Archives

அர(சு)சியல்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. அவர் ரொம்பவும் கொடுமையான கொடூரமான ராஜாவாம். நாட்டு மக்களுக்கு வரி, வட்டி, கிஸ்தி என்று எல்லாம் விதித்து அவர்களை கொடுமைப்படுத்தி வந்தானாம். அவருக்கு ஒரு மௌன மந்திரி, ராஜா எது செய்தாலும் தட்டிக்கேட்காமல் இருந்தாராம். அப்படியே ஓரு தலையாட்டி மந்திரி சபை.. இவங்கள திட்டித் தீர்க்காத ஆளே இல்லையாம்..

 

தீடிரென்று தலை நகரில் ஒரு புரட்சி ஏற்பட்டதாம். நேர்மையாளர் அப்டீன்னு தன்னைக் காட்டிக்கொண்ட ஒரு மனிதர் அந்தப்பகுதிக்கு தானே தலைவன்னு பிரகடனம் செய்து அந்த இடத்தை ஆளத்தொடங்கினாராம்..  அங்கேயிருந்த மக்கள் எல்லாருக்கும் அப்படி ஒரு சந்தோஷம் வந்துச்சாம். தங்க கவலைகள் எல்லாம் தீர்ந்துச்சு, நிம்மதியா வாழலாம் என்று நினைச்சாங்களாம். பக்கத்து ஊர் மக்களுக்கெல்லாம் இப்படி ஒருத்தர் தங்களோட ஊர்ல இல்லையேன்னு பொறாமை பொறாமையாய் வந்துச்சாம்.. சரி என்ன பண்றது நம்ம விதின்னு மனசைத் தேத்திக்கிட்டு கொஞ்சம் வயித்தெரிச்சலோடு வாழத்தொடங்கினாங்களாம்..

 

இவங்க இப்படி நிம்மதியா வாழ்றத பார்த்துக்கிட்டு ராஜா சும்மா இருப்பாரா.. உடனடியா தன்னோட மௌன மதியூக மந்திரியோட பேசி, புது புரட்சியாளர எப்படி கவுக்கலாம்ன்னு யோசன கேட்டாராம்.. அவரும் மௌனமா இருங்க.. புதியவர் எப்படியும் பண விஷயத்துலயும், வியாபார விஷயத்துலயும் கை வைப்பாரு.. அப்போ மெதுவா அந்த ஊர்ல இருக்கிற பெரு வணிகர்கள்கிட்ட சொல்லி செய்ய வேண்டியத செய்யலாம்ன்னு சொன்னாராம்..

 

சொன்னபடியே புதியவரும் பணக்கார பெருமுதலைகளோட மோத ஆரம்பிக்க, அவங்க, தங்களுக்கு தெரிஞ்ச சாம தான பேத தண்ட முறைகளை உபயோகிச்சு அவருக்கு குடைச்சல் கொடுக்க.. முன்ன பின்ன செத்துப்போகாத புரட்சியாளன்.. போங்கடா நீங்களும் உங்க அரசியலும்ன்னு கைகழுவிட்டு ஓடிப்போய்ட்டாராம்.. மக்கள் ‘ம்.. இனி என்ன பண்றதுன்னு’ நினைச்சி மனசத் தேத்திக்கிட்டே வாழத் தொடங்கினாங்களாம்.

 

அந்த நேரத்துல பக்கத்து நாட்டுல இருந்து புதுசா ஒரு மனுஷன், தான் இந்த நாட்ட மாத்திக்காட்டுவேன்னு அலை அலையா ஆட்களை சேர்த்துக்கிட்டு இந்த நாட்டு மேல போர் தொடுத்து வந்தானாம்.. ராஜாவுக்கு இது பெரிய தலைவலியாப் போச்சாம்.. தன்னோட மகன் மகள் எல்லாரையும் போர் முனைக்கு அனுப்பினாராம்.. என்ன அனுப்பி என்ன பிரயோஜனம்.. புது புரட்சியாளன் அரசனாகிட்டானாம்..

 

நாட்டு மக்களுக்கு பெருத்த சந்தோஷமாம்.. அடடா.. புது அரசன், புது கொள்கைகள், புது ராஜாங்கம்’ன்னு ஒரே குஷியா இருந்தாங்களாம். புதுத் தும்புத்தடியும் கொஞ்ச நாளைக்கு நல்லாக் கூட்டி பெருக்கிச்சாம்.. மக்களும் அடடா.. கொடிய அரக்கன் போய்ட்டான்.. இனி சந்தோஷம் தான்’னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல தலைல இடி விழுறது தெரியாமல் மெது மெதுவாய் புரட்சியாளன் முன்னைப்போலவே மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சானாம்.. வட்டி வரி மட்டுமில்லாமல் மற்ற எந்த வழியிலயெல்லாம் முடியுமோ அப்படி கஷ்டப்படுத்தினானாம்..

 

இதனால இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்பட்ட மக்கள் மனசுடைஞ்சு போயிட்டாங்களாம்.. கங்கைல குளிச்சாலும் காக்கை அன்னமாகுமா.. எல்லா ராஜாக்களும் சிம்மாசனத்துல அமர்ந்ததும் அவங்க குணமே மாறிடும்.. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை தாங்கிறத கொஞ்சம் தாமதமாவே புரிஞ்சுகொண்டாங்களாம்.. என்ன பண்றது நம்ம தலைவிதின்னு நினைச்சிட்டு தலைகுனிஞ்சு வாழப்பழகினாங்களாம்

 

(இந்தக் கதை இந்திய அரசியல் பற்றி இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க.. என்ன நான் சொல்லுறது)

எங்கிருந்து வந்தாயடா..

