Archives

இது போதும் எனக்கு

BzdXliDCMAAzAoNதனியாய் ஒரு இடம்வேண்டும்
நானும் தனிமையும் சேர்ந்திருக்க
சத்தம் எழுப்பாமல்
வியர்வை மட்டும் விரட்டிச்செல்லும்
மென்காற்று மட்டும் துணையிருக்க
மலையுச்சியின் சரிவோரம்
மாபெரும் கடல் சூழ்ந்திருக்க
கரு வனம் சூழ்ந்த
அந்த பெரும் பாறை உச்சியில்
சிறுகுருவிகளின் கீச்சிடலுடன்
சிறுகுடிசை மட்டும் போதும் எனக்கு

படிப்பதற்கென பல புத்தகங்களும்
ரசிப்பதற்கென இசைத்தட்டுகளும்
படுப்பதற்கென சிறு மெத்தையும்
பார்ப்பதற்கென மடிக்கணிணியும்
இசைப்பதற்கென என் கிற்றாரும்
இளைப்பாற ஒரு சிறு குற்றியும்
குளிப்பதற்கென சிறு அருவியும்
குஷியாயிருக்க மான் குட்டிகளும்
மலைப்பதற்கென அண்டப்பெருவெளியும்
மறைவதற்கென அகண்ட பெருவனமும்
போதும் எனக்கு

முகமூடிகள் வேண்டாம்
முரண்பாடுகள் வேண்டாம்
ஜாதிகள் வேண்டாம்
ஜாடைப்பேச்சுகள் வேண்டாம்
அவலங்கள் வேண்டாம்
அகங்காரமும் வேண்டாம்
அலைபேசியும் வேண்டாம்
அநீதியின் சுவடு வேண்டாம்
சுயநலங்கள் வேண்டாம்
சொத்து சுகம் வேண்டாம்
சிறுபிள்ளையாய் குதிக்கும்
சுதந்திரம் மட்டும் போதும் எனக்கு

அர(சு)சியல்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்.. அவர் ரொம்பவும் கொடுமையான கொடூரமான ராஜாவாம். நாட்டு மக்களுக்கு வரி, வட்டி, கிஸ்தி என்று எல்லாம் விதித்து அவர்களை கொடுமைப்படுத்தி வந்தானாம். அவருக்கு ஒரு மௌன மந்திரி, ராஜா எது செய்தாலும் தட்டிக்கேட்காமல் இருந்தாராம். அப்படியே ஓரு தலையாட்டி மந்திரி சபை.. இவங்கள திட்டித் தீர்க்காத ஆளே இல்லையாம்..

 

தீடிரென்று தலை நகரில் ஒரு புரட்சி ஏற்பட்டதாம். நேர்மையாளர் அப்டீன்னு தன்னைக் காட்டிக்கொண்ட ஒரு மனிதர் அந்தப்பகுதிக்கு தானே தலைவன்னு பிரகடனம் செய்து அந்த இடத்தை ஆளத்தொடங்கினாராம்..  அங்கேயிருந்த மக்கள் எல்லாருக்கும் அப்படி ஒரு சந்தோஷம் வந்துச்சாம். தங்க கவலைகள் எல்லாம் தீர்ந்துச்சு, நிம்மதியா வாழலாம் என்று நினைச்சாங்களாம். பக்கத்து ஊர் மக்களுக்கெல்லாம் இப்படி ஒருத்தர் தங்களோட ஊர்ல இல்லையேன்னு பொறாமை பொறாமையாய் வந்துச்சாம்.. சரி என்ன பண்றது நம்ம விதின்னு மனசைத் தேத்திக்கிட்டு கொஞ்சம் வயித்தெரிச்சலோடு வாழத்தொடங்கினாங்களாம்..

 

இவங்க இப்படி நிம்மதியா வாழ்றத பார்த்துக்கிட்டு ராஜா சும்மா இருப்பாரா.. உடனடியா தன்னோட மௌன மதியூக மந்திரியோட பேசி, புது புரட்சியாளர எப்படி கவுக்கலாம்ன்னு யோசன கேட்டாராம்.. அவரும் மௌனமா இருங்க.. புதியவர் எப்படியும் பண விஷயத்துலயும், வியாபார விஷயத்துலயும் கை வைப்பாரு.. அப்போ மெதுவா அந்த ஊர்ல இருக்கிற பெரு வணிகர்கள்கிட்ட சொல்லி செய்ய வேண்டியத செய்யலாம்ன்னு சொன்னாராம்..

