Archives

தேக்கி வைத்த உணர்வுகள்..

girlee

கட்டவிழ்த்து திமிறியோட நினைக்கும்

நினைவுகளையும் கவலைகளையும்,

கிணற்றுக்குள் போட்ட கல்லாய்

இதயத்தின் ஆழத்தினுள் அமிழ்த்தி வைத்திருக்கிறேன்..

treble-clef

யாருமில்லாத வேளைகளில்

தனிமைக்கு நான் துணையா..

எனக்குத் தனிமை துணையா

என்று பிரித்துத் தோன்றத் தெரியாது

துணையின்றி தனித்திருக்கிறேன்..

treble-clef

மழைக்கு வரும் ஈசலை அடிக்க மனம் வரவில்லை..

அது வாழும் சொற்ப நிமிஷங்களை முழுமையாக வாழட்டும் என்று

விளக்கை எரியவிட்டு வெறுமனே பார்த்திருக்கிறேன்..

treble-clef

மறதி என்பதொன்று மட்டும் மனிதனுக்கிருந்திருக்காவிட்டால்,

மன்னிப்பு என்றொரு வார்த்தையே இருந்திருக்காது..

treble-clef

எதிர்பார்ப்பில் பாதியும்,

பயத்தில் மீதியுமாய்

மனித வாழ்க்கை கழிந்து விடுகின்றது..

treble-clef

இழப்பதற்கு இனி ஏதுமில்லை என்ற நிலை வரும் போது

தோன்றும் உத்வேகம்

அநேக நேரங்களில் உச்சத்திற்கு நம்மை உயர்த்திச் சென்றுவிடும்..

treble-clef

சிலரை / சிலதை இழந்த பின்னர் தான் அவரின் / அவற்றின் மதிப்பு தெரிகின்றது..

treble-clef

treble-clef

புலம்பல்ஸ்

நேற்று எங்கள் குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம்.. 13 வயது பையன்.. எனக்கு தம்பி முறை.. ஸ்கூலில் இருந்து சைக்கிளில் வீடு நோக்கித் திரும்பிக்கொண்டு இருக்கையில் இவன் பின்னால் ஒரு லொறி, அதன் பின் ஒரு கார்..Wrong side  இலிருந்து வேகமெடுத்து முன்னேற முயன்ற கார்.. அவனுக்கு காலனாக..

 

ஆங்கிலத்தில் Better be Mr. Late than Late Mr  என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். நிஜம் தான்.. ஒரு நிமிடம் துரிதமாய் போகவேண்டும் என்ற எண்ணம், வாழ்நாள் முழுமைக்குமான சோகத்தை ஒரு குடும்பத்திற்கு கொடுத்து விடுகின்றதே.. மனச்சாட்சியுள்ள ஓட்டுநர் என்றால், சாகும் வரைக்கும் அந்தக் குற்ற உணர்ச்சி அவருக்குள்ளும் இருக்குமே.. இதெல்லாம் எதற்காக?

 

எனக்கும் வேகமாக வாகனம் ஓட்டப் பிடிக்கும்.. ஆனால் நெரிசலான சாலைகளில் அல்ல.. மற்றவர்களின் உயிர்களும் உயிர்தானே.. உயிரை விடுங்கள்.. ஒரு மனிதனை அங்கஹீனமாக்குவது கூட எத்தனை பாவம்.. வாகனம் ஓட்டும் போது.. மிக அவதானிப்போடு இருங்கள்.. இரண்டு நிமிடங்கள் தாமதமாகிப் போனால் என்ன குறைந்துவிடும்.. அதற்காக தறிகெட்டு வாகனம் செலுத்தாதீர்கள்.. போதையில், வேறு கவனத்தில் ஓட்டாதீர்கள்.. உங்களைப் போலதான் நீங்கள் விபத்து ஏற்படுத்துபவனும்.. மற்றவர்களையும் மதியுங்கள்..

