Archives

எனைக் காணவில்லை நேற்றோடு..

கண்களைப் பிரிக்க முடியவில்லை.. எங்கும் ஒரே மசமசப்பு.. இருக்கையில் அமர்ந்தபடி தூங்கியதாலோ என்னவோ, உடம்பின் அத்தனை மூட்டுகளிலும் ஏதோ ஒரு அசௌகர்யம். கழுத்து எலும்பு சுழுக்கி விட்டதா இல்லை எதுவோ ஒன்றால் பிணைக்கப்பட்டிருக்கிறேனா தெரியவில்லை, கழுத்தை திருப்ப முடியாதபடி ஏதோ ஒன்று இறுக்க அழுத்திப் பிணைக்கின்றது.

 
பிரிய மறுத்த கண்களை கைகளால் தேய்த்து திறப்போமென்றால், கைகளை அசைக்க முடியவில்லை. மெதுவாக ஒன்றுக்கு பத்துத் தடவையாக கண்களை அழுத்தி மெதுவாய் திறந்து பார்த்தேன்..
விமானத்தில் தான் இருக்கிறேன்.. சுற்றிவர மெல்லிருட்டு, பக்கத்தில் நான் விமானத்தில் ஏறிய போது இருந்த பெண்தான்..ஏதோ ஒரு கோணத்தில் தலையை சரித்தபடி, இதழ்களைக் கோணிக்கொண்டு இன்னும் தூக்கத்தில்.. பயணத் தொடக்கத்தில் இருந்த அழகு இப்போது இல்லை போல தான் தோன்றியது.. மேக்கப் கலைந்திருக்கும்.. எல்லா பெண்களும் இப்படித்தானா என்ற நினைப்பு எழும்ப.. ச்சே என்ன கொடுமையான எண்ணம்.. முதல்ல இந்தத் தூக்கத்தையும் சோர்வையும் விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கால்களையாவது அசைத்துப் பார்க்கலாம் என நினைத்தபடி ஷு’வுக்குள் இருந்த கால் விரல்களை அசைக்க எத்தனித்தேன்..

முடியவில்லை..

ஏதோ மனசுக்குள் மெதுவாய் நிரட.. தொண்ணூறு கிலோ, ஆறடி உயரம், அசாத்திய பலசாலி என்று என் பெண் நண்பிகள் சொல்லியபடியே கன்னங்களை வருடும் என்னால் கேவலம் என் கால்விரல்களைக்கூட அசைக்க முடியவில்லையே என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

 
முடிந்தளவு தலையை அசைக்கலாம் என்றால்
அதுவும் முடியவில்லை..

 
அச்சம் மெதுவாய் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கியது.. முதலில் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்க்கலாம் என்ற நினைப்பு தோன்ற.. ‘இந்த மெடுலா ஒப்லாங்கட்டாவில் அடிகிடி ஏதும் பட்டுச்சா’ ச்சே ச்சே..
இரவு 11 மணிக்கு எந்திரிச்சேன்..குளிச்சு அம்மா கொடுத்த காபி குடிச்சிட்டு, காரை வீட்ல விட்டுட்டு, Cab ஒன்றை புக் பண்ணி எயார்போர்ட் வந்தேன்..

 
அங்கேயும் பெரிசா ஒன்றும் நடக்கல்ல.. ரெண்டு எயார் ஹோஸ்டஸ் என்னைப் பார்த்து சிரிக்க வேறு செய்தாங்க..
அழகான வெள்ளைக்காரி ஒருத்தி பக்கத்துல வந்து சிங்கப்பூர் ப்ளைட்டுக்கு எங்கே செக் இன் பண்ண வேணும்ன்னு கேட்டா..

காலை சரித்து சரித்து நடந்த ஒரு பருமனான பாட்டி ஒருவர்.. இந்தியாவை சேர்ந்தவரா தான் இருக்கணும்.. புடவையை இழுத்துச் சொருகியபடி, எம்பார்க்கேஷன் ஃபோர்மை ஃபில் பண்ணி தர சொன்னா.. 75 வயசாகுது.. இவங்கள தனியா யாரு பிளேன்ல போக சொன்னா என்று சலித்தபடி நிரப்பிக் கொடுத்தது ஞாபகமிருக்கிறது
ஒரு சோப்ளாங்கி என்னை லுக் விட்டுட்டே இருந்தான்.. ஏதேனும் Gay’யா இருப்பானோங்கிற பயத்துல அவன் பக்கமே திரும்பல.. Barrista’ல Coffee வாங்கி சிப்பிக்கொண்டே எயார்ப்போர்ட் பரபரப்பை பார்த்துக்கொண்டிருந்தபடி, அனௌன்ஸ்மன்ட் வந்ததும் விமானத்துக்குள் ஏறினேன்..
வின்டோ சீட் எனக்கு.. அய்ல் சீட்’ல எனக்கு பக்கத்துல இப்போ வாய் பிரிந்து படுத்துக்கிடக்கும் பொண்ணு ஏறிச்சு.. ஏதோ உலக அழகி அவதான்ங்கிறது போல நடை உடை எல்லாம்.. நான் அவளை கவனிக்காமல் புறக்கணித்ததும்.. ‘ஹாய் அயாம் டெய்சி’ன்னு தானே அறிமுகப்படுத்திக் கொண்டாளே..