 

சொன்னபடியே புதியவரும் பணக்கார பெருமுதலைகளோட மோத ஆரம்பிக்க, அவங்க, தங்களுக்கு தெரிஞ்ச சாம தான பேத தண்ட முறைகளை உபயோகிச்சு அவருக்கு குடைச்சல் கொடுக்க.. முன்ன பின்ன செத்துப்போகாத புரட்சியாளன்.. போங்கடா நீங்களும் உங்க அரசியலும்ன்னு கைகழுவிட்டு ஓடிப்போய்ட்டாராம்.. மக்கள் ‘ம்.. இனி என்ன பண்றதுன்னு’ நினைச்சி மனசத் தேத்திக்கிட்டே வாழத் தொடங்கினாங்களாம்.

 

அந்த நேரத்துல பக்கத்து நாட்டுல இருந்து புதுசா ஒரு மனுஷன், தான் இந்த நாட்ட மாத்திக்காட்டுவேன்னு அலை அலையா ஆட்களை சேர்த்துக்கிட்டு இந்த நாட்டு மேல போர் தொடுத்து வந்தானாம்.. ராஜாவுக்கு இது பெரிய தலைவலியாப் போச்சாம்.. தன்னோட மகன் மகள் எல்லாரையும் போர் முனைக்கு அனுப்பினாராம்.. என்ன அனுப்பி என்ன பிரயோஜனம்.. புது புரட்சியாளன் அரசனாகிட்டானாம்..

 

நாட்டு மக்களுக்கு பெருத்த சந்தோஷமாம்.. அடடா.. புது அரசன், புது கொள்கைகள், புது ராஜாங்கம்’ன்னு ஒரே குஷியா இருந்தாங்களாம். புதுத் தும்புத்தடியும் கொஞ்ச நாளைக்கு நல்லாக் கூட்டி பெருக்கிச்சாம்.. மக்களும் அடடா.. கொடிய அரக்கன் போய்ட்டான்.. இனி சந்தோஷம் தான்’னு நினைச்சிட்டு இருந்த நேரத்துல தலைல இடி விழுறது தெரியாமல் மெது மெதுவாய் புரட்சியாளன் முன்னைப்போலவே மக்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பிச்சானாம்.. வட்டி வரி மட்டுமில்லாமல் மற்ற எந்த வழியிலயெல்லாம் முடியுமோ அப்படி கஷ்டப்படுத்தினானாம்..

 

இதனால இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசப்பட்ட மக்கள் மனசுடைஞ்சு போயிட்டாங்களாம்.. கங்கைல குளிச்சாலும் காக்கை அன்னமாகுமா.. எல்லா ராஜாக்களும் சிம்மாசனத்துல அமர்ந்ததும் அவங்க குணமே மாறிடும்.. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டை தாங்கிறத கொஞ்சம் தாமதமாவே புரிஞ்சுகொண்டாங்களாம்.. என்ன பண்றது நம்ம தலைவிதின்னு நினைச்சிட்டு தலைகுனிஞ்சு வாழப்பழகினாங்களாம்

 

(இந்தக் கதை இந்திய அரசியல் பற்றி இல்லைன்னு சொன்னா நம்பவா போறீங்க.. என்ன நான் சொல்லுறது)

மழையே மழையே..

dancing

மழையைப் போலவே, மழைக்கு முன்னரான தருணங்களும் மனது மயக்குபவையே..