 

 

விஜய் டீவி சுப்பர் சிங்கர் ஜுனியர் தவறாமல் எங்கள் வீட்டில் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.. விருப்பத்திற்குரிய பாடகர்கள் யார் என்று கேட்டால்.. எந்தப் பூ அழகு என்பது போலதான்.. ஆனாலும் ஆஜித்.. எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் பிடித்த வாண்டு.. அவரின் action களும், பாவங்களும், உருகி உருகிப்பாடும் பாங்கும்..

 

இந்தப்பாடலை சித்ராம்மாவுடன் எத்தனை அழகாக பாடுகிறான் என்று பாருங்க.. எத்தனை தரம் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை..  என் மனதுக்கு நெருக்கமான இந்தப் பாடலை, என் மனதுக்குப் பிடித்த இந்தக் குட்டி நடிகன் பாடியது பார்த்து.. என் கண்ணே பட்டிருக்கும்..

ஆஜித் வீட்டில் அம்மாவிடம் சொல்லி சுத்திப்போடும்மா..

 

 

ஐஸ்வர்யா எப்போதுமே limelight ல் இருக்கும் ஒரு அழகி.. டயானாவிற்கு பிறகு எனக்கு பிடித்த பெண்களில் ஒருவர்.. எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தாலும்.. மனம் தளராமல், எதற்கும் பதில் சொல்லாமல், தனக்கு நியாயம் என்று தோன்றுபவற்றை செய்தவர்.. அவரின் அழகுக்காகவே அத்தனை பேராலும் அறியப்பட்டாலும், அவருக்குள்ளிருக்கும் தாய்மை உணர்வை இப்போது அறிந்துகொள்ள முடிந்தது..

 

மேற்கத்தேய தாய்மார்.. தங்கள் வளைவுகளை திரும்ப பெறுவதற்காக குழந்தை பிறந்து கொஞ்ச நாட்களிலேயே தாய்ப்பாலை நிறுத்தி, Jim மே கதியென்று கிடந்து,Dieting மூலம் உடல் இளைத்து அழகாகத் தோன்ற பாடுபடும்போது, தன் தாய்மையால் இன்னும் அழகாகி, தன்னம்பிக்கையுடன் சிவப்பு கர்ர்ப்பெற்றில் நடைபோட்ட போது, அவர் உலக அழகியாக இருந்தபோதை விட இன்னும் அழகாக என் கண்களுக்குத் தெரிந்தார்

 

Face book கில் இப்போது memes என்று ஒரு வகை கார்ட்டூன் பிரபல்யமாகி வருகின்றது..  இந்தியாவில் அதிகளவில் இல்லாவிட்டாலும், இலங்கையில் அனைவர் மத்தியிலும் இது மிகப் பிரபல்யம்.. சிரிப்பதோடு.. கொஞ்சம் சிந்திக்க வைக்கும் இன்னுமொரு கார்ட்டூன் வகை என்று இதைச் சொல்லலாமா? இங்கே சில.. பார்த்து ரசித்து சிரிக்க..

slmemes  என்ற Face Book பக்கத்தையும் பாருங்கள்..

 

 

 

 

சினிமா சினிமா..

நம்ப ஊரு சினிமாக்காரவுங்களோட Dressing sense பார்த்தா சிரிக்கிறதா ஆழுவுறதான்னு  எனக்கு தெரியுறதில்ல.. நான் எல்லா ஹீரோசையும் சொல்லலைங்க.. அப்புறம் எல்லோரும் எங்க வீட்டு முன்னாடி துடைப்பத்தோட வந்து நின்னு என்னோட உருவ பொம்மைக்கு தீ வைச்சாலும் வைச்சிடுவாங்கப்பா.. (அடங்கு..நெனப்பு தான் பொழப்ப கெடுக்கிறது)

 