 
அப்புறம், வெஜ் சான்ட்விச், Black coffee, Garden Salad கொடுத்த இடை சிறுத்த எயார்ஹோஸ்டஸ், தன் பூஞ்சைக் கண்களால் என்னைப் பார்த்து கண்சிமிட்டியதும் ஞாபகம் இருந்தது.. காலை மூணு மணி ப்ளைட் எங்கிறதால, வானம் வெளிக்கவேயில்லை.. அதற்குள் காலைச்சாப்பாடா என்று சலித்தபடி, கறுப்புக் காப்பியை முதலில் கையில் எடுத்ததும் ஞாபகமிருக்கிறது.. அப்புறம் என்ன நடந்தது..
ஆ.. முதலில் ஒரு குலுக்கல்.. Turbulence  போல என்று நினைத்துக்கொண்டு, காப்பிக் கோப்பையை அப்பால் பிடித்த போது, டெய்சி தன் வாய்க்குக் கொண்டு போன சிக்கன் பேர்கரிலிருந்த மயோனைஸ் வாயில் கோலம் போட்டது பார்த்து நமட்டுச்சிரிப்பு சிரித்ததும் நினைவிலிருக்கிறது..
அப்புறம்.. அப்புறம்..

 

விமானம் ஏதோ ஒரு சுழலுக்குள் அகப்பட்டுக் கொண்டது போல தள்ளாட, மேகங்கள் வட்டமிட ஆரம்பித்தது.. திடீரென்று எங்கள் விமானம் நெட்டுக்குத்தாய் செல்வது போல தோன்ற, நாங்களும் இருக்கைகளுடன் தொண்ணூறு பாகைக் கோணத்தில் திரும்பியது நினைவுக்கு வந்தது..

 
அதற்குப் பிறகுதான்.. ஆழிப்புயலுக்குள் அலைவது போல விமானம் அலுங்கிக் குலுங்க.. க்ளோசட்டுக்குள் இருந்த அத்தனையும் வெளியே வந்து தலையிலும், தரையிலும் கொட்ட, எங்கள் முன்னிருந்த சாப்பாட்டு கோப்பைகள் எல்லாம் எங்கு போனதென்று தெரியவில்லை.. என்னைப்பார்த்து கண்சிமிட்டிய எயார் ஹோஸ்டஸ் கால்களை ஒருவாறு பரத்திக்கொண்டு எந்தவொரு பிடிப்புமின்றி தலைகீழாய் அடிபட்டுக்கிடந்தாள், விமானத்தின் விளக்குகள் அணைந்துவிட்டன..
இருக்கைகளில் இருந்தவர்கள் மட்டும், சீட் பெல்ட் போடாமலிருந்தாலும், காந்த சக்தியோ ஏதோவொன்றோ.. அப்படியே ஒட்டிக்கொண்டு சுழலத் தொடங்கினோம்..
அதற்குப் பிறகு இப்போ தான் கண்திறக்கிறேன்.. உடலை அசைக்க முடியவில்லை.. மெதுவாய் அம்மா அப்பா என்று மனசுக்குள் உருப்போட்டபடி ஆழ்நிலைத்தியாகம் பண்ண தொடங்கினேன்..

 
கொஞ்ச நேரத்துக்குப் பிறகு.. என்னால் தலையை அசைக்க முடிந்தது போல் தோன்றியது.. என்னோடு பயணித்த அனைவரும் அப்படியே இருக்கையுடன் மேல் நோக்கி பார்த்தபடி ரொக்கட்டுக்குள் இருப்பது போல தொண்ணூறு பாகைக் கோணத்தில், சிலையாய் சிலைகளாய் ஒருவித தூக்கத்தில்  அமர்ந்திருந்தனர்.. இல்லையில்லை உறைந்திருந்தனர்.. நானோ என் கண்களை சிரமப்பட்டு விரித்தபடி தலையை மெதுவாய் சரித்து கண்ணாடி யன்னலால் வெளியே பார்த்தேன்..

 
பாறைகளா, நட்சத்திரங்களா, கோள்களா.. பால்வெளி போல வெளிச்சத்தை உமிழ்ந்தபடி துரிதமாய் சுற்றுகின்றதே..