நகங்களைக் கடித்து மென்று துப்பியபடி காத்திருந்தேன்.. இன்னும் வரவில்லை.. எத்தனை நேரம் தான் காத்திருப்பது.. கணங்கள் எல்லாம் கல்லுப்போல செல்ல மாட்டேன் என்று அசையாமலிருக்க.. கண்கள் மட்டும் அலைபாய்ந்தபடி வாசல் பார்த்தது..

கழுதை, காண்டாமிருகம் என மனசுக்குள் திட்டியதெல்லாம் ஏதோ ஒரு யுகம் போல தோன்ற கொஞ்சம் கொஞ்சமாய் பயம் மனசுக்குள் படங்காட்டத்தொடங்கியது..

 
காலையில் கூட கன்னத்தில் முத்தமிடுகிறேனென்று சொல்லி கடித்து வைத்துவிட்டுப் போன காதல் காயம் இப்போது வலிக்கவில்லை.. வருடிக்கொடுத்தபடி இருட்டில் வசமிழந்து நிற்கும் என் மனசு தான்.. ச்சே.. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. இன்றைக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ஆச்சு.. இல்லன்னா நிதத்துக்கும் இதே வேலை..

 
இன்றைக்கு என்ன நடந்தாலும் சிலைபோலதான் இருப்பது.. நினைத்தபடியே லேட்டாய் வந்ததுக்கு என்ன சாட்டு சொல்லுவான்.. என்னவெல்லாம் பண்ணுவான் என நினைத்துப்பார்க்கிறேன்..

wait

 
மூச்சு முட்டும் வரை வேர்வை வாசத்துடன் இறுக்கமாய் தொட்டு அணைத்து என்னை வேர்க்க வைப்பானா
பூங்கொத்தை முன்னால் நீட்டி முட்டிக்காலில் நின்றபடி, ஏதோ பழைய காலத்து ஆங்கிலக் கதைகளில் வரும் காதலன் போல சாரி சொல்வானா..

 
தலையைக் கலைத்துவிட்டபடி, அசட்டுச்சிரிப்பொன்றை பற்களில் தேக்கி, என் இடுப்பணைத்து நாய்க்குட்டி போல் உரசி என்னை நாணச் செய்வானா

 
கதவு மணியை அடித்துவிட்டு, நான் திறந்து பார்க்கும் போது, தெரியாமல் ஒளிந்து நின்று பின்புறமாய் தட்டிவிட்டு, கழுத்தோரம் மூச்சுவிட்டு கண்களை சொருக வைப்பானா

 
என்னை அப்படியே அலாக்காய் காருக்குள் தூக்கிச்சென்று கடற்கரையோரத் தெருவில் காற்று முகத்தில் அடிக்குமாற்போல் வேகமாய் ஓட்டிப்போய் ஓரமாய் நிறுத்தி ஐஸ்க்றீம் வாங்கிக் கொடுப்பானா..

 
கண்ணா.. என் செல்லமில்லையா.. இன்னைக்கு கொஞ்சம் லேற்றாயிட்டு கண்ணம்மா.. நான் என்ன பண்ண.. இந்த பொஸ் தொல்லை தாங்க முடியல.. பேசாமல் இருபத்துநாலு மணிநேரமும் உன் முகம் பார்த்துட்டே இருக்கிறமாதிரி ஒரு வேல பார்க்கப்போறேன் என்று என்னை மயக்கும் வசனம் பேசுவானா

 
இல்லை கோபத்தில் சிவந்த என் கன்னங்களை கைகளால் பற்றியபடி, முகம் முழுக்க முத்தத்தால் ஒற்றியெடுப்பானா..

 
எண்ணங்கள் எங்கெங்கோ அலைய.. அவன் கார் தெருவில் வளையும் சத்தம்.. மெதுவாய் பூனை போலே வீட்டுக்கு முன் அதை நிறுத்தி கதவை மெதுவாய் அடைக்கும் ஓசை.. பூனை போல் பதுங்கியபடி, ஒற்றை ஒற்றையாய் கம்பீரமாய் நடந்து வரும் ஒலி.. மெதுவாய் ‘அம்மு’ என்றழைத்தவாறு கைகளால் கதவைத்தட்டுவது கேட்டும் நான் அமர்த்தலாய் அமர்ந்திருக்க..

 
‘அம்மு.. கதவைத்திற டார்லிங்’ என்று கெஞ்சும் குரலில் தொனித்த களைப்புக்கேட்டு கதவைத்திறக்க, மந்தகாசச்சிரிப்புடன், கண்ணடித்து, என் கழுத்து வளைவில் முகம் பதித்து..கைகளை இடையோடு வளைத்து, இறுக்கமாய் அணைத்து..

 
போடா என்று சொல்லியபடியே கண்கள் சொருக.. என்னை என்னவனிடம் இழக்கத்தொடங்கினேன்..

 

Photo Credits: Google

 

 

வனதேவதை

அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஒற்றையடிப் பாதை.. பொட்டுப் பொட்டாய் வெளிச்சக் கற்றைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.. அது இருட்டுக் காடாகத்தான் இருந்திருக்கும்.. அந்தக் காட்டுக்குள் ஒரு வெள்ளைக் குதிரை.. அதுக்கு மேலே ஒரு அழகான இளவரசி.. குதிரையின் கால் குளம்புச் சத்தம் மட்டும் தனித்துக் கேட்க சில்வண்டுகளின் கதறல் ஒருபுறம், கொப்புகளுக்குள் பாய்ந்தோடும் குரங்குகள் ஒரு புறம்.. வளைந்து நெளிந்து மரமேறும் மலைப்பாம்பு ஒருபுறம்..