படங்கள்ல இவங்கள பார்த்தா சில சமயம் ரொம்ப சிரிப்பா இருக்கும்.. கிராமத்து ரௌடின்னு சொல்லுவாங்க.. பட் கால்ல Adidas Shoe வோட அலைவாங்க.. அதாவது பரவால்லைங்க.. லெதர் ஜாக்கெட்டும், pants ம் போடுறாங்களே.. கிராமத்துல எவனுக்கு லெதர் பத்தி தெரியுமாம்..
வெள்ள வெளேர்ன்னு வேஷ்டி சட்டையோட பாய்ஞ்சு பாய்ஞ்சு சண்டை போடுவாங்க.. .. சுத்தி நின்னு அடிவாங்குறவங்க எல்லாரும் பாவம் கிழிஞ்ச சட்டை, அழுக்கு வேட்டி, கலைஞ்ச தலைன்னு நிப்பாங்க.. நம்ப ஹீரோ சார் மட்டும் எவ்வளவு trim ஆ மடிப்புக் கலையாத டிரெஸோட இருப்பாரு பாருங்க.. அட அட அடா..

 
ரொம்ப ஏழைன்னு சொல்லுவாங்க.. ஆனா தலைமுடி ஜெல் போட்டு அழகா படிஞ்சு இருக்கும்.. பொண்டாட்டி பத்தி கேக்கவே வேணாம்.. குடிசைல தான் இருப்பாங்களாம்.. ஆனா காதுல கைல எல்லாம் matching கம்மல் வளையல்ன்னு போட்டுட்டு தான் அடுப்பையே ஊதுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்.. நகத்துல கொஞ்சம் அழுக்கு.. ம்ஹ்ம்..  ஆ.. கன்னத்துல ஒரு கீத்து கரி பூசியிருப்பாங்க.. அப்போதானே ஹீரோ வந்து “அய்யோ என் கண்ணே.. உனக்கா இந்தக் கதி” ன்னு தொடச்சி விடலாம் பாருங்க..

 

அப்புறம் இந்த விஷயம் சொல்லலன்னா என் மனசு தாங்காதுங்க..  இப்போ வில்லன் ஹீரோவோட தங்கையையோ, நண்பனையோ சுட்றுவாங்கன்னு வைச்சுக்கோங்க.. கிளைமாக்ஸ்லதான் இதெல்லாம் நடக்கும் சரியா.. அப்போ பாருங்க.. ரத்தம் ஓடிக்கிட்டு இருக்கும்.. ஹீரோ கைல கூட ரத்தம்.. But குண்டடிபட்டிருக்கிறவங்க முகத்துல துளி ரத்தம் கூட பட்டிருக்காது..

 

இது மட்டுமா.. நிஜத்துல யாருக்காவது காயம் பட்டா ஒரு சின்ன பொண்ணு கூட உடனே அம்பியூலன்சுக்கு போன் பண்ணிடும்.. இல்லைன்னா First aid கொடுக்க பார்ப்பாங்க.. நம்ப ஹீரோ இவங்கள மடில தூக்கி வைச்சுகிட்டு ஒரு expression காட்டுவார் பாருங்க.. அய்யோ.. செத்துப்போன என் பாட்டி கனவுல வந்து நான் செத்தப்போ நீ இப்படிக் கவலப்பட்டியான்னு கேக்குற அளவுக்கு இருக்கும்..

 

அதுலயும் இன்னொரு விஷயம்.. அவங்க குரல் மட்டும் தான் ஸ்க்றீன்ல காட்டுவாங்க.. இல்லன்னா.. எக்ஸ்பிரஷனே இல்லாத அந்த மூஞ்சி அழுறத காட்டுனா.. அப்புறம் சாகுற வரைக்கும் அவரோட படங்கள நாம்ப பார்ப்போம்?

சிலவங்களுக்கு முதுகு குலுங்குற குலுங்கல்ல அச்சச்சோ.. இவுரு முதுகெலும்பு உடைஞ்சிடுமோன்னு பயமா இருக்கும்..  இல்லன்னா டைட் ஷொட்ல கண்ல இருந்து கிளிசரின் உபயத்துல கண்ணீர் வர்றது போல காட்டுவாங்களே.. என்னா அழுகை.. இதுவரைக்கும் அந்த co artist  பாவம் இதெல்லாம் பார்த்து சிரிக்கக்கூட முடியாம மூச்சடக்கி படுத்துக் கெடக்கனும்..

