Archives

எங்களையும் நினைத்துப்பாருங்கள்..

dogs_of_war_revised-983960
மலாலாவை மட்டுமே தெரிந்த உங்களுக்கு

எங்கள் நாட்டின் ஆயிரமாயிரம் விபூஷிக்காகளை தெரியாமல் போனது ஏனென்று புரியவில்லை..

 

அடுத்த வேளை உணவுக்கு போராடிய போராட்டத்தை பார்த்திருப்பீர்கள்..

அறிவுக்காய் கல்வி வேண்டி போராடியதை பார்த்திருப்பீர்கள்..

அநியாயமாய் கொலை செய்வதை எதிர்த்து போராடியதை பார்த்திருப்பீர்கள்..

வாழும் வாழ்க்கைக்காய் போராடும் எம் பெண்களை பார்த்தீர்களா?

 

 

அண்ணன் தம்பியை அப்பாவை தொலைத்துவிட்டு,

புதைகுழிகளுக்குள் பிணம் தேடும் போராட்டத்தை பார்த்தீர்களா?

பெற்றவளை சீரழித்து,  பிள்ளையை கொன்ற பின்னும்..

பேருக்காய் வாழும் வாழ்க்கையை தேடி நிதமும்போராடும் அகதிகளை அறிந்திருக்கிறீர்களா..

 

மண்ணிழந்து, மனையிழந்து, மனைவியிழந்து அங்கம் இழந்து அனாதைகளாய் வாழும்

ஒவ்வொரு நாளும் போராடும் அற்ப மாந்தர்களை நினைத்திருக்கிறீர்களா?

 

மாதவிடாய் நேரங்களில் பழந்துணிக்கும் வழியின்றி

தந்தையின் சாறனைக் கிழித்துக் கட்டும் எம் இனப் பெண்களையும்,

மகளுக்காய் பரதேசியாகும் தந்தைகளையும் உங்களுக்குத் தெரியுமா

 

தன் கண்முன்னே தனயனை இழுத்துச் செல்வதைப் பார்த்து

பித்தமாகிப் பிதற்கும் அம்மாக்களின் அவலம் கேட்கிறதா உங்களுக்கு

 

மலவாயிலில் போத்தல்களும், கண்களில் மிளகாயின் காரமும், மின்சாரத் தாக்கமும், பிளாஸ்டிக் குழாயடிகளும் வாங்கி சாவிலும் சாந்தி காணாத என் சகோதரர்களை உங்களுக்குத் தெரியுமா

 

அக்காவை தங்கையை தனித்து இழுத்துச் செல்கையில், மிருகங்களின் கூர்நகங்களுக்குள் சிக்கியும்,

வெறிகொண்டெழுந்து வீரச்சாவடைந்த வீரர்களையும்,   ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் தன்னையே மாய்த்துக்கொண்ட உடன்பிறந்தவர்களையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்..

 

நாளும் பொழுதும், உதிரப்பெருக்கையும், உயிரின் ஓலங்களையும், குண்டுச் சத்தங்களையும், கொலைவெறியாளர்களையும் கண்டு கண்டு , கருணை – வீசை என்ன விலையெனக் கேட்கும் ஒரு தலைமுறையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

 

நித்திரையிலும் நிம்மதியின்றி..பேயின் ஓலங்களுடன், பயங்கர நினைவுகள் படமாய் ஓட.. வியர்த்தெழுந்து வெறித்துப் பார்க்கும் இளையவர்களை நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள்..

 

பக்கத்தில் படுத்திருந்த கணவனை வீடுடைத்து சுட்டுக்கொன்று,

அவனுக்காய் அழக்கூட அவகாசம் கொடுக்காமல் தலைமுடியால் பிடித்திழுத்து சவத்துக்கு முன்னே

மனைவியை சீரழிக்கும் மனித மிருகங்களை பார்த்திருக்கிறீர்களா

 

 

ஒரே வரிசையில் கைவிலங்கிட்டு, மண்டியிட வைத்து, துப்பாக்கிச் சன்னங்கள் உயிரை எடுத்தனவா என்று அறியாமலேயே, குழிக்குள் ஒன்றாய் மூடி மண்ணெண்ணையிட்டு மனிதர்களை எரித்துக் கொன்ற சக மனிதர்களை பார்த்திருக்க மாட்டீர்கள்..

 

முள்வேலிக்குப் பின்னால், முக்தி பெற வழியுமின்றி
இலக்கற்ற நோக்குடன் வெற்றிடத்தை வெறித்துப்பார்த்து
விரக்தியோடு வாழும் வெறும் மனிதர்களை உங்களுக்குத் தெரியாது

 

பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டுக் கட்டடம்
இடிந்து சிதிலமடைந்து, எறும்புகளும் கரையான்களும் வாழும்
நரகமாய் மாறியது கண்டு
இடிந்து போய் இயந்திரமாய் திரியும் குடும்பஸ்தர்களின் கண்ணீர் நீங்கள் அறியாததே

 

வாழ்வு தந்த வயல்களுக்குள், குண்டுகளும், சவங்களும் கொட்டிக்கிடக்க
வாழ வழியின்றி அரிசிக்கும் பருப்புக்கும் கையேந்தி
யாசகர்களாய் மாறிநிற்கும் யோகம் பெற்ற
உழைப்பாளிகளின் கண்ணீர் உதிரமாய் பெருகுவது உங்களுக்குத் தெரியாது..