மெல்லிய சாரலுடன், மெதுவாய் வருடிச் செல்லும் ஈரக்காற்றும்,

சாம்பல் நிறக் கீற்றுடன், கற்றை கற்றையாய் தலைமேல் சுற்றும் கருவண்ண முகில்களும்,

தலையசைத்து மழைநீர்த்துளிகளை வரவேற்கக் கட்டியம் கூறும் கரும்பச்சை இலைகளும்,

மரப்பொந்துக்குள் தன்னை மறைத்துக்கொள்வதற்காய் துள்ளியோடும் அணில் குஞ்சுகளும்,

செல்லமாய் சுருதி சேர்த்து இசைபடிக்கும் சிறுகுருவிக் கூட்டமும்,

இரையை தலைமேல் சுமந்தபடி வரிசையாய் நகர்ந்து செல்லும் எறும்புக்கூட்டமும்,

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து உரக்கக்கத்தும் தவளைகளும்,

கொடியோடு இணைந்து குதிபோடும் ஆடைகளும்,

மண்ணுக்குள் இருந்து மெதுவாய் எட்டிப்பார்க்கும் மண்புழுக்களும்,

நாசிக்குள் புகுந்து நறுமணம் தெளிக்கும் புழுதியோடிணைந்த மண்வாசனையும்

என மழை இராணிக்காக கட்டியம் கூறி, அவளை வரவேற்கக் காத்திருக்கும் ஆயிரம் விஷயங்களுடன்,

ஆனந்தமாய் மழையில் நனைய எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவள் போலவே..

மழைக்கு முன்னரான தருணங்களும் மனது மயக்குபவையே..

danceintherain2

எங்கிருந்து வந்தாயடா..

நகங்களைக் கடித்து மென்று துப்பியபடி காத்திருந்தேன்.. இன்னும் வரவில்லை.. எத்தனை நேரம் தான் காத்திருப்பது.. கணங்கள் எல்லாம் கல்லுப்போல செல்ல மாட்டேன் என்று அசையாமலிருக்க.. கண்கள் மட்டும் அலைபாய்ந்தபடி வாசல் பார்த்தது..

கழுதை, காண்டாமிருகம் என மனசுக்குள் திட்டியதெல்லாம் ஏதோ ஒரு யுகம் போல தோன்ற கொஞ்சம் கொஞ்சமாய் பயம் மனசுக்குள் படங்காட்டத்தொடங்கியது..

 
காலையில் கூட கன்னத்தில் முத்தமிடுகிறேனென்று சொல்லி கடித்து வைத்துவிட்டுப் போன காதல் காயம் இப்போது வலிக்கவில்லை.. வருடிக்கொடுத்தபடி இருட்டில் வசமிழந்து நிற்கும் என் மனசு தான்.. ச்சே.. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு.. இன்றைக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் ஆச்சு.. இல்லன்னா நிதத்துக்கும் இதே வேலை..

 
இன்றைக்கு என்ன நடந்தாலும் சிலைபோலதான் இருப்பது.. நினைத்தபடியே லேட்டாய் வந்ததுக்கு என்ன சாட்டு சொல்லுவான்.. என்னவெல்லாம் பண்ணுவான் என நினைத்துப்பார்க்கிறேன்..

wait

 
மூச்சு முட்டும் வரை வேர்வை வாசத்துடன் இறுக்கமாய் தொட்டு அணைத்து என்னை வேர்க்க வைப்பானா
பூங்கொத்தை முன்னால் நீட்டி முட்டிக்காலில் நின்றபடி, ஏதோ பழைய காலத்து ஆங்கிலக் கதைகளில் வரும் காதலன் போல சாரி சொல்வானா..

 
தலையைக் கலைத்துவிட்டபடி, அசட்டுச்சிரிப்பொன்றை பற்களில் தேக்கி, என் இடுப்பணைத்து நாய்க்குட்டி போல் உரசி என்னை நாணச் செய்வானா

 
கதவு மணியை அடித்துவிட்டு, நான் திறந்து பார்க்கும் போது, தெரியாமல் ஒளிந்து நின்று பின்புறமாய் தட்டிவிட்டு, கழுத்தோரம் மூச்சுவிட்டு கண்களை சொருக வைப்பானா

 
என்னை அப்படியே அலாக்காய் காருக்குள் தூக்கிச்சென்று கடற்கரையோரத் தெருவில் காற்று முகத்தில் அடிக்குமாற்போல் வேகமாய் ஓட்டிப்போய் ஓரமாய் நிறுத்தி ஐஸ்க்றீம் வாங்கிக் கொடுப்பானா..