 

அவங்க கதை இன்னொன்னு.. இந்த directors யமன் கூட பார்ட்னர் ஷிப் வைச்சிருக்காங்க தெரியுமா.. குண்டு அடிபடும்.. வீச்சரிவாள் வெட்டும்..  but நான் cut  சொல்ற வரைக்கும் யாராவது செத்தீங்க.. நானே கொன்னுடுவேன்னு சொல்லிடுவாங்க போல.. பாவம்.. ஒரு பக்கம் சொத சொதன்னு ரத்த மேக்கப், அடுத்த பக்கம் ஹீரோவோட reactions.. அதோட மூச்சு விடாமல் மரண வாக்குமூலம் வேற சொல்லணும்.. அது சொல்லி அழுது புரண்டு முடிஞ்சப்புறம் தான் அந்த கரெக்டர் சாகலாம்.. இல்லைன்னா வகுந்துட மாட்டாங்க..வகுந்து..

 

அதுலயும் வில்லனால பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாகுற தங்கச்சி கரக்டரோட இல்லைன்னா வில்லன் கையால சாகுற அம்மா characters சோட scene  தான் ரொம்ப இன்டரஸ்டிங்.. “அண்ணா நீ அவன பழிவாங்கணும் ணா.. இல்லைன்னா என் ஆவி வேகாது” (ஆவில தானே வேக வைப்பாங்க.. ஆவியே வேகுமா?) “மகனே நீதான்டா நம்ம கொலப் பெருமைய காப்பாத்தணும்.. அவன்கள வேரோட அழிக்கணும்.. என் நெஞ்சுல பால் வாக்கணும்”… ஐயோ ஐயோ.. குழந்தைங்களுக்கே குடிக்க பால் இல்லையாம்.. இவங்களுக்கு பாலு வாங்க நாம்ப எங்க போறது..

 

ஆனாலும் இதெல்லாத்துலயும் நம்ப ஹீரோவ அடிச்சுக்க ஆளே இல்லைங்க.. ஹீரோ செத்துட்டார்ன்னு நாம்ப எல்லாரும் நம்பிட்டே இருப்போமா.. அந்த Gapல யாரோ ஒரு புண்ணியவான் இல்லைன்னா நம்ப ஹீரோயின் அந்த 57 கிலோ bodyய வைச்சுக்கிட்டு 95 கிலோ ஹீரோவ தன்னோட தோள்ள தூக்கிகிட்டு டாக்டர் கிட்ட போவாங்க..

 

பாவம் அவுரு செத்துப்போய் ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் இருக்கும்.. ஆனா நம்ப wonder doctor எதையோ கொடுத்து அவர எழுப்பிடுவாங்க.. இல்லைன்னா இருக்கவே இருக்கே.. நெஞ்சுப் பகுதில கும்மாங்குத்து ஆடுவாங்க  பாருங்க.. அப்புறம் ஹீரோ எழும்பி.. “என்ன விடு.. நான் இப்பவே போய் அவன கொண்ணுட்டு வாறேன்னு” புயலா போவார்..

 

காய்ச்சல் வந்தாலே நாலு நாளைக்கு நம்பளால எழும்ப முடியுறதில்ல.. இதுல mummies போல கட்டுப் போட்டுட்டு படுத்திருக்கிற இவுரு கட்டெல்லாம் அவுத்தெறிஞ்சுட்டு வில்லன் கூட சண்டை போட்றுவாராம்..

 

இப்போ இந்த சீன் காட்டுல நடக்குதுன்னு வைச்சுக்கோங்களேன்.. ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் அங்கே.. கட்டாயம் ஒரு அருவிக்கு பக்கத்துல இல்லைன்னா ஆத்துக்கு பக்கத்துலதான் இது நடக்கும்.. நம்ப ஹீரோயின் என்ன பண்ணுவாங்க தெரியுமா.. ஒரு ரொமான்டிக் + pathetic பார்வையோட நம்ப ஹீரோ மார்மேல விழுந்து pulse  பார்ப்பாங்க.. அப்புறம் தான் அவங்களுக்கு அஞ்சாம்புல first aid கிளாஸ்ல கத்துக்கொடுத்ததுல்லாம் ஞாபகத்துக்கு வரும்..