 

பார்க்க வேண்டாம் இக்கொடுமைகளை.

அடுத்த முறை ஏதோ ஒரு அரசியல்வாதிக்கும், நடிகனுக்கும், விளையாட்டு வீரனுக்கும் பணக்காரனுக்கும் அநீதி நடந்துவிட்டதென்று பொங்கியெழும் போது

கொஞ்சம் பொத்தாம் பொதுவாகவாவது நினைத்துப்பாருங்கள்

 

நிலைதடுமாறினாலும், நிமிர்ந்து வாழும் என் இனம் பற்றியும்!!

 

பாவம் பவளமல்லிகை..

என்னுடைய அம்மம்மாவுக்கு பிடித்த பூ பவளமல்லி என்று அம்மா சொல்லுவார். எனக்கும் அந்தப் பூவைப் பிடிப்பதில் ஆச்சரியமில்லையே.. சூர்யகாந்தியும் பவளமல்லிகையும் தான் எனக்கு மிகப்பிடித்த மலர்கள்..

images (2)

கிராமத்து பெரிய வீட்டை விட்டு நகரத்து அப்பார்ட்மென்ட் எனும் புறாக்கூண்டில் அடைந்து வாழ்ந்த போதும், அம்மாவுக்கு பூந்தோட்டம் அமைப்பதிலும், பூமரங்கள் வளர்ப்பதிலும் உள்ள ஆசை போகவில்லை. அதனால்; நாற்காலி போட்டு அமரவென்று முன்னும் பின்னுமாய் கட்டப்பட்ட பல்கணிகள் இரண்டும், இப்போது அம்மாவின் பூந்தோட்டமாய் மாறிவிட்டது. பாபிலோனிய தொங்கு தோட்டம் போல், இது அம்மாவின் தொங்கு தோட்டம். பாகல், புடலை, மிளகாய் முதல், நாவல் நிற செம்பருத்தி, செந்நிற ரோஜா, கார்டினியா, அன்னாசிப்பூ, ஒன்றிரண்டு ஓக்கிட், பத்திரிகை பூக்கள், அலரி மரங்கள் என, குருவிகள் வந்து அமரும் நகரத்தோட்டம் அம்மாவுடையது.

அம்மாவின் தோட்டத்துச்செடியில், இன்று எனக்கு மிகப்பிடித்த பவளமல்லி முதன்முதலாக பூத்துச் சொரிந்தது. காலை எழுந்து வந்ததும் என்னைக்கூட்டிச் சென்று காட்டிய அம்மா பல்கணியிலிருந்து உதிர்ந்து கீழ்வீட்டில் பூக்கள் விழுந்திருப்பதைக் காட்டியதோடு, இன்றைக்கு பையொன்று கட்டி பூக்கள் விழாமல் எடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்.

images

பவள நிறக் காம்பும், வெண்முத்து இதழ்களும் கொண்டு, இதயம் மறக்க வைத்து மெஸ்மரைஸ் செய்யும் நறுமணம் கொண்ட பாரிஜாதம் பற்றிய கதை தெரியுமா என்று கேட்கும் வரை அதைக் கொஞ்ச நேரம் மறந்திருந்த நான்.. கதையென்றதும் வாயைப் பிளந்தபடி படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு கேட்கத் தயாரானேன்..

அந்தக் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாளாம். அந்த தேவதைக்கு சூரியன் மீது அப்படியொரு காதலாம்.. சூரியனுக்காக எதையும் செய்வேனென்ற ரீதியில் பைத்தியமாய் இருந்த பவளமல்லிகா, கடைசியில் தன் காதலை சூரியனிடம் சொன்னாளாம். சூரியனோ.. என்னால் உன்னைக் காதலிக்க முடியாது. உன்னை ஏற்க முடியாது என்று சொன்னானாம்..

இதனால் மனம் வருந்திய பவள மல்லிகா.. சூரியனுடன் கடும் கோபம் கொண்டு, இனிமேல் நீயிருக்கும் திசைக்கே வரமாட்டேன். என் தூய்மையான காதலை நீ தூக்கியெறிந்து விட்டாய். இனி என்றும் உன் முகத்தில் விழிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு, காதல் தோல்வி தாங்காமல், பாரிஜாத பூவாய் உருமாறினாளாம்.
அதனால் தான் இன்றும் பவளமல்லியெனும் பாரிஜாதம் இரவில் நிலவொளியில் இதழ்விரித்து நறுமணம் பரப்பி மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி, சூரியன் உதிக்குமுன்னமே, தனது கண்ணீரை பூக்களாய் சொரிந்து, உதிர்ந்து பூமியில் விழுந்து விடுகிறதாம்..

images (1)
பவளமல்லியை இந்தக் கோணத்தில் எண்ணிப்பார்க்கவில்லை. தவிர, பாரிஜாதத்தை தேவலோகத்திலிருந்து கிருஷ்ணர் பூமிக்கு கொண்டுவந்ததாய் கேள்விப்பட்டிருந்தேன்.. அப்படியென்றால் இந்த தேவதைக் கதை உண்மையாய் தானே இருந்திருக்க வேண்டும்.