 
பயமேயில்லாமல்.. நிதானமாய் அந்தக் குதிரையும் அதன்மேலிருக்கும் குமரியும்.. மெல்லிய இடை, தோள்வரை புரண்ட கூந்தல்.. மழைக்காடு என்றதனால் முகத்தில் தூசி தும்பு ஏதுமின்றி சுத்தமான முகம், குதிரையோட்டத்திற்கேற்ற கருநீல ஆடை, மெதுவாக காட்டுக்குள் நடைபோட்ட அவர்கள் மலை அடிவாரத்திற்கு வந்துவிட்டார்கள்

அண்ணாந்து பார்க்கும் போதே நெஞ்சிற்குள் சில்லென்று ஒரு பயம்.. உயரம் ஒரு புறம், உச்சியே தெரியாத வகையில் வெண்கிரீடம் அணிந்தது போலிருந்த அந்த மலை சாதாரணமானவர்களுக்கு பயத்தைத் தான் தந்திருக்கும்.. இவளோ எந்த வித சலனமுமின்றி பக்கத்திலிருந்த காட்டுப்பூவைப் பிய்த்து மணந்தபடி மெதுவாக குதிரையின் வயிற்றில் அதற்கு நோகாமல் எத்தினாள்..

 
அவள் இடையில் நீண்டு தொங்கும் வாள் அவள் அழகிய வீராங்கனை என்று பார்ப்பவர்களை மதிப்பிட வைத்தது.. பயமேயில்லையா இந்தப் பெண்ணிற்கு.. மனித ஜீவராசியே அற்ற இந்த அத்துவானக் காட்டில் இவளுக்கு என்ன வேலை.. எதற்காக கடுங்காடு தாண்டி இந்த மலையில் ஏறப்போகிறாள்.. பார்க்கும் போதே சில்லிட வைக்கும் குளிர் இவளை ஒன்றும் செய்யவில்லையா? சற்றும் சளைக்காமல் மௌனமாக இவள் தேடிப் போவதென்ன?

 
டொக் டொக் என்ற சத்தம் சருகுகள் மிதிபடும் ஓசை.. சடசடவென்று பாய்ந்தோடும் முயல்கள்.. இருட்டுப் புதருக்குள் தெரியும் ஜோடிக் கண்கள்..எதையும் சட்டை செய்யாமல் மெதுவாக மலையேறி ஒரு சிற்றருவி ஊற்றெடுக்கும் மலை உச்சிக்கு வந்துவிட்டாள்..

 
அடடா.. காட்டுக்குள் பார்த்தது கால்வாசி தானோ.. என்ன அழகு இவள்.. சந்தன நிறம்.. சட்டென ஈர்க்கும் கண்கள்.. செப்பு வாய், எள்ளுப்பூ நாசி, ச்சா எங்கே இந்த கவிஞர்கள் எல்லாம்..
கொ…கொஞ்சம் பொறுங்கள்.. என்ன செய்கிறாள் இவள்? உறையிலிருந்த வாளை எடுத்து உயரத்தூக்கி தனக்குள் ஏதோ முணுமுணுக்கிறாள்..

 
அப்படியே துள்ளித் தரையில் குதித்து.. சுற்றுப்புறத்தை சலனமின்றி பார்க்கிறாள் .. இவள் வந்தது அறிந்து ஒரு கூட்டம் மான்கள் மருண்ட பார்வையுடன் எட்டிப் பார்க்க.. கிளிகளும், காட்டுப் பறவைகளும் பாட்டுப்பாட.. சிற்றோடையின் வெள்ளிக் கம்பிகள் இவள் மீது பிரதிபலிக்க.. ஏதோ வெள்ளி ராஜகுமாரியாய்..

 
குதிரையிலிருந்து தன் பொருட்களை இறக்கி, அதற்கு தண்ணீர் காட்டி தானும் அருந்துகிறாள்.. பனி விலகாமலிருந்த அந்த மலையின் சமதரையில் ஓரத்திலிருந்த கன்னிக் குகை ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.. தன் உடமைகளை தரையில் வைத்துவிட்டு அப்படியே நிர்ச்சலனமாய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து..

 
பவள வாய் பிரிகின்றது..

 
அம்மா.. உன்னை நம்பி வந்திருக்கிறேன்.. இனி எனக்கு நீதான் துணை.. இன்று முதல் நான் உன் பிள்ளை.. அப்படியே மலைமாதாவை மடங்கி முத்தமிட்டவள் சுற்றிப்பார்த்து புன்னகை செய்தாள் தன் புதிய தோழர்களைப் பார்த்து..

 
மெல்ல அவர்கள் நகர்ந்து அவளுக்கருகில் வர.. கண நேரத்தில் தேவதையானாள்.. வன தேவதையானாள்..

பீற்ரூட்

பழக்கமில்லாத அந்தப் பனிக்குளிருக்குத் தோதாக ஸ்வெற்றரின் ஸிப்பரை இழுத்து மூடியபடி, கொஞ்சம் தயக்கத்துடன் அந்தக் கல்லூரிக்குள் நுழைந்தேன்.. பேசாமல் மும்பைலயே ஹாஸ்டல்ல இருந்து படிச்சிருக்கலாம்.. சொன்னாக் கேட்டாத்தானே.. பப்பா.. தான் போறது போதாதுன்னு என்னையும் இழுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்துட்டார்..

 
ஊரா இது.. கர்மம்.. பற்கள் நடுநடுங்கும் குளிர்.. பார்க்கும் இடமெல்லாம் பீற்ரூட் தோட்டங்கள்.. அட்டைகள்.. ஒரு சிகரட் வாங்கிறதுக்கும் கூட பயமா இருக்கிறது.. யாராவது பப்பாகிட்ட சொல்லிடுவாங்க.. இதுவே மும்பைன்னா.. லீனா உதட்டிலிருக்கும் சிகரட்டை எடுத்து பகிர்ந்து கொண்டிருக்கலாம்..

