Archives

இது போதும் எனக்கு

BzdXliDCMAAzAoNதனியாய் ஒரு இடம்வேண்டும்
நானும் தனிமையும் சேர்ந்திருக்க
சத்தம் எழுப்பாமல்
வியர்வை மட்டும் விரட்டிச்செல்லும்
மென்காற்று மட்டும் துணையிருக்க
மலையுச்சியின் சரிவோரம்
மாபெரும் கடல் சூழ்ந்திருக்க
கரு வனம் சூழ்ந்த
அந்த பெரும் பாறை உச்சியில்
சிறுகுருவிகளின் கீச்சிடலுடன்
சிறுகுடிசை மட்டும் போதும் எனக்கு

படிப்பதற்கென பல புத்தகங்களும்
ரசிப்பதற்கென இசைத்தட்டுகளும்
படுப்பதற்கென சிறு மெத்தையும்
பார்ப்பதற்கென மடிக்கணிணியும்
இசைப்பதற்கென என் கிற்றாரும்
இளைப்பாற ஒரு சிறு குற்றியும்
குளிப்பதற்கென சிறு அருவியும்
குஷியாயிருக்க மான் குட்டிகளும்
மலைப்பதற்கென அண்டப்பெருவெளியும்
மறைவதற்கென அகண்ட பெருவனமும்
போதும் எனக்கு

முகமூடிகள் வேண்டாம்
முரண்பாடுகள் வேண்டாம்
ஜாதிகள் வேண்டாம்
ஜாடைப்பேச்சுகள் வேண்டாம்
அவலங்கள் வேண்டாம்
அகங்காரமும் வேண்டாம்
அலைபேசியும் வேண்டாம்
அநீதியின் சுவடு வேண்டாம்
சுயநலங்கள் வேண்டாம்
சொத்து சுகம் வேண்டாம்
சிறுபிள்ளையாய் குதிக்கும்
சுதந்திரம் மட்டும் போதும் எனக்கு

மழையே மழையே..

dancing

மழையைப் போலவே, மழைக்கு முன்னரான தருணங்களும் மனது மயக்குபவையே..

மெல்லிய சாரலுடன், மெதுவாய் வருடிச் செல்லும் ஈரக்காற்றும்,

சாம்பல் நிறக் கீற்றுடன், கற்றை கற்றையாய் தலைமேல் சுற்றும் கருவண்ண முகில்களும்,

தலையசைத்து மழைநீர்த்துளிகளை வரவேற்கக் கட்டியம் கூறும் கரும்பச்சை இலைகளும்,

மரப்பொந்துக்குள் தன்னை மறைத்துக்கொள்வதற்காய் துள்ளியோடும் அணில் குஞ்சுகளும்,

செல்லமாய் சுருதி சேர்த்து இசைபடிக்கும் சிறுகுருவிக் கூட்டமும்,

இரையை தலைமேல் சுமந்தபடி வரிசையாய் நகர்ந்து செல்லும் எறும்புக்கூட்டமும்,

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து உரக்கக்கத்தும் தவளைகளும்,

கொடியோடு இணைந்து குதிபோடும் ஆடைகளும்,

மண்ணுக்குள் இருந்து மெதுவாய் எட்டிப்பார்க்கும் மண்புழுக்களும்,

நாசிக்குள் புகுந்து நறுமணம் தெளிக்கும் புழுதியோடிணைந்த மண்வாசனையும்

என மழை இராணிக்காக கட்டியம் கூறி, அவளை வரவேற்கக் காத்திருக்கும் ஆயிரம் விஷயங்களுடன்,

ஆனந்தமாய் மழையில் நனைய எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவள் போலவே..