பாவம் பவளமல்லிகை..

girl-in-a-tree-11113-1920x1200

Images: Google

அநித்யா..

சாகரவுக்கு என் மாமியாரிடமிருந்த திட்டு விழுந்து கொண்டிருக்கிறது.. என் இருண்ட கண்கோளங்களால்  அவன் எவ்வாறு பதறிப்போய் பயந்த முகத்துடன் இருப்பான் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.. இது என்னால் தானே என்ற சுயபச்சாத்தாபத்தை தவிர்க்க முடியாமல் சாகர என்று சத்தமாய் அழைத்தேன்..

 
இவன் உண்மைப் பெயர் சாகர தானா? தெரியவில்லை.. ஒளியற்ற என் விழிகளில் அவனை கண்டெடுத்த நாள் திரைப்படமாய் விரிந்தோடியது..

 
90ம் ஆண்டு.. இரண்டாம்கட்ட கலவரத்தின் உச்சம்.. வடக்கு, கிழக்கு, மேற்கு என ஒரு இனமே பூண்டோடு அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளை அது..

 
நானும் ஒரு ஆர்மிக்காரன் தான்.. கவசாக்கி மோட்டார் சைக்கிளில் தலைமுதல் பாதம் வரை கரும்பச்சை நிற முரட்டு ஆடைகளால் மறைத்துக்கொண்டு, வலைப்பின்னலுடன் கவசம் அணிந்து, முகத்தில் கருப்பு நிறம் பூசி கொடூரத் தோற்றத்துடன் மனிதம் மறந்து மரக்கடிப்பட்ட உணர்வுகளுடன் ஏகே 47, கிறீஸ் கத்தி, டைனமைற்கள் என கொலைக்களமாகத்திரிந்த காலம்.. மோட்டார் சைக்கிள் பார்ட்டி

 
அன்றும் அப்படித்தான்.. ஒரு குழுவாய் அம்பாறைக் காட்டுப்பகுதிக்குள் விர் விர் என சத்தமெழுப்பியபடி போய்க்கொண்டிருந்தோம்.. தூரத்தில் நீல நிற மினிவான் ஒன்று விரைந்து வர.. சனத் நடுவீதியில் நின்று அதனை மறித்தான்..

 
சிங்கள சாரதி.. எங்களைப் பார்த்ததும் மாத்தையா  அபி கொளம்ப யணவா.. (ஐயா நாங்க கொழும்புக்கு போறம்) என்று சொல்ல.. வானுக்குள் இருந்த அனைவரையும் இறக்கினோம்.. அவன் உறவினர்கள் போல நான்கைந்து சிங்களவர்கள்.. அவர்களுடன் தமிழ் குடும்பம் ஒன்று.. கணவன், மனைவி, இளம் பெண்பிள்ளை ஒரு பையன்..

 
இரத்தப்பசையின்றி முகம் வெளுக்க பின் சீற்றில் ஒடுங்கிப்போயிருந்தவர்கள் நடுக்கத்துடன் இறங்கி வர.. சாரதியின் மூஞ்சியில் பொறிபறக்கும் வகையில் துவக்குக் கட்டையால் அடித்தபடி.. ‘பற பள்ளா.. கவுத மே.. உம்பே கேனித?’ (பறநாயே.. இது யாருடா.. உன்ட பொண்டாட்டியா) என்று சனத் உறும..

 
‘ராளகாமி.. மே அப்பே சிதம்பரம் முதலாளி.. யன்ன தென்ன மகாத்தயோ.. துவகே கசாதெட்ட கொளம்ப யன கமன்..! ரட இந்தன் மனமாலயத் அவித்..!’ (ராளகாமி – பொலிஸ் கான்ஸ்டபிள்களை / ஆர்மிக்காரர்களை அழைக்கும் முறை. இவர் எங்கட சிதம்பரம் முதலாளி பாவம் ஐயா.. விட்றுங்க.. மகள்ட கல்யாணத்துக்காக கொழும்புக்கு போறாங்க.. வெளிநாட்ல இருந்து மாப்பிள்ள வந்திருக்கார் ஐயா..) என்று சொல்லிக்கொண்டே போக.. அவர்கள் வைத்திருந்த டிராவலிங் பாக்கை செக்கிங் என்ற பெயரில் இழுத்துப்பிரித்த ஜகத்.. உடைகளுக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருந்த நகைகளை எள்ளலுடன் தூக்கிக் காட்டியபடி பங்கு போட ஆரம்பித்தான்..

 
சிறுத்தைக்கூட்டத்தின் நடுவே சிக்கிய மான்களாய் துப்பாக்கி முனையில் நின்றிருந்த அந்தக் குடும்பம் ஏது செய்வதென்று அறியாமல்.. கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருக.. ஒண்டிக்கொண்டபடி, கூனிக்குறுகி.. குற்றம்புரிந்தவர்கள் போல நிற்க..