 
பப்பா எஸ்பி.. இந்த ஊரில் தொடர்ந்து ஆட்கள் காணாமல் போறாங்களாம்.. அதைக் கண்டுபிடிக்க இவர்தான் சரியான ஆளாம்.. டிரான்ஸ்பர்.. நான்.. மம்மா, பப்பா.. மம்மாவுக்கும் ஊர் பிடிக்கவில்லை.. ஒரு சோஷியல் அக்டிவிற்றி இல்ல.. லேடீஸ் கிளப் இல்லன்னு இப்பவே முணுமுணுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு அதைவிட மேல்.. அடச்சே.. என் கேர்ல் பிரென்ட்ஸ் எல்லாரும் என்ன மிஸ் பண்ணுவாங்களேன்னு நினைச்சுகிட்டே கல்லூரி வாசலை அடைந்தால்..

 

 

ஹப்பா.. என்னா Structure.. என்ன Figure.. புதுக் கோதுமை போல Colour..  மூங்கில் போல நிகுநிகுவென வளர்ச்சி, scarf க்குள் அடைக்கப்பட்ட அடர்பழுப்புக்கூந்தல்.. இளநீலக் கண்கள்.. செந்நிற உதடுகள்.. வாவ்.. தாங்க்யூ பப்பா.. மனதுக்குள் சொல்லியபடி மெதுவாக அருகில் சென்று என் கிளாஸ் இருக்குமிடத்தை விசாரிப்பது போல பேச ஆரம்பித்தேன்..

 
“என்கூட வாங்க..” அசைந்த அந்த உதடுகளில் ஏதோ ஒரு வசியம்.. அடர் இரத்த நிறத்து இதழ்கள்.. அதற்குள் முத்துப்போல பற்கள்.. அதிலும் அந்த தெற்றுப்பற்கள், என் கண்களை அங்கிருந்து எடுக்க முடியாதபடி கட்டிப்போட.. இப்படியே இழுத்து ஒரு முத்தம் வைத்தால் என்று எண்ணியதைத் தவிர்க்க முடியவில்லை..
“ஹலோ.. போலாமா?” கைகளை என் முன் ஆட்டியபடி கேட்டது ஏதோ மசமசப்பாய் தெரிய மயக்கத்திலிருந்து விடுபடமுடியாமல் அவளை பின்தொடர்ந்தேன்.. அடுத்து வந்த நாட்களில் அவளுடன் எப்படியாவது பேசணும் என்ற முயற்சியில் கழிந்து இப்போது கொஞ்சம் நெருக்கமாகவும் ஆகிவிட்டேன்.. அவளுடன் இருக்கும் வேளைகளெல்லாம் ரம்யமாயிருப்பது ஏனென்று தெரியவில்லை.. இது தான் காதலோ?
அந்த காலேஜின் அழகு ராணி அவள் தான்.. ஸாரா.. அப்பா அம்மாவுடன் ஊரிலிருந்து கொஞ்சம் விலகியிருக்கும் மலையோரத்துக் காட்டுக்கு அருகில் தான் அவள் பண்ணைவீடு.. சுற்றிவர பீற்ரூட் தோட்டம்.. எப்போதும் ஒரு பாட்டிலில் செந்நிற ஜுஸ் வைத்துக் குடித்துக்கொண்டிருப்பாள்.. பீட்ரூட் ஜுஸாம்.. தன் அழகுக்கு அதுதான் காரணம் என்று ஸாரா சொன்ன நாளிலிருந்து என்வீட்டு சமையலில் ஒவ்வொரு நாளும் பீட்ரூட் இருக்க வேண்டும் என சமையல் காரனிடம் சொல்லிவிட்டேன்..

 
காதலே ஹம்பக் என்றிருந்த நான் எப்படியாவது அவளைக் காதலிக்க வைக்க வேண்டும என்பதையே குறிக்கோளாய் கொண்டேன்..

 
இன்றோ.. பழம் நழுவி பால்ல விழுந்தது போல.. “ஜெரேஷ்.. இன்னைக்கு என் மம்மி டாடி ரெண்டு பேரும் வீட்ல இல்ல.. வர்றியா.. கம்பைன் ஸ்டடி பண்ணலாம்” ன்னு என் மோகினி அழைக்க.. தரையில் கால் பரவாமல் வீட்டுக்கு சென்று ப்ரெஷ்ஷாகி.. அவளிருக்குமிடம் நோக்கி சென்றேன்.. போகும் போதே மூடுபனி.. முன்னிரவு ஏழு மணியே நள்ளிரவு போல் தோன்ற.. அவள் வீடு சென்றடைந்தேன்..
பீட்ரூட் தோட்டத்திற்கு பொருத்தமாக அவளும் செக்கச்செவேரென்ற நிறத்தில் முன்கழுத்து மூழுவதும் தெரியும் கவுண் ஒன்றை அணிந்தபடி.. பீட்ரூட் ஜுஸ் ‘சிப்’பிக் கொண்டிருந்தாள்.. “ஸாரா.. இருக்கிற சிவப்பு போதும்.. இன்னும் எதுக்கு” ஹாஸ்யமாய் கேட்டபடி அவளிருந்த ஸோபாவிற்குள் நானும் புதைந்தேன்..
“ச்சே போடா.. இது இல்லைன்னா நான் செத்துப்போயிடுவேன் தெரியுமா” என்றவளின் வாயைப் பொத்திய நான் அந்தக் கைகளை விலக்கத் தோன்றாமல் விரல்களால் உதடுகளை அளக்கத் தொடங்கினேன்.. மறுப்பேதும் சொல்லாமல் ஒரு மோன நிலையில் விழிகள் செருக.. இன்னும் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்தவளை இன்னொரு கரத்தின் வளைவுக்குள் கொண்டு வந்து என்னையறியாமலே முத்தமிட ஆரம்பித்தேன்..