 

ஒதட்டோட ஒதடு வைச்சு அப்படியே அவங்க மூச்சுக் காத்த அவுருக்கு கொடுத்து உசுரு கொடுத்துருவாங்க.. அப்புறம் அவுரு எழும்பினதும் அவங்க மூஞ்சில வர்ற  வெக்கத்த பாக்கணுமே.. ஐயோ ஐயோ.. இதுல நம்ப ஹீரோயின் தான் பாவம்.. செத்தா செத்ததுதான்.. ஹீரோயின் Body ய தூக்கிகிட்டு மழைல நனைஞ்சுட்டே நம்ப ஹீரோFlashback scenes சோட பாட்டு பாடுவார்..

 

இல்ல நல்ல வேளையா நம்ப கெட்ட நேரம் பொண்ணு சாகாம நம்ப வாய் to வாய் டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாங்கன்னா.. நான் இப்போ எங்க இருக்கேன்னு கேட்டுகிட்டே எழுந்திரிப்பாங்க.. அப்புறம் மயங்கிக் கெடந்தப்போ நடந்ததெல்லாம் அவங்க மனசுல படமா ஓடும்.. அப்புறம் ஹீரோவ பார்த்து வெக்கப்பட்டுகிட்டே சிரிப்பாங்க பாருங்க .. அடடா.. அதுசரி மயங்கிக் கெடந்தப்ப இவுங்களுக்கு சொரண எங்கருந்துய்யா வந்துச்சு?

போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்

 

(தொடரும்)

புலம்பல்ஸ்

விஜய் டீவி
கடந்த திங்கட் கிழமை முதல் விஜய் TV யின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி (NVOK) தவறாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்பாவின் சிரிப்புச் சத்தம் வீட்டில் கேட்டது ஒரு சந்தோஷம் என்றால், விஜய் TV அறிவிப்பாளர்களின் லூட்டி ப்ளஸ் சென்டிமென்ட்ஸ் என நிகழ்ச்சி கலக்கலோ கலக்கல்.. நாமும் அந்தக் குடும்பத்துடன் சேர்ந்து விடலாமா என்று எண்ணத் தோன்றியது.

 

என்னதான் குறைகள் சொன்னாலும், விஜய் TVயின் Marketing tactics  மற்றும் நிகழ்ச்சி வடிவமைக்கும் விதத்துடன் யாராலும் போட்டி போட முடியாது என்பது உண்மை..

 

சிவகார்த்திகேயனின் அழுகை, DD யின் லூட்டி, கோபிநாத்தின் புலமை, சரவணனின் அமைதி, ராஜஷேகர் அவர்களின் அனுபவம், நண்டின் சிண்டுகள், ரம்யாவின் அமைதி, பாவனாவின் அழகு, கல்யாணியின் ஓவர் வழிசல், மாகாபாவின் குறும்பு, எல்லாமே சுவாரஸ்யமாக இருந்ததென்றாலும், என்னை கவர்ந்த விஷயங்கள் என்றால்..

 

DD யும், தீபக்கிற்கும் இடையிலான நட்பை புன்சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த தீபக்கின் மனைவி.. தன் சகோதரன் படிப்பதற்காக தன் படிப்பைத் தியாகம் செய்து சம்பாதித்து கொடுத்ததுடன் மட்டும் நிற்காமல், அது பற்றி சூர்யா குறிப்பிட்ட போது, அலட்டாமல், அது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல் நடந்து கொண்ட டDD யின் இன்னுமொரு பக்கம்.. Hats off to you DD..

 

கோபியின் ஆளுமையும் தர்க்க ரீதியாக விடயங்களை அணுகும் தன்மையும் ஒரு புறம் ஆச்சரியப்பட வைத்தது என்றால், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த ஒருவர் ஜெகன்.. யாரையும் சாமானியமாக நினைக்கக்கூடாது என்பதற்கு மற்றுமொரு உதாரணம்.. எந்தவொரு பதற்றமுமின்றி, நேர்த்தியாக, பீற்றிக்கொள்ளாமல் தனக்குத் தெரிந்த விடயங்களை சொன்ன பாங்கு..wow..