 
மற்றையவர்களை பலவந்தமாக வானுக்குள் தள்ளி அவர்களின் கெஞ்சலை மதிக்காமல் துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டிவிட்டு.. சில்வா அந்த மனைவியின் சேலைத் தலைப்பை பிடித்திழுக்க.. அடுத்தவன் அந்தப் பெண்ணை தன்னருகில் இழுத்து ‘அம்மாய் துவய் நியம படு தெகக் ஆஹ் !’ (அம்மாவும் பொண்ணும் நல்ல சாமான்கள் ஆ..) என அசிங்கமான சிரிப்பொன்றுடன் முத்தமிட முயல எங்கள் முகங்களின் கோரம் பார்த்து அவள் அழுதாளா அல்லது அடுத்து நடக்கப்போகும் அகோரத்தை எண்ணி அலறினாளா என்று தெரியாமல் ஒரு கூக்குரல்.. தடுக்கப்பாய்ந்த சிதம்பரத்தின் கழுத்தை ஒருவன் கிறீஸ் கத்தியால் வெட்ட ‘அநித்யா ஓடு’.. என்று அலறியபடி வேரற்ற மரமாய் விழுந்தார் கணவன்..

 

 

தனக்கு நேரப்போகும் கொடுமைகளை புறந்தள்ளி அந்தத் தாயும் ‘அநித்யா.. அநித்யா தப்பி ஓடுடீ’ என்று அலறியபடி இருக்க தறதறவென்று இழுக்கப்படும் அந்தத் தாயின் காலுடன் பிணைந்தபடி இருந்தவன் தான் சாகர..

 
நான் ஒன்றும் நல்லவனில்லை.. எத்தனையோ கொலைகள் பண்ணியிருக்கிறேன்.. கொள்ளையடித்திருக்கிறேன்.. வன்புணர்வுகள் செய்திருக்கிறேன்.. ஆனாலும் சேற்று மண்ணில் புரண்டபடி தள்ளிவிடப்பட்டிருந்த அந்தப் பையனைப் பார்த்ததும் பிள்ளைக்காக சித்தப்பிரம்மையுடன் ஏங்கும் மனைவியின் ஞாபகம் வர, மயங்கிப்போன அவனை இழுத்துச் சென்று ஒரு மரத்தின் பின்னால் போட்டுவிட்டு நகைகளை ஆராயத் தொடங்கினேன்..

 
அந்தப் பெண்களின் அலறலை பொருட்படுத்தாது அனைவரும் இரை தின்னும் மிருகங்களாய் பங்குபோட்டு முடிந்த பின்.. இரண்டோடு சேர்த்து மூன்று பிணங்களாக ஒரே குழியில் போட்டுப் புதைத்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல அடுத்த வேலையை பார்க்க போனோம்..

 
ஆயிற்று இன்று பத்து பன்னிரண்டு வருடங்கள்.. அந்தப் பையன் சாகரவாக வளரத்தொடங்கி.. இப்போது அவனுக்கு 13 வயதிருக்கும்.. என் மனைவிக்கும் குணமாகவில்லை.. பின்னொருநாள் நடந்த கொரில்லாத் தாக்குதலில் ஒரு காலும், இரண்டு கண்களும் போக.. இன்று குருடனாய்.. முடவனாய்..

 
சாகர – கடல்.. ஆம் இன்று அவன் தான் எனக்கு கடல் போல ஆதரவு.. ஏனென்றே தெரியாமல் என் மாமியாரின் அத்தனை ஏச்சுப் பேச்சுகளைக் கேட்டவாறு அரவணைத்து ஒத்தாசை செய்கிறான்.. அவன் யாரென்று அவனுக்கு சொல்ல மனம் வருகுதில்லை.. அதுபோல ஒன்றுமேயற்றுப் போன இந்தத் தருணத்தில் தான் எத்தனை பாவங்கள் பண்ணியிருக்கிறேன் என்ற எண்ணம் என்னுள் எழும்புவதை தடுக்கவும் முடியுதில்லை

 
இன்று ஆட்காட்டிக்குருவியின் சத்தம் கேட்கும் அத்தனை வேளைகளிலும் ‘அநித்யா ஓடு’ என்ற அந்தப் பெற்றோரின் கதறலும்.. ‘என்ன விடுங்கடா.. அப்பா.. அம்மா.. ஐயோ..’ என்ற அந்தப் பெண்ணின் குரலும்.. ‘சனியன்களே நாசமாப் போவீங்கடா..எங்கள கொண்டு போட்றுங்கடா.. ‘ என்ற சாகரவின் தாயின் குரலும் அந்த அநித்யா போல கசங்கிப் போன அத்தனை பெண்களின் குரலும் தொடர்ந்து காதுக்குள் கேட்கிறது.. தொடர்கதையாய்..

சந்திரண்ணன்..

சந்திரன் அண்ணன்.. அவர்கள் குடும்பத்திலேயே சிவப்பானவர் அவர்தான்..எனக்கே அவர் மேல் பொறாமை.. ‘அண்ணன்.. உங்கட கலரத் தாங்க.. நான் என்ட கலரத் தாறன்’ என்று எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன்..

