Archives

வானவில்..

ஒரு சில நேரங்களில், சின்னதொரு விடயம் மனசுக்குள் புளகாங்கிதத்தை ஏற்படுத்திவிடும்.. ஒரு மெல்லிசை, நறுமணம், பிடித்த நபர், பிடித்த பொருள்,படித்த புத்தகம், பார்வைக் கோணம்..

ஒன்றுமே செய்யாமல் ஓய்வாயிருந்த  மழையோடு சேர்ந்த ஒரு மாலைப்பொழுதில்.. இந்த வர்ணப் புகைப்படத்தை பார்த்தேன்..

rain

ஏகாந்த வானத்தில் எங்கிருந்தோ தோன்றிய வர்ணப் பாணமாய் வியாபித்திருந்த வானவில்லின் அழகில் சொக்கிப் போனேன்..

அதிலிருந்து தோன்றிய கற்பனைச்சிதறல்கள்.. உங்களுக்காய்..  எழுத்துத் தூரிகையில் வர்ணம் சேர்த்து ..

வானவில் மட்டும் எப்போதும் அழகுதான்..

இரவில் வராத வானவில்லைக் கனாவில் காண்கின்றேன்..

மழலைகள் சிரித்த மிச்சங்கள் எல்லாம் நிறமாலையாய்.. வானத்தில் வளைந்து கிடக்கிறது வானவில்லாய்..

இருளைக் கண்டு எனக்கு மட்டுமல்ல.. வானவில்லுக்கும் பயந்தான் போல..

தனியாய் சிரித்துக்கொண்டிருக்கும் வானவில்லைப் பார்த்து கிறுக்கா என்று கிறுக்க மாட்டாதா கீழ்வானத்து நட்சத்திரம்?

நிலவூட்டி சோறு கொடுத்தாள் அன்னை எனக்கு நிறங்காட்டி கவிதை கொடுத்த நீயும் தாயே..

ஏழு வர்ணங்களுக்குள் எழுபத்துக்கோடி எண்ணங்களை உயிர்ப்பிக்கும் நீ இன்னொரு கடவுளே..

சிறு துளியின் பிம்பத்திலிருந்து பெரு வெளியில் பரவிக்கிடக்கும் உனைக்கண்டு தைரியம் தோணுதே..

வானவில் கோடுகளின் விளிம்பிலிருந்து விருந்துண்ணலாமாவென்று வரையறையற்ற நினைவுகள்

வந்தாய்.. வனப்புக் காட்டினால்.. நில்லாமல் சட்டென்று நிர்மலமானாய்.. நீயும் காதல் போலதானா? வானவில்லே

என் வெட்கச் சிரிப்பின் கன்னச்சிவப்பை தனக்குள் ஏந்தியபடி.. வர்ணம் சிந்துகிறாய்..

வான தேவதைக்கு ஆடை அளிக்க வளைந்து கிடக்குது கொடியில் வர்ண வர்ணச் சேலையாய் வானவில்..

முடிந்த மழையின் முடியாத சாரல் நீ .. வானவில்லே

விடைகொடுத்த பின்னர் திரும்பிப் பார்க்கும் காதலியாய்.. ஓய்ந்த மழையின்பின்னர் ஒளிந்து பார்க்கிறது வானவில்..

வானுக்கு நீயழகு..

 

Maaya

 

வனதேவதை

அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஒற்றையடிப் பாதை.. பொட்டுப் பொட்டாய் வெளிச்சக் கற்றைகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்.. அது இருட்டுக் காடாகத்தான் இருந்திருக்கும்.. அந்தக் காட்டுக்குள் ஒரு வெள்ளைக் குதிரை.. அதுக்கு மேலே ஒரு அழகான இளவரசி.. குதிரையின் கால் குளம்புச் சத்தம் மட்டும் தனித்துக் கேட்க சில்வண்டுகளின் கதறல் ஒருபுறம், கொப்புகளுக்குள் பாய்ந்தோடும் குரங்குகள் ஒரு புறம்.. வளைந்து நெளிந்து மரமேறும் மலைப்பாம்பு ஒருபுறம்..

