Archives

சினிமா சினிமா..

நம்ப ஊரு சினிமாக்காரவுங்களோட Dressing sense பார்த்தா சிரிக்கிறதா ஆழுவுறதான்னு  எனக்கு தெரியுறதில்ல.. நான் எல்லா ஹீரோசையும் சொல்லலைங்க.. அப்புறம் எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி துடைப்பத்தோட வந்து நின்னு என்னோட உருவ பொம்மைக்கு தீ வைச்சாலும் வைச்சிடுவாங்கப்பா.. (அடங்கு..நெனப்பு தான் பொழப்ப கெடுக்கிறது)

 

படங்கள்ல இவங்கள பார்த்தா சில சமயம் ரொம்ப சிரிப்பா இருக்கும்.. கிராமத்து ரௌடின்னு சொல்லுவாங்க.. பட் கால்ல Adidas Shoe வோட அலைவாங்க.. அதாவது பரவால்லைங்க.. லெதர் ஜாக்கெட்டும், pants ம் போடுறாங்களே.. கிராமத்துல எவனுக்கு லெதர் பத்தி தெரியுமாம்..
வெள்ள வெளேர்ன்னு வேஷ்டி சட்டையோட பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போடுவாங்க.. .. சுத்தி நின்னு அடிவாங்குறவங்க எல்லாரும் பாவம் கிழிஞ்ச சட்டை, அழுக்கு வேட்டி, கலைஞ்ச தலைன்னு நிப்பாங்க.. நம்ப ஹீரோ சார் மட்டும் எவ்வளவு trim ஆ மடிப்புக் கலையாத டிரெஸோட இருப்பாரு பாருங்க.. அட அட அடா..

 
ரொம்ப ஏழைன்னு சொல்லுவாங்க.. ஆனா தலைமுடி ஜெல் போட்டு அழகா படிஞ்சு இருக்கும்.. பொண்டாட்டி பத்தி கேக்கவே வேணாம்.. குடிசைல தான் இருப்பாங்களாம்.. ஆனா காதுல கைல எல்லாம் matching கம்மல் வளையல்ன்னு போட்டுட்டு தான் அடுப்பையே ஊதுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.. நகத்துல கொஞ்சம் அழுக்கு.. ம்ஹ்ம்..  ஆ.. கன்னத்துல ஒரு கீத்து கரி பூசியிருப்பாங்க.. அப்போதானே ஹீரோ வந்து “அய்யோ என் கண்ணே.. உனக்கா இந்தக் கதி” ன்னு தொடச்சி விடலாம் பாருங்க..

 

அப்புறம் இந்த விஷயம் சொல்லலன்னா என் மனசு தாங்காதுங்க..  இப்போ வில்லன் ஹீரோவோட தங்கையையோ, நண்பனையோ சுட்றுவாங்கன்னு வைச்சுக்கோங்க.. கிளைமாக்ஸ்லதான் இதெல்லாம் நடக்கும் சரியா.. அப்போ பாருங்க.. ரத்தம் ஓடிக்கிட்டு இருக்கும்.. ஹீரோ கைல கூட ரத்தம்.. But குண்டடிபட்டிருக்கிறவங்க முகத்துல துளி ரத்தம் கூட பட்டிருக்காது..

 

இது மட்டுமா.. நிஜத்துல யாருக்காவது காயம் பட்டா ஒரு சின்ன பொண்ணு கூட உடனே அம்பியூலன்சுக்கு போன் பண்ணிடும்.. இல்லைன்னா First aid கொடுக்க பார்ப்பாங்க.. நம்ப ஹீரோ இவங்கள மடில தூக்கி வைச்சுகிட்டு ஒரு expression காட்டுவார் பாருங்க.. அய்யோ.. செத்துப்போன என் பாட்டி கனவுல வந்து நான் செத்தப்போ நீ இப்படிக் கவலப்பட்டியான்னு கேக்குற அளவுக்கு இருக்கும்..

 

அதுலயும் இன்னொரு விஷயம்.. அவங்க குரல் மட்டும் தான் ஸ்க்றீன்ல காட்டுவாங்க.. இல்லன்னா.. எக்ஸ்பிரஷனே இல்லாத அந்த மூஞ்சி அழுறத காட்டுனா.. அப்புறம் சாகுற வரைக்கும் அவரோட படங்கள நாம்ப பார்ப்போம்?

சிலவங்களுக்கு முதுகு குலுங்குற குலுங்கல்ல அச்சச்சோ.. இவுரு முதுகெலும்பு உடைஞ்சிடுமோன்னு பயமா இருக்கும்..  இல்லன்னா டைட் ஷொட்ல கண்ல இருந்து கிளிசரின் உபயத்துல கண்ணீர் வர்றது போல காட்டுவாங்களே.. என்னா அழுகை.. இதுவரைக்கும் அந்த co artist  பாவம் இதெல்லாம் பார்த்து சிரிக்கக்கூட முடியாம மூச்சடக்கி படுத்துக் கெடக்கனும்..