 
பால் வடியும் முகம், ஒற்றைக்காலைக் கெந்திக் கெந்தி, பிறவியிலிருந்து செயலற்றுப்போன இடது கையை நெஞ்சோடு அணைத்தபடி, தலை ஒருபுறமாகச் சாய்ந்து கிடக்க, சுருள் முடியுடன், எந்நேரமும் புன்னகைக்கும் உதட்டிலிருந்து வடியும் எச்சிலை உதவாத கையால் துடைத்துவிட்டபடி, தன் அரைக்காற்சட்டைக்குள் அமுங்காமல் வைத்திருக்கும் தங்கள் வீட்டு முந்திரிப்பழத்தை என் முன்னால் நீட்டியபடி.. ‘அம்முக்கு.. தின்னு..தின்னு..’ என்று சொல்லும் அவருக்கு அன்பைத் தவிர வேறேதும் தெரியாது..

 
எங்கள் அம்மாவோ, சித்தியோ கொடுக்கும் கேக் பிஸ்கட் எல்லாவற்றையும் என்னோடும் இரண்டு தம்பிகளோடும் பகிர்ந்து சாப்பிடும் அவர் குணமும், ராதாக்கா..ராதாக்கா.. என்று எங்கள் அம்மாவை ஒரு வித ராகத்துடன் கூப்பிட்டு பறித்து வந்த முந்திரிக்கொட்டைகளைக் கொடுத்து விட்டு ‘ராதாக்கா.. சுந்தரி என்ன ஏசிப்போட்டாள்.. நீங்க அடிப்பீங்களா’ என்று திக்கதிக்திக்கி அப்பாவியாகக் கேட்கும் தோரணையும்..யாருக்குமே அவரைத் திட்ட மனம் வராது..

சுந்தரி அக்கா எங்களை பள்ளிக்கு அழைத்துச் செல்பவர்.. நான்கைந்து பெண்பிள்ளைகளுடன் பெரிய குடும்பம். வறுமை.. அப்பாவின் பென்ஷன் காசில் நான்கைந்து மாடுகளை வளர்த்து பால் விற்று குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.. மாடுகளை எங்கள் வளவில் மேய்ப்பது சந்திரன் அண்ணன்.. சுந்தரி அக்கா, எங்களை பாடசாலையிலிருந்து திரும்ப அழைத்து வந்தபின் சென்று அவற்றை வீட்டிற்கு ஓட்டிச் செல்வார்..

 
அப்போது எனக்கு பன்னிரண்டு வயது தானிருக்கும்.. பயங்கரவாதம் தழைத்தோங்கிய தருணம்.. அந்த இயக்கம், இந்த இயக்கம் என்று ஆறு வீடுகளுக்கு அடுத்தடுத்து ஒவ்வொரு இயக்கக்காரனும் காம்ப் அடித்து தங்கள் மனதுக்கு பிடித்தவாறு ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.. பொலிசும், ராணுவமும்.. அவர்களுக்கென்ன, தமிழனும், தமிழனும் அடிபட்டுச் செத்தால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே.. கட்டுக்கோப்பாக இருக்கப் பிடிப்பற்று பிரிந்து வந்து மாமா குரூப், டெலோ குரூப், ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப் என ஊருக்குள்ளே நாற்பது குழுக்கள்.. கோட்டான்கள் போல் இருந்து கொண்டு பிடிக்காதவர்களை சுட்டு விளையாடிக் கொண்டு இருந்த காலம்..

 

 

எங்கள் அம்மாவோ, எங்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதேயில்லை.. சந்திரன் அண்ணன் மட்டும் தான் எனது விளையாட்டுத் தோழர்.. எப்போதும் சுத்தமாகக் குளித்து, அழகாயிருப்பார்.. ஒரு குழந்தை போலே.. அம்மூ என்ற அவர் அழைப்பிற்காக ஜன்னல் கம்பியை பிடித்தபடி காத்திருந்து அன்று பள்ளிக்கூடத்தில் நடந்ததெல்லாம் முந்திரியம் பழத்தோடு சேர்த்து கதைகதையாய் சொல்லுவேன்..விளங்குமோ இல்லையோ.. தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டிருப்பார்..

 

 

அன்றும் அப்படித்தான் ஒரு இரண்டு மணியிருக்கும்.. அம்மூ..சத்தம் கேட்டு வெளியே வந்தால் வீணி ஒழுக சந்திரண்ணன்.. ‘கடைக்கு போறன்.. உனக்கு டொபி வேணுமா.. ‘ என்று கேட்டவரை சத்தம் கேட்டு வந்த அம்மா.. ‘சந்திரா.. உள் ரோட்டால சுத்திப் போ.. இந்த மாமா குரூப்புக்குள்ள ஏதோ சண்டையாம்.. பதற்றமாக்கிடக்கு’ என்றபோது.. ‘இ..இல்ல ராதாக்கா.. அது முடிஞ்சி.. நான் காலம பால் குடுத்துற்றுத்தான் வந்தனான்.. போத்தலும் வாங்கணும்’ அந்த கும்பலுக்கும் பாலூற்ற வேண்டும்.. இல்லையென்றால் உங்கள் குடும்பத்துக்கே பாலூற்றி விடுவார்கள் ‘போத்தல் வேணுமெண்டா நாந்தாறன்.. சொல்றத கேளு சந்திரன்’ ஏதோ உள்ளுணர்வுடன் சொன்ன அம்மாவை தன் சிரிப்பால் மழுப்பிவிட்டு எங்கள் முன் கேற்றால் போனவரை உள்ளுக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்..