 
நாங்கள் இருந்த விமானமும் தான்.. அதோ.. அது.. இன்னொரு விமானமா.. இல்லையில்லை கப்பல் ஒன்று.. அதுவும் ஒரு முனை மேல் நோக்கியிருக்க, தானே ஒரு தனிக்கோள் போல சுற்றிக்கொண்டிருக்க

 

என் தலையும் கிர்ரென சுற்றத் தொடங்கியது.. இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியே சுற்றப்போகிறோமோ என்று எண்ணியபடி, மீண்டும் ஒரு நீண்ண்ண்ட மயக்கத்துக்குள் ஆழ்வதற்கு முன்.. என் அம்மா சொன்ன அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்தது..

திரிசங்கு சொர்க்கம்..

cosmos

கீதாஞ்சலி..

பாலுமகேந்திரா – ஒரு சகாப்தம்.. தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எப்படி இருந்தாலும், கலை வாழ்க்கையைப் பொறுத்தவரை தனக்கென ஒரு அடையாளத்தை பதிந்து விட்ட மனிதர் அவர்..
ஒளிப்பதிவாளர், இயக்குனர். எழுத்தாளர், நடிகர் என பல பரிமாணங்களின் தன் திறனை வெளிப்படுத்திய
அவரின் நினைவாக..  அவர் இயக்கிய திரைப்படங்களில் இருந்து தெரிவு செய்த பாடல்கள் இன்று கீதாஞ்சலியில்..

1979ம் ஆண்டு வெளிவந்த அழியாத கோலங்கள் திரைப்படத்திலிருந்து ஜெயச்சந்திரன் சுசீலா பாடிய பாடல்..

மூடுபனி. 1980ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய திரைப்படம். பிரதாப் போத்தன், அமரர் ஷோபா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற பிரபல்யமான பாடல், யேசுதாஸ் அவர்களின் குரலில்..

மூன்றாம் பிறை.. தமிழ் திரைப்படங்களின் போக்கை மாற்றிய மற்றுமொரு திரைப்படம்.. மனசைப்பிசையும் இசையும் வரிகளும் கொண்ட பால் இது, கான காந்தர்வன் அவர்களின் குரலில்..

கேட்கும் அத்தனை தடவைகளும், நாம் வாழ்க்கையையும், மரணத்தையும் நினைவூட்டிச்சென்று, நம்மை ஒரு கணம் திகிலுக்குள்ளாக்கும் பாடல்.. நீங்கள் கேட்டவை திரைப்படத்திலிருந்து..

ரஜனிகாந்த் மாதவி நடிப்பில் அமரர் பாலுமகேந்திரா அவர்கள் எழுதி இயக்கிய திரைப்படத்திலிருந்து.. இனிய பாடல் ஒன்று..

இரு தாரங்களுக்கிடையில் அல்லாடும் ஒரு மனிதனின் கதை – இரட்டை வால் குருவி.. 1987ம் ஆண்டு பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய படம் இது.. ஜானகி அவர்களின் குரலில்..

தமிழ் திரையுலகில் திருப்புமுனைகளை அளித்த படங்களில் ஒன்று வீடு.. பார்த்தவர்கள் கண்களைக் குளமாக்கிய இந்தத் திரைப்படம், தனக்கென்று ஒரு கூடு இருக்க வேண்டும் என நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தின் முயற்சிகளையும், அதன் வலியையும், யதார்த்தத்துடன் வெளிக்கொணர்ந்திருந்தது.. இந்தப்படத்தில் எந்தவொரு பாடல்களும் இடம்பெறவில்லை.. இளையராஜா அவர்களின் பின்னணி இசைச்சேர்க்கையில் இடம்பெற்ற இப்படத்திலிருந்து ஒரு காட்சி..

இளம் தலைமுறையினரோமுடும் தம்மால் இணைந்து பணியாற்ற முடியும் என்பதை இயக்குனர் பாலுமகேந்திரா நிரூபித்த திரைப்படம் – வண்ண வண்ணப் பூக்கள்.. 1992ம் ஆண்டு பிரஷாந்த், மௌனிகா, விநோதினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது..

நுட்பமான மனித உணர்வுகளை திரைப்படங்களில் வெளிக்கொணர்வதென்பது இலகுவானதல்ல.. அதனை செய்ய முடிபவர்களே சிறந்த இயக்குனர்கள்.. இந்தப்பாடலை நீங்கள் கேட்கும் போதோ, பார்க்கும் போதோ எழும் உணர்வுகள், இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆளுமையை சொல்கிறது.. மறுபடியும்..

இரு தாரங்களால் எழும் பிரச்சனை பற்றி, கொஞ்சம் நகைச்சுவை கலந்து இயக்குனர் பாலுமகேந்திரா எடுத்த திரைப்படம்.. இயல்பான பாத்திரங்களோடு, எளிய நடையில்.. துன்பங்களை satire முறையில் சொல்லியிருப்பார்..