 
ஜெ.. ஜெ.. என்று அவள் முனக முன்னேறிய நான் மெதுவாக அவள் இதழ்களை இரத்தம் வரும்படி அழுந்தக் கடித்தேன்.. அவள் விரல் நகங்கள் கிழித்து என் உடலிலும் இரத்தம்.. “ஜே.. வேணாண்டா..” என்றவளை மதியாமல் இன்னும் நெருக்கமாய் இறுக்கி அணைக்க.. தாபத்தின் உச்சிக்குச் சென்ற அவள் எனனை சோபாவில் பரப்பி, படரத்தொடங்கினாள்.. என் முகமெங்கும் முத்தமிட்டாள்.. காது மடல்களை கௌவிப் பிடித்த போது அவளை இறுக அணைத்துக்கொண்ட என்னை இன்னும் அழுத்தியபடி கழுத்துக்குள் முகரத்தொடங்கினாள்..

 
அவள் பட்ட அவஸ்தை என்னிடம் மாற.. ஸாரா என்று அரற்றிய என்னைப் பிடித்திருந்தது அவள்தானா இல்லை ஒரு ஆணிண் அணைப்பா என்பது போலிருக்க, எலும்பு நொருங்கும் படி அணைத்த அவள்.. மெதுவாக என் செவிகளுக்கு அருகில் வந்து.. “Sorry J.. இனிமேல் முடியலைடா.. உன்ன முதல் முதலா பார்த்த நாள்ள இருந்து உன்ன டேஸ்ட் பண்ணணும்ன்னு ப்ளான் பண்ணிற்றே இருந்தேன்” என்னும் போதே.. கண்கள் இரத்த நிறத்தில் மாறத் தொடங்க.. எடுப்பாய் தெற்றுப் பல்போலிருந்த அவளின் வேட்டைப் பற்கள் நீள ஆரம்பித்து என் கழுத்துக்குள் புதைந்து என் இரத்தத்தையெல்லாம் ஸ்ட்ராவால் உறிஞ்சுவது போல இரத்ததத்தை உறிய ஓலமிடக்கூட முடியாதவனாய்.. அந்த இரத்தக்காட்டேறிப் பெண்ணை பார்த்தபடியே மெதுவாய் இறக்கச் சரிந்தேன்..

துடைப்பம்

ஊரெல்லாம் கொஞ்ச நாட்களாய் ஒரே பரபரப்பு.. திடீர் திடீரென்று பொருட்கள் காணாமல் போய் வேறொரு இடத்தில் வீசிக்கிடைப்பது, வீட்டுக் கதவுகளுக்கு முன்னாலும், வீதியெங்கும் துடைப்பங்கள் இறைந்திருப்பது.. மிருகங்கள் சிலையாகி உணர்வற்று போவது.. மனிதர்கள் ராத் தூக்கத்தில் தம்மையறியாமல் எழுந்து நடமாடி எங்கெங்கெல்லாமோ விழுந்து கிடப்பதென்று பதற்றத்தில் உறைந்து கிடந்தது..

 

பனி பொழியும் மாலைப்பொழுது அது.. வட அமெரிக்காவின் அடர் மலைக்காட்டுப்பகுதி ஒன்றுக்கு அருகிலிருக்கும் நகரெமென்று சொல்ல முடியாத ஒரு மீனவக்கிராமம்.. இத்தனை நாட்களாய் எந்தவிதப் பரபரப்புமின்றி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த திடீர் பரபரப்பு அன்றாட வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.. மீன்பிடிக்கவோ, வேட்டையாடவோ மக்கள் வெளியே சென்று நாட்கணக்காகி விட்டது.. ஊரிலிருந்த ஒரேயொரு பாடசாலையும் மூடப்பட, குழந்தைகளை பனிமனிதன் செய்து விளையாடக்கூட வெளியில் விடாமல் வீட்டிற்குள் பெற்றோர் காவலிருந்தனர்..

 

கொலைகள் நடந்திருந்தால் கூட இந்நேரம் கண்டு பிடித்திருக்கலாம்.. திருட்டுப்போயிருந்தால் கூட நியாயமிருக்கிறது.. இது வெறுமனே மக்களை பயங்காட்டுவதற்காய் யாரோ செய்யும் விஷமம் என Church ரெவரன்ட் சொன்ன அடுத்த நாளே அவர் மகள் ஒட்டுத்துணியின்றி, ஊருக்கு வெளியேயிருந்த ஓடைக்கு அருகில் ஒதுங்கிக் கிடந்தாள்..

 

வீம்பாக பேசிய இன்னும் சில ஊர்க்காரர்களுக்கும் இதுபோலவே நடக்க.. கருத்துகளைச் சொல்லக்கூட பயந்துகொண்டு ஊர் பெருசுகளும் ஒடுங்கிப்போனார்கள்..

 

FBI க்கு சொல்லலாமா என்ற என்னுடன் சேர்ந்து ஷெரீப் தன் வெள்ளி நிற முடிகளை பிய்த்துக்கொண்டிருந்த போது தான் ஷெரீப் அலுவலகத்திற்குள் அவள் வந்தாள்.. தங்க நிறம்.. தலையில் தொப்பி, சன்கிளாஸ், கறுப்பு நிற சம்மர் டிரெஸ், குதியுயரச் செருப்பு, ஓவர்கோட் கையில் ஒரு அவலட்சணமான கருநிற நாய் என ஒரு புதிர்போல..