 

டுமீல்.. ‘கடவுளே யாரையோ போட்டுட்டான்கள் போல..அம்மு முன்னால நிக்காத உள்ளுக்க வா..’ அம்மா பதைபதைப்புடன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எங்கள் வயல் பார்க்கும் கணேசன் அங்கிள் வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை போட்டபடி வீட்டுக்குள் ஓடி வந்து ஒளிந்துகொண்டபடி தங்கச்சி .. அவன் சந்திரன சுட்டுப்போட்டாங்கப்பா.. என்ட கண்ணுக்கு முன்னாலயே.. இவன் அறுவான் என்னத்துக்கு அவனுகளுட்ட பாலுக்கு காசு கேட்டவன்.. அட கடவுளே.. இப்ப யார் அவங்கட அம்ம அப்பாட்ட சொல்றது’ தலையிலடித்து அழுதபடி அலறியவரை தொடர்ந்து எங்கள் அம்மா சித்தி என்று ஒரு கூட்டமே அழ, உறைந்து போய் நின்றேன் நான்..

 

ஐந்து நிமிடங்களுக்கு முன் கண்களில் சிரிப்போடு என்னை அழைத்த அந்த அப்பாவி உங்களை என்ன செய்தானடா.. அவனைப்போல உங்களால் ஒரு நல்லவனைக் காட்ட முடியுமா.. பாவிகளே..
அவன்களுக்கு என்ன.. மிஸ்பயர் இல்லாவிட்டால் பயங்கரவாதி என்று சுட்டதற்கு ஒரு காரணம்.. அந்தக் குடும்பத்திற்கு..

சந்திரண்ணன் மட்டுமா.. அவரைப் போல எத்தனை பேர்?

முகமூடி


பட்டியில் அடிமாடுகளை அடைத்து வைத்திருப்பது தான் என் நினைவுக்கு வந்தது..இல்லை..அதைவிடவும் கீழாக.. கையில் பிசுக்கு பிசுபிசுக்க, போட்டிருந்த உடை பல இடங்களில் கிழிந்திருக்க அடிவாங்கிய முகம் கன்னிப்போய் காங்களுடன் உடம்பெங்கும் வியர்வை ஆறாகப் பெருக..என் முறைக்காகக் காத்திருந்தேன்..
சுற்றியிருந்த அத்தனை பேரும் என்னையொத்த மனநிலையுடன்.. சிறுவர்கள் முதல் வயது போன தாத்தாக்கள் வரை..அதிலும் ஒரு அங்கஹீனன்.. அவனையும் ஏன்.. நடக்கவே முடியாமல் அரைக்காலில் அரைந்து செல்லும் அவன் இவர்களை என்ன பண்ணப் போகிறானாம்.. நாங்கள் என்ன பாவம் செய்தோமென்று இப்படி..

இன்று தான் உலகின் இறுதி நாளா.. இல்லை நாளை என்ற ஒன்று இருக்கின்றதா..விடைதெரியாமல் தவித்த அந்த அந்தகாரப்பொழுதில் விடிவெள்ளியாய் அம்மாவின் பதைபதைத்த முகம்.. நான் இங்கு வந்த அந்த நாளில் அம்மா முகத்தில் தோன்றிய கலவரம்..உயிரோடு இறந்த பிணத்தைப்போல அவர் பார்த்த பார்வை, கதறியழுத ஓலம்.. இன்றுவரை என்னை இற்றுப்போகாமலிருக்க வைத்திருப்பது அவரின் பாசமுகம் மட்டும்தான்.. அம்மா இப்போ என்ன செய்வார்.. சாப்பிட்டிருக்க மாட்டார்..அழுதுகொண்டெ..எனக்காக ஊரிலிருக்கும் அத்தனை கடவுள்களிடமும் நேர்ச்சை வைத்தவாறு ஸ்வாமியறையே கதியாகக் கிடப்பாராக்கும்.. அப்பா உடைந்து ஒடுங்கிப்போய் மூலைக் கதிரையில் உறைந்திருப்பார்.. அக்கா..சூனியத்தைப் பார்த்து சுடுமூச்சு விட்டவாறு தம்பி தம்பி என்று அரற்றிக்கொண்டிருப்பாள்..

ஐயோ..ஏன்டா சண்டாளா..நான் உனக்கென்னடா செய்தனான்.. படுபாவி.. தூரத்தில் தேய்ந்துகொண்டிருந்த குரல் உடலின் குருதியை சில்லிடச்செய்ய..செய்வதறியாமல் மற்றவர்களைப்போலே கூனிக்குறுகி ஏதோ ஒரு அற்புதம் நடக்காதா என்ற அவாவுடன் அரையுயிராய்..