 
சூர்யா இடத்தில் இன்னுமொருவரை வைத்துப் பார்க்க முடியாதபடியான சூர்யாவின் இருப்பு தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் பலம் என்று நான் நினைக்கிறேன்.. வழிபவர்களையும், புகழ்பவர்களையும், இவனுக்கென்ன தெரியும் என்று வருபவர்களையும் நேர்த்தியாக கையாண்டு நிகழ்ச்சியை திறம்பட கொண்டு நடத்துவதில்.. ஒரு தொகுப்பாளராகவும் ஜெயிக்கிறார் சூர்யா..

∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞

நாளைக்கு சித்திரை வருடப் பிறப்பு.. என் இணைய நண்பி ஒருவரிடம் கொண்டாட்டங்கள் எப்படி என்று கேட்டதற்கு.. “என்ன செய்றதுன்னே புரில.. கொண்டாடினா..அதிமுக ம்பாங்க.. கொண்டாடல்லன்னா திமுக ம்பாங்க.. என்ன பண்றதுன்னு தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.. ம்.. பாவம் தான்..
சரி ஏதாவது புது டிரெஸ் வாங்கலான்னா தமன்னா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, த்ரிஷா ஒரு கடைக்கு வரச் சொல்றாங்க, அனுஷ்கா இன்னொன்றுக்கு..எந்தக் கடைக்குத் தான் போவது.. போனாலும் கடைக்காரங்க சொல்ற விலைக்கு ரொக்கட்டே வாங்கிடலாம்.. வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்குமே பத்தலை, அதுக்குள்ளே இவங்களின் அட்டகாசங்கள் தாங்க முடியுதில்லை சார்..
சரி, இதுதான் கொடுமைன்னு TV போட்டா

 

சன் மற்றும் கலைஞர் TVகளுக்கு பண்டிகைக்காலத்தில் கிடைக்கும் விளம்பரங்கள் தேவை, அத காட்டுவதற்கு விஷேட நிகழ்ச்சிகளும் தேவை.. ஆனா அவுங்க சித்திரைத் புதுவருஷம்ன்னு சொல்ல மாட்டாங்களாம்.. சன் TVக்கு இது அவங்களோட Anniversary யாம்.. கலைஞர் TVக்கு சித்திரைத் திருநாளாம்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கதையால்ல இருக்கு

 
சித்திரை திருவிழாவோ, புதுவருடமோ, இல்லை 19வது ஆண்டு நிறைவோ.. எதுவாகன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்.. சினிமா என்ற மாயை இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான தைரியமோ, கண்ணோட்டமோ எந்தவொரு தொலைக்காட்சிக்கும் இல்லை என்பதைப் பார்க்கும் போது எதிர்காலம் பற்றிக் கவலையாக இருக்கிறது..

 
நாளைக்கு, எது நடக்கின்றதோ இல்லையோ.. ஓவர் மேக்கப்புடன் அரை குறை ஆடை அணிந்தபடி நான்கு கதாநாயகிகளும், வேஷ்டி கட்டினாலும், தலையில் Shadesம், காலில் Shoeவுமாக “ya ya” “well” “Basically” என்று  தங்க்ளிஷில் பேசியபடி கதாநாயகன்களும்.. “அணைவறுக்ம் சித்ர ப்துவர்ஷ வால்துகள்” என்று சொல்ல உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வருவார்கள்..

 

 

வருமானம் முக்கியம் தான்.. அதற்காக.. தமிழ் தமிழ் என்று கூவி விற்கும் இவர்கள், தமிழ் சார்ந்த அல்லது தமிழ் கலாசாரம் கலந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிரண்டையாவது பிரைம் டைமில் ஒளிபரப்பலாமே.. திராவிடம் பேசும் தொலைக்காட்சிகளுக்குக்கூட தில் இல்லை எனும் போது.. யார் தான் தமிழனையும், தமிழ் கலாசாரத்தையும் காப்பாற்றுவது..