 

அன்ரூ.. என்ற அவரின் பார்வையின் பொருளறிந்து.. “yes madame.. How may I help you?” என்ற என்னைப் பார்த்து மந்தகாசமாக சிரித்தவள்.. நான் ஒரு உயிரியல் விஞ்ஞானி, இங்கிருக்கும் காட்டு மிருகங்கள், பறவைகள் பற்றி ஆராய வந்திருக்கிறேன்.. ஒரு வருடம் வரை இருப்பேன்.. தங்குவதற்கு வீடு ஒன்று வேண்டும்.. இங்கு பாதுகாப்பாக.. என்றவளுக்கு பதிலளிக்க முன் Chief இன் குரல் “அன்ரூ.. that wood house by the lake.. shall we allocate it to her..” என்றவரை அதிசயமாகப் பார்த்தேன்..

 

கொஞ்சம் சபலிஸ்ட் தான்.. அதற்காக யாரையும் ஊருக்குள் குடியிருக்க அனுமதிக்கக்கூடாது என்ற ஊர்க் கட்டுப்பாட்டை மீறுவதா.. அதிலும் இப்போது இங்கிருக்கும் நிலையில் இவளை உள்விடுவதே ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது போலதான்.. பொதுவாகவே ஊருக்குள் நுழைபவர்கள் ஷெரீபிடம் அனுமதி கேட்டு நுழைவது வாடிக்கை தான்.. ஆனால் இத்தனை நீண்ட காலத்திற்கு என்று கேட்டு வருவது முதல் முறை என்பதோடு.. ஷெரீபின் கண்கள் சொன்ன பாஷையும் வேறாக இருக்க, அவரின் கீழ் வேலை செய்யும் செக்கன்ட் ஆபிசர் நான் என்ன செய்வது.. அவளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக அழைத்துச் சென்றேன்..

 

வழியில் நடமாடிய ஒன்றிரண்டு பேரும், என் காரையும், அதிலுள்ள காரிகையையும் அதிசயமாய் பார்த்தபடி இருக்க.. ஓடையோரமாய் இருந்த அந்த மரவீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.. கதவைத் திறந்ததும் மக்கல் நெடியை பின்தள்ளி என்னை ஆச்சரியப்பட வைத்தது வீடு முழுதும் அடைந்து கிடந்த துடைப்பங்கள்..

 

நீண்ட குச்சியுடன், வால்போன்ற துடைப்பங்களில் இத்தனை வகையா என்று மிரண்டுகொண்டிருந்த போது.. அன்ரூ..தாங்க்யூ.. இதற்காகத்தான் இங்கு வந்தேன் என்றவள் என்னை இழுத்து அணைத்து முத்தமிட்ட போது, அடங்கிப்போய் சாதுவாயிருந்த நாயின் கண்கள்.. எதையோ ஞாபகப்படுத்த நினைத்துக்கொண்டிருக்கும் போதே முத்தமிட்ட இதழ்கள் பனிக்கட்டிபோல் குளிர என்முன் நின்ற பெண் பனிச்சிலையாகி பின் உருகி நீராய் வழிய ஆரம்பித்தாள்..

 

கண்களில் குரூரத்துடன் எம்மை பார்த்துக்கொண்டிருந்த அவள் கையிலிருந்த நாயோ..விலுக்கென்று உதறலுடன் மனுஷியாய் உருவெடுக்க.. மார்க்ரட்.. இவள்தான் இந்த வீட்டில் இதற்கு முன் இருந்தவள்..

 

பாவம்.. எங்கிருந்தோ வந்தவள்.. தெருக்களை சுத்தம் செய்வது வேலை.. அழுக்கடைந்த உடைகள், அலங்கோலமான தோற்றம்.. தலையில் ஒரு பனிக்குல்லாய்..மேலே அணிந்திருக்கும் கம்பளிக் கோட்டின் ஒரிஜினல் நிறம் என்னவென்று யாருக்கும் தெரியாது.. சுருக்கம் விழுந்த முகம்.. கிளி மூக்கு.. சூனியக்கிழவி என்று பயந்து சிறுவர்கள் அவள் இருக்கும் பக்கமே திரும்ப மாட்டார்கள்.. ஊரவர்களின் அத்தனை அழுக்குகளும் தெரிந்தவள்.. யாருக்கும் அவளைப் பிடிக்காது..

 

வீட்டில் சூனியம் செய்கிறாள் என்று ஷெரீப் சொன்ன குற்றச்சாட்டை ஏற்று எல்லாருமாய் சேர்ந்து இவளை  துடைப்பத்தால் அடித்து அவமானப்படுத்தி அடித்து குற்றுயிராய் காட்டில் தூக்கி எறிந்தோம்.. அதே மார்க்கிரட்..

 

உள்ளுக்குள் குளிர் நடுக்கம் எடுக்க என் கைகளை பார்த்தேன்.. பனிக்கட்டியாய் மாற ஆரம்பித்தது.. மார்க்கிறட் சலனமின்றி அருகிலிருந்த துடைப்பத்திற்கு அருகில் சென்று அதைத் தடவிக்கொடுத்தபடி அன்ரூ.. திஸ் ஜஸ்ட் த ஸ்டார்ட்.. எவெய்ட் போர் மோர் (Andrew.. This is just the start.. await for more) என்றபடி துடைப்பத்தில் ஏறி வீட்டைச்சுற்றி பறக்கத் தொடங்கினாள்..