இவனும் என்னைப்போல பிடிபட்ட ஒருவனாய் தான் இருப்பானாக்கும்..நகக்கண்ணில் ஏற்றிய ஊசிகளும், ஆசனவாயிலில் செருகிய குழாய்களும், தலைகீழாய் கட்டி கீழே எரியவிட்ட மிளகாய் புகையும், ஐஸ்கட்டிகளால் மரத்துப்போன உடம்பும் அவனையும் சூழ்நிலைக் கைதியாக ஆக்கியிருக்கலாம்.. இல்லையென்றால் வெட்டித்தறிக்கும் கோடாரி போன்ற எட்டப்பன்களில் ஒருவனாகக்கூட அவனிருக்கலாம்.. இன்று இவன் நாளை இவன் நிற்கும் அதே இடத்தில் நானும் நிற்பதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம்.. அப்போது என்னுயிரைக் காப்பாற்ற இவனைப்போலவே நானும் அப்பாவிகளை காட்டிக்கொடுக்கலாம்..

எண்ணங்களை முரட்டுத்தனமாக இடைநிறுத்தியது துப்பாக்கி முனை..தள்ளப்பட்ட நான்.. சணல்கயிற்றால் பிரிக்கப்பட்ட ஒடுங்கிய பாதைவழியே விதியை நொந்தவாறு மெதுவாக நடைபோடுகிறேன்.. நிமிர்ந்து நிற்கச்சொல்லி இன்னுமொரு அடி என் தாடையில்..வலியை பொறுத்துக்கொண்டு முகம் சுளிக்காமல் வெற்றுப்பார்வையுடன் என்முன் கறுப்புத் துணியால் முகம்மூடிநிற்கும் ‘தலையாட்டி’ யை எதிர்நோக்கினேன்..

மேல்கீழாக அசைந்தால் என் விதி முடிந்தது.. சாவு சிறந்ததென்று சொல்லும்படியான சித்திரவதைகளோ அல்லது ஒரே நேரத்தில் வரிசையாக நிற்க வைத்து உடல்களை சல்லடையாக்கும் துப்பாக்கி ரவைகளோ, உயிருடன் உருட்டிவிட உபயோகப்படும் புதைகுழிகளோ தான் எனக்காகக் காத்திருக்கும்..

தலை வலமிடமாக அசைகிறது..அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து நின்ற என்னை கெட்ட வார்த்தையால் திட்டியபடி மீண்டும் அந்த துப்பாக்கியின் முனை வெளியே தள்ள..நடப்பது நிஜமா கனவா என்றுகூட எண்ண முடியாமல், சந்தோஷப்படுவதா..இல்லை உள்ளிருப்பவர்களுக்காய் கவலைப்படுவதா என்று தெரியாமல் பிரமைபிடித்தவாறு நின்றவனின் காதில்..

ஐயோ என்ர கடவுளே.. அறுவானே.. நான் என்னடா செய்தனான் உனக்கு..இன்னுமொரு குரல் என் செவிப்பறைகளைக் கிழிக்க கையாலாகாத்தனத்துடன் என் அம்மாவைத் தேடி குனிந்த தலையுடன் வலியின் வேதனை தாக்க விந்தியபடி வீடுநோக்கி நடைபோட்டேன்..

கன்றுக்குட்டிக்காதல்

பின்னால் திரும்பிப் பார்க்க தேவையில்லை.. எதற்கும் பயப்படவும் தேவையில்லை..  கொஞ்சம் இடைவெளிவிட்டு தொடரும் நிழலாய் அவன் என் பின்னால்..
இன்றாவது அவன் திருட்டுத்தனத்தை கண்டறிந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இன்னும் மெதுவாக சைக்கிளை மிதிக்கிறேன்.. ம்ஹ்ம்.. எங்கே.. அவனுக்கு என்னை விட மெதுவாக பைக் ஓட்டத் தெரியும் போல.. இன்று நிச்சயமாக சந்தன நிற டீஷேர்ட் தான் அணிந்திருப்பான்.. ஏனென்றால் நான் அணிந்திருப்பதும் அதே நிற ஆடைதான்..
நானிருந்த வீட்டுக்கு இடப்புறமாக முன்னாலுள்ள வீடுதான் அவரது.. சரத்குமார் நடிக்க வந்த புதிதில் எப்படியிருப்பாரென்று ஞாபகமிருக்கிறதா.. Ditto.. எந்தவித மாறுதலும் இல்லை, அதே உயரம், உடற்கட்டு, வலிமை, கம்பீரம், அழகு.. அமைதி.. அத்தனை மேன்லினெஸ்.. என்னுடன் கூடப்படிக்கும் அநேக பெண்களின் கனவுக்கண்ணன் என் பின்னால் அலைவது ‘ஹா ஹா ஹா’.. மனசுக்குள் இப்படித்தான் கொஞ்சம் வில்லத்தனமான சந்தோஷம் வந்து போகும்.. டீனேஜ் வயதிலிருக்கும் ஒரு பெண்ணுக்கு இதைவிடப் பெருமை ஏது? ஆனாலும் நிமிர்ந்து பார்க்கவோ, நேரில் பேசவோ பயம்.. அவருக்கும் தான் என்று நினைக்கின்றேன்..
ஆனாலும் ஒவ்வொரு நாளும் என்னை தொடர்ந்து தேர்போல மெதுவாய ஊர்வலம் வருவதும், என் கல்லூரி வளைவிலிருக்கும் அவர் நண்பர் வீட்டிற்கு முன் தவம் செய்யும் முனிவன் போல பார்த்துக் கொண்டே நிற்பதும்.. என் பாட்மின்டன் பயிற்சிகளுக்கு வந்து எனக்கு எதிரில் நின்று விளையாடி பயிற்சி கொடுப்பதும்.. என்னை வேறு யாராவது பின்தொடர்ந்தாலோ, கிண்டல் பண்ணினாலோ அடி பின்னி எடுப்பதும் என்று எதுவுமே தவறுவதில்லை..
என் இரண்டு தோழிகளுக்கு மாத்திரமே இந்த இரகசியம் பரகசியமாக தெரியும்.. எங்களுக்குள் ஒரு அழகான பொக்கிஷமாக..