 
இது போதாதென்று திரைப்படங்கள்.. கொலை, கொள்ளை, குத்து, வெட்டு, விபத்து, கவர்ச்சி.. நல்லதொரு நாள்ல இவங்க போடும் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டே புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வச்சா.. விளங்கிடும்.. கொஞ்சமாவது நல்ல படங்களை போடலாமே.. எத்தனை நல்ல படங்கள் இருக்கின்றன..

 

 

இதெல்லாம் நாம்ப சொல்லி கேட்கவா போகிறாங்க.. அதை விடுங்க.. நாளைக்கு வீட்டுக்கு யாராவது visit பண்ண வந்தாங்கன்னா முகம் கொடுத்து பேசுங்க.. எப்படியும் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் இன்னொரு வாட்டி போடுவாங்க.. அப்போ பார்த்துக்கலாம்.. இல்லைன்னா Officeல Download பண்ணி பாத்துக்கலாம்..

 

வர்றவங்களோட பேசி சிரிச்சி சந்தோஷமா புதுவருஷத்தை கொண்டாடினா நமக்கும் சந்தோஷமா இருக்கும்..

சித்திரைப்புதுவருட வாழ்த்துகள்!

இவர்களும்மாந்தர்களே..

ஒதுக்கப்படுதலும், சுய கௌரவத்தை இழத்தலும் எத்தனை அவமானகரமானது என்பது தெரியுமா..
என்றாவது ஒருநாள் அலுவலகத்தில் மேலதிகாரி நம்மிடம் சில வார்த்தைகள் காட்டமாக சொன்னால் தாங்க முடியாது.. நண்பர்களின் முன் அப்பா திடடினால், ஏதோ வானமே தலையில் இடிந்து விழுந்துவிட்டது போல பாரம்.. டீச்சர் கண்டித்தால் நாக்கை பிடுங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம்.. விளையாட்டில் சேர்க்கவில்லையா, வெற்று உடம்புடன் தெருவில் விரட்டிவிடப்படுவதைப் போன்ற உணர்வு.. நம் கருத்துக்கு காதுகொடுக்கவில்லையே.. நாண்டுகொண்டு சாகலாமா என்று யோசனை..
ஆனால் தினம் தினம், ஒதுக்கப்பட்டு, சுய கௌரவத்தை இழந்து, தன்னை ஒறுத்து தன் குடும்பத்திற்காக வாழும் எத்தனை பேரை நாம் இலகுவாக மறுதலிக்கின்றோம் என்பது தெரியுமா?
பெரிய ஷாப்பிங் mall களுக்கு போகும் போது, வாகனங்களை ஒழுங்குபடுத்தும் காவல்காரர்களை பார்த்திருக்கிறீர்களா? வாகனங்களை தெருவுக்குள் திருப்பி விட உதவிய பின் தலைகுனிந்து கூனிக்குறுகி எதிர்பார்ப்புகளுடன் நமது கண்களை நேருக்கு நேர் நோக்க முடியாதவர்களாய் அவஸ்தைப்படும் அவர்களைப் பார்க்கையில் அவர்களின் உடல்மொழியின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனைகளை நான் காண்பேன்..
அலுவலகங்களில் வாசலில் காக்கிச் சட்டையுடன், வந்திருப்பவர்களை நாட்டாமை செய்தவாறு உட்கார்ந்திருக்கும் அந்த மனிதனின் அதட்டல்களுக்கு பின்னால் அவன் நாளாந்தம் மேலதிகாரிகளால் அனுபவித்துக்கொண்டிருக்கும் கீழ் நிலையை வெல்லும் வேட்கையே தெரிகின்றது..
செருப்புத்தைத்துத் தருபவர், நம் கால்களை பற்றி அதனை அணிவிக்கும் போது, புழுங்கிக் கொண்டிருக்கும் அவரின் உணர்வுகளையும், கொதிக்க மறந்திருக்கும் அவர் வீட்டு உலையையும் நினைத்துப் பார்ப்பேன்..