ராமன் அப்துள்ளா திரைப்படத்தில், பெயரைப்போலவே கொஞ்சம் சீரியசான விஷயத்தை நேர்த்தியாக தொட்டுச் சென்றிருப்பார்.. அப்படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல்,அருண்மொழி, பவதாரணி பாடியது..

ஜூலி கணபதி – ஸ்டீபன் கிங்  எழுதிய மிசரி நாவலைத் தழுவி வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் மீளாக்கமாகும்.. மீண்டும் ஒரு முறை மனித மனதின் நுண் உணர்வுகளை இலாவகமாக இத்திரைப்படத்திலும் பாலுமகேந்திரா அவர்கள் கையாண்டிருப்பார்..

மலையாளத்தில் அவர் இயக்கிய யாத்ரா திரைப்படத்தின் மீளுருவாக்கமான இந்த படம், காவல்துறையின் அராஜகத்தை ஒரு புறம் எடுத்துக்காட்டினாலும், அழகிய மெல்லிய காதல் உணர்வுகளையும் பார்ப்பவர்களின் மனதில் நிலை நிறுத்தத் தவறவில்லை..

மரணிக்க முன்னர், தன்னை ஒரு கைதேர்ந்த நடிகனாகவும் இனம்காட்டிய கலைஞனின் இறுதிப்படம் தலைமுறைகள்.. இளையராஜாவின் இசைச்சேர்க்கையில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தீம் இசை..

கீதாஞ்சலி

பெப்ரவரி – காதல் மாதம்..

 

அன்பு, நேசம், பாசம் என அத்தனை அழகுணர்வுகளையும் பகிர்ந்துகொள்ளும் மாதம்.. இம்மாதத்தின் முதல் நாளில் காதலாய், காதலுக்காய் ஒலிக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

அந்த மானின் கண்கள் அழகா, இல்லை இவன் மனது மயக்கிய மாதுவின் கண்கள் அழகா

 

மனக்கோயிலில் வீற்றிருக்கும் என் மங்கை நல்லாளுக்கு காதல் தீபத்தால் ஆராதித்து, அடைக்கலம் புகுகின்றேன்

 

உன் காதலில் கட்டுண்டு உன்மத்தமாகிப்போனது நான் மட்டுமல்ல, நாணி நிற்கும் செவ்வானமும் தான்..

உன் துணை தேடி, துவண்டு நிற்கும் பூங்கொடி நான்..

சிந்து நதிக்கரையோரம் இந்த நங்கை மலர்க்கரம் கோர்த்து ..

 

தாலாட்டும் இரவில் காதலில் தவிக்கும் இரண்டு நெஞ்சங்கள்

படகோரத்து நீர்த்திவலைகளில் பட்டுத்தெறிக்கும் கதிரவனின் கதிரழகா, உன் காதல் அழகா

உனக்காக மட்டுமே என் இதயம் துடிக்கின்றது..

கண்ட நாளில் கண்டு கொண்டேன் நயே என் கல்யாணப் பெண் என்று

நீ நீராடுவதைப் பார்த்து நீர்த்துப்போய், நதியாய்  நொருங்கி விழுந்துவிட்டேன்..

தூரமாய் போகும் மேகமே என் துணையை என்னிடம் கொண்டு வா

 

 

 

கீதாஞ்சலி..

சோகப்பாடல்கள் என்றால் அது 80 களில் வந்த பாடல்கள் தான். இன்றும் எத்தனையோ உடைந்த காதல்களுக்கும், இடிந்த மனதுகளுக்கும், சோக இசையாலே ஒத்தடம் கொடுத்து ஆறுதல் தருவது இந்தக் காலப் பாடல்களே..

கேட்கும் போதே ஒவ்வொரு ஜீவ அணுக்களுக்குள்ளும் ஊடுருவி, நம்மை ஏதோ ஒரு ZEN  நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றன இப்பாடல்கள்.. என் முந்தைய தலைமுறைக்குப் பிடித்த இந்தப் பாடல்கள், எனக்கும், எனக்குப் பின்வரும் தலைமுறைக்கும் கூட பிடிக்கும் என்பதே இந்தப் பாடல்களின் வீச்சுக்கு சான்று..
ஆண்குயில்கள் தனியாய் இசைபாடும் பாடல்கள் இன்று உங்களுக்காய்..

ஒரேயொரு பார்வை பார்த்தால் என்ன மானே..

நீ நடந்த பாதையெல்லாம் உன் நினைவுகளைத் தேடுகின்றேன்

ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை.. சாவொன்று தானா நம் காதல் எல்லை

தேடி வந்த வேளை வேடன் செய்த வேலை.. சிறகுகள் உடைந்ததடி, குருதியில் நனைந்ததடி

சொல்லாமல் தவிச்சு சோகத்தில் துடிச்சேன்.. நெஞ்சுக்குள் நானே அழுகிறேன்..