 

அவங்க கதை இன்னொன்னு.. இந்த directors யமன் கூட பார்ட்னர் ஷிப் வைச்சிருக்காங்க தெரியுமா.. குண்டு அடிபடும்.. வீச்சரிவாள் வெட்டும்..  but நான் cut  சொல்ற வரைக்கும் யாராவது செத்தீங்க.. நானே கொன்னுடுவேன்னு சொல்லிடுவாங்க போல.. பாவம்.. ஒரு பக்கம் சொத சொதன்னு ரத்த மேக்கப், அடுத்த பக்கம் ஹீரோவோட reactions.. அதோட மூச்சு விடாமல் மரண வாக்குமூலம் வேற சொல்லணும்.. அது சொல்லி அழுது புரண்டு முடிஞ்சப்புறம் தான் அந்த கரெக்டர் சாகலாம்.. இல்லைன்னா வகுந்துட மாட்டாங்க..வகுந்து..

 

அதுலயும் வில்லனால பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாகுற தங்கச்சி கரக்டரோட இல்லைன்னா வில்லன் கையால சாகுற அம்மா characters சோட scene  தான் ரொம்ப இன்டரஸ்டிங்.. “அண்ணா நீ அவன பழிவாங்கணும் ணா.. இல்லைன்னா என் ஆவி வேகாது” (ஆவில தானே வேக வைப்பாங்க.. ஆவியே வேகுமா?) “மகனே நீதான்டா நம்ம கொலப் பெருமைய காப்பாத்தணும்.. அவன்கள வேரோட அழிக்கணும்.. என் நெஞ்சுல பால் வாக்கணும்”… ஐயோ ஐயோ.. குழந்தைங்களுக்கே குடிக்க பால் இல்லையாம்.. இவங்களுக்கு பாலு வாங்க நாம்ப எங்க போறது..

 

ஆனாலும் இதெல்லாத்துலயும் நம்ப ஹீரோவ அடிச்சுக்க ஆளே இல்லைங்க.. ஹீரோ செத்துட்டார்ன்னு நாம்ப எல்லாரும் நம்பிட்டே இருப்போமா.. அந்த Gapல யாரோ ஒரு புண்ணியவான் இல்லைன்னா நம்ப ஹீரோயின் அந்த 57 கிலோ bodyய வைச்சுக்கிட்டு 95 கிலோ ஹீரோவ தன்னோட தோள்ள தூக்கிகிட்டு டாக்டர் கிட்ட போவாங்க..

 

பாவம் அவுரு செத்துப்போய் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்.. ஆனா நம்ப wonder doctor எதையோ கொடுத்து அவர எழுப்பிடுவாங்க.. இல்லைன்னா இருக்கவே இருக்கே.. நெஞ்சுப் பகுதில கும்மாங்குத்து ஆடுவாங்க  பாருங்க.. அப்புறம் ஹீரோ எழும்பி.. “என்ன விடு.. நான் இப்பவே போய் அவன கொண்ணுட்டு வாறேன்னு” புயலா போவார்..

 

காய்ச்சல் வந்தாலே நாலு நாளைக்கு நம்பளால எழும்ப முடியுறதில்ல.. இதுல mummies போல கட்டுப் போட்டுட்டு படுத்திருக்கிற இவுரு கட்டெல்லாம் அவுத்தெறிஞ்சுட்டு வில்லன் கூட சண்டை போட்றுவாராம்..

 

இப்போ இந்த சீன் காட்டுல நடக்குதுன்னு வைச்சுக்கோங்களேன்.. ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் அங்கே.. கட்டாயம் ஒரு அருவிக்கு பக்கத்துல இல்லைன்னா ஆத்துக்கு பக்கத்துலதான் இது நடக்கும்.. நம்ப ஹீரோயின் என்ன பண்ணுவாங்க தெரியுமா.. ஒரு ரொமான்டிக் + pathetic பார்வையோட நம்ப ஹீரோ மார்மேல விழுந்து pulse  பார்ப்பாங்க.. அப்புறம் தான் அவங்களுக்கு அஞ்சாம்புல first aid கிளாஸ்ல கத்துக்கொடுத்ததுல்லாம் ஞாபகத்துக்கு வரும்..

 

ஒதட்டோட ஒதடு வைச்சு அப்படியே அவங்க மூச்சுக் காத்த அவுருக்கு கொடுத்து உசுரு கொடுத்துருவாங்க.. அப்புறம் அவுரு எழும்பினதும் அவங்க மூஞ்சில வர்ற  வெக்கத்த பாக்கணுமே.. ஐயோ ஐயோ.. இதுல நம்ப ஹீரோயின் தான் பாவம்.. செத்தா செத்ததுதான்.. ஹீரோயின் Body ய தூக்கிகிட்டு மழைல நனைஞ்சுட்டே நம்ப ஹீரோFlashback scenes சோட பாட்டு பாடுவார்..

 

இல்ல நல்ல வேளையா நம்ப கெட்ட நேரம் பொண்ணு சாகாம நம்ப வாய் to வாய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்கன்னா.. நான் இப்போ எங்க இருக்கேன்னு கேட்டுகிட்டே எழுந்திரிப்பாங்க.. அப்புறம் மயங்கிக் கெடந்தப்போ நடந்ததெல்லாம் அவங்க மனசுல படமா ஓடும்.. அப்புறம் ஹீரோவ பார்த்து வெக்கப்பட்டுகிட்டே சிரிப்பாங்க பாருங்க .. அடடா.. அதுசரி மயங்கிக் கெடந்தப்ப இவுங்களுக்கு சொரண எங்கருந்துய்யா வந்துச்சு?

போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்

 

(தொடரும்)