Archives

எங்கிருந்து வந்தாயடா..

நகங்களைக் கடித்து மென்று துப்பியபடி காத்திருந்தேன்.. இன்னும் வரவில்லை.. எத்தனை நேரம் தான் காத்திருப்பது.. கணங்கள் எல்லாம் கல்லுப்போல செல்ல மாட்டேன் என்று அசையாமலிருக்க.. கண்கள் மட்டும் அலைபாய்ந்தபடி வாசல் பார்த்தது..

கழுதை, காண்டாமிருகம் என மனசுக்குள் திட்டியதெல்லாம் ஏதோ ஒரு யுகம் போல தோன்ற கொஞ்சம் கொஞ்சமாய் பயம் மனசுக்குள் படங்காட்டத்தொடங்கியது..

 
காலையில் கூட கன்னத்தில் முத்தமிடுகிறேனென்று சொல்லி கடித்து வைத்துவிட்டுப் போன காதல் காயம் இப்போது வலிக்கவில்லை.. வருடிக்கொடுத்தபடி இருட்டில் வசமிழந்து நிற்கும் என் மனசு தான்.. ச்சே.. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. இன்றைக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ஆச்சு.. இல்லன்னா நிதத்துக்கும் இதே வேலை..

 
இன்றைக்கு என்ன நடந்தாலும் சிலைபோலதான் இருப்பது.. நினைத்தபடியே லேட்டாய் வந்ததுக்கு என்ன சாட்டு சொல்லுவான்.. என்னவெல்லாம் பண்ணுவான் என நினைத்துப்பார்க்கிறேன்..

wait

 
மூச்சு முட்டும் வரை வேர்வை வாசத்துடன் இறுக்கமாய் தொட்டு அணைத்து என்னை வேர்க்க வைப்பானா
பூங்கொத்தை முன்னால் நீட்டி முட்டிக்காலில் நின்றபடி, ஏதோ பழைய காலத்து ஆங்கிலக் கதைகளில் வரும் காதலன் போல சாரி சொல்வானா..

 
தலையைக் கலைத்துவிட்டபடி, அசட்டுச்சிரிப்பொன்றை பற்களில் தேக்கி, என் இடுப்பணைத்து நாய்க்குட்டி போல் உரசி என்னை நாணச் செய்வானா

 
கதவு மணியை அடித்துவிட்டு, நான் திறந்து பார்க்கும் போது, தெரியாமல் ஒளிந்து நின்று பின்புறமாய் தட்டிவிட்டு, கழுத்தோரம் மூச்சுவிட்டு கண்களை சொருக வைப்பானா

 
என்னை அப்படியே அலாக்காய் காருக்குள் தூக்கிச்சென்று கடற்கரையோரத் தெருவில் காற்று முகத்தில் அடிக்குமாற்போல் வேகமாய் ஓட்டிப்போய் ஓரமாய் நிறுத்தி ஐஸ்க்றீம் வாங்கிக் கொடுப்பானா..

 
கண்ணா.. என் செல்லமில்லையா.. இன்னைக்கு கொஞ்சம் லேற்றாயிட்டு கண்ணம்மா.. நான் என்ன பண்ண.. இந்த பொஸ் தொல்லை தாங்க முடியல.. பேசாமல் இருபத்துநாலு மணிநேரமும் உன் முகம் பார்த்துட்டே இருக்கிறமாதிரி ஒரு வேல பார்க்கப்போறேன் என்று என்னை மயக்கும் வசனம் பேசுவானா

 
இல்லை கோபத்தில் சிவந்த என் கன்னங்களை கைகளால் பற்றியபடி, முகம் முழுக்க முத்தத்தால் ஒற்றியெடுப்பானா..

 
எண்ணங்கள் எங்கெங்கோ அலைய.. அவன் கார் தெருவில் வளையும் சத்தம்.. மெதுவாய் பூனை போலே வீட்டுக்கு முன் அதை நிறுத்தி கதவை மெதுவாய் அடைக்கும் ஓசை.. பூனை போல் பதுங்கியபடி, ஒற்றை ஒற்றையாய் கம்பீரமாய் நடந்து வரும் ஒலி.. மெதுவாய் ‘அம்மு’ என்றழைத்தவாறு கைகளால் கதவைத்தட்டுவது கேட்டும் நான் அமர்த்தலாய் அமர்ந்திருக்க..

 
‘அம்மு.. கதவைத்திற டார்லிங்’ என்று கெஞ்சும் குரலில் தொனித்த களைப்புக்கேட்டு கதவைத்திறக்க, மந்தகாசச்சிரிப்புடன், கண்ணடித்து, என் கழுத்து வளைவில் முகம் பதித்து..கைகளை இடையோடு வளைத்து, இறுக்கமாய் அணைத்து..