மழைக்கு முன்னரான தருணங்களும் மனது மயக்குபவையே..

danceintherain2

முகமூடிகள்..

chorus_mask_for_oedipus_play_by_jemmanicolejoyce-d3ay08y
முகமூடிகள் மாட்டிக்கொண்டலையும் மனிதர்களுக்கு மத்தியில்
முகமூடியின்றித் திரிந்ததன் பலாபலன்கள் எத்தனை எத்தனை
முகம்பொத்தி அழவைத்தவர்கள் எத்தனை பேர்
முதுகுக்குப் பின்னால் புறம் சொல்லிச் சாய்த்தவர்கள் எத்தனை பேர்
முகமெங்கும் அரிதாரம் பூசி அன்பொழுகக் கதைக்கும் ஆயிரம் மாந்தர்களின் அரிதாரத்தின் பின்னால்
 நெளியும் புழுக்களை பார்த்த பிறகு தான்..
வாழ்க்கையில் புன்னகைகளுக்குப் பின்னால் புண்நகைகள் உள்ளதைக் கண்டுகொண்டேன்..
கருவண்டாய் அலையும் கண்களுக்குப் பின்னால் காமக்கொடூரம் ஒளிந்திருப்பதையும்
கற்கண்டாய் இனிக்கும் பேச்சுக்குப் பின்னால் கனவுகளை அறுக்கும் வாளிருக்கும் என்பதையும் அறியாதிருந்தேன்
அவமானப்படுத்துவது அவர்களுக்கு நகைச்சுவை
அழுகைகூட உறைந்து அணுக்கள் அத்தனையும்  அடிவாங்கிச் சுருண்டு போகையில்
எள்ளி நகையாடும் எத்தர்களின் முகங்கள் மட்டும் எஃகில் பதிக்கப்பட்ட உருவமாய் மனதில் உறைந்துவிடும்
உடலுக்குச் செய்த தீங்கும் உள்ளத்துக்குச் செய்த தீங்கும் ஒன்று சேர்ந்து உலைக்களமாய் மனசைக் கொதிக்க வைக்க
என்ன செய்வதென்றறியாமல் ஏக்கம் கண்ணீராய் உருண்டோட..
என்னிலிருந்து வெளியே சென்று என்னையே பார்த்திருந்தேன்
பாம்பென்றால் சீறும் என்று தெரிந்தும் அதன் தோற்றம் கண்டு தொலைந்து போனது தவறுதான்
பழிவாங்கும் பாம்பைக்கூட மன்னித்து விடலாம், பிடுங்கித்தின்று பக்கத்தில் படுத்துறங்கிப் பின்
பத்தினியா என்று கேட்கும் பரத்தை மக்களை மன்னிக்க முடியாது
நானொன்றும் புனிதையல்ல.. அதற்கென்று
முகமூடி மாட்டிக்கொண்டு பொய்களின் பின்னால் ஒளித்தலையும் கோழையுமல்ல
முகமூடியின்றி இனியும் வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன்
மீண்டும் ஒரு நாளை எதிர்நோக்கி வாழ்க்கைப் பயணத்தில் நடைபோடுகிறேன்..
masj

தனிமரம்..

flat,550x550,075,f

தனிமரம் தோப்பாகாது தான்..

தோப்பாகாத தனிமரத்தின் தனிமையை யாரறிவார்?

பொட்டல் காட்டில் உச்சிவெயில் உடலை உலுக்கும் போது

இருக்கும் உயிரெல்லாம் ஆவியாகிவிடும் அதன் வேதனை தெரியுமா..

வந்து போகும் பறவைகளுக்கெல்லாம் அது சரணாலயம்..

வந்து குந்தியிருந்து அது தரும் பழங்களையும், விதைகளையும் ருசித்துத் தின்றுவிட்டு,

எச்சங்களை மட்டும் மிச்சமாய் கொடுத்துவிட்டு பறந்தோடிப்போகையில்

இந்தத் தனிமரத்தின் தவிப்பு அவற்றுக்குத் தெரிவதில்லை..

சுடுமணலில் குதிகால் நிலத்தில் படாமல் குதித்தோடி வரும் குடியானவர்களுக்கு

மென்நிழலோடு, மெல்லிய தென்றலும் தந்து ஆசுவாசப்படுத்திய இந்த மரத்தின் பட்டைகளில்

தங்கள் பெயர் செதுக்கிச் சென்ற சிங்கங்கள், அதன் நிலை பற்றி சற்றேனும் நினைத்துப் பார்ப்பதில்லை