காத்தோடு போகும் காத்தாடி நான்..

மனசோடு பாடும் பாட்டு கேட்குதா?

காற்றே பூங்காற்றே.. என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய்ச்சொல்லு

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை நான் தூதுவிட்டேன்

களையிழந்த மாடத்திலே முகாரி ராகம்

அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா?

காதல் பொய்யானது வாழ்கை மெய்யானது..

அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே

பொழுதாகிப்போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே உன்னைத் தேடுது..

இனிய தமிழ்ப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

என் இனிய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள் உரித்தாகட்டும்..

பிறந்திருக்கும் தைமகள், அனைவருக்கும் நல்வழி அளிப்பாள் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தனைகளும்.
தமிழர் திருநாள் வாழ்த்துகள்..

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயர கோனுயர்வான்!

pongal-105

கா(ன)தல்

நீயில்லாத உலகத்தில் என் நிழலும் தேவையில்லை எனக்கு..
கைவழியே வழிந்தோடும் நீரைப்போல்
கண்ணீர் தாரைகளைத் மட்டுமே தந்து கைகழுவிச் சென்றுவிட்டாய்
நானின்றி நீயிருக்கலாம்..
நீயின்றி நானிருந்தால்,
நீரின்றிய நிலம் போல் வரண்டு விடும் என் வாழ்க்கை..

Bb7PDS2CMAAgiKA
கொட்டிச்சென்ற வார்த்தைகளோடு,
விட்டுச்சென்ற காதலையும் சேர்த்து அள்ளிக்கொள்ள நினைத்தாலும்
விரல்களுக்குள் புகுந்தோடும் நீரைப்போல் பிரிந்து செல்கிறதே..
நீ சென்றுவிட்டாய்..
உன் நினைவுகளை மட்டும் தந்துவிட்டு..
கானல் நீர் போலே நானும் என் காதலும்
உறைந்துபோன தண்ணீராய் உருக்குலைந்து கிடக்கின்றோம்..

அபி டைம்ஸ்..

அவன் வரும் அரவம் கேட்கிறது..
bikeஐ stand  போடுகிறான்.. இப்போது தோளால் மாட்டியிருக்கும் shoulder bagஐ கழற்றி கையில் பிடித்துக்கொண்டே வாசற்கதவுக்கருகில், Door bellலை அடிப்பதா இல்லையா என்று ஒரு கணத்தயக்கம்..
சாவி போடும் ஓசை.. இனி மெதுவாக பூனை போல உள்வருவான்.. ஷூ கழற்றுகிறான், என்னை இருட்டுக்குள் தேடுவான்.. எங்காவது ஒளிந்திருப்பேனென்று.. முகத்தை கைகளால் தேய்த்தவாறு மெதுவாக அடியெடுத்து எங்கள் படுக்கையறை நோக்கி இன்னும் மெதுவாக..
கண்களை இறுக்க மூடிக்கொள்கிறேன்.. மணிஎன்ன இருக்கும்.. தெரியாது.. பசி வயிறு சத்தம்போட அதை மனதால் அடக்கிக்கொண்டே சுவர்ப்பக்கமாய் திரும்பி அவனுக்கு முதுகுகாட்டி கண்களை இறுக்க மூடிக்கொள்கிறேன்..
நீலவிளக்கைப்போட்டு மறைவாய்த் தெரியும் என் வரிவடிவத்தை பார்த்தவாறே உடைமாற்றுகிறானா.. எப்படிப்பார்ப்பது என்று எண்ணியபடி கண்களைத் திறப்பதா இல்லையா என்று முடிவெடுக்கத் திணறிய நேரம்..
காதுக்குள் கூச்சம்.. காதுக்குள் வந்து மூச்சு விடவேண்டாம் என்று எத்தனை தரம் இவனுக்குச் சொல்லுவது.. போச்சு என் நாடகம் முடியப்போகுதே.. எண்ணியபடி உடலை உள்ளிளுத்து இறுக்கிக்கொண்டேன்..
குழந்தையை அணைப்பதுபோலே என்னை அள்ளியெடுத்து அப்படியே திருப்பி என்னோடு ஒட்டிப்படுத்தவாறு என்ன என் அம்மும்மாவுக்கு கோபமா.. ஸாரிடா.. இன்னைக்கு போர்ட் மீற்றிங்.. நான் என்ன பண்ணுவேன்.. சரி இப்போ வெளில போலாமா என்று கேட்டபடி கரங்களால் என்னை வருடத்தொடங்கினான்..பொய்க்காரன்
நெகிழ்ந்துவிடுவேனோ என்ற பயத்துடன் முகத்தை அப்படியே வைத்திருக்க எத்தனிக்க எம்பி என் நெற்றியில் முத்தமழை பொழிந்தபடி.. போதும்மா.. இன்னும் எவளவு நேரம் இப்படியே இருப்பே.. எந்திரி.. என்று கன்னத்தில் முத்தமழை பொழிகிறான் என் கணவன்.. ராட்சஷா..
என்கூட பேசவேணாம்.. ஒரு மனுஷி எத்தனை நேரம்தான் காத்துக்கொண்டிருப்பது.. என்று என் கோபத்தை கண்மூடிச் சொல்ல.. என்னடா நீ.. என்றவாறு என்னை அப்படியே அலேக்காகத்தூக்கி தன் உடல்மீது போர்த்திக்கொள்ள
அடச்சா..இனி என் கோபமெல்லாம் இலவம் பஞ்சாய் பறந்து போச்சே என்ற எண்ணியபடி அவன்மார்பில் கைகளால் அடிக்கத்தொடங்க, இரு கரங்களையும் ஒருகையால் பற்றியபடி என் முதுகைவருடத்தொடங்கினான்..
நெகிழ்ந்து காதலுக்குள் கரையத்தொடங்கிய வேளை நினைத்துப்பார்த்தேன்.. சரணாகதியடைந்தது அவனா நானா..