 
பயமேயில்லாமல்.. நிதானமாய் அந்தக் குதிரையும் அதன்மேலிருக்கும் குமரியும்.. மெல்லிய இடை, தோள்வரை புரண்ட கூந்தல்.. மழைக்காடு என்றதனால் முகத்தில் தூசி தும்பு ஏதுமின்றி சுத்தமான முகம், குதிரையோட்டத்திற்கேற்ற கருநீல ஆடை, மெதுவாக காட்டுக்குள் நடைபோட்ட அவர்கள் மலை அடிவாரத்திற்கு வந்துவிட்டார்கள்

அண்ணாந்து பார்க்கும் போதே நெஞ்சிற்குள் சில்லென்று ஒரு பயம்.. உயரம் ஒரு புறம், உச்சியே தெரியாத வகையில் வெண்கிரீடம் அணிந்தது போலிருந்த அந்த மலை சாதாரணமானவர்களுக்கு பயத்தைத் தான் தந்திருக்கும்.. இவளோ எந்த வித சலனமுமின்றி பக்கத்திலிருந்த காட்டுப்பூவைப் பிய்த்து மணந்தபடி மெதுவாக குதிரையின் வயிற்றில் அதற்கு நோகாமல் எத்தினாள்..

 
அவள் இடையில் நீண்டு தொங்கும் வாள் அவள் அழகிய வீராங்கனை என்று பார்ப்பவர்களை மதிப்பிட வைத்தது.. பயமேயில்லையா இந்தப் பெண்ணிற்கு.. மனித ஜீவராசியே அற்ற இந்த அத்துவானக் காட்டில் இவளுக்கு என்ன வேலை.. எதற்காக கடுங்காடு தாண்டி இந்த மலையில் ஏறப்போகிறாள்.. பார்க்கும் போதே சில்லிட வைக்கும் குளிர் இவளை ஒன்றும் செய்யவில்லையா? சற்றும் சளைக்காமல் மௌனமாக இவள் தேடிப் போவதென்ன?

 
டொக் டொக் என்ற சத்தம் சருகுகள் மிதிபடும் ஓசை.. சடசடவென்று பாய்ந்தோடும் முயல்கள்.. இருட்டுப் புதருக்குள் தெரியும் ஜோடிக் கண்கள்..எதையும் சட்டை செய்யாமல் மெதுவாக மலையேறி ஒரு சிற்றருவி ஊற்றெடுக்கும் மலை உச்சிக்கு வந்துவிட்டாள்..

 
அடடா.. காட்டுக்குள் பார்த்தது கால்வாசி தானோ.. என்ன அழகு இவள்.. சந்தன நிறம்.. சட்டென ஈர்க்கும் கண்கள்.. செப்பு வாய், எள்ளுப்பூ நாசி, ச்சா எங்கே இந்த கவிஞர்கள் எல்லாம்..
கொ…கொஞ்சம் பொறுங்கள்.. என்ன செய்கிறாள் இவள்? உறையிலிருந்த வாளை எடுத்து உயரத்தூக்கி தனக்குள் ஏதோ முணுமுணுக்கிறாள்..

 
அப்படியே துள்ளித் தரையில் குதித்து.. சுற்றுப்புறத்தை சலனமின்றி பார்க்கிறாள் .. இவள் வந்தது அறிந்து ஒரு கூட்டம் மான்கள் மருண்ட பார்வையுடன் எட்டிப் பார்க்க.. கிளிகளும், காட்டுப் பறவைகளும் பாட்டுப்பாட.. சிற்றோடையின் வெள்ளிக் கம்பிகள் இவள் மீது பிரதிபலிக்க.. ஏதோ வெள்ளி ராஜகுமாரியாய்..

 
குதிரையிலிருந்து தன் பொருட்களை இறக்கி, அதற்கு தண்ணீர் காட்டி தானும் அருந்துகிறாள்.. பனி விலகாமலிருந்த அந்த மலையின் சமதரையில் ஓரத்திலிருந்த கன்னிக் குகை ஒன்றிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.. தன் உடமைகளை தரையில் வைத்துவிட்டு அப்படியே நிர்ச்சலனமாய் கொஞ்ச நேரம் உட்கார்ந்து..

 
பவள வாய் பிரிகின்றது..

 
அம்மா.. உன்னை நம்பி வந்திருக்கிறேன்.. இனி எனக்கு நீதான் துணை.. இன்று முதல் நான் உன் பிள்ளை.. அப்படியே மலைமாதாவை மடங்கி முத்தமிட்டவள் சுற்றிப்பார்த்து புன்னகை செய்தாள் தன் புதிய தோழர்களைப் பார்த்து..

 
மெல்ல அவர்கள் நகர்ந்து அவளுக்கருகில் வர.. கண நேரத்தில் தேவதையானாள்.. வன தேவதையானாள்..

இருட்டின் நடனம்..