தன்னந்தனியாய்..

யாருமற்று தன்னந்தனியாக புறப்பட்ட பயணம்.. நானும் எனது சிறிய விமானமும்;.. தேவையான பொருட்களும் தனிமையுமென.. இந்த முறை எத்தனை நாட்கள் இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.. திரும்பிப் போகவும் விரும்பவில்லை..

 
உச்சியில் எரிமலையுடன் இருக்கும் ஹவாயின் பெயர் சூட்டாத மனித சஞ்சாரமற்ற தீவுகளில் ஒன்றில் அமைந்திருக்கும் இந்தக் மலைக்காட்டிற்குள் என்னென்ன ஆபத்து இருக்குமென்று எனக்குத் தெரியாது.. அது பற்றி கவலையுமில்லை.. நிம்மதியாக, நிர்ச்சலனமாக, அமைதியான இடத்தில் காற்றின் ஒலியோடு உறவாடலாமென்ற உத்தேசத்துடன் இந்த நீண்ட பயணம்..
நீண்டு அடர்ந்த மரங்களும், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஒட்டுண்ணிக்கொடிகளும் ஒளியை துரத்தியடிக்க, அங்குமிங்குமாய் சில மிருகங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்துகொண்டிருந்த என்னை அசுவாரஸ்யமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அசங்காமல் குதித்தோடின..

 
காற்று இன்னும் கொஞ்சம் உடலைச் சில்லிடவைக்க..நான் தேடிய இடம் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையுடன் அந்த சின்னத்தீவின் அடர்வனத்திற்குள் தாழ்வாக பறக்க ஆரம்பித்தேன்..

 
அது மலையுச்சியில் பாறையோரத்து நீர் வடிந்தோட விண்நோக்கிய மரங்கள் அசைந்தாடும் பசுங்காடு.. தரிப்பதற்கு பொருத்தமான இடம்பார்த்து மெதுவாக கீழிறங்கி, தொலைநோக்காக ஒரு பார்வை பார்த்தவாறே.. இதுதான் என் இடம்.. யாராலும் இங்கு சுவாதீனமாக வரமுடியாது.. அதிலும் எப்போது வெடிக்கும் என்ற எரிமலை இருக்கும் இடத்திற்கு விஞ்ஞானிகளே வரப் பயப்படுவார்கள்.. கொஞ்சம் முயன்று விமானத்தை உள்ளே தள்ளிவிட்டால் மரங்களின் மறைவில் யாராலும் என்னைக் கண்டுபிடிக்க முடியாது.. எண்ணியபடியே அருவி நீரை இரண்டு கரங்களாலும் ஏந்திக் குடித்தேன்..

 
இருள் பரவும் அந்த நேரத்தில் கிடைத்த ஏகாந்தத்திற்கு விலையாக எதனையும் தரலாம் என்று எண்ணியபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு கூடாரத்தின் முன் எழுப்பிய சிறுதீயைப் பார்த்து சிந்தித்தவாறு இருக்கையில் சின்னதாய் நிலநடுக்கம்.. அப்படியானால் என் வீடு இருக்கும் தீவிலும் ஏற்பட்டிருக்கலாம்.. அந்தக் களேபரத்தில் என்னைத் தேட மாட்டார்கள்..

 
புத்திசாலி, தைரியசாலிப் பெண்களை ரசிக்கும் ஆண்கள், தங்களுக்கு சொந்தமாகும் பெண்ணிடம் அவை இருந்தால் மகிழ்வதில்லை.. மாறாக, எந்தெந்த வகையில் அவளை வீழ்த்தலாம் என்று வியூகம் அமைத்து சுயபச்சாத்தாபத்தில் பெண்களை வீழ வைத்துவிடுவார்கள்.. பணம் தான் வாழ்க்கையா? அதற்காக உடம்பின் ஒவ்வொரு அணுக்களிலும் சந்தேகத்தை ஒளித்து வைத்து, உள்ளொன்றும், புறமொன்றும் பேசும் ஆணின் வார்த்தைகளால் தன்மானத்தில் அடிவாங்கி, தலை குனிந்து நடைபிணமாய் வாழும் வாழ்க்கையை விட தனிமையே மேல்.. ஆபத்துகளைக் கண்டு எனக்குப் பயமில்லை..

 
இந்த இருளை விட எதனையும் மற்றவரிடம் வெளிக்காட்டாத எத்தர்களின் எடைபோட முடியாத முகங்களையும், அதன் பின்னே ஒளிந்திருக்கும் இருண்ட மனத்தின் குரூரங்களுமே என்னை பயங்கொள்ள வைக்கின்றன..


சில் வண்டுகளின் ஒலியும், சில்லென்ற குளிரும், சித்தத்திற்குள் கிடந்த பித்தத்தையெல்லாம் எடுத்து வீசிவிட, இருட்டின் கருவறைக்குள் உறங்கிப்போனேன்..

 

இயற்கை என் தாய்மடி போல தாலாட்டிக் கொடுக்க தனிமைமைக்குத் துணையாக தண்மதியை வைத்துக்கொண்டு மெதுவாக கனவுலகிற்குச் செல்லத் தொடங்கினேன்..

 

 

நடிகை

வாஷ் பேசினுள் சிவப்பு, சந்தனம், கருப்பு என நிறங்கள் நீரோடு சேர்ந்து ஓடியது.. பூசிய அரிதாரத்தை கலைக்கும் போது கண்ணோரம் அனுமதியின்றி பெருகிய கண்ணீரும்; தண்ணீரோடு கரைந்து போனது.. சிரிப்பு முலாம் பூசிய இதழ்களை சாதாரணமாக்கி கழுவித் துடைத்தபின் என் நிர்வாண முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போது நிர்மலமாயிருந்தது.. மனசு மட்டும் மறைக்க முடியாத மனவேதனைகளை தாங்க முடியாமல் விம்மியழச் சொல்லி கதறிக்கொண்டிருந்தது..