அம்முவின் அம்மா..

அம்முவோட அம்மாவை பார்த்திருக்கீங்களா நீங்க.. ரொம்ம்ம்ப நல்லவங்க தெரியுமே? நெஜமாத்தான் சொல்றேங்க.. ரொம்ப நல்லா சமையல் பண்ணுவாங்க, ரொம்ப நல்லா dress பண்ணுவாங்க, ரொம்ப அழகா இருப்பாங்க, ரொம்ப நல்லா கத்துக்கொடுப்பாங்க, சிலநேரம் ஒண்ணு ரெண்டு அடிகூட போடுவாங்க அது வேற விஷயம், But அவங்க உண்மைலயே ரொம்ப சூப்பர் மம்மி..

காலைல எழுந்து பம்பரமா வீட்டு வேல செய்து.. அம்முவோட தொணதொணப்புக்கெல்லாம் பதில் சொல்லி, அவளோட அண்ணாக்களை ஸ்கூல் vanல ஏத்திவிட்டு, அவங்க அப்பா ஜம்ன்னு work போகும்போது tata சொல்லி, அம்முவயும் கவனிச்சி ஸ்கூலுக்கு அனுப்பி, இவங்க சாப்பிட்டு, வீடு பெருக்கி, துணி தொவச்சி, ஏதோ கதைலாம் எழுதின்னு..ஹப்பா.. ரொம்ப நல்ல சூப்பர் மம்மி இல்ல..

அவங்களுக்கு அம்முமேல ரொம்ப ரொம்ப ஆசை.. but அவங்க சின்ன வயசுல பரதநாட்டியம் கத்துக்கணும், ஸ்விமிங் கத்துக்கணும், பாடணும், நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டாங்களாம்.. இப்போ அம்மு பாடு ரொம்ப திண்டாட்டம்ங்க.. இந்தச் சின்ன வயசுலயே அம்முவுக்கு எத்தன கஷ்டம் தெரியுமா? காலைல ஸ்விமிங், அப்புறம் ஸ்கூல், மத்யானம் மாத்ஸ், நடுவுல home work னு அம்முவும் அம்மா கூட சேர்ந்து ரொம்ப பிசி..

அம்முவோட அம்மா அம்முவை கூட்டிகிட்டு எங்க எதுல போனாலும்.. அதை வாங்கிடணும்னு கொஞ்சம் ஆசைப்படுவாங்க.. இப்போ..say அவங்க அம்மு கூட Autoல போறாங்கன்னு வைச்சுக்கோங்களேன்.. அம்மு நாம்பளும் Auto ஒண்ணு வாங்கிப் போட்டுடலாமா.. நம்ம தேவைக்கும் யூஸ் பண்ணிக்கலாம்..அதோட hire க்கும் விட்டுடலாம்னு சொல்லுவாங்க.. அம்முவும்..ஹய்யோ Autoன்னு ரெண்டு நாள் குதிப்பா.. அப்புறம் அம்மா மறந்துடுவாங்க..

இன்னொரு நாளுக்கு எல்லாரும் எங்காவது Taxiல போகும் போது.. அம்மு.. நாம்பளும் car ஒண்ணு வாங்கினா.. மாசாமாசம் நமக்கு வர்ற transport செலவ கம்மி பண்ணிடலாம்லன்னு சொல்லுவாங்க.. ஹை கார்.. ஜாலின்னு அம்மு நெனச்சிண்டே இருக்குறப்போ திரும்பி வரும்போது vanல வந்தா..காரை விட வான் தான் comfortable இல்லையா அம்மு..அப்பாகிட்ட சொல்லிடலாமா van ஒண்ணு வாங்க சொல்லின்னு அடுத்த bitட போடுவாங்க.. அம்மு எவளவு பாவம்னு யோசிங்க.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்துல போறதுபோல கனவுகண்டே அம்முவோட வயசெல்லாம் போகுது..

ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு weddingல கலந்துக்கணும்ங்கிறதுக்காக அம்முவும், அப்பாவும் அம்மாவும் கிங்பிஷர் எயார்லைன்ஸ்ல போலாம்னு முடிவுபண்ணாங்க.. அம்முவும் பிளேன் பிளேன்னு குதிச்சிண்டே இருந்தா.. கடைசியால பிளேன் ஏறியாச்சு.. அம்மா சுத்தி சுத்தி பாத்தாங்க.. அப்புறம் பாத்ரூம் போறாப்ல எழுந்து போய் பார்த்தாங்க.. எயார்ஹோஸ்டஸ் ஆன்டிகிட்ட cockpit பாக்கலாமான்னும் கேட்டாங்க.. அப்புறமா அப்பாகிட்ட போய்..ஏங்க.. இந்தமாதிரி பிளேன் ஒண்ணு வாங்குறதுன்னா எவளவு காசு வேணும்னு கேட்டாங்களா.. window sideல உக்காந்து ஆகாயம் பாத்துகிட்டிருந்த அம்முவுக்கு turbulance இல்லாமலே Jerk ஆகிடிச்சு தெரியுமா.. அப்பா பேயறைஞ்சவர் போலாகிட்டார்.. வீடு திரும்புற வரைக்கும் அவுரு குளிக்கும் போது கூட Purseஸ கீழ வைக்கவே இல்லைன்னா பார்த்துக்கோங்களேன்..

இதெல்லாம் என்னங்க.. அம்மா வெல கேட்டது மல்லையா அங்கிளுக்கு தெரிஞ்சு போச்சு போல.. பாருங்க.. அந்தக் கவலைலயே அவுரு ஷேர் எல்லாம் எறங்கிப்போய்..அந்த ஷாக்லயே கடன்காரனுமாகிட்டாரு..

ஆனா அம்முவோட அம்மா நேத்திக்கும் ஸ்கோர்ப்பியோ ஒண்ண ரோட்ல பார்த்தாங்களா..அம்முவோட அண்ணாகிட்ட அது என்ன வண்டிப்பா.. நம்ப எல்லாரும் டிராவல் பண்ணுறதுக்கு போதுமான்னு கேட்டுகிட்டே போறாங்க..

உண்மைகள் உறங்குவதில்லை..