பூக்காத காய்க்காத மலட்டு மரமே என்று வைதபடி வக்கணை பேசும் கிழவிகள்,

பூத்துக் காய்ப்பதற்கு இணைமரம் வேண்டும் என்று கிஞ்சித்தும் நினைப்பதில்லை

மழைக்காலத்துக்கென சுள்ளி உடைத்துச் செல்லும் போதெல்லாம்

மரத்துப்போயிருக்கும் அதன் உடற்பாகங்களுக்கு வலிக்காதென்ற சுயமுடிவுடன்

மௌனக்கண்ணீரை கண்டுகொள்ளாது, மனதுடைத்துப் போகும் மனிதர்களுக்கு

மழையோடு சேர்ந்து ஆறாய் ஓடி பின்பு பிசினாய் இறுகும் கண்ணீரின் தடம் தெரிவதில்லை

வருபவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் மரத்திற்கு நன்றி சொல்வோமென்ற நல்லறிவுகூட

நன்றிகெட்ட மனுஷர்களின் இதயத்தசைகளுக்கு உறைப்பதில்லை

நிலத்தின் மேல் தெரியும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பவர்கள்

உள்ளுக்குள் ஆணிவேராய் உறையோடிப்போயிருக்கும் உணர்வுகளையோ

செல்லரித்துப் போன சல்லி வேர்களின் சோகத்தையோ தெரியாமலிருப்பது புதிதல்ல..

உருவத்தை மட்டும் பார்த்து உணர்வுகளைக் கொல்லும் மனிதர்கள்.. மரத்துக்கு மட்டுமில்லை

மரத்துப்போயிருக்கும் மனதோடு, நடைபிணமாய் பெருமூச்சின் சூட்டில் கண்ணீரைக் காயவைக்கும் ஆதரவில்லா அபலைகளுக்கும் பரிசாய் தருவதென்னவோ பழிச்சொற்கள் மாத்திரம் தான்..

தனிமரம் தோப்பாகாது தான்.. ஆனால் தோப்பாகுவதற்கு தனிமரம் வேண்டும்..

lonely-tree-51276cfee80fe

வானவில்..

ஒரு சில நேரங்களில், சின்னதொரு விடயம் மனசுக்குள் புளகாங்கிதத்தை ஏற்படுத்திவிடும்.. ஒரு மெல்லிசை, நறுமணம், பிடித்த நபர், பிடித்த பொருள்,படித்த புத்தகம், பார்வைக் கோணம்..

ஒன்றுமே செய்யாமல் ஓய்வாயிருந்த  மழையோடு சேர்ந்த ஒரு மாலைப்பொழுதில்.. இந்த வர்ணப் புகைப்படத்தை பார்த்தேன்..

rain

ஏகாந்த வானத்தில் எங்கிருந்தோ தோன்றிய வர்ணப் பாணமாய் வியாபித்திருந்த வானவில்லின் அழகில் சொக்கிப் போனேன்..

அதிலிருந்து தோன்றிய கற்பனைச்சிதறல்கள்.. உங்களுக்காய்..  எழுத்துத் தூரிகையில் வர்ணம் சேர்த்து ..

வானவில் மட்டும் எப்போதும் அழகுதான்..

இரவில் வராத வானவில்லைக் கனாவில் காண்கின்றேன்..

மழலைகள் சிரித்த மிச்சங்கள் எல்லாம் நிறமாலையாய்.. வானத்தில் வளைந்து கிடக்கிறது வானவில்லாய்..

இருளைக் கண்டு எனக்கு மட்டுமல்ல.. வானவில்லுக்கும் பயந்தான் போல..

தனியாய் சிரித்துக்கொண்டிருக்கும் வானவில்லைப் பார்த்து கிறுக்கா என்று கிறுக்க மாட்டாதா கீழ்வானத்து நட்சத்திரம்?

நிலவூட்டி சோறு கொடுத்தாள் அன்னை எனக்கு நிறங்காட்டி கவிதை கொடுத்த நீயும் தாயே..

ஏழு வர்ணங்களுக்குள் எழுபத்துக்கோடி எண்ணங்களை உயிர்ப்பிக்கும் நீ இன்னொரு கடவுளே..

சிறு துளியின் பிம்பத்திலிருந்து பெரு வெளியில் பரவிக்கிடக்கும் உனைக்கண்டு தைரியம் தோணுதே..

வானவில் கோடுகளின் விளிம்பிலிருந்து விருந்துண்ணலாமாவென்று வரையறையற்ற நினைவுகள்

வந்தாய்.. வனப்புக் காட்டினால்.. நில்லாமல் சட்டென்று நிர்மலமானாய்.. நீயும் காதல் போலதானா? வானவில்லே

என் வெட்கச் சிரிப்பின் கன்னச்சிவப்பை தனக்குள் ஏந்தியபடி.. வர்ணம் சிந்துகிறாய்..