 
போடா என்று சொல்லியபடியே கண்கள் சொருக.. என்னை என்னவனிடம் இழக்கத்தொடங்கினேன்..

 

Photo Credits: Google

 

 

வெட்கத்தை விட்டுச் சொல்லவா..

வெட்கத்தை விடச் சொல்கிறாய்.. வெட்கமின்றி
அதையும் வெட்கம் கெட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்..
நாமிருவம் துகிலுரிகையில் நாணுகின்றது
நான் முகம் பார்க்கும் கண்ணாடி
தூங்கும் என்னை தொல்லைபண்ணும் உன்னை
தூங்கச்செய்து தொல்லையின்றி உன்முகம் ரசிக்கவே பிடிக்கிறது எனக்கு
தோள்தொட்டு, முகம்திருப்பி முத்தமிடுகையில்
தொலைந்து போகின்றது என் நிமிடங்கள்
மூன்று நாள் மீசையின் உறுத்தலும்..
முரட்டு மார்பின் முடிகளும் முள்ளாய் குத்தும் போதும்
கூட்டுக்குள் ஒதுங்கும் முயற்குட்டியாய்
மார்ப்புக்கூட்டின் சூட்டுக்குள் நானும் மயங்கிப்போகிறேன்..

கண்டுகொண்டேன் காதலை

தொட்டுவிடும் தூரத்தில்

மொட்டாய் நான் மலர்ந்திருக்க

கருவறைக் கதகதப்பில்

கண்துஞ்சும் சிறு குழந்தையாய்  நீ

இமை மூடி, விரல் நீட்டி

இன்பங்கள் தேடும் போது

அந்த நெருக்கத்தின் சுகத்தில் கண்டுகொண்டேன்

உன் காதலை

உன் மார்புச் சூட்டுக்குள் மடிந்து கிடக்கையில்

மூச்சுக்காற்றின் வெப்பம் என் உச்சந்தலை தொட

உரசிச் செல்லும் கரங்கள் உணர்வை அசைத்துச் சாய்க்க

உள்ளிருந்து பிறக்கும் உணர்ச்சிப் பிராவகத்தில்

கண்டுகொண்டேன் உன் காதலை

சிரித்தாய், சிதறினேன்..

நெருங்கினாய் நெருப்பாய் தகித்தேன்..

அணைத்தாய், அரவணைத்தாய்,

அன்பாலே பிணைத்து என்னைப் பித்தாக்கினாய்..

 உன் காதல் கடலிலே அருவமாய் உருவமின்றி அமிழ்ந்த போது

கண்டுகொண்டேன் உன் காதலை

நீயும் என் காதலும்

மனக்கதவு தட்டிய ஓசை கேட்டு
திறந்து பார்த்தேன்..
கையில் பூச்செண்டுடன் வரவேற்றது காதல்..


என் மனக்கதவைத் தட்டாமல் திறந்து
இதய மத்தியில்
இருக்கையிட்டு உட்கார்ந்து
சிரிக்க வைக்கிறாய்
சிலிர்க்க வைக்கிறாய் – என்
சின்ன இதயத்தில்
சம்மணமிட்டமர்ந்து
மிதக்க வைக்கிறாய் மனசை..


கண்கள் கவிபாட
இதயம் இசைபாட
உதடுகள் உயிர்பெற்றெழுந்து
உணர்வுகளை வார்த்தையாக்கி
உனைப்பார்த்து உச்சரித்தது
என் காதலை..

ரசிகனின் ரசிகை

முத்தமிடுவதற்காய் நெருங்கும் போது என் மூச்சுக்காற்றாய் உள்நுழைந்து
செல்களையெல்லாம் சில்லிடச் செய்தாய்..

நீயும் நானும் மூக்கோடு மூக்குரச வரும் வெட்கத்தில் என் முகம் சிவக்கையில்
கொஞ்சும் ஆண்கிளி போல  உன் குரலில் ஒரு குழைவு..

ஒவ்வொரு முறையும் நீ அண்மிக்கும் வேளையிலெல்லாம்
அலையடிக்கிறது மனசுக்குள்..

அத்தனை தடவையும் செத்துவிடலாம்போல் தோணும்
நீ என்னைத் தொட்டணைத்துத் தீண்டும் போதெல்லாம்..

தொலைந்த என் இதயத்தை உனக்குள் தேடித்தேடி
உன்னுள் தொலைந்து உறைந்துவிட்டேன்..

என்னை எனக்காகவே ரசித்து நேசிக்கும் ஜீவன் நீ..
எனக்கே எனக்காய் வாழும் உனக்காய் என் காதலையன்றி எதனைத் தர

உண(ர்)வானவன்..