இந்த உலகத்தில் நான் இருக்கப்போவது இன்னும் கொஞ்சம் நொடி நேரம் தான் ..
எத்தனை அழகானது எங்கள் வீடு..இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள், மூத்தவளாய் அரவணைத்துக் காக்கும் நான் என ஐந்துபேர்..அம்மா அப்பாவின் தீடீர் இறப்பின் பின்னும் இந்த வீட்டில் எத்தனை நிம்மதியாய் இருந்தோம்..
வேலை படிப்பு என எத்தனை இருந்தாலும், எங்கள் சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக எதுவும் இருக்கவில்லையே.. ஊருக்கு சற்றுத் தள்ளி ஆளரவம் குறைந்த இடத்தில் இருக்கும் சொந்த வீட்டில், சின்னத் தோட்டத்துடன், அடக்கமாக, அழகாக நாங்கள்.. இந்த வீட்டிற்குள் எந்தனை ஞாபகங்கள்..
நாங்கள் மூன்று பேரும் அழகிகள் தான்..இல்லையென்றால் இத்தனை பேர் பெண் கேட்டு வருவார்களா? தம்பி தங்கைகளுக்காக வாழும் எனக்காக என் காதலன் காத்துக்கொண்டு இருப்பாரா? இந்த சின்ன கூட்டை ஏன் விதியே கலைத்துப்போட்டாய்? உன் வெறிக்கு அளவே இல்லையா? ஏன் எங்களுக்கு இந்த நிலை? ஏன்..
இன்று காலையும் வழக்கம் போலவே விடிந்தது.. சின்னத்தூறலோடு.. நான் பார்த்துக்கொண்டிருக்கும் போதுதான் இராணுவத் தொடரணி எங்கள் வீட்டிற்கு முன்னால் சென்றது..அசிங்கமான சில அங்க சேஷ்டைகளுடன்.. காலையில் விழித்த சகுனமே சரியில்லை என்று நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் செல்ல எத்தனித்த போது.. பழக்கமற்ற நிசப்தம் காதில் அறைந்தது.. வழக்கமாக வரும் பால்காரனோ..பத்திரிகையோ வரவில்லை..எட்டித்தெரியும் பிரதான வீதியிலும் யாரும் இல்லை.. ஏன்.. எண்ணியவாறு தினப்படி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்..
டொம்.. என்ற சத்தம் செவிப்பறையைக் கிழிக்க, சமையலறைக்குள் ஓடிவந்த என் சின்னத்தம்பி..அக்கா என்ற அலறலுடன் என்னைக்கட்டிப்பிடித்துக் கதறியழ.. அவனை சமாதானம் செய்தவாறு, பக்கத்து தோட்டத்தினைத் தாண்டி இருந்த ஷாமாக்கா வீட்டை எட்டிப்பார்த்தால்.. யன்னல்கள் மூடிய வெறும் வீடு.. அப்போ ஊரில் யாருமில்லை.. முதுகுத்தண்டு சில்லிட.. மெதுவாக அனைவரையும் அழைத்துக்கொண்டு  பின்புறமாக இருந்த வீட்டின் கடைசி அறையில்  ஒடுங்கி அமர்ந்திருக்க பீரோவுக்கு அருகில் போடப்பட்டிருந்த கட்டிலில் என் தம்பி பெட்ஷீட்டால் மூடிக்கொண்டு ஒளிந்து படுத்துக்கொண்டான்..
வெடிச்சத்தமும், குண்டுச்சத்தமும் காதை செவிடாக்க.. அந்தக் காலைப்பொழுது நாரசாரமாய் நகர்ந்துகொண்டிருக்க.. பக்கத்து வீட்டு ஷாமாக்காவின் வீடு பற்றி எரியும் சத்தம் கேட்டது.. சின்னவன் மெதுவாக பீரோவுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ள நடுக்கத்துடன், அடுத்து நடக்கப்போவதை எதிர்பார்த்து நாங்கள் நால்வரும் முள்ளில் நிற்பதுபோலிருக்க..
தடதடவென எங்கள் வீட்டு கதவு உடைபடும் சத்தம்.. பூட்ஸ் கால்கள் உள்ளிடும் ஓசை.. வேட்டைக்குச் செல்லும் ஓநாயின் கண்களுடன் நரகாசுரன்களாய் எங்கள் கூட்டைப்பிரிக்க வந்த படுபாவிகள்..
என் மூத்த தம்பியை ஒருவன் உதைத்துத்தள்ள, அதைத்தடுக்கப் பாய்ந்த எங்கள் மூவரையும் நோக்கி ஒவ்வொருத்தனாய் முன்னேற.. அந்தக் கண்களில் தெரிந்த குரூரத்தின் நிழல் கண்டு என் சகோரன் தந்தையாய் தடுக்கப்பாய.. எங்கிருந்தோ பல தோட்டாக்கள் அவனுடலை சன்னமாக்கிச் சாய்க்க.. அதிர்ச்சியில் உறைந்து அழவும் திராணியற்றிருந்த எங்களை அடிமாடுகளை நோக்குவது போல நெருங்கியவர்கள் அடுத்தடுத்து பலபேராய் சீரழிக்கத் தொடங்கினர்..
உடலில் வலியுடன், உள்ளத்தில் அருவருப்புடன், சிலையாக மாட்டேனா என்ற மருகலுடன் இரத்தம் எல்லாம் கொதிக்க செய்வதறியாது கூக்குரலிட்டபடி சுற்றியலைந்த என் கண்களுக்குள் என் சின்னத்தம்பியின் ஈரம்படிந்த அச்ச விழிகள்..
அவனாவது தப்பிக்கட்டும் என்ற எண்ணத்துடன் வராதே வராதே என்று அவனுக்கும்..என்மேல் பலவந்தமாய் படர்ந்த அந்த காமமிருகத்திற்கும் கேட்கும் படி கூப்பாடு போட்ட என்னையும் நோக்கி இன்னும் இரண்டு மூன்றுபேர்..
மழைமட்டும் எங்களுக்காய் இன்னும் அழுது கொண்டிருக்க எல்லாம் முடிந்தது என்று எண்ணியபடி அரைமயக்கத்தில் கிடந்தபோது எங்கள் பெண்மையின் அடையாளங்களுக்குள் கிரனைற் குண்டுகளை செருகி..அந்த ஓநாய்கள் சென்றுவிட..இரத்தச்சகதிக்குள் ஏற்கனவே செத்துவிட்ட என் உடன்பிறப்புகளும் எதையோ சாதித்துவிட்ட பெருமையில் ஆங்காரச் சிரிப்புடன் செல்லும் அவன்களை தூவெனத் துப்பி தூஷித்தபடி நானும்..
சத்தியமாய் சொல்கிறேன் இதைவிட சாவு வேதனை தராது.. அந்த நீண்ட நித்திரையை எதிர்பார்த்து கண்கள் மேற்பார்த்து சொருக..