விறகு வெட்டுபவர்கள் வியர்வை சொட்டச்சொட்ட கூலி வாங்க வரும் போது பேரம் பேசுபவர்களைப் பார்த்து அவர்கள் கொடுக்கும் முகவுணர்வுகளின் முகவரிகளில் தொக்கி நிற்கும் ஏக்கத்தையும் பதைபதைப்பையும் நாம் அநேகர் நினைத்துப்பார்ப்பதில்லை..
தெருவோரம் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் வந்து இரப்பானைப் பிடிக்கிப் பறப்பிராந்தாய் பணத்தைத் தட்டிப்பறிக்கும் தனப்பிரபுக்களைப் பார்த்து அவர்கள் விடும் ஏக்கப்பெருமூச்சின் பின்னால், அவர்களின் இயலாமை மட்டுமல்ல, இல்லாத்தன்மையும் வெளிப்படுவதை பார்த்திருக்கிறீர்களா?
கீரையும், பூவும், பழமும் விற்று வரும் பெண்களின் குரல்களுக்கு மத்தியில் ஒலிக்கும் கேவல்களைக் கேட்டிருக்கிறீர்களா?
தெருத்தெருவாய் குப்பை கூட்டியள்ளும் ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்த்திருப்போமா? நடுவெயிலில், அழுக்காடைகளுடன் அல்லல் படும் அவர்களை அருவருப்பாகப் பார்க்காமல் நேசத்தினை கண்களிலாவது காட்ட வேண்டும் என்று எப்போதாவது நினைத்திருக்கிறோமா?
பெருங் கடைத்தொகுதிகளுக்குச் செல்லும் போதோ, ஹோட்டல்களுக்கு சென்று உண்ணும் போதோ பேரம் பேசாமல் பணத்தை அள்ளிவிட்டெறியும் நாம் இவர்களைப் போலவர்களுக்கு பணம் கொடுக்கவேண்டி வரும் போது மட்டும் கருமித்தனம் பண்ணுவது ஏன் என்பதற்கு இன்று வரை என்னால் பதில் சொல்ல முடியுதில்லை..
எந்தவொரு தொழிலும் இழிவில்லை, கேவலமில்லை தான்.. ஆனாலும்.. கீரைக்காரியிடமும், பெட்ரோல் பங்கிலும், பார்க்கிங் லொட்களிலும் மாத்திரம் தானா காசு சேர்க்க வேணும் என்ற எண்ணம் வரவேண்டும்.. பெரியளவு தானதர்மங்கள் செய்யத் தேவையில்லை.. அவாகளை நோக்கி ஒரு சின்னப் புன்னகை, உடல்மொழியை வாசித்து ஒரு அன்பளிப்பு.. இது போதுமே அவர்களின் நாளுக்கு ஒளியூட்ட..
இவர்களும் மனிதர்கள் தானே.. குடிப்பது, புகைப்பது, சண்டைபிடிப்பது என்று இவர்கள் மீது நாம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நாம் பண்ணுவதில்லையா.. நாகரீகம் தெரியாது என்று சொல்லுபவர்கள் தனியாயிருக்கும் வேளையில் கூட நாகரீகத்தை கைக்கொள்பவர்கள் தானா..

உள்ளொன்று புறமொன்றாக வேடம் போடும் வேடதாரிகளுக்கு மத்தியில், எளிமையே இலக்கணமாக வாழும் இவர்களையும் கொஞ்சம் மதிக்கலாமே.. கேவலமானவர்கள் என்று அவர்களை ஒதுக்கி நாம் கேவலமாகாமல் கொஞ்சம் கருணை காட்டலாமே..
ஏமாற்றுபவர்களை புறந்தள்ளி, ஏழையாயிருந்தாலும் உழைத்துண்ண வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழும் இவர்களைப் போன்றவர்களையும் கொஞ்சம் மதிக்கலாமே.. அவர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்..சக மனுஷனாய், மனுஷியாய் மதியுங்கள்
கொஞ்சம் மனிதத்தன்மையும், மனிதநேயமும், மற்றையவர்களையும் மனிதர்களாக பார்க்கும் பண்பும் இருந்தால் அனைவரும் கடவுள்களே..