சமையல் பண்ணும் போது கூட உன் ஞாபகமே மனசுக்குள் சைப்ரஸ் மரத்தின் மேல் மெல்லிய தூறலாய் விழும் பனித்துளி போல வருடிச் செல்கிறது.. என் சமையலை ருசித்து உண்ணும் போது உன் கண்களில் தோன்றும் பாவங்களை என்னை ரசித்துப் பார்க்கையிலும் உணர்ந்திருக்கின்றேன்..

உனக்கு என்னென்ன உணவு பிடிக்குமென்பதை அறிந்து கொண்ட ஆரம்ப நாட்களும், உனக்காக சமையல் கற்றுக்கொண்ட நாட்களும்.. நான் உண்ணாவிட்டாலும்.. உனக்குப்பிடிக்குமென்பதற்காய் உதறலுடன் சிக்கன் சமைக்கப்போய் அது வேறேதோவாகிய நாளில் எந்த முகச்சுளிப்புமின்றி நீ சாப்பிட்ட போது காதலில் விம்மிய உதடுகளுடன் சேர்ந்து வெம்பியது மனது..

 

சமைக்கப்போகிறேனென்று சொல்லி சமையலறையை போர்க்களமாக்கும் நாட்களிலெல்லாம் சமர்த்தாய் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.. வியர்க்க விறுவிறுக்க நீ சமையல் பண்ணும் அழகைப் பார்த்தால் நளனே நேரில் வந்தது போல ப்ரம்மை..
நீ சமைத்த சாப்பாட்டில் உப்பிருக்கின்றதோ.. உறைப்பிருக்கின்றதோ.. உன் காதலும், நேசமும், பாசமும் கலந்து தேவாமிர்தமாய் நாவில் தித்திக்கையில் உன் அன்பின் பாச வெள்ளத்தில் அடியுண்டு போகும் அரசிலையாவேன் நான்..
உருளைக்கிழங்கு சிப்ஸ், பாணி பூரி என எனக்குப் பிடித்த உணவுகளை தேடித் தேடி வாங்கி வரும் போதும்.. அதிகம் சாப்பிடாதே.. இடுப்பு தடித்து விடும் என்று கேலி செய்யும் போதும் ராட்ஸசா என்று திட்டத் தோன்றும்.. ஆனால் Reading between the lines  போல உள்ளுறைந்திருக்கும் அக்கறை பார்த்து அசந்து போவேன் நான்..
ஹோட்டல்களுக்கு போகும் போதும் என் விருப்ப உணவுகளை ஓடர் செய்து உன்னதையும் உண்ணச்சொல்கையில் உருகி வழிந்துவிடுவேன் ஐஸ்க்றீமாய் உன்மீது..
சமையலறையை சில நேரங்களில் படுக்கையறையாய் எண்ணி என்னைப் பாடாய்படுத்தும் வேளையிலெல்லாம்.. வெளியே திட்டிக்கொண்டு உள்ளுக்குள் ரசித்துக்கொள்வேன் உன் குறும்புகளை எண்ணி
திரும்ப திரும்ப சாப்பிட்டாலும் திகட்டாத பட்சணம் போல நீ..
திரும்பவும் உண்ண வேண்டும் என்று எண்ணத்தூண்டும் இனிப்பு நீ
அருந்திய பின்னும் நாவில் இனிக்கும் சுவைப்பண்டம் நீ
உன்னோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு நாளும் தலைவாழையிலைபோட்டு விருந்துண்ணும் பண்டிகை நாளே..

என்காதலா

காதல் போதையில் நீ சொல்லும் பொய்களை காட்டிக்கொள்ளாமல் ரசித்துக்கொள்வேன்..
கரம் பிடித்து உன் கூட நடக்கையில் காற்றுக் கூட கண்ணேறு போட்டுப் போகும்..
நீ வாங்கித் தரும் பூவில் உன் நேசத்தின் வாசம்..
வாய்குவித்து தரும் முத்தத்தில் வடிந்தோடும் பாசம்..
உயிர்வரை உட்சென்று உணர்வுகளை உறையவைக்கும் பார்வையும்
உடைகளை ஊடுருவி உடல் தொடும் உன் கரங்களின் தேவைகளும்
உன் காதலை காதலோடு சொல்லிச் செல்லும்..
குறும்புகளால் கொல்லும் நீ குறுகுறுப்பாய் பார்க்கையில்
என் உயிர்க்கலங்களும் உடைந்துபோகச் சிலிர்க்கும்..
சாரலாய் தூறலாய் பாசம் சொரிந்து என்னை காதலாய் கைது செய்யும் கள்வா
நீ இல்லாத வாழ்வெனக்கு வாழ்வா..