 
கண்ணா.. என் செல்லமில்லையா.. இன்னைக்கு கொஞ்சம் லேற்றாயிட்டு கண்ணம்மா.. நான் என்ன பண்ண.. இந்த பொஸ் தொல்லை தாங்க முடியல.. பேசாமல் இருபத்துநாலு மணிநேரமும் உன் முகம் பார்த்துட்டே இருக்கிறமாதிரி ஒரு வேல பார்க்கப்போறேன் என்று என்னை மயக்கும் வசனம் பேசுவானா

 
இல்லை கோபத்தில் சிவந்த என் கன்னங்களை கைகளால் பற்றியபடி, முகம் முழுக்க முத்தத்தால் ஒற்றியெடுப்பானா..

 
எண்ணங்கள் எங்கெங்கோ அலைய.. அவன் கார் தெருவில் வளையும் சத்தம்.. மெதுவாய் பூனை போலே வீட்டுக்கு முன் அதை நிறுத்தி கதவை மெதுவாய் அடைக்கும் ஓசை.. பூனை போல் பதுங்கியபடி, ஒற்றை ஒற்றையாய் கம்பீரமாய் நடந்து வரும் ஒலி.. மெதுவாய் ‘அம்மு’ என்றழைத்தவாறு கைகளால் கதவைத்தட்டுவது கேட்டும் நான் அமர்த்தலாய் அமர்ந்திருக்க..

 
‘அம்மு.. கதவைத்திற டார்லிங்’ என்று கெஞ்சும் குரலில் தொனித்த களைப்புக்கேட்டு கதவைத்திறக்க, மந்தகாசச்சிரிப்புடன், கண்ணடித்து, என் கழுத்து வளைவில் முகம் பதித்து..கைகளை இடையோடு வளைத்து, இறுக்கமாய் அணைத்து..

 
போடா என்று சொல்லியபடியே கண்கள் சொருக.. என்னை என்னவனிடம் இழக்கத்தொடங்கினேன்..

 

Photo Credits: Google

 

 

முகமூடிகள்..

chorus_mask_for_oedipus_play_by_jemmanicolejoyce-d3ay08y
முகமூடிகள் மாட்டிக்கொண்டலையும் மனிதர்களுக்கு மத்தியில்
முகமூடியின்றித் திரிந்ததன் பலாபலன்கள் எத்தனை எத்தனை
முகம்பொத்தி அழவைத்தவர்கள் எத்தனை பேர்
முதுகுக்குப் பின்னால் புறம் சொல்லிச் சாய்த்தவர்கள் எத்தனை பேர்
முகமெங்கும் அரிதாரம் பூசி அன்பொழுகக் கதைக்கும் ஆயிரம் மாந்தர்களின் அரிதாரத்தின் பின்னால்
 நெளியும் புழுக்களை பார்த்த பிறகு தான்..
வாழ்க்கையில் புன்னகைகளுக்குப் பின்னால் புண்நகைகள் உள்ளதைக் கண்டுகொண்டேன்..
கருவண்டாய் அலையும் கண்களுக்குப் பின்னால் காமக்கொடூரம் ஒளிந்திருப்பதையும்
கற்கண்டாய் இனிக்கும் பேச்சுக்குப் பின்னால் கனவுகளை அறுக்கும் வாளிருக்கும் என்பதையும் அறியாதிருந்தேன்
அவமானப்படுத்துவது அவர்களுக்கு நகைச்சுவை
அழுகைகூட உறைந்து அணுக்கள் அத்தனையும்  அடிவாங்கிச் சுருண்டு போகையில்
எள்ளி நகையாடும் எத்தர்களின் முகங்கள் மட்டும் எஃகில் பதிக்கப்பட்ட உருவமாய் மனதில் உறைந்துவிடும்
உடலுக்குச் செய்த தீங்கும் உள்ளத்துக்குச் செய்த தீங்கும் ஒன்று சேர்ந்து உலைக்களமாய் மனசைக் கொதிக்க வைக்க
என்ன செய்வதென்றறியாமல் ஏக்கம் கண்ணீராய் உருண்டோட..
என்னிலிருந்து வெளியே சென்று என்னையே பார்த்திருந்தேன்
பாம்பென்றால் சீறும் என்று தெரிந்தும் அதன் தோற்றம் கண்டு தொலைந்து போனது தவறுதான்
பழிவாங்கும் பாம்பைக்கூட மன்னித்து விடலாம், பிடுங்கித்தின்று பக்கத்தில் படுத்துறங்கிப் பின்
பத்தினியா என்று கேட்கும் பரத்தை மக்களை மன்னிக்க முடியாது
நானொன்றும் புனிதையல்ல.. அதற்கென்று
முகமூடி மாட்டிக்கொண்டு பொய்களின் பின்னால் ஒளித்தலையும் கோழையுமல்ல
முகமூடியின்றி இனியும் வாழமுடியும் என்ற நம்பிக்கையுடன்
மீண்டும் ஒரு நாளை எதிர்நோக்கி வாழ்க்கைப் பயணத்தில் நடைபோடுகிறேன்..
masj