வான தேவதைக்கு ஆடை அளிக்க வளைந்து கிடக்குது கொடியில் வர்ண வர்ணச் சேலையாய் வானவில்..

முடிந்த மழையின் முடியாத சாரல் நீ .. வானவில்லே

விடைகொடுத்த பின்னர் திரும்பிப் பார்க்கும் காதலியாய்.. ஓய்ந்த மழையின்பின்னர் ஒளிந்து பார்க்கிறது வானவில்..

வானுக்கு நீயழகு..

 

Maaya

 

மௌனம்..

மௌனமும் பரிபாஷைதான்..

மௌனங்களின் தாற்பரியம் தெரிந்தோரால் மாத்திரம்

மௌனமாய் பரிமாறிக்கொள்ளப்படும்..

மௌனங்களுக்கு அர்த்தம் கற்பிப்பதை விடுத்து.. மௌனமாயிருத்தலே சிறந்தது..

❤❤

கருத்த இருட்டுக்குள் மின்மினிப்பூச்சியாய்..

நான் கடக்கும் நாட்களுக்கு வழித்துணையாய்

நீ..மௌனமே..

எதிரியாய், ஸ்நேகிதியாய்.. என்னை நானே அறிய வைக்கும் ஞானியாய்..

மௌனமே நீ எனக்கொரு வரமே..

❤❤

சுடுவதாய் நீயும்.. சூனியமாய் நானும் உணர்ந்திருந்தாலும்..

மௌனம் மௌனமாய் தன் பாட்டை பார்த்தபடி..

மவுனித்திருக்கின்றது..

அர்த்தமற்றுப் போன மௌனங்களின் வீரியம் குறைந்திருக்கலாம்..

அதோடு ஒட்டிக்கொண்டு ஓங்கி ஒலிக்கும்

எதிர்ப்பின் குரல் மறைவதில்லை..

மௌனங்கள் அழகாயும், அசிங்கமாயும் ஆக்கப்படுதல் அதன் தவறன்று..

வாய் திறக்காத மௌனமும்.. நேர்மையானதே..

கவிதையாய் வடிவெடுத்து..

கருத்திற்குள் ஆட்கொண்டு..

கனவோடு பேசி

கருவாகி நிற்கின்றாய் மௌனமே

கேட்பவருக்கு மட்டுக் கேட்கும் நாதம் என் மௌனம்..

வார்த்தைக்குள் இருக்கும் கனத்தின் கனபரிமாணமாய் என் மௌனம்..

❤❤

மௌனத்தின் மொழி..

மோனத்தில் உழன்று

முத்தெடுப்போருக்கு மட்டுமே தெரியும்..

மௌனங்களுக்குள்ளும் சண்டை வரும்..

சரியா தவறாவென்று மௌனமாய்

முழிபிதுங்கி   மூச்சிரைத்து..

மௌனமாய் பிரிந்துவிடும்

கேள்விகள் இல்லை, சீண்டல்கள் இல்லை..

சித்தத்தை உறைய வைக்கும் சிக்கல்கள் இல்லை..

மௌனித்திருத்தலும் ஞானமே..

❤❤

மௌனமே நீ என்னோடு எதுவரை வருவாய் என்று கேட்டு

அது மௌனமாய் பதில் சொல்கையில்

கண்களால் சிரித்துக்கொள்கிறேன்..

ஏன் மௌனித்திருக்கின்றேன் என்று எண்ணும் வேளையிலும்

மௌனமாயிரு என்று என் மனது சொல்வதை

மௌனமாய் ஏற்றுக்கொள்கிறேன்..

❤❤

உரக்க ஊரறியச் சொல்வதை விட..

அடுத்த அணுவுக்கும் தெரியாமல்..

அமுக்கமாய்.. மௌனமாயிருப்பது மேலென்று

அழுத்தி மௌனமாய் சொல்கிறேன்

தெரியாத கடவுளைத் தொழுவதை விட..

தெரிந்த மௌனத்தின் வழிகேட்டு

மௌனமாய் தியானித்திருப்பது வழிபாடு தானே..