 

மெதுவாக நொருங்கிப்போய் சிங்க்கில் முகம் சரித்து அழத்தொடங்கினேன்.. இந்த மேக்கப் முகத்திற்குப் பின்னால் முகவரிகள் இல்லைதான்.. ஆனால் மனவலிகளின் சாபத்தால் மரணித்துப்போன உணர்வுகள் மட்டும் விட்டேனா பார் என்று எட்டிப்பார்த்தால்.. முயன்று அடக்கி அதனைக் கட்டுக்குள் கொண்டு வந்து புன்னகையால் புனுகிட்டு மறைத்துக்கொள்வேன்..

 

பகல்கள் என்னை அதிகம் பயமுறுத்துவதில்லை.. மனிதர்களுடன் மனிதர்களாக கலந்துவிடுவேன்.. இரவுகள் மட்டுமே பூட்டி வைத்த சிறையிலிருந்து விடுதலைபெற்று மிரட்டும் அரக்கன் போல் என்னை மருட்சியடையச் செய்கின்றன..

 

நான் ஒரு நடிகை.. நானுண்டு என் வேலையுண்டு என்று இருக்கும் நடிகை.. முதற்காதல் தோற்றுப்போனபின் கலையே வாழ்க்கை என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் தான் மற்றொரு காதல் கல் தடுக்கி கவிழ்ந்து விழுந்தேன்..

 

நான் எல்லோருக்கும் நல்லவள்.. என் கணவனைத் தவிர்த்து.. காசில்லாமல் அலைந்த போது கைகொடுத்த இந்த நடிகை இன்று அவன் கால் தூசிக்கு பெறுமானமற்றவளாம்.. உள்ளத்தை எதிரொலிக்கும் உதட்டின் வார்த்தைகள் விஷக்கங்குகளாக வீசி எறியப்படும் போது எதிரே நிற்கும் என் மனசெல்லாம் பொத்தல்கள் விழுவது அவனுக்கு எப்படித் தெரியும்?

 

அவனை விட எனக்கு நான்கு வயது அதிகம்.. என்னைப் பார்த்து காதலில் தலைகீழாய் குப்புற விழுந்ததாய் அவன் சொன்ன போது ஏனென்று தெரியாமல் நானும் மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவன் வசமானேன்..

 

அவன் வீட்டாரே ஒதுக்கித் தள்ளிய வேளையில் வேலையற்றிருந்த அவனுக்கு சௌகர்யங்கள் கொடுத்து வீட்டுத்தலைவனாய் மதித்திருந்த வேளையில் அவனுக்கு நான் மட்டுமே உலகமாய் இருந்தேன்.. இடையில் இரண்டு வருடங்கள ஓடிவிட வேலையொன்றை தேடி, காசு சம்பாதித்த அவனைத் தாங்கிப்பிடிக்க வந்த சொந்தங்களுக்கு என்னை ஏனோ பிடிக்கவில்லை

 

‘எதற்கு அவளுடன்.. அவள் நடத்தை சரியில்லை என்று ஊரில் சொல்றாங்க.. உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? உனக்கு பொருத்தமான பொண்ணா பார்த்து நாங்க கட்டித் தாறோம்..விட்டுட்டு வா..’ கரைப்பார் கரைத்தால் என்னவாகும்?

 

என் மாதவிடாய் பிரச்சனை மலடி என்று பெயர் தந்தது.. நண்பர்கள் எல்லாரும் என் திருட்டுக் கணவர்களாக நான் சம்பாதிக்கும் காசுகூட கட்டில் மீது புரண்டு எடுத்துவரப்பட்டதாய் கூசாமல் சொல்லப்பட்டது

 

என் ஒவ்வொரு அசைவும் கேலியாக்கப்பட்டு.. ஒவ்வொரு பேச்சும் எனக்கெதிராய் திருப்பிவிடப்பட்டு.. மணிக்கணக்கில் பேசிய நேரங்கள் குறைந்து முகம் பார்ப்பது கூட அவனுக்கு பிடிக்காமல் போனது..அணியும் ஆடை முதல், என் சமையல் வரை குறை சொல்லிக் குத்திக்காட்டப்பட்டது..

 

என் காதல் உண்மையானது.. இன்னும் அவனை காதலிக்கின்றேன்.. என் உணர்வுகளைக் கொன்று புதைத்து என்னை அவமானப்படுத்தியும் கூட என்னால் அவனை மறக்க முடியுதில்லை..

இரண்டு வாரங்களுக்கு முன் தேவையை சொல்லிவிட்டான்.. விவாகரத்து.. விக்கித்து போய் நின்ற என்னைத் தாண்டி சென்றவனைப் பார்த்தவாறு நின்ற என்னை நிஜவுலகம் இழுத்து வந்தது..

பூசிய அரிதாரத்துடன் புன்னகையையும் சேர்த்து அணிந்தவாறு காலை முதல் மாலை வரை என் நடிப்பை முடித்து விட்டு ஓசையற்ற வீட்டிற்குள் ஒலி துளைக்காத என் அறையின் மத்தியில் நின்று ஓ வென்று அழும் அழுகையும், ஓலமும் அவனுக்கு கேட்காது..

நான்.. நாளையும் எல்லோர் முன்னும் திரும்ப நடிக்கத் தொடங்கவேண்டும்.. சந்தோஷமாக இருப்பதாக – நிஜவாழ்க்கையிலும்..