து ஆங்கிலக் கதைகளில் வரும் காதலன் போல சாரி சொல்வானா..

 
தலையைக் கலைத்துவிட்டபடி, அசட்டுச்சிரிப்பொன்றை பற்களில் தேக்கி, என் இடுப்பணைத்து நாய்க்குட்டி போல் உரசி என்னை நாணச் செய்வானா

 
கதவு மணியை அடித்துவிட்டு, நான் திறந்து பார்க்கும் போது, தெரியாமல் ஒளிந்து நின்று பின்புறமாய் தட்டிவிட்டு, கழுத்தோரம் மூச்சுவிட்டு கண்களை சொருக வைப்பானா

 
என்னை அப்படியே அலாக்காய் காருக்குள் தூக்கிச்சென்று கடற்கரையோரத் தெருவில் காற்று முகத்தில் அடிக்குமாற்போல் வேகமாய் ஓட்டிப்போய் ஓரமாய் நிறுத்தி ஐஸ்க்றீம் வாங்கிக் கொடுப்பானா..

 
கண்ணா.. என் செல்லமில்லையா.. இன்னைக்கு கொஞ்சம் லேற்றாயிட்டு கண்ணம்மா.. நான் என்ன பண்ண.. இந்த பொஸ் தொல்லை தாங்க முடியல.. பேசாமல் இருபத்துநாலு மணிநேரமும் உன் முகம் பார்த்துட்டே இருக்கிறமாதிரி ஒரு வேல பார்க்கப்போறேன் என்று என்னை மயக்கும் வசனம் பேசுவானா

 
இல்லை கோபத்தில் சிவந்த என் கன்னங்களை கைகளால் பற்றியபடி, முகம் முழுக்க முத்தத்தால் ஒற்றியெடுப்பானா..

 
எண்ணங்கள் எங்கெங்கோ அலைய.. அவன் கார் தெருவில் வளையும் சத்தம்.. மெதுவாய் பூனை போலே வீட்டுக்கு முன் அதை நிறுத்தி கதவை மெதுவாய் அடைக்கும் ஓசை.. பூனை போல் பதுங்கியபடி, ஒற்றை ஒற்றையாய் கம்பீரமாய் நடந்து வரும் ஒலி.. மெதுவாய் ‘அம்மு’ என்றழைத்தவாறு கைகளால் கதவைத்தட்டுவது கேட்டும் நான் அமர்த்தலாய் அமர்ந்திருக்க..

 
‘அம்மு.. கதவைத்திற டார்லிங்’ என்று கெஞ்சும் குரலில் தொனித்த களைப்புக்கேட்டு கதவைத்திறக்க, மந்தகாசச்சிரிப்புடன், கண்ணடித்து, என் கழுத்து வளைவில் முகம் பதித்து..கைகளை இடையோடு வளைத்து, இறுக்கமாய் அணைத்து..

 
போடா என்று சொல்லியபடியே கண்கள் சொருக.. என்னை என்னவனிடம் இழக்கத்தொடங்கினேன்..

 

Photo Credits: Google

 

 