❤❤

மௌனமும் ஒரு மதம் தான்..

❤❤

மௌனத்தின் எதிரி மௌனம் தான்..

மௌனமாயிருக்கையில் தான்..

மௌனம் என்றால் என்னவென்று தெரிகின்றது..

❤❤

மௌனங்கள் முறிக்கப்படுதலில் அல்ல..

மௌனமாய் வருடப்படுகையில் தான்

வெற்றியடைகின்றன..

❤❤

மௌனத்தின் மொழிபெயர்ப்பு..

மௌனம் தான்..

யாருமில்லாத வேளைகளில்

நானும் நானும் பேசிக்கொள்ளும் பாஷை

மௌனம்..

❤❤

கண்ணீரா மௌனமாய என்று பார்த்தால்..

மௌனம் தான்..சிறந்தது..

ஒதுங்கியிருத்தல், மௌனித்திருத்தல் எல்லாம்

எதிர்ப்புகளைப்பதிவுசெய்வதென்பது இல்லாதொழிந்து

இப்போது எதிராளி வெற்றி பெற்றதாய் கருதும் காலம் இது

❤❤

Images Courtesy Google

வெட்கத்தை விட்டுச் சொல்லவா..

வெட்கத்தை விடச் சொல்கிறாய்.. வெட்கமின்றி
அதையும் வெட்கம் கெட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்..
நாமிருவம் துகிலுரிகையில் நாணுகின்றது
நான் முகம் பார்க்கும் கண்ணாடி
தூங்கும் என்னை தொல்லைபண்ணும் உன்னை
தூங்கச்செய்து தொல்லையின்றி உன்முகம் ரசிக்கவே பிடிக்கிறது எனக்கு
தோள்தொட்டு, முகம்திருப்பி முத்தமிடுகையில்
தொலைந்து போகின்றது என் நிமிடங்கள்
மூன்று நாள் மீசையின் உறுத்தலும்..
முரட்டு மார்பின் முடிகளும் முள்ளாய் குத்தும் போதும்
கூட்டுக்குள் ஒதுங்கும் முயற்குட்டியாய்
மார்ப்புக்கூட்டின் சூட்டுக்குள் நானும் மயங்கிப்போகிறேன்..

கண்டுகொண்டேன் காதலை

தொட்டுவிடும் தூரத்தில்

மொட்டாய் நான் மலர்ந்திருக்க

கருவறைக் கதகதப்பில்

கண்துஞ்சும் சிறு குழந்தையாய்  நீ

இமை மூடி, விரல் நீட்டி

இன்பங்கள் தேடும் போது

அந்த நெருக்கத்தின் சுகத்தில் கண்டுகொண்டேன்

உன் காதலை

உன் மார்புச் சூட்டுக்குள் மடிந்து கிடக்கையில்

மூச்சுக்காற்றின் வெப்பம் என் உச்சந்தலை தொட

உரசிச் செல்லும் கரங்கள் உணர்வை அசைத்துச் சாய்க்க

உள்ளிருந்து பிறக்கும் உணர்ச்சிப் பிராவகத்தில்

கண்டுகொண்டேன் உன் காதலை

சிரித்தாய், சிதறினேன்..

நெருங்கினாய் நெருப்பாய் தகித்தேன்..

அணைத்தாய், அரவணைத்தாய்,

அன்பாலே பிணைத்து என்னைப் பித்தாக்கினாய்..

 உன் காதல் கடலிலே அருவமாய் உருவமின்றி அமிழ்ந்த போது

கண்டுகொண்டேன் உன் காதலை

ஏன்

உங்கள் இதழ்கள் உதிர்ப்பது

சொற்களா விட அம்புகளா

துளைத்துக் குடிக்கின்றது

என் இதயத்தின் ஜீவநாதத்தை

உரலிலும் மோசமாய் மத்தளமாய்

உங்கள் நரம்பில்லா நாக்கால்

மிதிக்கப்பட்டு நசுக்கப்பட்டு

மனம் வெம்பி

உணர்வுகள் கல்லாகி விடாதா

இன்னும் எத்தனை நாட்கள்

ஆலையிட்ட கரும்பாய்

அசங்கி கசங்கப் போகிறேனோ

களங்கம் மட்டுமே தேடும் இந்தக் கறைபட்ட உலகில்..