நள்ளிரவாக இருக்கலாம்.. நானும் எனது நாய்க்குட்டியும் மட்டுமே என் வாகனத்திற்குள்.. தனிமைத்தீவாய் நின்ற யாருமற்ற ஒற்றையடிக் காட்டுப் பாதையில் நெளிந்தோடும் ஆற்றங்கரையில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தோம்..

ரெக்சி இடையிடையே எழுப்பும் முனகல்கள், சில்வண்டின் கிறீச்சிடல், தூரத்தே கேட்கும் பேர் தெரியாதொரு மிருகத்தின் கூப்பாடு என அந்தக் காட்டின் ஓசைகளுடன், சிலுசிலுவென்ற காற்றின் அசைவும், சலசலத்து சந்தம் சேர்க்கும் நதியின் பாஷையும் மட்டுமே எங்களுக்கு துணையாய்..

காற்றின் வேகம் கொஞ்சம் அதிகரித்ததாய் ஒரு உணர்வு.. கண்ணாடியைக் கீழிறக்கிப் பார்த்தால் ஊ ஊ என்று ஊழிக்காற்றாய் ஓங்கியடித்தது.. நதி தண்டையைக் கழற்றிவிட்டு நாட்டியச் சலங்கையை காலில் கட்டினாற் போல சத்தமிட்டவாறு குதித்தாட.. கோட்டான்கள் இன்னும் பக்கத்தில் வந்து உறுமத் தொடங்கிற்று..

கண்ணாடியை கொஞ்சமாய் மேலேற்றி விட்டு மேல்நோக்கி அந்தகாரத்தை அண்ணாந்து பார்த்தேன்.. ஒற்றைத் தண்டாய் ஓங்கி உயர்ந்திருக்கும் பைன் மரங்கள்.. ருத்ர தாண்டவமாடுமாற்போல் அங்குமிங்கும் சாம்பல் வானத்தின் பின்னணியில் அசைந்தாடத் தொடங்கின.. மனசுக்குள் ஏதோ வெறுமை..

வானத்தில் சந்திரனைக் காணவில்லை.. அதன் இருப்பை மேகப்பரிவட்டமாய் ஒளிரும் வெண்சிவப்பு கங்கணம் எடுத்துக்காட்ட சுளீரென்று ஒரு ஒளி கண்ணைப் பறித்தது.. ரெக்ஸ் என்மடியில் தாவியேறிய அடுத்த நொடி நட்டுவனார் கொட்டும் சந்தத்தைவிட இன்னும் பலமாய் காதைப்பிளக்கும் சத்தத்துடன் இடி இடிக்க.. காற்று கப்பலையே கவிழ்த்துவிடுமாற்போல் இன்னும் பலமாய் சுழன்றாடத் தொடங்கியது.. மேடையை சுற்றி சுழலும் நடனப் பெண்மணிபோல் சருகுகள் அங்குமிங்கும் அலைக்களிந்து புழுதி மண்ணை வாரித்தூற்றியபடி மரங்களின் கிளைகளையும் ஒடித்துவிட மீண்டும் ஒரு மின்னல், இடி, பேய்சிரிக்கும் ஒலி..

ஏதோ ஒரு வாசம் என் நாசித்துவாரத்தை எட்ட இன்னும் பலமாய் மூச்சை உள்ளிளுத்தேன்.. மண்மணம்..புழுதியின் மேல் மழைநீர் பட்டு மயக்கும் அந்த வாசனையை எங்கும் பரவ.. நட்சத்திரங்களேயற்று இருண்ட வானத்தை பார்த்தவாறு மனம் மயக்கும் அந்த மணத்தை ஸ்வாசிக்க ஆரம்பிக்க

மழை..

ஒரே சீராக இல்லாமல் அங்குமிங்கும் கரம்பிடித்து இழுத்துச் செல்லும் காற்றின் தாளத்திற்கேற்ப சுழன்றாடியபடி டப்டப் என காரின் கூரைமேலும் பெய்யத் தொடங்கியது என் காதுக்குள் ஜதீஸ்வரமாய்..

இருள் ஒன்றுமேயற்றது என்று யார் சொன்னது.. இருளுக்குள்ளும் ஜீவனுண்டு..நாதமுண்டு, பாவமுண்டு, தாளமுண்டு..

இருட்டின் நடனத்திற்கு அர்த்தம் தெரியவில்லை.. ஆனாலும் அசையாமல் அமைதியாக அதைப் பார்ப்பதைத் தொடர்ந்தேன்..