அழகு

இந்த அக்கா, ஆன்டீஸ் ‘ல்லாரும் என்ன நெனச்சிட்டு இருக்காங்களோ தெரில.. கறுப்பா இருந்தா யாருக்குமே பிடிக்குறதில்ல போல.. எல்லாரும் செவப்பாகணும் செவப்பாகணும்னு எதையெல்லாமோ பூசுறாங்க..
இப்படித்தான் அன்னைக்கு பக்கத்து வீட்டு அக்காவ பாக்கலாம்னு போனேனா.. அய்யோ பேய் ன்னு அலறியடிச்சிட்டு ஓடிவந்துட்டேன்.. அப்புறம் ஆன்டி வந்து இல்ல அம்மு அது அக்காதான்னு என்னை சமாதானப்படுத்தி ரூமுக்கு கூட்டிற்று போனாங்களா.. ஆமா.. தனு அக்கா தான்.. மூஞ்சியெல்லாம் களிமண்பூசிட்டு நின்னாங்க..நான்கூட மூளைக்குள்ள இருந்தது தான் வழிஞ்சி வந்துட்டோன்னு ஒரு செக்கன் பயந்துட்டேன்.. கேட்டா ஏதோ முல்தானி மெட்டியோ மிட்டியோ.. அதைப் பூசினா செவப்பாகிடுவாங்களாம்ன்னு தனுக்கா சொன்னாள்.. ஆமா.. இவ இனி கலராகி கிழிச்சது போலதான்னு நெனச்சிண்டே வெளிய வந்துட்டேன்..
அப்புறம் இன்னொரு நாள் எங்க வீட்ல பெரியம்மா மகள் வந்து நின்னாங்க.. ஏதோ வெடிங் போகணுமாம்.. வந்த நேரத்துல இருந்து நீங்க அங்க நடந்த டிறாமாவப் பாத்திருந்தீங்க.. கல்யாணப் பொண்ணு இவங்க தானான்னு டவுட் வந்திருக்கும்.. அம்மாகிட்ட சொல்லி வெந்நீர் வைச்சு ஆவி பிடிச்சாங்களா.. அத பாத்திட்டு என்னோட அண்ணா பேசாம சுடுகாட்டுக்கு போக்கான்னு சத்தமா  சொல்லிட்டு வெளியே ஓடிப் போய்ட்டான்.. அவங்க அசரலையே.. அப்புறம் கிளென்சராம், டோனராம், வீட்ல சாப்பிட வைச்சிருந்த தயிரையெல்லாம் கொட்டி முகத்துல பூசி, அப்புறம் பச்சைப் பயறு அரைச்சு மாவாக்கி அதைப்பூசி.. பேச முடியாமல் அவஸ்தைப்பட்டு ஒரு மாதிரி எல்லாத்தையும் முடிச்சிட்டாங்கன்னு பார்த்தா ஏதோ டியூப் ஒண்ணுல இருந்து ஜெல் போல ஏதோ.. இதை முகமெல்லாம் பூசிட்டு இருந்தாங்க.. பார்த்தா கிறிஸ்டல் போல இருந்துச்சா.. அப்புறம் அதை அப்படியே தோல் போல உரிச்சு எடுத்தாங்களா.. அச்சச்சோ.. ரத்தம் வருமே வலிக்குமேன்னு நான் பாத்துகிட்டு இருந்தா.. மெதுவா என் கன்னத்தை தட்டி சிரிச்சுட்டே பாத்ரூமுக்குள்ள போனாங்க..
வெடிங் டே அன்னைக்கு அவங்க டிரெஸ் பண்ணத நான் சொல்லணும்னா நீங்க எனக்கு ரெண்டு பெரிய சொக்லற் தரணும்.. மூணு ஹவர்.. அது பூசுறாங்க, இது தேய்க்கிறாங்க, கண்ணுக்கு, காதுக்கு, மூக்குக்குன்னு எதையெதையோல்லாம் அப்பி மாப் பானைல விழுந்த பூனை மாதிரி கௌம்பினாங்க.. பேசாம நான் சின்னப் பொண்ணாவே இருந்திடலாம்னு நெனைக்கிறேன்..
எங்க வீட்டுக்கு முன்னாடி புதுசா கல்யாணம் பண்ண ஒரு ஆன்டியும் அங்கிளும் இப்போ குடிவந்திருக்காங்க.. ஆன்டி ஏற்கனவே அழகுதான்.. சோ அவங்களோட பிரெண்டாயிடலாம்னு நெனச்சி அவங்க வீட்டுக்கு போனேனா..ஹம்மா! எத்தனை கிறீம்.. எத்தனை பவுடர், எத்தனை Bottles.. அவங்க டிரெசிங் டேபிள் நிரம்ப கிறீம் கிறீமா இருந்துச்சு.. பாவம் அங்கிள்.. அவர் சம்பாதிக்கிறதுல பாதி ஆன்டியோட பியூட்டி கிறீம்களுக்குத்தான் செலவாகும் போல..

 

ஆன்டிக்கிட்ட பேச்சுக் கொடுத்தப்போ தான் சொன்னாங்க, அப்பிளாம், டொமற்றோவாம், முட்டையாம் எல்லாம் ஒண்ணொண்ணா ஒவ்வொரு நாளும் பூசுவாங்களாம்.. ஏன் ஆன்டி இதெல்லாம் சாப்பிட்டா நல்லதுன்னு டீச்சர் சொன்னாங்களேன்னு சொன்னப்ப மெலிசா என்னை மொறைச்சுப் பார்த்தாங்களா.. சரி வேணாம்.. அன்னைக்கு அது போதும்ன்னு நான் வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்..
சரி..சமர்த்தா இருக்கலாம்ன்னு டீவி பார்த்தேனா, அதுலயும் ஒரு அக்கா வந்து தேன் பூசுங்க, சர்க்கரை பூசுங்க, வெள்ளரிக்கா பூசுங்க ரென்ரு நால்ல செவப்பாகளாம்ன்னு டமில்ல தப்புத் தப்பா சொல்லிட்டிருந்தாங்க.. செவப்பாகணும்னா பேசாம மிளகாய்தூள் பூசலாமே.. அதுவும் செவப்பா தானே இருக்கு..
நேத்திக்கு பார்த்தா எங்க மம்மி கிச்சன்ல ஏதோ பண்றாங்களேன்னு ஒளிஞ்சு பார்த்தேன்.. எனக்கும் ரொம்ப பசி, bananaல பால் சேர்த்துக்கொண்டு இருந்தாங்க..ஆஹா.. இன்னைக்கு புது ஸ்வீற் கெடைக்கப்போகுதுன்னு ஆசையா பாத்துட்டு இருந்தேனா.. அம்மா அதை அப்படியே தன்னோட மொகத்துல பூச வேணாமா..
மம்மி. நீங்களுமா..