மூவருக்குமே அவர் பெயர் தெரியாது.. யாரிடமாவது கேட்பதற்கும் வெட்கம் கலந்த பயம். அதற்கு ஏற்றாற் போல அமைதியின் சிகரமாக அவரும்.. நாங்களே அவருக்கு ரிச்சர்ட் என்று பெயர் சூட்டி அவரது நகர்வுகளை எங்களுக்குள் அறிவித்துக்கொள்வோம்.. நாங்கள் அவரை கேலி பண்ணுவது அவருக்குத் தெரியுமோ என்னவோ எங்களுக்கு அதில் ஒரு த்ரில்..
மூன்று நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சத்தமின்றிச் சென்ற நான் திரும்ப வந்த அன்று அவர் முகத்தில் முளைத்திருந்த மூன்று நாள் தாடியும், முகவாட்டமும் நிச்சயமாக எனக்குள் சலனத்தை ஏற்படுத்தவில்லை என்று சொன்னால் பொய்யே..
அந்த வயதில் காதல் என்றால் என்ன.. அதற்கு அடுத்த கட்டம் என்ன.. கல்யாணம் என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தங்கள் தெரியாவிட்டாலும், எங்கள் அழகை ஆராதிக்கும் ஒருவன், எங்களுக்கென்று ஒருவன் இருப்பது ஒருவித குழந்தைத்தனமான சந்தோஷம் தான்.. அவருடைய கவசாக்கி மோட்டார் சைக்கிளில் பறந்து செல்ல வேண்டும், எனக்கொரு பாய்பிரன்ட் இருக்கிறார் என்று எல்லோருக்கும் சத்தம் போட்டு சொல்ல வேண்டும், என்னை முறைத்துப் பார்க்கும் நண்பர்கள் முன்னால் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.. இது மட்டும் தான் மனசுக்குள் இருந்த கல்மிஷமில்லாத ஆசைகள்..
நேருக்கு நேர் நின்று விளையாடினாலும் கூட படித்துக் கொண்டிருந்த என்னை தொல்லை பண்ணக்கூடாது என்று என்னிடம் தனிமையில் பேசக்கூட முயலாத அந்தப் பண்பு தான் அவரிடம் எனக்கு ஈர்ப்பினை ஏற்படுத்தியதோ என்று இன்று வரை நினைத்துப் பார்க்கிறேன்.. என் வயதுப் பையன்களெல்லாம் கடிதங்கள் கொடுத்தோ, கேலி பண்ணியோ, தூது அனுப்பியோ தங்கள் காதலைச் சொன்ன வேளையில், அமைதியாய், ஆரவாரமின்றி, ஆர்ப்பாட்டமின்றி காத்திருந்த அவரின் பொறுமையை சில வேளைகளில் நினைத்துப் பார்ப்பேன்..
படிப்பு முடியும் நேரம், அப்பாவின் வேலையும் மாற்றம் பெற, பரீட்சைகள் முடிந்த அடுத்த நாளே ஊரைவிட்டு கிளம்ப வேண்டிய அவசரம், அவசியம்.. பரீட்சை முடிந்த அன்று என் கல்லூரிக்கு முன்னால் நிமிர்ந்து என்னை நேருக்கு நேர் கண்ணோக்கியதும், கடைசியாக, வீட்டை விட்டு வெளியேறும் நேரம் தன்வீட்டு கேற் முன்னால் நின்று வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது போல என்னை ஏக்கமாக பார்த்த பார்வையும் திடீரென்று சில வேளைகளில் மின்னல் கீற்றாய் மனசுக்குள் வந்து போகும்..
புதிய நண்பர்கள், காதல்கள், சம்பவங்கள் என்று எத்தனையோ அந்த ஞாபகத்தை மறைத்தாலும், எப்போதோ தோன்றும் வால் நட்சத்திரமாய் அவன் எண்ணங்கள் சில வேளைகளில் மனசுக்குள் வந்துதித்து மறைந்து விடும்..
எரிநட்சத்திரங்கள் விழும்போது நினைப்பது நடக்கும் என்பார்கள்.. ஒரு தடவையாவது அவன் எப்படி இருப்பான் என்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், எங்கிருந்தாலும் அந்த பெயர் தெரியாத எனக்குக் கன்றுக்குட்டிக் காதலைக் கற்றுத் தந்தவன் நலமாக இருக்க வேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக்கொள்வேன்..