தனிமரம்..

flat,550x550,075,f

தனிமரம் தோப்பாகாது தான்..

தோப்பாகாத தனிமரத்தின் தனிமையை யாரறிவார்?

பொட்டல் காட்டில் உச்சிவெயில் உடலை உலுக்கும் போது

இருக்கும் உயிரெல்லாம் ஆவியாகிவிடும் அதன் வேதனை தெரியுமா..

வந்து போகும் பறவைகளுக்கெல்லாம் அது சரணாலயம்..

வந்து குந்தியிருந்து அது தரும் பழங்களையும், விதைகளையும் ருசித்துத் தின்றுவிட்டு,

எச்சங்களை மட்டும் மிச்சமாய் கொடுத்துவிட்டு பறந்தோடிப்போகையில்

இந்தத் தனிமரத்தின் தவிப்பு அவற்றுக்குத் தெரிவதில்லை..

சுடுமணலில் குதிகால் நிலத்தில் படாமல் குதித்தோடி வரும் குடியானவர்களுக்கு

மென்நிழலோடு, மெல்லிய தென்றலும் தந்து ஆசுவாசப்படுத்திய இந்த மரத்தின் பட்டைகளில்

தங்கள் பெயர் செதுக்கிச் சென்ற சிங்கங்கள், அதன் நிலை பற்றி சற்றேனும் நினைத்துப் பார்ப்பதில்லை

பூக்காத காய்க்காத மலட்டு மரமே என்று வைதபடி வக்கணை பேசும் கிழவிகள்,

பூத்துக் காய்ப்பதற்கு இணைமரம் வேண்டும் என்று கிஞ்சித்தும் நினைப்பதில்லை

மழைக்காலத்துக்கென சுள்ளி உடைத்துச் செல்லும் போதெல்லாம்

மரத்துப்போயிருக்கும் அதன் உடற்பாகங்களுக்கு வலிக்காதென்ற சுயமுடிவுடன்

மௌனக்கண்ணீரை கண்டுகொள்ளாது, மனதுடைத்துப் போகும் மனிதர்களுக்கு

மழையோடு சேர்ந்து ஆறாய் ஓடி பின்பு பிசினாய் இறுகும் கண்ணீரின் தடம் தெரிவதில்லை

வருபவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் மரத்திற்கு நன்றி சொல்வோமென்ற நல்லறிவுகூட

நன்றிகெட்ட மனுஷர்களின் இதயத்தசைகளுக்கு உறைப்பதில்லை

நிலத்தின் மேல் தெரியும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்ப்பவர்கள்

உள்ளுக்குள் ஆணிவேராய் உறையோடிப்போயிருக்கும் உணர்வுகளையோ

செல்லரித்துப் போன சல்லி வேர்களின் சோகத்தையோ தெரியாமலிருப்பது புதிதல்ல..

உருவத்தை மட்டும் பார்த்து உணர்வுகளைக் கொல்லும் மனிதர்கள்.. மரத்துக்கு மட்டுமில்லை

மரத்துப்போயிருக்கும் மனதோடு, நடைபிணமாய் பெருமூச்சின் சூட்டில் கண்ணீரைக் காயவைக்கும் ஆதரவில்லா அபலைகளுக்கும் பரிசாய் தருவதென்னவோ பழிச்சொற்கள் மாத்திரம் தான்..

தனிமரம் தோப்பாகாது தான்.. ஆனால் தோப்பாகுவதற்கு தனிமரம் வேண்டும்..

lonely-tree-51276cfee80fe